Published:Updated:

" 'ஆரண்ய காண்டம்' கொடுக்காப்புலி மாதிரி 'சூப்பர் டீலக்ஸ்' ராசுக்குட்டி!" - தியாகராஜன் குமாரராஜா #VikatanExclusive

"டப்பிங் போய்க்கிட்டு இருந்த சமயத்துல, விஜய் சேதுபதி ஃபஹத் பாசிலோட நடிப்பைப் பார்த்து, `மனுஷன் என்னமா நடிக்கிறார்ல'னு ஆச்சர்யப்பட்டார். ஃபஹத், `விஜய் சேதுபதி செமயா நடிக்கிறார்ல'னு ஆச்சர்யப்பட்டார். ரெண்டுபேரும் மாத்தி மாத்தி புகழ்ந்துக்கிட்டிருந்தா, வேலை கெட்டுப்போகும்னு அனுப்பிட்டேன்."

" 'ஆரண்ய காண்டம்' கொடுக்காப்புலி மாதிரி 'சூப்பர் டீலக்ஸ்' ராசுக்குட்டி!" - தியாகராஜன் குமாரராஜா #VikatanExclusive
" 'ஆரண்ய காண்டம்' கொடுக்காப்புலி மாதிரி 'சூப்பர் டீலக்ஸ்' ராசுக்குட்டி!" - தியாகராஜன் குமாரராஜா #VikatanExclusive

`ஆரண்ய காண்டம்' படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தவர், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. புதுமையான திரைமொழி, தனித்துவமான கதாபாத்திரங்கள், குறைந்த செறிவான வசனங்கள்... என `ஆரண்ய காண்ட'த்தைப் பற்றிய பதிவுகள் இப்போதுவரை சமூக வலைதளங்களில் எழுதப்பட்டு, விவாதிக்கப்பட்டு வருகின்றன. விஜய் சேதுபதி, பஹத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் என ஆச்சர்யப்பட வைக்கும் கூட்டணியுடன் தனது இரண்டாவது படைப்பான `சூப்பர் டீலக்ஸ்' படத்தை முடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரோடு, அந்த போஸ்டரின் வடிவேலு வெர்ஷனையும் ரகளையாக வெளியிட்ட தியாகராஜன் குமாரராஜாவிடம் பேசினோம். 

``படத்துல ஷில்பா, வேம்பு கேரக்டர்களைப் பற்றிச் சொல்லுங்க?" 

``ஷில்பா கேரக்டரை எப்படி யோசிச்சு டிசைன் பண்ணினேன்னு சொல்லத் தெரியல. இந்த கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கிட்டது பெரிய விஷயம். ஷில்பாவோட லுக் நல்லா வரணும்ங்கிறதுல அவர்  ரொம்பவே மெனக்கெட்டார். அதேமாதிரி, வேம்பு ஒரு சராசரி பெண். சராசரிக்கும் கொஞ்சம் கூடுதலா இருக்கவேண்டிய சூழ்நிலையில் வேம்பு என்ன பண்றாங்கிறதுதான் கதை. `ஆரண்ய காண்டம்'ல இருந்த ரைட்டிங் பேட்டர்ன் இந்தப் படத்திலும் இருக்கு. ரம்யா கிருஷ்ணன் மேடம் வந்தா, அவங்கதான் சூப்பர் ஸ்டார். ஃபஹத் வந்தா, அவர்தான் மெயின் கேரக்டரா தெரிவார். இப்படிப் படத்துல நடிச்சிருக்கிற எல்லோருக்கும் சமமான கேரக்டர் கொடுத்திருக்கேன்." 

``ஃபஹத் பாசில் எப்படி இந்தப் படத்துக்குள்ளே வந்தார்?" 

``அவரை ஏற்கெனவே சந்திச்சிருக்கேன். என் படத்துல அவரை நடிக்க வைக்க ஆசை. ஒருநாள் இந்தப் படம் பற்றி அவர்கிட்ட சொன்னேன். கேட்டதும் பிடிச்சுப்போய் கமிட் ஆயிட்டார். தவிர, அவரை அணுகுனதுக்குக் காரணம், ஃபஹத் நல்ல நடிகர். படத்துல அவர் நடிக்கிறதே தெரியாத மாதிரி, ஷூட்டிங் ஸ்பாட்லேயும் அவர் இருக்கிறதே தெரியாது; அவ்ளோ அமைதியான நபர். இந்தப் படத்துல முகில் கேரக்டர்ல நடிச்சிருக்கார். சினிமாவுல நடிக்க ஆசைப்படுற ஆளா வர்றார். டப்பிங் போய்க்கிட்டு இருந்த சமயத்துல, விஜய் சேதுபதி இவரோட நடிப்பைப் பார்த்து, `மனுஷன் என்னமா நடிக்கிறார்ல'னு ஆச்சர்யப்பட்டார். ஃபஹத் பாசிலோ, `விஜய் சேதுபதி செமயா நடிக்கிறார்ல'னு ஆச்சர்யப்பட்டார். ரெண்டுபேரும் மாத்தி மாத்தி புகழ்ந்துக்கிட்டிருந்தா, வேலை கெட்டுப்போகும்னு அனுப்பிட்டேன்."

``வடிவேலுவை  உங்களுக்குப் பிடிக்கும்னு கேள்விப்பட்டிருக்கோம். அதனாலதான் `சூப்பர் டீலக்ஸ்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வடிவேலு வெர்ஷனிலும் ரெடி பண்ணினீங்களா?" 

``எல்லோரையும் மாதிரி எங்களுக்கும் வடிவேலு பிடிக்கும். சுவாரஸ்யமா சொல்லணும்னா, எந்தப் படத்தோட ஃபர்ஸ்ட் லுக் வந்தாலும் மீம் கிரியேட்டர்கள் வடிவேலு கதாபாத்திரத்தை வெச்சு மீம்ஸ் பண்ணிடுறாங்க. இந்த முறை நாங்களே முந்திக்கிட்டோம், அவ்வளவுதான்." 

``வடிவேலுவை வைத்துப் படம் இயக்குற ஐடியாவுல இருந்தீங்களே?"

"வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கக் கூடியவர் வடிவேலு. அவரை வைத்துப் படம் பண்ற ஆசை இருக்கு. அப்படி ஒரு வாய்ப்பு வந்தா கண்டிப்பா மிஸ் பண்ணமாட்டேன்."

`` `ஆரண்யகாண்டம்' படத்துல சிவப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தீங்க. இந்தப் படத்துல நிறக் குறியீடு எதுவும் இருக்கா?" 

`` `சூப்பர் டீலக்ஸ்'  படத்தோட ஒட்டுமொத்த வண்ணமே சிவப்புதான். ஒவ்வொரு முக்கியமான நகர்விலும் சிவப்பு நிறம் பிரதானமா இருக்கும்."  

``யுவன்கூட ரெண்டாவது படம். அதைப் பற்றிச் சொல்லுங்க?"

``யுவன் மியூசிக் கம்போஸ் பண்ணும்போது அவர் பக்கத்துல உட்கார்ந்து இருக்கிறதே அலாதியான அனுபவமா இருக்கும். படத்தோட மியூசிக் வொர்க் அப்போ, அவர்கூட இருக்கிற போட்டோ ஒண்ணு போஸ்ட் பண்ணினோம். அது செம வைரல். இந்த போட்டோ போட்டதுக்கான காரணமே, `இவனுங்க கதவை மூடிட்டு என்னதான் பண்றாங்க'னு ஆடியன்ஸ் தெரிஞ்சுக்கணும்னுதான். இதுவரை படத்துல பாட்டு வைக்கிற ஐடியா இல்லை. பின்னணி இசை மட்டும்தான் பிளான் பண்ணியிருக்கோம். பட புரமோஷனுக்காகப் பாட்டு ரெடி பண்ணலாம்னு எண்ணம் இருக்கு. அதுக்கு யுவன்தான் மனசு வைக்கணும்." . 

``ஷில்பா, வேம்பு, முகில்... வேறென்ன கேரக்டர்ஸ் படத்துல?" 

```அற்புதம்'ங்கிற கேரக்டரில் மிஷ்கின் நடிச்சிருக்கார். தீவிர இறை நம்பிக்கை உள்ள கேரக்டர். `லீலா' கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடிச்சிருக்காங்க. முக்கியமான கேரக்டரில் பக்ஸும், காயத்ரியும் நடிச்சிருக்காங்க. இதுதவிர படத்துல முட்டை பப்ஸ், ஹாஜி பாலாஜி, தூயவன்... இப்படிப் பல பசங்க நடிச்சிருக்காங்க."  

`` `ஆரண்ய காண்டம்' படத்துல கொடுக்கப்புலினு சின்னப் பையன் இருப்பான். இந்தப் படத்தோட போஸ்டர்லகூட ஒரு குட்டிப் பையன் இருந்தானே?"

``இந்தப் படத்துல `ராசுக்குட்டி'ங்கிற கேரக்டரில் ஒரு பையன் நடிச்சிருக்கான். ராசுக்குட்டியை எல்லோருக்கும் பிடிக்கும். ஏன்னா, அவன் கொடுக்கப்புலியைவிட சின்னப் பையன். அவனுக்குப் படத்துல நிறைய பிரச்னைகள் இருக்கிற மாதிரியான காட்சிகள் இருக்கும். இந்தப் பையனோட ஒரிஜினல் பெயர், அஸ்வந்த். நடிப்புல பின்னியெடுத்திருக்கான். ரம்யா கிருஷ்ணன் மேடம் இவனுடைய போர்ஷனைப் பார்த்து அசந்துட்டாங்க. ராத்திரி ஷூட்டிங் நடக்கும்போது, தூங்கி விழுந்துக்கிட்டிருப்பார். `டேக்'னு சொல்லிட்டா போதும், சுறுசுறுப்பாகிடுவான். பிறவி நடிகன் அவன்."  

``நலன் குமாரசாமி, மிஷ்கின், நீலன், குமாரராஜா... நாலுபேரும் கதை விவாதத்தில் இருந்திருப்பீங்க. அந்த இடமே ரணகளமா இருந்திருக்குமே?!" 

``நாங்க நாலுபேரும் ஒண்ணா டிஸ்கஸ் பண்ணல. ஒருமுறை நானும், மிஷ்கினும் பேசுவோம். அடுத்தமுறை நானும், நீலனும் பேசுவோம். அப்புறம், நலன்கூட ஒருநாள். அவங்கவங்க போர்ஷனை எழுதி வெச்சிருப்பாங்க. எப்போ கிடைக்கும்னு போன் பண்ணிக் கேட்டா, அனுப்பி வெச்சிடுவாங்க. மிஷ்கின் டப்பிங் பண்ணும்போது படத்துல என்ன சீன்ஸ் வந்திருக்குனு பார்த்தார். நலன் முழுப் படத்தையும் பார்த்துட்டார். நீலன் இன்னும் படமே பார்க்கலை. ஒருவேளை நாலுபேரும் ஒண்ணா உட்கார்ந்து பேசியிருந்தா, சுவாரஸ்யமாதான் இருந்திருக்கும்!"  

``திருநங்கை கேரக்டரில் விஜய் சேதுபதி நடிச்சிருக்கார். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இந்தப் படம் எப்படிப்பட்ட அனுபவத்தைக் கொடுக்கும்?"  

``என் படங்கள்  மூலமா கருத்துச் சொல்றதுல எனக்கு உடன்பாடு இல்லை. இந்தக் கதைக்கு ஷில்பா கேரக்டர் தேவைப்பட்டது. மூன்றாம் பாலினத்தினர் படும் கஷ்டங்கள், வலிகளைச் சொல்ற படமல்ல இது. `வேம்பு' கேரக்டரில் சமந்தா நடிச்சிருக்காங்க. அவங்க பெண்ணியத்தைப் பற்றிப் பேசலை. ஷில்பாவும், வேம்புவும் கதாபாத்திரங்கள்... அவ்வளவுதான்!"