பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

குழந்தைக் குரல் மறைந்தது!

குழந்தைக் குரல் மறைந்தது!
பிரீமியம் ஸ்டோரி
News
குழந்தைக் குரல் மறைந்தது!

எம்.குணா

ழலைக் குரல் என்றால் மனதில் வந்து போகும் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி. சுதர்சனம், கே.வி.மகாதேவன், இளையராஜா, தேவா என்று எல்லாத் தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி மயக்கியவர் சமீபத்தில் மரணமடைந்தார். அவரின் மகன் ராஜ் வெங்கடேஷ், அம்மா குறித்த நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார்.

“இந்தியா சுதந்திரம் அடையறதுக்கு முன்னாடியே அவங்க பாடகியாப் பிரபலம் ஆகிட்டாங்க. 1945-ம் ஆண்டு, அம்மாவுக்கு வயசு 12. குமாரி கமலாவுக்காகக் குரல்கொடுத்து ‘மகான் காந்தி மகான்’ என்று அவங்க பாடிய பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலம். அந்தக்காலத்தில் கிராமபோன் கொலம்பியா இசைத்தட்டு ஒரு லட்சத்துக்கும் மேல் விறபனையாகி சாதனை படைத்தது. அம்மாவின் குரலைக் கேட்டு வியந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அவரோட ஏ.வி.எம் நிறுவனத்தில் கான்ட்ராக்ட் போட்டுப் பாடவைத்தார்.  ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான ‘வாழ்க்கை’ படத்தில் நடிகை வைஜெயந்திமாலாவுக்கு முதன்முதலாக  குரல்கொடுத்த  ‘உன் கண் உன்னை ஏமாற்றினால்’ பாடல் பிரசித்தி பெற்றது. ஏவி.எம் ஒப்பந்தத்தில் இருந்து விலகியபிறகு தனியாகவந்து பாடிய ‘மண்ணுக்கு மரம் பாரமா’,  ‘கோழி ஒரு கூட்டிலே’ பாடல்கள் பெரிதாக பேசப்பட்டதை அறிந்து மீண்டும் ஏ.வி.எம் நிறுவனத்துக்கு செட்டியார் அழைத்தார். சாவித்திரிக்காக ‘சிங்காரப் புன்னகை’ பாடலையும், செளகார் ஜானகிக்காக ‘ சின்ன பாப்பா’, ‘படித்ததினால் அறிவு பெற்றோர்’ பாடலையும் பாடினார். சிறுமியாக இருந்தபோது பெரியவர்களுக்காகப் பாடியதும், வளர்ந்ததும் குழந்தைக் குரலில் பாடியதும் அவரது சாதனைகள்.

குழந்தைக் குரல் மறைந்தது!

‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் ‘அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே....’ பாடலை கமல்ஹாசனுக்காகப் பாடினார். ‘முதன்முதலில் எனக்குக் குரல் கொடுத்தவர்’ என்று கமல்ஹாசனும், ‘நான் பாடிய குழந்தைப் பாடல்களிலேயே கமலுக்குப் பாடிய பாடல் பெரும் புகழைத் தந்தது’ என்று அம்மாவும் நெகிழ்ந்துபோனார்கள். ஒரு சினிமா நிகழ்ச்சியில் இளையராஜாவைச் சந்தித்தவர், ‘எனக்குப் பாட்டுப் பாட ஒரு சான்ஸ் தரக்கூடாதா? இன்னொரு ரவுண்ட் வருவேன்ல’ என்று உரிமையுடன் கேட்டார். அதை மறக்காமல்  மனதில் வைத்துக்கொண்ட இளையராஜா ‘நாயகன்’ படத்தில் அம்மாவையும், ஜமுனாராணியையும் ‘நான் சிரித்தால் தீபாவளி..’ பாடலைப் பாடவைத்தார். கமல்ஹாசனின் முதல் படத்தில் குரல்கொடுத்த அம்மா  பல ஆண்டுகளுக்குப் பிறகு, அதே கமல் ஹீரோவாக நடித்த படத்தில் பாட்டு பாடியதும் சாதனையே. ராம. நாராயணன் சார் இயக்கத்தில் பேபிஷாம்லி நடித்து வெளிவந்த படங்களில் பெரும்பாலான பாடல்களை அம்மாதான் பாடினார். அதில் ‘துர்கா’ படத்தில் ‘பாப்பா பாடும் பாட்டு’ ரொம்பப் பிரபலமான பாட்டு” என்றார்.

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், “ஏவி. மெய்யப்ப செட்டியாருக்கு மிகவும் பிடித்த பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி. ஒருநாள் ஏ.வி.எம் ஸ்டூடியோவில் பிரிவியூ ஷோ பார்த்துவிட்டு வெளியில் வரும்போது ராஜேஸ்வரி மட்டும் தனியாக ஒரு பாடலை முணுமுணுப்பதை செட்டியார் பார்த்துவிட்டார்.  ‘என்ன பாட்டு, எங்கே பாடிக்காட்டு?’ என்று செட்டியார் கேட்க, இந்தியில் இருந்த ட்யூனை பாடிக்காட்டினார் ராஜேஸ்வரி. உடனே அவரை அழைத்துச்சென்று ‘இந்த பொண்ணு ஒரு பாட்டுப் பாடுது. நல்லா இருக்கு. நம்ம படத்தில பயன்படுத்திக்கங்க’ என்று இசையமைப்பாளர் சுதர்சனிடம் சொன்னார். ‘வாழ்க்கை’ படத்தில் வைஜெயந்திமாலா பாடிய ‘உன் கண் உன்னை...’ பாடல்தான் ராஜேஸ்வரி பாடிய அந்தப் பாடல். ஏ.வி.எம். நிறுவனத்தில் 9 வருட ஒப்பந்தத்தில் இருந்தவர் மாத ஊதியத்தில் அந்த நிறுவனம் தயாரிக்கும் படங்களில் பாடல்கள் பாடிவந்தார். குழந்தைப் பாடல்கள் என்றாலே ராஜேஸ்வரி அம்மாதான். அவர் இப்போது நம்மிடம் இல்லை என்றாலும் அவரது பாடல்களைக் கேட்கும்போது   அந்தப் பாடல்கள் நம் நெஞ்சைத் தாலாட்டுவது உறுதி” என்றார்.