Published:Updated:

``மகன் பிறந்தநாள், தேவதர்ஷினி பிரிவு, புது ஜோடி..!" - `மதுரை' முத்து ஷேரிங்ஸ்

``மகன் பிறந்தநாள், தேவதர்ஷினி பிரிவு, புது ஜோடி..!" - `மதுரை' முத்து ஷேரிங்ஸ்
``மகன் பிறந்தநாள், தேவதர்ஷினி பிரிவு, புது ஜோடி..!" - `மதுரை' முத்து ஷேரிங்ஸ்

குடும்பம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சமீபத்தில் நடைபெற்ற மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்... உட்பட பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார், மதுரை முத்து.

`மதுரை முத்து' என்றாலே நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை. அந்த அளவுக்கு நகைச்சுவையை அள்ளித் தெளிப்பவர். சன் டி.வியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பிரபலங்கள் பட்டியலில் இவர் பெயர் கண்டிப்பாக இருக்கும். அவ்வளவு முக்கியமானவர். பட்டிமன்றங்கள், `அசத்தப்போவது யாரு', `கலக்கப்போவது யாரு' போன்ற காமெடி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, கடந்த ஆறு வருடங்களாக `சன்டே கலாட்டா'வை வழங்கி வருபவர். அப்படிப்பட்டவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய சோகம் என்றால், `என் மனைவியை இழந்ததுதான்!' என்கிறார். அவர் குரலிலேயே அதைப் படிப்போம்.

``எனக்கு இதுவரைக்கும் ஏன் இந்த ஃபீல்டுக்கு வந்தோம்னு தோன்றியதே இல்லை. எந்த ஒரு ஃபீல்டுக்குப் போனாலும் கண்டிப்பாக ஒரு சில நேரங்களில் அதன் மீது சலிப்பு வரலாம். அது சகஜம். ஆனால், மற்றவர்களை சிரிக்க வைத்துச் சம்பாதிக்கிறதுனால எனக்கு இந்த ஃபீல்டு ரொம்பப் பிடிச்சிருக்கு, திருப்திகரமாகவும் இருக்கு. நான் இவ்வளவு தூரம் வந்ததற்கு என் கிராமமே பெருமைப்படுது. என்னை உறவு முறை சொல்லி மத்தவங்ககிட்ட பழகிக்கிறாங்க. கிட்டத்தட்ட என் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பெருமையை வாங்கிக் கொடுத்திருக்கேன். ஆனால், என் வாழ்க்கையில் `ஏன் இருக்கிறோம்?' என்ற ஒரு மனநிலையைக் கொடுத்தது, என் முதல் மனைவியின் இழப்பு. என் மன வலியையும் தாண்டி, நிறைய விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது!" என்பவரின் குரல் கம்முகிறது. தொடர்ந்து அவரிடம் பேசினோம்.

``இப்போது எப்படியிருக்கிறார்கள் உங்கள் இரண்டாவது மனைவியும், மகள்களும், மகனும்?"

``எல்லோரும் நல்லா இருக்காங்க. என் துக்கத்தை என் குடும்பத்தில் துணையாக வருபவரும் சுமப்பாங்களானு தெரியாது இல்லையா... அதனால, அவங்க சந்தோஷமாக இருக்கட்டுமே! அதற்கு நான் இடைஞ்சலாக இருந்ததில்லை'." 

``உங்கள் மகன் சாய் பிறந்தநாள் கொண்டாட்டம் சில தினங்களுக்கு முன்பு நடந்தது. பலபேர் வந்திருந்தார்கள் போல..?"

``என்னைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட சிலரை மட்டுமே அழைத்திருந்தேன். அன்பின் பேரால் சிலர் வந்துட்டாங்க. என்னைப் பொறுத்தவரை என்கிட்ட சிலபேர் பேசிட்டாங்கனா, சில நாள்களிலேயே நெருக்கமாகிடுவாங்க. அப்படித்தான், சொல்லாமகூட வந்துட்டாங்க. அது ரொம்பவே சர்பிரைஸா இருந்தது. மத்தபடி, மகன் சாயின் முதல் பிறந்தநாள் சிறப்பாக முடிந்தது."

``தேவதர்ஷினி 'சன்டே கலாட்டா'விலிருந்து திடீர்னு விலகிட்டாங்களே... ஏன்?"

``கடந்த ஆறு வருடங்களில் கிட்டத்தட்ட எல்லா கெட்டப்பையும் போட்டுட்டாங்க. இதுக்கு மேல என்ன கெட்டப் போடுறதுனு எங்களுக்கே குழப்பமாக இருந்தது. அப்படியும் தொடர்ந்து நிகழ்ச்சியில இருந்தாங்க. இப்போ ஜி தமிழில் அவருடைய திறமையைக் காட்டும் விதமாக ஒரு ஷோ கிடைச்சிருக்கு. அதனால கிளம்பிட்டாங்க. மத்தபடி, பிரச்னை எல்லாம் எதுவுமில்ல."

`` `சன்டே கலாட்டா'விலிருந்து போகும்போது உங்கக்கிட்ட என்ன சொல்லிட்டுப் போனாங்க?"

```நான் விவேக், வடிவேலு போன்றவர்களோடு வொர்க் பண்ணியிருக்கேன். உங்கக்கூட வொர்க் பண்ணணும்போது ரசிச்சுப் பண்ணியிருக்கேன். இது ஒரு நல்ல டீம். ஒரே டைப், ஒரே சேனலில் இருக்கிறதால மாறுதலுக்காகக் கிளம்புறேன். உங்க காம்பினேஷனை ரொம்ப மிஸ் பண்றேன்'னு சொன்னாங்க. எனக்கு அந்த வார்த்தைகள் ரொம்ப சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருந்தது. அவங்க எங்க டீமை எப்படி மிஸ் பண்றாங்கனு தெரியாது. ஆனா, நாங்க அவங்களை ரொம்பவே மிஸ் பண்றோம். அருமையான தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், தேவதர்ஷினி. ஒரு கேரக்டர் பற்றிய டிஷ்கஷனில் இருக்கும்போதே, அந்த கேரக்டருக்கு என்ன மேக்கப் போடலாம், எப்படி பாடி லாங்குவேஜ் கொண்டுவரலாம்னு அந்த கேரக்டராகவே மாறிடுவாங்க. அவங்க போகும்போது, `உங்ககிட்ட இருந்து நிறைய காமெடி சென்ஸைக் கத்துக்கிட்டேன். நிஜமாக உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுவேன்'னும் சொன்னாங்க. சமீபத்தில் போன் பண்ணி, `என்ன ஜாலியா இருக்கீங்களா... நிகழ்ச்சிக்கு வேற ஹீரோயின் ஃபிக்ஸ் பண்ணிட்டீங்களா?'னு விசாரிச்சாங்க. உண்மையைச் சொல்லணும்னா என்னதான் புது ஜோடி வந்தாலும், அவங்க அளவுக்கு எனக்கு செட் ஆகாது. அந்த அளவுக்கு எங்களுக்குள்ள நடிப்பு பற்றிய புரிதல் இருந்தது. நல்ல காம்பினேஷன் அவங்க!." 

``தேவதர்ஷினிக்குப் புதுசா ஒரு பெயர் வெச்சிருக்கீங்களாமே?"

``ஆமாம். மனோரமா, கோவை சரளா வரிசையில் அவரை நான் பார்க்கிறேன். அவங்ககிட்ட ஒரு பத்திரிகை கொடுக்கப் போகும்போது, `நடிப்புத் திலகம்'னு எழுதிக் கொடுத்தேன். அப்படியொரு நடிகை. தேவையில்லாமல் யாரையும் குறை சொல்லமாட்டாங்க. வேலை விஷயத்தில்தான் அவ்வளவு ஈடுபாடோட இருப்பாங்க. இதுவரைக்கும் அவங்க பேர்ல எந்தக் கெட்ட பெயரும் இல்லாமல் இருப்பதற்கு, இதுதான் மிக முக்கியமான காரணம்னு சொல்வேன்." 

``உங்களுக்கு வேறு வாய்ப்பு வந்ததா?"

``வந்தது. ஆனால், எனக்கு விருப்பம் இல்ல. ஏன்னா, இங்க பண்ற பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு நான்தான் ஸ்கிரிப்ட் எழுதுறேன். எனக்கு முழுச் சுதந்திரம் இருக்கிறதா நினைக்கிறேன். அது மற்ற இடத்திலும் கிடைக்குமானு தெரியலை." 

``உங்களுடைய படங்கள் பற்றி?"

``சமீபத்தில் வெளியான திகில் படமான `ரோஜா மாளிகை'யில் காமெடி ரோலில் நடிச்சேன். தம்பி ராமையா மகன் நடிக்கும் `தண்ணி வண்டி' படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகுது. அதிலும் நடிச்சிருக்கேன். இன்னும் இரண்டு, மூன்று படங்களில் நடிச்சுக்கிட்டு இருக்கேன்.'' என்றார், மதுரை முத்து

பின் செல்ல