
கொஸ்டின்குமார், ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி, கார்த்திகேயன் மேடி
நிருபர்: ``சார், வணக்கம். தீவிர அரசியலில் குதிக்கப்போறதா முடிவெடுத் திருக்கீங்கில்ல, அதைப்பத்திச் சொல்லுங்க!’’

டி.ராஜேந்தர்: ``மைலாப்பூர்ல இருக்கு குளம், கோயில் வாசலில் விக்குது பழம்!’’
நிருபர்: ``குளத்துக்கும் பழத்துக்கும் என்ன சார் சம்பந்தம்?’’
டி.ராஜேந்தர்: ``சம்பந்தத்தைப் பத்தி என்கிட்ட கேட்கிறீங்களா? இதுவரைக்கும் என் பிரஸ்மீட் பார்த்ததே யில்லையா? கமல் நடிச்சது பம்மல் உவ்வே சம்பந்தம், லிட்டில் சூப்பர் ஸ்டார் எஸ்.டி.ஆர் என்னோட பந்தம்!’’
நிருபர்: ``அதிருக்கட்டும் சார், அந்தக் குளம்..?’’

டி.ராஜேந்தர்: ``குளம் இருந்தாத்தான் குதிக்க முடியும். பலம் இருந்தாத்தான் அரசியலில் ஜெயிக்க முடியும்!’’
(சுற்றியிருக்கும் டி.ஆர். ஆதரவாளர்கள் கைதட்டுகிறார்கள். அதைக் கலவரத்தோடு பார்க்கிறார் நிருபர்)
நிருபர்: ``அப்போ அரசியலில் உங்க பலம் அதிகரிச்சிருச்சுங்கிறீங்களா?’’
டி.ராஜேந்தர்: ``லட்சிய தி.மு.க. மொத்தம் எத்தனை எழுத்து?’’
நிருபர்: ``ல...ட்....சி....ய...தி...மு....க....ஏழு எழுத்து!’’
டி.ராஜேந்தர்: ``ஏழாவது இடத்தில சனி பகவான் சஞ்சரிக்கிறார். ‘இலட்சிய தி.மு.க.’ - எட்டு எழுத்து. எட்டாவது இடத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார்!’’
நிருபர்: ``சார், இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?’’
டி.ராஜேந்தர்: `` ‘எட்டு எட்டா மனுஷ வாழ்க்கையைப் பிரிச்சுக்கோ’ன்னு கர்நாடகாவிலிருந்து ரஜினி வந்து சொன்னா நம்புவீங்க. இந்தத் தாடி வெச்ச தமிழன் சொன்னா நம்ப மாட்டீங்களா? தமிழன் மேல ஏத்திட்டீங்க லாரி, தலைகுனிஞ்சு நீங்க கேட்கணும் ஸாரி!’’
நிருபர்: ``சார்... அது வந்து...’’
டி.ராஜேந்தர்: ``இருங்க, நான் இன்னும் முடிக்க வேயில்லை. தமிழன் மேல ஏத்திட்டீங்க லாரி, தலைகுனிஞ்சு நீங்க கேட்கணும் ஸாரி! சரவணா ஸ்டோர்ஸ்ல கிடைக்கும் சாரி, சரவண பவன்ல கிடைக்கும் பூரி!’’

நிருபர்: ``சார், முடியல சார்!’’
டி.ராஜேந்தர்: ``எனக்கும் தான் முடியலை, தமிழ்நாட்டுக்கு விடியலை. நான் பேசுறது உங்களுக்குப் புரியலை!’’
நிருபர்: ``அதைத்தான் சார், நான் ஆரம்பத்தில இருந்தே சொல்லிக்கிட்டிருக்கேன். நீங்க என்ன பேசுறீங்கன்னே புரியலை!’’
டி.ராஜேந்தர்: ``கமல் பேசினா மட்டும் புரியுது. நான் பேசுனா உங்களுக்கு ஏன் எரியுது?’’
நிருபர்: ``அதை விடுங்க சார். சிம்பு அரசியலுக்கு வருவாரா?’’
டி.ராஜேந்தர்: ``அவர் ஷூட்டிங்குக்கே வரலைன்னு சொல்றாங்க சிலபேர், அரசியலுக்கு வருவாரான்னு கேக்குறாங்க பலபேர்! அதுக்குப் பதில் சொல்லணும் காலம், காலங்காத்தால வீட்டு வாசலில போட்டீங்களா கோலம்?’’
நிருபர்: ``அடுத்த தேர்தலில் நீங்க யாரோட கூட்டணி வைப்பீங்க?’’

டி.ராஜேந்தர் : ``ஸ்கூலில் இருக்கும் சப்ஜெக்ட் பாட்டனி, சரவணபவன் இட்லிக்கு வைப்பாங்க சட்னி!’’
நிருபர்: ``சார் நான் கேட்ட கேள்விக்கு சம்பந்தம் இல்லாம...’’
டி.ராஜேந்தர்ர்: ``தமிழன் மேல ஏத்திட்டீங்க லாரி, தலைகுனிஞ்சு நீங்க கேட்கணும் ஸாரி!’’

நிருபர்: ``ரொம்ப ஸாரி சார். ‘இலட்சிய தி.மு.க.’ன்னு பேர் வெச்சிருக்கீங்களே, என்ன சார் உங்க கட்சி லட்சியம்?’’
டி.ராஜேந்தர்: ``தமிழன் அலட்சியமா இருக்கக்கூடாதுங்கிறதுதான் லட்சியம்! வேற ஏதாவது கொஸ்டின் இருக்கா?’’
நிருபர்: ``இதுவே போதும், அடுப்புல கொதிக்குது சாதம்!’’
(தலை தெறிக்க ஓடுகிறார் நிருபர்)