Published:Updated:

ஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்..! - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
ஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்..! - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்
ஒரு கொலை, பல முடிச்சு, அந்த மேஜிக்..! - 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்

'ராஜா ரங்குஸ்கி' திரை விமர்சனம்

வில்லா ஒன்றில் நடக்கும் கொலை. அதை செய்தது யார், ஏன் எனத் த்ரில்லர் கதை சொல்கிறது, 'ராஜா ரங்குஸ்கி'.

போலீஸ் கான்ஸ்டபிள் ராஜா. அவருக்கு எழுத்தாளர் ரங்குஸ்கி மீது காதல். ஒரு விஷயத்தை செய்யச் சொன்னால் செய்யமாட்டார்; செய்யாதே என்றால், செய்வார். இது ரங்குஸ்கியின் டிசைன். இந்த டிசைனைப் பயன்படுத்தி ஸ்கெட்ச் போட்டு, வேறொருவரைப் போல் ரங்குஸ்கியிடம் போன் செய்து, `ராஜாவைக் காதலிக்காதே' என்கிறார். டிசைன்படி ரங்குஸ்கி, ராஜாவைக் காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார். ராஜா `சாதித்துவிட்டோம்' என சிம்மை உடைத்துப்போட்டு துள்ளிக் குதிக்கும் வேளையில்தான், சோதிக்கிறது ஒரு போன் கால். ராஜா போட்ட ஸ்கெட்ச் உண்மையாகிறது. வேறு யாரோ ஒருவன் ராஜா செய்ததுபோலவே ரங்குஸ்கியிடம் போனில் பேச ஆரம்பிக்கிறான். ரங்குஸ்கியைக் கொல்லப்போவதாக ராஜாவுக்கும் போன் செய்து மிரட்டுகிறான். இதே நேரத்தில் ரங்குஸ்கியின் பக்கத்து வில்லாவில் வசிக்கும் மரியா என்பவர் கொலை செய்யப்படுகிறார். போனில் பேசுவது யார், மரியாவைக் கொன்றது யார், இருவரும் ஒருவன்தானா, வேறு வேறு ஆள்களா, கொலைக்கான காரணங்கள் என்ன... ஒவ்வொரு முடிச்சையும் ராஜா அவிழ்ப்பதாக நகர்கிறது திரைக்கதை.

கதையின் நாயகன் ராஜாவாக `மெட்ரோ' சிரீஷ். இந்தப் படத்தில் ஏனோ நடிக்கவே இல்லை. முகத்தில் வாய் மட்டும்தான் வேலை செய்கிறது, மற்றதெல்லாம் அப்படியே இருக்கிறது. நாமும் ஒரு போனைப் போட்டு, `கொஞ்சம் நடிங்க பாஸ்' என மிரட்டிவிடலாமா என யோசிக்க வைத்துவிடுகிறார். நாயகி ரங்குஸ்கியாக சாந்தினி. வலுவான கதாபாத்திரம், அதில் நன்றாகவும் நடித்து படத்திற்கு வலு சேர்க்கிறார். ராஜாவின் நண்பன் பாஸ்கராக வரும் `கல்லூரி' வினோத், காமெடி கவுன்டர்களில் கலக்கியிருக்கிறார். வாழ்த்துகள் ப்ரோ! சி.பி.சி.ஐ.டி அதிகாரியாக நடித்திருக்கும் ஜெயக்குமார் ஜானகிராமனும், இன்ஸ்பெக்டராக நடித்திருப்பவரும் நல்ல தேர்வுகள். கச்சிதமாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். கொல்லப்படும் மரியாவாக அனுபமா, வருவது சில நிமிடங்கள்தான் என்றாலும், நன்றாக மனதில் பதிகிறார். இப்படி மற்ற நடிகர்கள் எல்லோரும் நன்றாக நடித்து, படத்தின் ராஜபாட் ராஜாவிடமிருந்து காப்பாற்றியிருக்கிறார்கள்.

தமிழ் சினிமா எத்தனையோ `வூ டன் இட்' திரைப்படங்களைப் பார்த்துவிட்டது. பொதுவாக, த்ரில்லர் படங்களைப் பார்க்கும்போது சுற்றியுள்ள கதாபாத்திரங்களின் மீது நமக்கு சந்தேகம் வரும். ஆனால், இந்தப் படத்தில் யார் மேலும் நமக்கு சந்தேகம் எழவில்லை. காரணம், அழுத்தமில்லாத பலவீனமான பாத்திர வடிவமைப்புகள். உண்மையிலேயே இறுதிவரை கொலையாளி யார் எனக் கொஞ்சம்கூட கணித்திட முடியாத அளவுக்கு திரைக்கதை அமைத்ததில் கவனிக்க வைக்கிறார், இயக்குநர் தரணிதரன். ஆனால், படம் முடிந்த பின்னர், இன்னுமொரு த்ரில்லர் படமாகத்தான் `ராஜா ரங்குஸ்கி' மனதில் பதிகிறது. அதேபோல், துப்புத் துலக்கும் காட்சிகளில் யதார்த்தமும் புத்திசாலித்தனமும் ஒருசில இடங்களில்தான் தெரிகிறது. கொலையாளியைக் கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கும்போது ஏற்படும் ஒருவித ஆர்வம் மொத்தமாகவே மிஸ்ஸிங். புதுமையான கதைக்களம், வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகள். அதை, இன்னும் சிக்கலான சுவாரஸ்யமான திரைக்கதையாக வடிவமைத்திருந்தால், ராஜாவும் ரங்குஸ்கியும் தனித்துத் தெரிந்திருப்பார்கள்.

படம், டெக்னிக்கல் ஏரியாவில் தம்ஸ் அப் காட்டுகிறது. பின்னணி இசையில் கெத்து காட்டி, பாடல்கள் வெத்து வேட்டு கொளுத்தியிருக்கிறார், யுவன் ஷங்கர் ராஜா. ராஜா - ரங்குஸ்கி லவ் தீம் செம! ஒளிப்பதிவாளர் டி.கே.யுவா வண்ணங்களோடு விளையாடியிருக்கிறார். பொக்கெ ஷாட்கள் தாறுமாறு. அருமையான விஷுவல் அவுட்புட்டாக வந்திருக்கிறது. ஷஃபிக் முகமது அலியின் படத்தொகுப்பு படத்தின் வேகத்தைக் கூட்டுகிறது. 

நம்மை சீட்டின் நுனிக்கும் கொண்டுவராத, சீட்டை விட்டும் எழுந்திருக்கவும் வைக்காத ஒரு த்ரில்லர், இந்த `ராஜா ரங்குஸ்கி'.

அடுத்த கட்டுரைக்கு