Published:Updated:

"என் கணவர் இயக்கத்துல நான் நடிக்கிற சூழல் அமையக்கூடாது!" 'ரோஜா' காயத்ரி

"என் கணவர் இயக்கத்துல நான் நடிக்கிற சூழல் அமையக்கூடாது!" 'ரோஜா' காயத்ரி
"என் கணவர் இயக்கத்துல நான் நடிக்கிற சூழல் அமையக்கூடாது!" 'ரோஜா' காயத்ரி

"ஹீரோயின் ரோல் வந்தால் நடிப்பேன். வரலையேன்னு கவலைப்பட மாட்டேன். மனசுக்குப் பிடிச்ச முக்கியத்துவமுள்ள கேரக்டர்தான் முக்கியம்."

'மெட்டி ஒலி' சீரியல் உள்பட பல சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர், காயத்ரி. மூன்று வருட இடைவெளிக்குப் பின்னர், சன் டிவியின் 'ரோஜா' சீரியலில் நடித்துவருகிறார்.

"ரீ-என்ட்ரி ஆக்டிங் பயணம் பற்றி..."

"ஜீ தமிழின் 'நெஞ்சத்தை கிள்ளாதே', என் கடைசி சீரியல். என் பொண்ணு பிறந்ததால், அஞ்சு வருஷமாவது நடிப்புக்கு பிரேக் விட முடிவெடுத்தேன். அதன்படி, மூணு வருஷமா நடிக்கலை. இந்த இடைப்பட்ட காலத்தில், 'சரிகம' புரொடக்‌ஷனில் ரொம்ப காலமா நடிக்க கேட்டுட்டே இருந்தாங்க. அதற்கான சூழல் அமையலை. வாரத்தில் ஒருநாள் மட்டுமே ஷூட்டிங் எனச் சொன்னதால், ஒரு தெலுங்கு சீரியலில் அம்மன் வேடத்தில் நடிக்க ஒப்புகிட்டேன். இப்போ, 'ரோஜா' சீரியலில் கமிட் ஆகியிருக்கேன்."

"நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும்போது ஏதாச்சும் தடுமாற்றம் இருந்துச்சா?"

"சின்ன வயசிலிருந்து நடிக்கிறேன். ஸோ, நடிப்பில் தடுமாற்றமே வராது. ஆனால், ஆரம்ப காலத்திலிருந்து இப்போவரை, ஒவ்வொரு நாளின் முதல் ஷாட் எடுக்கும்போதும் சின்ன படபடப்பு இருக்கும். அப்புறம், இயல்பா நடிக்க ஆரம்பிச்சுடுவேன். இந்த ஒரு விஷயத்தை மட்டும் மாத்திக்கவே முடியலை. டீமில் எல்லோர்கிட்டயும் கலகலப்பா பேசி, அரட்டையடிப்பேன். பல வெரைட்டி உணவுகள் கிடைக்கும் என்பதால், புரொடக்‌ஷன் சாப்பாடு மேலே கொள்ளை ப்ரியம். இப்போ, மறுபடியும் புரொடக்‌ஷன் சாப்பாடு சாப்பிடறேன். 'குடும்பம்', 'மேகலா' சீரியல்களுக்கு அடுத்து, 'ரோஜா'விலும் வடிவுகரசி அம்மாவுடன் சேர்ந்து நடிக்கிறேன். ரெண்டு பேர் வீட்டின் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துப்போம். அவங்க என் நிஜ அம்மா மாதிரி.''

"அம்மா கேரக்டரில் நடிக்கத் தயங்கினீங்களா?"

"நிச்சயமா இல்லை. 'மெட்டி ஒலி' சீரியலிலேயே சின்னப் பசங்களுக்கு அம்மாவா நடிச்சேன். அப்போ, நான் கல்யாணமாகாத சின்னப் பொண்ணு. இப்போ, 'ரோஜா' சீரியலில் கல்யாண வயசுல இருக்கும் மூணு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடிக்கிறதில் எந்தத் தயக்கமும் எனக்கில்லை. அதில் என்ன தப்பு? ஹீரோயின் ரோல் வந்தால் நடிப்பேன். வரலையேன்னு கவலைப்பட மாட்டேன். மனசுக்குப் பிடிச்ச முக்கியத்துவமுள்ள கேரக்டர்தான் முக்கியம்."

"தொடர்ந்து நடிப்பீங்களா?"

"இப்போ நடிச்சுட்டிருக்கும் புராஜெக்டுகளைத் தாண்டி, புது புராஜெக்ட்டை செலக்ட் பண்ண நேரமில்லை. பொண்ணு ப்ரீகேஜி படிக்கிறாங்க. நானோ, கணவரோ, யாராவது ஒருத்தர் எப்பவும் குழந்தையோடு இருக்கிறது முக்கியம். அது குழந்தையின் வளர்ச்சிக்கு மிக அவசியம். அதனால், ஒருத்தருக்கு வொர்க் இருக்கும்போது, இன்னொருத்தர் குழந்தைக்காக நேரத்தை ஃப்ரீ பண்ணிப்போம். இப்போதைக்கு ரெண்டு சீரியல்களில் நடிக்கிறேன். ஃப்யூச்சர் லைஃப் பற்றி எதுவும் முடிவெடுக்கலை."


 
 

"கணவர் இயக்கத்தில் நடிப்பீங்களா?"

"என் கணவர் ரவி, அவர் நிறைய சீரியல்களை இயக்கியிருக்கார். ஆனால், அவர் டைரக்‌ஷனில் நடிக்கிறது பற்றி இதுவரை நினைச்சுப் பார்த்ததில்லை. குழந்தை வளர்ப்புல எங்கள்ல யாராச்சும் ஒருத்தர் ஆக்டிவா இருக்கணும் என்பதால, அவர் இயக்கத்துல நான் நடிக்கிற மாதிரி ஒரு சூழல் அமையக்கூடாதுனு நினைக்கிறேன். புது சீரியல் இயக்கும் முயற்சிகளில் கணவர் கவனம் செலுத்திட்டு இருக்கார். நான் இப்போ நடிச்சுட்டு இருக்கிறதால், குழந்தையைப் பார்த்துக்கிட்டே, ஸ்கிரிப்ட் வொர்க் பண்ணிட்டிருக்கார்."

"சமீபத்தில் நடந்த 'மெட்டி ஒலி' ரீயூனியன் மீட் பற்றி..."

"அமேஸிங் எக்ஸ்பீரியன்ஸ். அந்தச் சந்திப்பில், நான் அதிகம் எதிர்பார்த்தது, என்னுடன் சிஸ்டர்ஸா நடிச்ச நாலு பேரையும், டெல்லி குமார் அப்பாவையும்தான். கலகலப்பா பேசினோம். பழைய மெமரீஸை ஷேர் பண்ணிக்கிட்டோம். எல்லோருமே ரொம்ப பெரியவங்களா வளர்ந்துட்டோம். பலரின் அடையாளமே மாறியிருக்கு. ஆனாலும், மனசுக்கு நிறைவான மீட் அது."
 

அடுத்த கட்டுரைக்கு