Published:Updated:

``சீரியல் ஆவி, ரியல் ஆவி.. சஞ்சீவ் வெளியேறிய பின்னணி!" ’யாரடி நீ மோகினி’ ’ஷூட்டிங்ல மீட்டிங் 10

யாரடி நீ மோகினி ஷூட்டிங் அரட்டை

``சீரியல் ஆவி, ரியல் ஆவி.. சஞ்சீவ் வெளியேறிய பின்னணி!" ’யாரடி நீ மோகினி’ ’ஷூட்டிங்ல மீட்டிங் 10
``சீரியல் ஆவி, ரியல் ஆவி.. சஞ்சீவ் வெளியேறிய பின்னணி!" ’யாரடி நீ மோகினி’ ’ஷூட்டிங்ல மீட்டிங் 10

கூப்பிடுகிற தூரத்தில் `பிக் பாஸ்’ வீடு அமைந்திருக்கிறது, பூந்தமல்லி ஈவிபி ஃபிலிம் சிட்டியில் `யாரடி நீ மோகினி’ சீரியலின் செட். ஷூட்டிங் தொடங்கிய காலை வேளையிலேயே போய் இறங்கிவிட்டோம். பரபரப்பாக இயங்கத் தொடங்கியிருந்தது யூனிட். `மெகா சீரியல்ங்கிறது இன்னைக்குத் தேதியில போட்டி நிறைஞ்ச ஏரியா சார். தினம் தினம் டுவிஸ்ட், அதிரடினு கொண்டுபோனாதான், தாக்குப்பிடிக்க முடியுது. `அந்த ஷோ (பிக் பாஸ்) தொடங்கினாலும் தொடங்குச்சு; எங்களுக்கு எக்ஸ்ட்ரா வொர்க். ஏழு நாளும் சீரியல்னு சொல்லிட்டாங்களே!’ என்ற உதவி இயக்குநர் ஒருவர், `ஆனா ஒரேயொரு நல்ல விஷயம், அந்த ஷோ தொடங்குறதுக்கு அரைமணி நேரத்துக்கு முன்னாடி ‘YNM’ (யாரடி நீ மோகினி) தொடங்கிடுது. அதனால தப்பிச்சோம்!’ எனச் சிரிக்கிறார்.

வெண்ணிலா (நட்சத்திரா), முத்தரசன் (ஸ்ரீ), நீலாம்பரி (பாத்திமா பாபு), ஸ்வேதா (சைத்ரா), மருது (பரத்) குழந்தை நட்சத்திரமான ருத்ரா (லிசா) மற்றும் வில்லிக்கு உதவக்கூடிய அந்தத் தோழிகள் குரூப் என சீரியலின் அத்தனை முக்கிய கேரக்டர்களும் இருந்தார்கள். கலை மட்டும் மிஸ்ஸிங்.

ஆர்ட்டிஸ்டுகள் அத்தனை பேரையும் நமக்கு அறிமுகப்படுத்திய தொடரின் இயக்குநர் ப்ரியன், `ஆபாவணன்கிட்ட இருந்தவன் நான். அதனால த்ரில்லர் சப்ஜெக்ட் பழக்கப்பட்ட ஏரியா. ஆனா, முதன்முதலா ஒரு முழு த்ரில்லரா இருக்காம, பீதி கிளப்பாம, காமெடி பிளஸ் குடும்பத்தோட பயமில்லாம பார்க்கிற மாதிரியான தொடரா இதைத் தொடங்கினோம். ஆரம்பிச்ச கொஞ்சநாள்லயே ரேட்டிங் கிடைச்சு, `நாங்க பயணிக்கிற ரூட் சரியானது’ங்கிறது நிரூபணமாயிடுச்சு’ என்றார்.

முத்தரசனின் மாமியார் கொலை செய்யப்பட்டது தொடர்பான போலீஸ் விசாரணைக் காட்சிகள் ஷூட்டிங் தொடங்கியதும் எடுக்கப்பட்டன. இன்னொருபுறம் சீன் இல்லாமால் ஃப்ரீயாக இருந்த வில்லியின் தோழிகள் ஏரியாவுக்குச் சென்றோம். ‘மாயி’ படத்தில் ‘இவ்ளோ நேரமா மச்சானை மட்டும்தானே பார்த்துக்கிட்டிருந்தேன்’ என வடிவேலுவை மயங்கி விழச் செய்வாரே ‘மின்னல்’ தீபா, அவர் மையமாக இருக்க, மகிமா உள்ளிட்ட மற்றவர்கள் சுற்றியிருந்து அரட்டையில் ஈடுபட்டிருந்தார்கள்.

`வில்லிகள் ரெண்டுபேரும் (நீலாம்பரி, ஸ்வேதா) சீன்ல வர்றப்போ பின்னாடி வந்து நிற்கிறதுதான் எங்களோட ரொட்டீன் வேலை. பேசுறதுக்கு அவ்வளவா டயலாக் இல்லாட்டிகூட அவங்க ரெண்டுபேரையும்விட மக்கள்கிட்ட அதிகமான கெட்ட பேரு எங்களுக்குக் கிடைக்குது. மக்கள் அதிகமா எங்க அத்தனை பேர்கிட்டேயும் கேட்கிற ஒரே கேள்வி, `கல்யாணத்துக்குனுதானே அந்த வீட்டுக்கு வந்தீங்க. அப்படியே அந்த வீட்டுலேயே டேரா போடுறீங்களே, உங்க வீடுகள்ல தேடமாட்டாங்களா’ங்கிறதுதான்’ என்ற மகிமா, எங்க கூட்டணியில ஒரே ஆம்பளையா மாட்டிக்கிட்டு தவிக்கிறது, அரவிந்த் மட்டுமே. எங்க கூடவே காம்பினேஷன் இருக்கிறதால பிரேக் டைம் வந்தா, முத்தரசன், மருதுனு ஆண்களா இருக்கிற அந்தப் பக்கமும் போகமாட்டார். இங்க நாங்க அடிக்கிற அரட்டை சில டைம் தாறுமாறா போகும்கிறதால எங்களோட வந்து கலந்துக்கிறதுக்கும் வெட்கப்படுவார். மனுஷன் பாவம்’ என்றார்.

`முத்தரசன் - வெண்ணிலா ஜோடியைவிட, அரவிந்த் - தீபா ஜோடிக்கு கெமிஸ்ட்ரி செமயா வொர்க் அவுட் ஆகுதுங்கிறாங்களே, உண்மையா?’ என அரவிந்திடம் கேட்டோம்.

`அவங்க என்னை `பட்டு’னும், நான் அவங்களை `ஜிலேபி’னும் கூப்பிடுவோம். இதைப் பார்த்துட்டு இப்படிக் கிளப்பி விட்டுருக்காங்கனு நினைக்கிறேன். இருந்துட்டுப் போகட்டுமே’ என்கிறார்.

`ஷூட்டிங் ஸ்பாட்ல நீங்க நிஜத்துலேயே பேயைப் பார்த்து அலறி ஓடினதாப் பேசினாங்களே, உண்மையா?' என்றோம். 

`செட்’டுக்கு வெளியில வந்தா ஒரே காடா இருக்கு இந்த ஏரியா. ஏற்கெனவே விபத்து நடந்து சில உயிர்கள் பலியான இடம்னு வேற சொல்றாங்க, அதுவே பீதியா இருக்கு. ஒருநாள் சாயங்காலம் ஏழு மணி இருக்கும். காத்து வாங்கலாம்னு வெளியே வந்து நின்னேன். அப்போ காத்து பலமா வீசுச்சு. தூரத்துல இருட்டுக்குள்ள ரெண்டு உருவம் சண்டை போடுறதை என் கண்ணால பார்த்தேன். வேர்த்திடுச்சு. ஒரே ஓட்டமா செட்டுக்குள் வந்துட்டேன். இங்க வந்து சொன்னா, சிரிக்கிறாங்க’ என்கிறார்.

அதுசரி, `சீரியல்ல வில்லிக்கு ரொம்பவே முக்கியத்துவம்னும், அதனாலதான் ஹீரோ சஞ்சீவ் வெளியேறி, ஸ்ரீ வந்திருக்கார்னும் பேசிக்கிறாங்களே' என வாயைப் பிடுங்கினோம்.

`ஏன் சார் இந்தக் கேள்விக்கு நான்தான் கிடைச்சேனா? காமெடி பீஸ் நான். அதோ வில்லியே வர்றாங்க. அவங்களைக் கேளுங்க’ என நழுவினார், அரவிந்த்.

அப்போது சீன் முடிந்து அங்கு வந்தார், பாத்திமா பாபு. `குடும்பத்துடன் பார்க்கிற சீரியல்ல வரிசையா கொலைகள், அந்தக் கூட்டத்துக்குத் தலைவி நீங்க! எப்படி?' என்றோம்.

`காலையில எழுந்து வாக்கிங் போனா, கூட வர்றவங்க, `முத்தரசனை முடிச்சிடுவீங்களா, வெண்ணிலாவை காலி பண்ணிடுவீங்களா’னே கேட்குறாங்க. வில்லத்தனம் கொஞ்சம் ஓவராதான் போகுதோ? ஆனா, அதுக்கு நானொண்ணும் செய்யமுடியாது. கதை அப்படி. பேயைச் சமாளிக்கிறதுனா சும்மாவா’ எனச் சிரித்தவர், அருகே வந்த வெண்ணிலாவின் தலையைக் கோதியபடி, `டேக் போறப்போதான் இவளுக்கு நான் வில்லி. பிரேக் வந்துட்டா எனக்கு மட்டுமல்ல, இங்க எல்லாருக்குமே செல்லம்’ என்றார்.

வெண்ணிலாவிடம் பேசினோம்.

`` `கிடா பூசாரி மகுடி’ மூலமா தமிழ் சினிமாவுக்கு வந்த என்னை வாரி அணைச்சு ஆதரவு தந்திருக்கு டிவி. 'வெண்ணிலா’ கேரக்டர் சின்னத்திரையில வலுவான அடித்தளமா அமைஞ்சிருக்கு. இப்போ எல்லோருமே வெண்ணிலான்னே கூப்பிடுறாங்க. இந்த இடத்துல ஒரு கோ இன்சிடென்ட்டை சொல்லணும். எங்க வீட்டுல நான், என் தங்கை ரெண்டுபேருக்குமே `நட்சத்திரா, நிலா’னு ஆகாயத்துல இருக்கிறவங்களோட பேர்தான் சூட்டினாங்க. இந்த சீரியல்லேயும் என் பேரு வெண்ணிலா. ஆகாயத்துல ஓடுற மேகக்கூட்டத்துல உருவங்களைத் தேடி ரசிக்கிறது என்னோட ஒரு பொழுதுபோக்கும்கூட. எப்படி இந்த ஒற்றுமை" என்றவரிடம், சஞ்சீவ் வெளியேறியது குறித்துக் கேட்டதும், ``ஏன் அடுத்து நான் வெளியே போகணும்னு ஆசைப்படறீங்களா..." எனக் கேட்டு எஸ்கேப் ஆனார்.

பிரேக் டைமில் ஸ்வேதாவுடன் சேர்ந்து `மியூசிக்’யில் இறங்கி விடுவதும் வெண்ணிலாவின் இன்னொரு பொழுதுபோக்காம்.

ஹீரோவாக நடித்து வந்த சஞ்சீவ் சமீபத்தில் வெளியேறியது குறித்துப் பேசினால், மிரள்கிறார்கள் அத்தனை பேரும். ஆனால், ஸ்ரீ அதையும் பேச முன்வந்தார்.

``சஞ்சீவும் நானும் ஃப்ரெண்ட்ஸ். அவன் சீரியல்ல இருந்து விலகுனதுக்குப் பின்னாடி பெரிய காரணம் எதுவும் இல்லைனு நினைக்கிறேன். வேற கமிட்மென்ட்ஸ் இருந்ததுனால வெளியேறினதா நான் கேள்விப்படுறேன். அவன் இருந்தவரை முத்தரசன் வேறமாதிரி இருந்திருக்கலாம். நான் வந்தபிறகு என் ஸ்டைல் இருக்கணுமில்லையா? சில எபிசோடுகள் குழப்பமா இருந்தன. ஆனா, இப்போ ஆடியன்ஸ் ஏத்துக்கிட்டாங்க" என்கிறார்.

பாத்திமா பாபு சீனியர் வில்லி என்றால், அவருக்கு செம டஃப் கொடுக்கும் ஜூனியர் வில்லியாக சைத்ரா. இவர் பண்ணும் வில்லத்தனங்கள் எரிச்சலூட்டுபவையாக இருந்தாலும், அவையே தொடரின் ரேட்டிங் எகிறுவதற்கும் காரணம் என்கிறார்கள். சைத்ராவிடம் பேசினோம்.

`` `கல்யாணம் முதல் காதல் வரை’யில ப்ரியா வெளியேற, அந்த இடத்துக்கு நான் வந்தேன். ஆனா, ஹீரோயின் ரோல் செட் ஆகாதுங்கிறது கொஞ்சநாள்லேயே தெரிஞ்சுபோச்சு. நெகட்டிவ் கேரக்டர் நல்லா செட் ஆகுது. ஆனா, பாத்திமா மேடம் மாதிரியான சீனியர் ஆர்ட்டிஸ்ட்கள் முன்னாடி நடிக்கத் தயக்கம், பயம். `என் முன்னாடி பயந்தா என்னைக்கு என்னை மாதிரி கொடூர வில்லத்தனம் பண்றது? ஃபீல்டுக்குள்ள வந்துட்டா, ஆர்ட்டிஸ்டுக்கு பயம், தயக்கம், கூச்சம் இதெல்லாம் இருக்கக் கூடாது’னு சொல்லி என்னை அவங்களே என்கரேஜ் பண்ணாங்க. இப்போ ரெண்டுபேரும் சேர்ந்து எல்லோரையும் மிரட்டிட்டு இருக்கோம்" என்றவருக்கு இன்னொரு மறக்க முடியாத அனுபவமும் இந்தத் தொடரின் ஷூட்டிங் இடையே நிகழ்ந்திருக்கிறது.

அது என்னவாம்?

``எங்க செட் பக்கத்துலயேதான் `காலா’ படத்தோட தாராவி செட் போட்டிருந்தாங்க. சின்ன வயசுல இருந்தே ரஜினி சார் ரசிகை. அதனால, அந்த இடத்துக்குப் போய் அவரோட ஒரு செல்ஃபி எடுத்துக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. பாத்திமா மேடம்கிட்ட இதைச் சொன்னேன். அவங்கதான் கூட்டிட்டுப் போனாங்க. ரஜினி சார்கிட்ட பேசிட்டுத் திரும்பறப்போ எங்கிருந்து தைரியம் வந்திச்சுனே தெரியல, டக்னு அந்த ரெக்வஸ்டைக் கேட்டுட்டேன், அதாங்க, `ஒரு முத்தம் கொடுத்துக்கலாமா’னு! அதுக்கு அவர் சம்மதிச்சாரானு எல்லாம்கூட யோசிக்கலை. நச்னு ஒரு இச் கொடுத்துட்டு, செல்ஃபியும் எடுத்துட்டு வந்தாச்சு, அவ்ளோதான். அவரோட ஒரு படத்துல ஜோடி சேர்ந்து நடிச்ச எஃபெக்ட்  கிடைச்சிடுச்சு!" எனச் சிரிக்கிறார்.

300 எபிசோடுகளைக் கடந்துவிட்ட தொடர் இப்போது இன்னொரு விறுவிறுப்பான பகுதியை எட்டியுள்ளது. அடுத்த சில தினங்களில் புதிதாக சில கேரக்டர்கள் சீரியலில் அறிமுகமாக இருக்கிறார்கள். சீரியல் கடந்து வந்த பாதை, மற்றும் அடுத்த திருப்பங்கள் குறித்து இயக்குநர் ப்ரியன் என்ன சொல்கிறார்?

``ஊரிலேயே வசதியான முத்தரசனுக்குத் தன்னுடைய செங்கல் சூளையில வேலைக்கு வந்த சித்ராமீது காதல். கல்யாணமாகி இருவருக்கும் ஒரு குழந்தை பிறக்குது. சித்ராவைப் பிடிக்காத முத்தரசனோட சித்தி நீலாம்பரி, முத்தரசனின் சொத்துக்கு ஆசைப்பட்டு சித்ராவைக் கொலை செய்துட்டு முத்தரசனுக்கு இரண்டாவதா தன்னோட தம்பி மகளான ஸ்வேதாவைக் கல்யாணம் செய்து வைக்கத் துடிக்கிறாங்க. ஸ்வேதாவின் முதல் திருமணமும் மறைக்கப்படுகிறது. இன்னொருபுறம் முத்தரசனின் அத்தை மகளான வெண்ணிலாவுக்கும் முத்தரசனே அடைக்கலம் கொடுக்கவேண்டிய சூழல். வெண்ணிலாவுக்குச் சிறுவயது முதலே முத்தரசன்மீது காதல். முத்தரசன் சித்தி மற்றும் ஸ்வேதாவின் சூழ்ச்சி வலையிலிருந்து வெண்ணிலாவைக் காப்பாற்றத் துணை வருகிறது, மறைந்த சித்ராவின் ஆவி. அந்த ஆவியை அடக்கி, அந்த வீட்டுக்குள் வெண்ணிலாவுக்கு சப்போர்ட் செய்கிற கலையை முடக்கி, எப்படியாவது முத்தரசன் ஸ்வேதா திருமணத்தை நடத்தி வைப்பதென இறங்கியிருக்கிறார், நீலாம்பரி.

இந்நிலையில், முத்தரசன் சித்ரா தம்பதிக்குப் பிறந்த குழந்தை ருத்ரா, முத்தரசனின் வீட்டுக்குள் வருகிறாள். அந்தக் குழந்தைக்கு முத்தரசன்தான் தந்தை எனத் தெரியவந்த பின் காட்சிகள் இன்னும் விறுவிறுப்பாகும். விபத்தை உண்டாக்கி நீலாம்பரி முடக்கிப்போட்ட கலை, மற்றும் ஸ்வேதாவின் முன்னாள் காதலன் யுவராஜ் இருவரும் மறுபடியும் திரும்புகிறார்களா? கிளி உருவத்தில் வந்து வெண்ணிலாவைக் காப்பாற்றிக் கொண்டிருந்த சித்ரா வேறு உருவம் எடுக்கிறாரா? அடுத்த சில தினங்கள்ல இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தரப்போறோம். ஒரு சில எதிர்பாராத கேரக்டர்களும் சீரியலுக்குள் நுழையலாம்!’’ என்கிறார், ப்ரியன்.

மீட்டிங் முடித்து அந்த வளாகத்தை விட்டு வெளியேறியபோது, அங்கிருந்த செக்யூரிட்டியிடம், அந்தப் பேய் மேட்டர் குறித்துக் கேட்டோம்.

``சார் இந்த இடத்துல தீம் பார்க் இருந்துச்சு, உயரமான ராட்டினத்துல இருந்து குழந்தை ஒண்ணு விழுந்து இறந்ததும், தீம் பார்க் நடத்தக் கூடாதுனு சொல்லிட்டாங்க. கொஞ்சநாள் ஆள் நடமாட்டமில்லாம பூட்டியே கிடந்துச்சு. பாழடைஞ்சு கிடந்ததால, நிறைய குரங்குள் இங்கே வந்து உலாவத் தொடங்குச்சு. கொஞ்சநாள் கழிச்சு ஷூட்டிங் நடத்த திறந்துவிட்டாங்க. ஏற்கெனவே பூட்டிக் கிடந்ததை வெச்சும், ராத்திரி நேரங்கள்ல நடமாடுகிற குரங்குகளைப் பார்த்தும் புதுசா வர்றவங்க மிரள்றாங்க. போதாக்குறைக்கு ஆவி, பேய்னு சீரியல் எடுக்குறாங்க. இதெல்லாம் சேர்ந்துக்கிட்ட சமயத்துல எங்களுக்கே பயமா இருக்கு!" என்கிறார், அந்த செக்யூரிட்டி.

அடுத்த வாரம் வேறொரு `ஷூட்டிங் மீட்டிங்’கில் சந்திப்போம்.