Published:Updated:

மகேந்திரனின் `உதிரிப்பூக்கள்' நாயகி அஸ்வினி இப்போது எப்படி இருக்கிறார் ? #VikatanExclusive

மகேந்திரனின் `உதிரிப்பூக்கள்' நாயகி அஸ்வினி இப்போது எப்படி இருக்கிறார் ? #VikatanExclusive
மகேந்திரனின் `உதிரிப்பூக்கள்' நாயகி அஸ்வினி இப்போது எப்படி இருக்கிறார் ? #VikatanExclusive

``சின்ன ரோல் கிடைச்சாலும், அது கனமா இருக்கணும்னு ஆசைப்பட்டேன். பட்... அப்படிப்பட்ட கேரக்டர்ஸ் தொடர்ந்து கிடைக்கலை. செட் பிராப்பர்டியா நடிக்கவும் இஷ்டமில்லை. மனக்கஷ்டத்தோடுதான் சினிமாவைவிட்டு விலகினேன்.''

`அழகிய கண்ணே உறவுகள் நீயே' என்ற `உதிரிப்பூக்கள்' படத்தின் பாடல், எங்கே ஒலித்தாலும் நம் மனக்கண்களில் அந்தக் காட்சி வரும். ஒரு வெண்ணிற சாமந்திப் பூ தலைகுனிந்து நிற்பதுபோல படத்தின் நாயகி அஸ்வினி நிற்கும் காட்சி. தன்னை நேசிக்கும் சரத்பாபு, தன் மனதைப் படித்துவிடாதபடி, வெள்ளைத்தாள் போன்று ஒரு வெற்றுப் பார்வைப் பார்க்கும் அஸ்வினியை அன்றைய இளசுகள் மறந்திருக்கவே மாட்டார்கள். பாக்யராஜூடன் `ஒரு கை ஓசை'யில் டாக்டர் வேடத்தில் நடித்தார். நாயகனின் (பாக்யராஜ்) முட்டாள்தனங்களைப் பார்த்து கண்களில் சிரிப்புக் கொப்பளிக்கும். அப்படிக் கண்களாலேயே நடிப்பவர் அஸ்வினி. ஒரு சில படங்களிலேயே `ராசி இல்லாதவர்' என முத்திரை குத்தப்பட்டு, ஓரம் கட்டப்பட்டார். சில நாள்களுக்கு முன்பு, இயக்குநர் மகேந்திரனுடன் சமூக வலைதளங்களில் வலம் வந்தவரிடம் பேசினேன்.  

``ஹலோ மேம் எப்படி இருக்கீங்க?''

``ஃபைன் ஃபைன் ஃபைன்... நான் ரொம்ப நல்லா இருக்கேன். ஒன்றரை வயசுப் பேரனுடன் பெங்களூரில் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.''

``உதிரிப்பூக்களில் வந்த லஷ்மி கதாபாத்திரத்தை இன்னுமே எங்களால் மறக்கமுடியலை. ஏன் சினிமாவுல தொடர்ந்து நடிக்கலை?''

``எனக்கு ஆக்டிங் ரொம்பப் பிடிக்கும். அதனால்தான், நடிச்ச 10 படங்களிலேயே மூன்றில் அம்மா ரோல் பண்ணினேன். 7 படங்களில் கேரக்டர் ரோல். `உதிரிப்பூக்கள்' படத்தில்கூட ரெண்டு குழந்தைகளுக்கு அம்மா கேரக்டர்தானே. சின்ன ரோல் கிடைச்சாலும், அது கனமா இருக்கணும்னு ஆசைப்பட்டேன். பட்... அப்படிப்பட்ட கேரக்டர்ஸ் தொடர்ந்து கிடைக்கலை. செட் பிராப்பர்டியா நடிக்கவும் இஷ்டமில்லை. மனக்கஷ்டத்தோடுதான் சினிமாவைவிட்டு விலகினேன்.''

``உங்கள் பர்சனல் வாழ்க்கையைப் பற்றித் தெரிஞ்சுக்கலாமா...''

``தாராளமா... தமிழில், `உதிரிப்பூக்கள்' முதல் படம். அதற்கு முன்னாடி, `ஹேமாவதி', `சாவித்திரி' என ரெண்டு கன்னடப் படங்களில் நடிச்சிருந்தேன். சாவித்திரி படத்தைப் பார்த்துட்டுதான், `உதிரிப்பூக்கள்' வாய்ப்பு வந்துச்சு. தொடர்ந்து சில படங்களில் நடிச்சுட்டிருக்கும்போதே (1981) கல்யாணம் ஆச்சு. கணவர் டி.எஸ்.ரங்கா, கன்னட இயக்குநர். அவர் இந்தியில் இயக்கிய `கித்' படத்துக்குத் தேசிய விருது கிடைச்சது. திருமணத்துக்குப் பிறகு 12 வருஷங்கள் நடிப்பைப் பற்றி யோசிக்கவே இல்லை. மகள் தன்விதான் என் உலகமா இருந்தாள். 1993-ம் வருஷம், ஷாஜி சார் வற்புறுத்தலுக்காக `ஸ்வாஹம்' என்கிற மலையாளப் படத்தில் நடிச்சேன். என் உடம்புதான் ஷூட்டிங் ஸ்பாட்ல இருக்கும். மனசோ மகளையே நினைச்சுட்டிருக்கும். இனி நடிப்பே வேண்டாம்னு முடிவெடுத்துட்டேன். மகளுக்குக் கல்யாணமாகி இதோ ஒரு பேரனும் வந்துட்டான். இப்போ, `ஈஸி ஈஸி மேத்ஸ்' என்கிற பெயரில், மேத்ஸ் டுடோரியல் வீடியோக்களை ரெடி செஞ்சு யூடியூபில் அப்லோடு பண்ணிட்டிருக்கேன்.'' 

``இயக்குநர் மகேந்திரன் பற்றி உங்க கருத்து...''

``அஸ்வினியை `உதிரிப்பூக்கள்' படத்தின் லஷ்மியாகவே மாற்றியவர் மகேந்திரன் சார். இந்த சீன்ல குனியணும், இந்த சீன்ல நிமிர்ந்துப் பார்க்கணும், இந்த சீன்ல யோசிக்கிற மாதிரி நிற்கணும், இங்கே சிரிக்கணும், இப்போ அழணும்னு அழகா சொல்லிக்கொடுத்து அஸ்வினி என்கிற களிமண்ணை, அழகான பாத்திரமா மாற்றியவர். 1979-ம் வருஷம், உதிரிப்பூக்களில் நடிச்ச அஸ்வினி இன்னிக்கு வரை மக்கள் நினைவில் இருக்கக் காரணம் மகேந்திரன் சார்.''

``மறுபடியும் நடிக்கும் ஐடியா இருக்கா?''

``வாய்ப்பு வந்தா யோசிக்கலாம்.''

வெல்கம் பேக் மேம்!

அடுத்த கட்டுரைக்கு