
இன்பாக்ஸ்

ராஜு முருகனின் `ஜிப்ஸி’யில் ‘ஜீவாவின் ஜோடியாக நடிக்கும், ஆப்பிள் மாதிரி இருக்கும் பெண் யார்?’ என, கடந்த வாரம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்த்து எல்லோருமே கேட்டார்கள். அந்த ஆப்பிள் பெண் வேறு யாருமல்ல... 'மிஸ்.ஹிமாச்சல் பிரதேஷ்' நடாஷா சிங்! ``படித்தது இன்ஜினீயரிங். பிடித்தது மாடலிங்’’ என்று சொல்லும் நடாஷா, ஹிமாச்சலப்பிரதேசத்திலிருந்து மாடலிங்குக்காக மும்பைக்கு இடம்பெயர்ந்தவர். ``தமிழ்ப்படங்கள் நிறைய பார்த்திருக்கேன். தமிழ் சினிமாவுல நடிப்பேன்னு கனவுலகூட எதிர்பார்க்கலை. நாகப்பட்டினத்தில் ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்த மக்கள் என்கிட்ட அதுக்குள்ள ஆட்டோகிராஃப் வாங்கிட்டாங்க. செம ஆச்சர்யமா இருக்கு!’’ என்று படபடக்கிறார் நடா. அடடா!

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ‘அவதார்’ படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்கள் தயாராகி வருகின்றன. இதில் முக்கியமான கேரக்டரில் ‘டைட்டானிக்’ நாயகி கேத் வின்ஸ்லெட் நடிக்கிறார். ரசிகர்கள் பல வருடங்களாக எதிர்பார்த்து வந்த கேமரூன் -வின்ஸ்லெட் காம்போ 20 வருடங்கள் கழித்து இப்படத்தில் இணைந்திருக்கிறார்கள். தண்ணீருக்கு அடியில் படமாக்கப்பட்ட முதல் காட்சியிலேயே ஏழு நிமிடங்கள் மூச்சைப் பிடித்து நடித்து அசத்தியிருக்கிறார், வின்ஸ்லெட். ‘டைட்டானிக்’லயும் தண்ணி, இங்கேயும் தண்ணியா?

தோனியின் குட்டிப்பொண்ணு ஸிவா தோனிதான் இன்ஸ்டா உலகின் இளவரசி. திரும்பிய பக்கமெல்லாம் தோனியின் மனைவி சாக்ஷி போட்ட வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை ஷேர்செய்து மகிழ்கிறார்கள் தோனி ரசிகர்கள். ``நிறைய பாலிவுட் வாய்ப்புகளும் வருகின்றன. அவளின் அப்பாதான் வேண்டாம் என்கிறார்’’ என்று சிரிக்கிறார் சாக்ஷி. தெறி பேபி!
‘அயர்ன்மேன்’, ‘அவெஞ்சர்ஸ்’ படங்களைப் பார்த்தவர்களுக்கு ராபர்ட் டவுனி ஜூனியருடன் முதன்மைப் பாத்திரமாய் வரும் JARVIS, FRIDAY என்ற ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் பற்றிய அறிமுகம் தேவையில்லை. ‘அவெஞ்சர்ஸ்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துவரும் ராபர்ட், தன் மனைவி சுசன் டவுனியுடன் இணைந்து ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் பற்றிய ஆவணப் படம் ஒன்றைத் தயாரிக்கவிருக்கிறார். ‘சர்வைவா’ மொழிபெயர்த்து அனுப்பவா, தல?

திருமணத்துக்கு முன் நான்கைந்து மியூசிக் ஆல்பங்களை வெளியிடும் முடிவில் களமிறங்கியிருக்கிறார் இலியானா. `பெலி தஃபா’ என்ற அவர் ஆல்பம் ஏற்கெனவே ஹிட்டடித்த நிலையில், காதலர் நீபோனைத் திருமணம் செய்தபிறகு, ரசிகர்களைத் தன் குரலால் மயக்கப்போகிறாராம். சினிமா வாய்ப்புகளுக்கு முன்னர் கோவாவில் சிறிய அளவுகளில் பாண்ட்களில் பாடி வந்த அனுபவத்தை இசை ஆல்ப வெளியீட்டின் மூலம் புதுப்பிக்கிறார் இலி இந்தி, ஆங்கிலப் பாடல்களில் பாப் மற்றும் மென்மையான ராக் இசையில் புது ஆல்பத்துக்கான பணி ஜூலையில் தொடங்குகிறதாம். மியூசிக்கலி!

தெலுங்கில் தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்த நடிகர்களில் ஒருவர், நானி. ஆனால், சமீபகாலமாக அவருடைய படங்கள் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியைப் பெறவில்லை. தவிர, விஜய் தேவரகொண்டா, வருண் தேஜ், சாய் தரம் தேஜ் என இளம் ஹீரோக்களின் வருகையும் நானியின் சினிமா வாழ்க்கையை பாதித்திருக்கிறது. தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஒப்பந்தம் ஆகியிருக்கும் நானி, நல்ல கதைகள் அமைந்தபிறகே நடிப்பில் தீவிரம் காட்டலாம் என முடிவெடுத்திருக்கிறாராம். ஸ்ரீரெட்டி புகார் என்னாச்சு?

அழகி கிம் கர்தாஷியனைவிட அதிகம் சம்பளம் வாங்கும் மாடல் யார் தெரியுமா? கென்டால் ஜென்னர் என்ற அமெரிக்க டிவி நடிகைதான். உலகின் அதிக சம்பளம் வாங்கும் மாடல்கள் பட்டியலில் அவருக்கு நம்பர் 1 இடம் கொடுத்தி ருக்கிறது ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை. கிம் கர்தாஷியன் உறவினர்தான் இந்த ஜென்னர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவைவிட டிவியில் அதிகம் சம்பாதிக்க முடியும் என நிரூபித்த வகையில் கென்டால் எல்லோரையும் ஆச்சர்யப்படவைக்கிறார். செம குலாபி!

பாலிவுட்டின் லேட்டஸ்ட் சென்சேஷன் `லஸ்ட் ஸ்டோரீஸ்’ படம்தான். பாலிவுட்டின் படா படா இயக்குநர்களான அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜி மற்றும் கரண் ஜோஹர் இதில் இணைந்திருக்கிறார்கள். இந்தியப் பெண்களின் செக்ஸ் மற்றும் ரிலேஷன்ஷிப் பற்றிய பார்வையை நான்கு குறும்படங்களின் கலவையாக அலசியிருக்கிறது இந்தப் படம். தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் `நெட்ஃபிளிக்ஸ்’ இணையதளத்தில் ரிலீஸ் ஆகியிருக்கும் இந்தப் படத்துக்கு உலகெங்கிலும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிவதால் தியேட்டர் ரிலீஸுக்குத் தயாராகிவருகிறார் படத்தின் தயாரிப்பாளர் ரோனி ஸ்க்ரூவாலா. வெல்டன்....வெல்கம்!