
நம்பிக்கைஸ்ரீ அகத்திய ஸ்ரீதர்
“எட்டு வயதில், என் உயரத்தை நினைத்து நான் அழுதிருக்கிறேன். ஆனால், என் 18-வது பிறந்த நாளன்று, உயரம் காரணமாகவே கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தபோது, வாழ்வின் திசை மகிழ்ச்சியை நோக்கித் திரும்பியது’’ - மராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலம் கலந்து பேசுகிறார் ஜோதி ஆம்கே. ‘உலகின் குள்ளமான பெண்’ என கின்னஸ் மற்றும் லிம்கா உலக சாதனைப் புத்தகங்களில் இடம்பெற்ற நாக்பூர் பெண். வயது 24, உயரம் 2.06 அடி. ஆம்... இரண்டு வயதுக் குழந்தையின் உயரத்திலேயே இருக்கிறார் ஜோதி.
“ `Achondroplasia’ என்ற வளர்ச்சிக் குறைபாடு எனக்கு. நான்கு வயதில் என்னைப் பள்ளியில் சேர்த்தபோது, என் உயரத்துக்கேற்ற டெஸ்க் மற்றும் நாற்காலி ஏற்பாடு செய்துகொடுத்தார்கள்’’ என்கிறவரின் வீட்டில், கட்டில், மெத்தை, சாப்பாடு மேஜை, தட்டு, டம்ளர், நாற்காலி, கைப்பை என அவருக்கென பிரத்யேக அளவுகளில் தயார்செய்யப்பட்ட பொருள்கள் நிரம்பியிருக்கின்றன.

‘`எந்த வேலைக்காகவும் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. சமையல் மேஜையில் ஏறி, உணவை எடுத்துக்கொள்வேன். ஸ்விட்ச் போன்ற மின் சாதனங்களை இயக்குவதற்கும், கதவு தாழ்ப்பாள்களைத் திறப்பதற்கு வசதியாகவும் பெரிய குச்சி ஒன்றை வைத்திருப்பேன். ஆடை, ஆபரணங்கள், மேக்கப் சாதனங்களை எனக்கேற்ற வகையில் வாங்க, என் சகோதரி அர்ச்சனா உதவுவார்’’ என்பவருக்கு ஒரு வருத்தம் இருக்கிறது. தன்னுடன் செல்ஃபி எடுத்துக் கொள்பவர்கள், தன்னை ஒரு குழந்தைபோல பாவித்துப் பேசுது, பழகுவது, கன்னத்தில் தட்டுவதெல்லாம் சங்கடமாக இருக்கிறது என்கிறார்.
‘`24 வயது பெண்ணாக அவர்கள் என்னை உணர்வதில்லை. ஆனால், என் வயதுக்கான வேலைகளை நான் செய்துகொண்டுதான் இருக்கிறேன். என் பெயரில் சமூக சேவை அமைப்பு ஒன்றை உருவாக்கி, சமூகத்துக்கு என்னால் இயன்றதைச் செய்துவருகிறேன்’’ என்று சொல்லியபடியே நாற்காலியில் இருந்து குதித்து இறங்கி, நமக்குத் தண்ணீர் எடுத்துவந்து தருகிறார் ஜோதி.
மகாராஷ்டிரா, லோனாவாலாவில் உள்ள பிரபலமானவர்களின் சிலைகள் இடம்பெற்றிருக்கும் மெழுகு மியூசியத்தில், ஜோதியின் சிலையும் இடம்பெற்றுள்ளது. ‘`ஹாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்பது என் வாழ்நாள் லட்சியம். அதற்காக முயன்றுகொண்டிருக்கிறேன்’’ - நம்பிக்கையுடன் சொல்கிறார் ஜோதி.
அதுதானே உண்மையான உயரம்!