தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

கமல் சார் என்ன சொல்லப் போகிறார் என்று நடுங்கிக்கொண்டிருந்தேன்! - ஊர்வசி

கமல் சார் என்ன சொல்லப் போகிறார் என்று நடுங்கிக்கொண்டிருந்தேன்! - ஊர்வசி
பிரீமியம் ஸ்டோரி
News
கமல் சார் என்ன சொல்லப் போகிறார் என்று நடுங்கிக்கொண்டிருந்தேன்! - ஊர்வசி

எனக்குள் நான்எழுத்து வடிவம்: ஆர்.வைதேகி, படம் : ஸ்டில்ஸ் ரவி

ற்றவர்களைச் சிரிக்கவைக்கும் பலரும் சுய வாழ்க்கையில் நிறைய சோகங்களைக் கடந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். சாப்ளின் முதல் நாகேஷ் வரை நிறைய உதாரணங்கள். நகைச்சுவையில் கலக்கும் நடிகை ஊர்வசியும் இழப்புகளைச் சந்தித்தவர்தான்.

``அடிப்படையில் நான் ரொம்பவே எமோஷ னல் டைப். நண்பர்களுக்கு ஏதேனும் ஒன்று என்றால்கூட, என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. அதுவே என் பலமும் பலவீனமும். குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் அதிக பாசத்துடன் இருப்பதால், காமெடி கேரக்டர்களில் நடிக்கும்போது நிறைய சிரமப்பட்டிருக்கிறேன். நகைச்சுவை கேரக்டரில் நடிப்பது என்பது சாதாரண மானதல்ல. மனம் லேசாக இருக்க வேண்டும். பர்சனல் விஷயங்களால் மனம் சரியில்லை என்றால், நினைத்தபடி நடிக்க முடியாது. நடிப்பில் ஓரிழை அதிகமானாலும் ஓவர் ஆக்டிங் ஆகிவிடும். கத்திமேல் நடக்கும் பயணம் அது’’ - தன்னியல்பு பகிர்பவர், இழப்புகளிலிருந்து தன்னை மீட்டெடுக்கும் மந்திரம் தெரிந்தவராக இருக்கிறார்.

``சோகமோ, மகிழ்ச்சியோ... எந்தச் சூழ்நிலையிலும் எனக்கு வாசிப்புதான் பெரிய துணை. நிறைய புத்தகங்கள் படிப்பேன். அம்மாவிடமிருந்துதான் வாசிப்பைக் கற்றுக்கொண்டேன். என் தாத்தா சூரநாடு குஞ்சன்பிள்ளைதான் மலையாள அகராதியை உருவாக்கியவர். அதனால், இலக்கியத்தின் மீதான ஆர்வம் எனக்கு இயல்பாகவே உண்டு. வீட்டுக்கு வருகிறவர்கள் எவரும் எங்களுக்கு சாக்லேட்டோ, பிஸ்கட்டோ வாங்கித் தந்ததாக நினைவில்லை. புத்தகங்கள் தான் கொடுப்பார்கள். பூஜை அறைக்கு இணையாகப் புத்தகங்களுக்கான அறை இருக்கும். அந்த அறையின் பழைய புத்தக வாடை இன்னும் எனக்கு மறக்கவில்லை. பணத்தைவிடப் பத்திரமாகப் புத்தகங்களை எண்ணிய நாள்கள் நினைவில் இருக்கின்றன.

கமல் சார் என்ன சொல்லப் போகிறார் என்று நடுங்கிக்கொண்டிருந்தேன்! - ஊர்வசி

வேதங்கள், நகைச்சுவை, கவிதைகள், ஆன்மிகம் என எல்லாம் படிப்பேன். `பாப்பிலோன்' புத்தகத்தை எத்தனை முறை படித்திருப்பேன் என எனக்கே நினைவில்லை. `கிழவனும் கடலும்’ படித்தால், மனஉறுதியின் மூலம் எதையும் சாதிக்கலாம் என்கிற நம்பிக்கை வரும். அத்தனை பேருக்கு நம்பிக்கையைக் கொடுத்த அந்த நூலின் எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வே, கடைசியில் தற்கொலை செய்துகொண்டார். எல்லாம் காலத்தின் கொடுமை!

கடிதங்கள் எழுதுவது இன்றும் எனக்குப் பிடிக்கும். `இன்னும் நீ இதை விடலையா?’ என்பார்கள் தோழிகள். எனக்குக் கடிதங்கள் பிடிக்கும் எனத் தெரிந்து, என் தோழி நடிகை ரேவதி இன்றும் கடிதம் எழுதிக் கொடுத்தனுப்புவார். என் நட்பு வட்டத்தில் நட்சத்திரங்களைவிடவும் எழுத்தாளர்களே அதிகம். நடிகர்களில் கமல் சாரைத் தவிர வேறு யாரிடமும் அதிகம் பேச மாட்டேன். அவரிடம் எதைப் பற்றியும் பேசலாம். பானிபட் போர் பற்றியும் பேசலாம். இலக்கியமும் பேசலாம். நிறைய தகவல்கள் சொல்வார். அதனாலேயே அவர் மீது எனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு.

வாசிப்பு, என்னைத் தேற்றுகிறது; செதுக்குகிறது. இன்றைய மலையாளம், சம்ஸ்கிருதம் கலந்தது. அதற்குமுன் மலையாளத்தில் தமிழின் தாக்கம் மட்டுமே இருந்தது. அந்த மாதிரியான புத்தகங்களைத் தேடிப் படித்துக்கொண்டிருக்கிறேன். அன்று இருந்த பல வார்த்தைகள் இன்று இல்லை. `படிஞாறு’ என்றொரு வார்த்தையைச் சமீபத் தில் தெரிந்துகொண்டேன். மேற்குத் திசை என்று அர்த்தம். ஞாயிறு படியும் இடம்.

வதந்திகளும் கிசுகிசுக்களும் உலவும் துறை சினிமா. முடிந்தவரை அவற்றிலிருந்து ஒதுங்கி என்னை மறைத்துக்கொண்டே வாழ்ந்திருக்கிறேன். எல்லா இழப்பு களிலிருந்தும் என்னை மீட்டுக்கொண்டிருப் பவை வாசிப்பு,  ஆன்மிக நம்பிக்கை மற்றும் நல்லவர்களின் நட்பு.

கமல் சார் என்ன சொல்லப் போகிறார் என்று நடுங்கிக்கொண்டிருந்தேன்! - ஊர்வசி

மறக்க முடியாத திட்டும் பாராட்டும்!

`முந்தானை முடிச்சு’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது ஷூட்டிங்கில் அடிக்கடி காணாமல்போய்விடுவேன். என்னுடன் நடித்த குட்டிப்பையன்களுடன் விளையாடிக்கொண்டிருப்பேன். ஏழு மணிக்கு `ஒளியும் ஒலியும்’ பார்த்துவிட்டுத் தூங்கிப் பழகியவள். அதனால் ஏழு மணியானால் யார் வீட்டுக்காவது போய் `பசி’ என்பேன். அவர்களும் `வா தாயி...’ என உட்காரவைத்துச் சாப்பாடு கொடுப்பார்கள். சாப்பிட்டு அங்கேயே தூங்கிவிடுவேன். ஷூட்டிங்கில் என்னைத் தேடுவார்கள். தேடிக் கண்டுபிடித்து எழுப்புவார்கள். தூக்கத்தில் எழுப்பினால் அழுவேன். `சின்னஞ்சிறு கிளியே...’ பாட்டு முழுக்க நிஜமாகவே அழுதுகொண்டே நடித்திருப்பேன். `அழற பாட்டுதான். நல்லா அழு...’ என டைரக்டர் திட்டியிருக்கிறார். அதுதான் முதலும் கடைசியுமான திட்டு. அதன் பிறகு எல்லாமே பாராட்டுகள்தாம்.

`மைக்கேல் மதன காம ராஜன்’ படத்தில் முதல் நாள் ரிகர்சல். அடுத்த நாள் டேக். மலையாள ஷூட்டிங் முடித்துவிட்டு கேரளாவிலிருந்து நேரே இந்த ஷூட்டிங் வந்தேன். ரிகர்சல் முடிந்தும் அப்படியே சமாளித்துவிடலாம் என நினைத்தால்,   `நாளைக்கு எடுத்துக்கலாம்’ என்றார் கமல். அடுத்த நாள்  ஒத்திகை பார்க்க நேரமில்லை. பாதிக்கும் மேலான வசனங்கள் நானாகச் சொன்னவை.  `என்ன... கட்டிண்ட்ருக்கோம்?’ எல்லாம் அப்படிச் சொன்னதுதான். டேக் முடிந்ததும் கமல் சார் என்ன சொல்லப் போகிறார் என்று நடுங்கிக்கொண்டிருந்தேன். அவர் கைதட்டிப் பாராட்டியது மறக்க முடியாதது. `மைக்கேல் மதன காம ராஜன்’ படத்தின் 100-வது நாள் விழாவில் மேடையில் `இந்தப் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் ஊர்வசி’ எனக் கமல் சார் பகிரங்கமாகப் பாராட்டியது ஆஸ்கர் வாங்கியதற்கு இணையானது.

 `வனஜா கிரிஜா’ பட ப்ரீமியருக்கு என்னால் போக முடியவில்லை. படம் பார்த்த இயக்குநர் பாலசந்தர், தியேட்டர் வாசலிலிருந்தே எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார். `நான் உன்னை மிஸ் பண்ணிவிட்டேன். இயக்குநராக நான் தோற்று விட்டதாக நினைக்கிறேன். இப்படியொரு கேரக்டர் செய்யும் தைரியத்தை உனக்கு யார் கொடுத்தது?’ எனப் பாராட்டியிருந்தார். பிறகு பலமுறை சந்தித்தபோதெல்லாம் `உனக்கேத்த ஸ்க்ரிப்ட் மாட்ட மாட்டேங்குதே’ எனச் சொல்லிக் கொண்டிருந்தார். கடைசியில் `உத்தமவில்லன்’ படத்தில் அவருடன் நடிக்கும் பாக்கியம் கிடைத்தது. நடிகைக்கு எத்தனை படங்கள் வந்தன என்பது முக்கியமல்ல. இதுபோன்ற நல்ல படங்களும் பாராட்டுகளும் அங்கீகாரமும் போதும்.

சினிமாவில் வருத்தமளிக்கிற மாற்றம்?

கேரவன் சிஸ்டம் வந்த பிறகு உணர்வுகளுக்கான மதிப்பு போய்விட்டதாக நினைக்கிறேன். முன்பெல்லாம் பிரேக்கில் எல்லோரும் ஒரு மரத்தடியில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவோம்; பேசுவோம். நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்வோம். அதையெல்லாம் இந்தத் தலைமுறையினர் மிஸ்பண்ணுகிறார்கள். இன்று ஷாட் முடிந்ததும் கேரவனுக்குள் அடைந்துகொள்கிறார்கள்.  எனக்கு  உடை மாற்ற மட்டும்தான் கேரவன். அங்கு எனக்கு மூச்சுத்திணறும். மற்றபடி வெளியே இருப்பதுதான் எனக்குப் பிடிக்கும். எதிரெதிரே உட்கார்ந்திருந்தாலும் வாட்ஸ் அப்பில் பேசிக்கொள்கிறார்கள். வருத்தமாக இருக்கிறது.

சினிமாவில் பெண்கள் பாதுகாப்பு?

சினிமாவைவிடவும் பாதுகாப்பில்லாத துறைகள் பல உண்டு.  சினிமாவில் நடிப்பைத் தவிர மற்ற எல்லாத் துறைகளிலும் ஆண்களே நிறைந்திருக்கிறார்கள். சினிமா என்னை எந்தவிதத்திலும் காயப்படுத்தியதில்லை. தவறான அனுபவங்கள் எதையும் சந்திக்க வில்லை. எந்தத் தியாகம் பண்ணினாலும் எனக்கு சினிமாதான் வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. வாய்ப்புக்காக எதையும் இழக்கத் தயாரில்லை. `திறமை இருந்தால் வாய்ப்பு கொடுங்கள்... நான் இப்படித்தான்’ என்பதில் உறுதியாக இருந்தேன்; இருக்கிறேன்.

இன்றும் நான் தனியே எங்கேயும் பயணம் செய்ய மாட்டேன்; தங்கவும் மாட்டேன். என்னைப் பார்த்துக்கொள்ள எனக்குத் தெரியும்.

வாய்ப்பு தேடிச் செல்லும்போது தெரியாத நபர் அறைக்குள் அழைத்தால், அந்த வாய்ப்பையே புறக்கணிக்கலாம். ஒரு பெண்ணின் விருப்பத்தைமீறி அவளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் வேறு ரகம். தப்பு செய்தவன் இவன்தான் என உறுதியாகத் தெரிந்தால் அவனுக்குத் தண்டனைகள் மிகக்கடுமையானதாக இருக்க வேண்டும்.

குடும்பம்?

கணவர் சிவபிரசாத்துக்கு கன்ஸ்டிரக்‌ஷன் பிசினஸ். மகள் தேஜாலட்சுமி கல்லூரியில் படிக்கிறாள். மகன் இஷான் பிரஜாபதிக்கு நான்கு வயது. வீடுதான் என் சொர்க்கம்!

டைரக்‌ஷன் கனவு... அரசியல் ஆசை?

டைரக்‌ஷனில் ஆர்வம் போய்விட்டது. நடிகை என்றால் ஷூட்டிங் முடித்துவிட்டு டாட்டா சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்துவிட லாம். டைரக்டருக்கு அது சாத்தியமில்லை. அடுத்த நாள் படப்பிடிப்புப் பற்றி யோசிக்க வேண்டும்; பேச வேண்டும். படம் ரிலீஸான பிறகும் அதைச் சுமக்க வேண்டும். இப்போதைய சூழலில் அது எனக்குச் சாத்தியமில்லை.

அரசியலை அறிந்துகொள்வதில் ஆர்வம் அதிகமிருக்கிறது. அரசியல் சூழலைத் தொடர்ந்து கவனிக்கிறேன். ஆனால், அதில் ஈடுபடும் எண்ணமெல்லாம் இல்லை.  அரசியலில் ஈடுபட்டால்தான் சமுதாயத்துக்கு நல்லது செய்ய முடியும் என்றில்லை. தெருவுக்கு ஒன்றாக பெண்கள் பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும், எந்த வயதுப் பெண்களும் தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு தேடும் இடமாக அது செயல்பட வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் உண்டு. காவல் துறையின் ஆதரவும் அதற்குத் தேவை. அந்த முயற்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது. சக பெண்களுக்கான உதவியாக என்னால் அப்படி ஒரு விஷயத்தைச் செய்ய முடிந்தால் போதும்.''