
ரீவைண்ட்முகில்
யார் அந்த விஐபி?
கனடாவைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் பெர்ஸி வில்லியம்ஸ். அவருக்கு ஒலிம்பிக்ஸில் கலந்துகொள்ள வேண்டுமென்ற கனவு இருந்தது. 1928-ல் ஒலிம்பிக் போட்டிகள் ஆம்ஸ்டெர்டாம் நகரத்தில் நடைபெறவிருந்தன. அதற்காக ஹோட்டலில் சர்வராகவும், பாத்திரங்கள் கழுவியும் பணம் சேர்த்த பெர்ஸி, ஒலிம்பிக் போட்டிகளுக்குக் கிளம்பிச் சென்றார்.

100 மீ ஓட்டப்பந்தயத்தை 10.6 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். அது அப்போதைய உலக சாதனை. ‘உலகின் வேகமான மனிதர்’ என்ற சிறப்பு பெர்ஸிக்குக் கிடைத்தது. பரிசளிப்பெல்லாம் முடிந்து ஹோட்டலுக்குத் திரும்பினார். மாலை வேளையில் பெர்ஸியைப் பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் ஹோட்டல் முன் குவிந்துவிட்டனர். அவருக்காகக் காத்திருந்தனர். நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. ஏன்?
காரணம், ‘யாரோ ஒரு பெரிய மனிதரைக் காண எல்லோரும் காத்திருக் கிறார்கள். நாமும் காத்திருப்போம்’ என்று பெர்ஸியும் அந்தக் கூட்டத்தில்தான் அப்பாவியாக, அமைதியாக நின்று கொண்டிருந்தார்.
சாப்ளின் மாதிரி!
சார்லி சாப்ளின் புகழின் உச்சத்தில் இருந்த சமயம். அவரது படங்கள் ஓஹோவென மக்களால் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த காலம் அது. அப்போது அவரைப் போலவே நடை, உடை, பாவனையுடன் பலரும் வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தனர். அமெரிக்காவில் ஒரு கண்காட்சியில் ‘சார்லி சாப்ளின் வாக்’ என்றொரு போட்டி அப்போது அறிவிக்கப்பட்டது. அதில் சார்லி சாப்ளின் போலவே தத்ரூபமாக உடையணிந்து, நடந்து, நடனமாடிக் காட்டும் ஒருவருக்குப் பரிசு என்று அறிவிக்கப்பட்டது. குட்டையாகவும் நெட்டையாகவும், சராசரி உயரத்துடனும் பலரும் அந்தப் போட்டியில் கலந்து கொண்டு சாப்ளின் போலவே நடந்தும் நடித்தும் காட்டினர். அதில் அசத்திய ஒருவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டதாகச் செய்தி உண்டு.

அதே போட்டியில் நிஜ சார்லி சாப்ளினே வேறொரு பெயரில் கலந்து கொண்டார் என்று பின்பு பல பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன. தனது ஸ்டைல் மீசை இன்றியும், தனது பாணியிலான ஷூ அணியாமலும், போட்டியில் ரகசியமாகக் கலந்து கொண்டு நடந்தும் நடித்தும் காட்டிய உண்மையான சாப்ளின் அதில் தோற்றுப்போனார்.
அவருக்கு இருபதாவது இடமே கிடைத்தது.
ஆஹா தக்காளி!
ராபர்ட் கிப்பன் ஜாக்சன் என்பவர் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவின் நியு ஜெர்ஸி மாகாணத்தில் வாழ்ந்தவர். விவசாயி, தோட்டக்கலை நிபுணர், வரலாற்றாளர், நிதீபதியும்கூட. அப்போதுவரை அந்தப் பகுதியில் தக்காளி அறிமுகமாகவில்லை. தோட்டக்கலை நிபுணரான ராபர்ட்தான், தக்காளியை அங்கே இறக்குமதி செய்து, தன் தோட்டத்தில் விளைவிக்கவும் செய்தார். பின் தக்காளியைச் சந்தைக்குக் கொண்டுசென்று விற்பனைக்கும் வைத்தார்.
பளபள தக்காளியைக் கண்டு ஒருவர்கூட விரும்பி வாங்கவில்லை. என்னடா இது! இப்படிச் சிவப்பாக இருக்கிறதே! அய்யோ, இது விஷம். இந்தப் பழத்தைத் தின்றால் செத்துப் போய்விடுவோம்! ஒவ்வொருவருமே பயந்தார்கள். அதுவரை தக்காளி குறித்து அப்படிப்பட்ட கட்டுக்கதைகளையே அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். இந்தச் சூழ்நிலையில் ராபர்ட் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

‘மக்கள் முன்னிலையில் நான் தக்காளிப் பழங்களை உண்ணப் போகிறேன்.’ என அறிவித்தார்.
பரபரப்பு பற்றிக் கொண்டது. குறிப்பிட்ட தினத்தில் அந்த சாலம் (Salem) நகரத்தின் மையப்பகுதியில் சுமார் இரண்டாயிரம் மக்கள் நெருக்கி அடித்துக் கொண்டு நின்றனர். அவர்கள் முன்பு கறுப்பு கோட் அணிந்த ராபர்ட் தோன்றினார். கூட்டம் ஆர்ப்பரித்தது. தன் முன் வைக்கப்பட்டிருந்த கூடையில் இருந்து ஒரு தக்காளியை எடுத்தார். கையை உயர்த்தி அதைக் கூட்டத்தை நோக்கிக் காண்பித்தார்.
‘இந்தப் பழத்துக்கு எவ்வளவு பெரிய வரலாறு உண்டு தெரியுமா?’ என்று கேட்டபடி, தக்காளியின் சரித்திரத்தை உரத்த குரலில் சொல்ல ஆரம்பித்தார். ‘இதோ உங்கள் முன்பு நான் இதை உண்ணப் போகிறேன். இது குறித்த கட்டுக்கதைகள் அனைத்தையும் உடைக்கப் போகிறேன்’ என்றபடி தக்காளியைத் தன் வாயருகே கொண்டு சென்றார். கூட்டம் அமைதியானது. எல்லோரும் கண் இமைக்காமல் அவரையே கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தனர்.
ராபர்ட், தக்காளியைத் தன் பற்களால் ஒரு கடி கடித்தார். கூட்டத்திலிருந்த ஒரு பெண், பயந்து அலறி முகத்தை மூடிக் கொண்டாள். அடுத்த கடி கடித்தார். இன்னொரு கையிலும் தக்காளியை எடுத்துக் கடித்து விழுங்க ஆரம்பித்தார். மளமளவென ஏழெட்டுத் தக்காளிகளை உள்ளே தள்ளினார். ‘ஹே... உண்மையாவே சாப்பிடுறாரு... அவருக்கு ஒண்ணுமே ஆகல! உயிரோடதான் இருக்காரு!’ கூட்டத்தினர் ஆச்சர்யப்பட்டனர். ராபர்ட், தொடர்ந்து தக்காளிகளை உண்ண உண்ண உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர்.
இப்படியாகத்தான், ராபர்ட் என்பவர் தக்காளியை அமெரிக்கர்கள் மத்தியில் பிரபலமாக்கினார். பின்புதான் தக்காளி அமெரிக்கர்கள் தினசரி உண்ணும் பொருளானது.
ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி
