
பெண்கள் உலகம்நிவேதிதா லூயிஸ்
கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...
சுபாஷ் சந்திர போஸின் மகள் வைக்கும் வேண்டுகோள்!
விடுதலைப் போராட்ட வீரரான சுபாஷ் சந்திர போஸின் மகள் அனிதா போஸ் ஃபாஃப். ஊடகவியலாளர் ஆஷிஸ் ரே எழுதிய `லெய்டு டு ரெஸ்ட்’ என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசினார் அனிதா. நேதாஜியின் மறைவு இன்னும் விடுவிக்கப்படாத புதிராகவே உள்ள நிலையில், அவரது மரணத்தை ஆராய்ந்த 11 புலன் விசாரணை கமிஷன்கள் மற்றும் அவற்றின் முடிவுகள் பற்றிப் பேசும் இந்தப் புத்தகம், 1945 ஆகஸ்ட் 18 அன்று `தாய்பே’யில் நிகழ்ந்த விமான விபத்தில் போஸ் மரணமடைந்தார் என்பதை உண்மை என்று ஏற்றுக்கொள்கிறது. இன்னமும் பலர் போஸின் மரணம் இந்தச் சம்பவத்துக்குப் பின் வெகு ஆண்டுகள் கழித்தே நிகழ்ந்தது எனவும் வடஇந்தியாவில் அவர் கும்னாமி பாபா என்ற பெயரில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார் எனவும் நம்புகின்றனர். மற்றொரு சாரார் ரஷ்யப் படைகள் வசம் மாட்டிய போஸ் சைபீரியாவில் மரணமடைந்தார் என்றும் கூறி வருகின்றனர்.

“மக்களுக்குப் புதிர்கள் மீதான ஆர்வம் எப்போதும் உண்டு. என் அப்பா ஒரு ரொமான்டிக் மற்றும் ட்ராஜிக் ஹீரோ என்பதால் அவரது மரணம் குறித்த குழப்பங்களில் ஆச்சர்யப்பட எதுவும் இல்லை. இந்தச் சிக்கலுக்கு முடிவுகட்டும் விதமாக, அப்பாவின் அஸ்தியை ஜப்பானிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும்” என்கிறார், ஜெர்மனியில் வசிக்கும் பொருளாதார வல்லுநரான அனிதா. “ `போஸின் மகள் என்பதால், எந்த விதத்திலும் நீ பெரிய ஆள் இல்லை’ என்று அடிக்கடி என் அம்மா சொல்வார். அதனால் அடக்கத்துடன், ஆர்ப்பாட்டமில்லாமல் இருக்கவே நான் பழகிக்கொண்டேன்’’ என்கிறார் அனிதா.
இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு வாரிசு!
ஜெனரல் மோட்டார்ஸின் `சி.எஃப்.ஓ’ சென்னைப் பெண்!
அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் இயங்கும் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஜெனரல் மோட்டார்ஸ் கம்பெனியின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட திவ்யா சூர்யதேவரா. 39 வயதான திவ்யா, பெப்சியின் இந்திரா நூயிக்குப் பிறகு இது போன்ற முக்கியமான பணியை வகிக்கப்போகும் இரண்டாவது தமிழ்ப் பெண்!

திவ்யா, சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றவர். சிறுவயதிலேயே தந்தை இறந்துவிட, தாயின் அரவணைப்பில் வாழ்ந்த திவ்யா, படிப்பு ஒன்றே முன்னேற மூலதனம் என்பதில் உறுதியாக இருந்தார். “மூன்று குழந்தைகளைத் தனியாக நின்று வளர்த்தெடுத்தார் என் அம்மா. அது மிகவும் சிரமமான பணி” என்கிறார். தாயின் ஊக்கமும் சொந்த உழைப்பும் உந்தித் தள்ள, கல்விக்கடன் வாங்கி, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் கற்க அமெரிக்கா பயணமானார். 22 வயதில் அமெரிக்காவுக்குள் காலடி எடுத்துவைத்த திவ்யாவுக்கு ‘கல்ச்சர் ஷாக்’ வேறு. கல்விக்கடன் கழுத்தை இறுக்க, பணிசெய்துகொண்டே படித்தவர், 25-வது வயதில் ஜி.எம் கம்பெனிக்குள் நுழைந்தார். அடுத்தடுத்து திருமணம், குழந்தை என்று குடும்பம் வளர, பணியிலும் ஏற்றம் தேடி வந்தது. நியூயார்க் நகரில் குடும்பம் இருந்ததால், வார இறுதிகளில் மட்டுமே மகளுடன் நேரம் செலவழிக்க முடிந்தது என்கிறார் திவ்யா. தினமும் உடற்பயிற்சி செய்யும் இவருக்கு, பாக்ஸிங் செய்வது மிகவும் பிடித்தமானது. கூகுளில் தேடி தன்னைப் பற்றிய குறிப்புகளைப் படித்துச் சொல்லும் மகள், `அம்மா, நானும் உன்னைப்போல வருவேன்’ என்று சொல்வதே தனக்குப் பெருமிதம் என்று கூறுகிறார் திவ்யா.
இவுகதானுங்க பிக் பாஸ்!
இஃப்தார் விருந்தில் யசோதாபென்!
பிரதமர் பதவி ஏற்ற 2014-ம் ஆண்டு முதல் இஃப்தார் விருந்தில் கலந்துகொள்வதையும் பாரம்பர்யமாகப் பிரதமர்கள் வழங்கும் இஃப்தார் விருந்தையும் நிறுத்திவைத்திருந்தார் பிரதமர் மோடி. ஆனால், அவரின் மனைவி யசோதாபென், சமீபத்தில் அகமதாபாத் நகரில் நடைபெற்ற இஃப்தார் விருந்து ஒன்றில் கலந்துகொண்டிருப்பது, பெரும் அதிர்வலைகளைக் குஜராத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.

முஸ்லிம்கள் நாற்பது நாள்கள் நோன்பு இருந்து, அதன் இறுதியில் ரமலான் கொண்டாடுவது வழக்கம். இந்த நோன்பு நாள்களில், ஒன்றாகக் கூடி மாலை நேரத்தில் நோன்பு துறப்பதை இஃப்தார் விருந்து என்று குறிப்பிடுகின்றனர். கடந்த ஜூன் 13 அன்று, அகமதா பாத்தில் நடைபெற்ற இஃப்தார் விருந்தில் கலந்துகொண்ட யசோதாபென், அங்குள்ள முஸ்லிம்களுடன் சேர்ந்து உணவு பரிமாறி, அவர்களுடன் உணவருந்தி பேசினார்.
முஸ்லிம்களின் விருந்தில் எந்தப் பாகுபாடும் இல்லாமல் கலந்துகொண்ட யசோதாபென்னை அங்கிருந்தவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.
நல்லிணக்கம்!
தென்னிந்தியாவின் முதல் பெண் ஃபைட்டர் பைலட்!
ஜூன் 16 அன்று ஃப்ளையிங் ஆபீஸர் பதவியில் அமர்ந்தார், கர்நாடக மாநிலம் சிக்மகளூரை சேர்ந்த 23 வயது இளம்பெண் மேகனா ஷண்பக். இன்ஜினீயரிங் பட்டதாரியான மேகனா, ஹாக் ரக ஃபைட்டர் விமானத்தை இயக்கும் சிறப்புப் பயிற்சிக்கு பிதார் செல்லவிருக்கிறார். சிக்மகளூரை அடுத்த மார்லே கிராமத்தைச் சேர்ந்த மேகனா, 4-ம் வகுப்பு வரை தன் சொந்தக் கிராமத்தில் படித்தார். அதன்பின் உண்டு - உறைவிடப் பள்ளியே சிறந்தது என்று எண்ணிய சிறுமியின் கனவை அறிந்த அவரின் தந்தை, மகளை உடுப்பியின் லிட்டில் ராக் பள்ளியில் சேர்த்துவிட்டார். மைசூரு ஜெய காமராஜேந்திரா கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பில் சேர்ந்தார். இங்குதான் `ஸஹஸ்’ என்ற பெயரில் அட்வென்ச்சர் கிளப் தொடங்கினார். இதுதான் தன் இந்திய விமானப்படை கனவுக்கு வித்திட்டது என்று கூறுகிறார் மேகனா. “செமஸ்டர் விடுமுறைகளின்போது ட்ரெக்கிங், ராஃப்ட்டிங், மலையேற்றம் என பல சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவேன். அவை என்னை உறுதியாக்கின. பாராகிளைடிங்கிலும் பயிற்சி பெற்றேன். பாராகிளைடிங்கில் எனக்குப் பயிற்சி தந்த ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரிகளின் ஒழுக்கமும் வாழ்க்கைமுறையும்தான் எனக்கு விமானப்படை மீதான ஈர்ப்பை அதிகப்படுத்தியது. என் கனவு கைக்கெட்டும் தூரத்தில்தான் உள்ளது என்று உணர்ந்தேன்” என்கிறார்.

அஃப்காட் எனப்படும் விமானப்படை தகுதித்தேர்வு மற்றும் எஸ்எஸ்பி தேர்விலும் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றார். ஜனவரி 2017-ல் `ஃப்ளைட் கேடட்’டாகப் பணியில் சேர்ந்தார். பிலாடஸ் எனப்படும் விமானத்தையும், கிரன் எனும் விமானத்தையும் தனியாக ஓட்டும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றார். மிராஜ், மிக் என எந்த விமானமானாலும் ஓட்டத் தயாராக இருக்கும் மேகனாவின் கனவோ, ராஃபேல் வகை விமானத்தில் பறப்பதுதான். “பைலட்டாக ஆசைப்படும் ஓவ்வொரு சிறுவனும் சிறுமியும் நிறைய கனவு காண வேண்டும். நீங்கள் எட்ட முடியாத உயரத்தில் அந்தக் கனவுகள் இருக்கட்டும். அவற்றை கைக்கெட்டும் வரை விரட்டிப்பிடிக்கும் ஆர்வம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்” என்று கூறுகிறார் இந்த சாதனைப்பெண்!
பறக்கும் பாவைக்குப் பாராட்டுகள்!
அதிசய ஜோடி!
மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்தவர்கள் அமர் மற்றும் ராணி கலம்கர். யுவ சேத்னா என்ற தன்னார்வ அமைப்பைத் தொடங்கி, கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் அமர். ராணி, கல்லூரியில் பேராசிரியர். சமீபத்தில் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்குத் தேவையற்ற பரிசுப் பொருள்கள் வந்து வீணாவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பிறருக்கு உதவிகரமாக அமைய வேண்டும் என்றும் எண்ணிய ஜோடி, திருமணத்துக்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களைப் புத்தகங்களை வாங்கிப் பரிசளிக்குமாறு கேட்டுக் கொண்டது. வசதியற்ற மாணவ மாணவியர் போட்டித் தேர்வுகளில் பங்கெடுக்க தேவைப்படும் புத்தகங்கள் கொண்ட நூலகம் ஒன்றைத் திறப்பதுதான் அமரின் பல வருடத்துக் கனவு. இருவரின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க, கிட்டத்தட்ட 3,000 புத்தகங்கள் மணவிழா மேடையில் குவிந்துவிட்டன.

திருமண அழைப்பிதழில், விலை உயர்ந்த பொக்கேக்கள், நகைகள், பாத்திரங்கள் போன்றவற்றைத் தவிர்த்து, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக உதவும் புத்தகங்களைப் பரிசளிக்குமாறு சிறப்பு வேண்டுகோள் வைத்தது ஜோடி. அழைப்பிதழும் அச்சிடப்படவில்லை. வாட்ஸ்அப் மூலமே அனுப்பினர். வழக்கம்போல பொதுமக்கள் வாட்ஸ்அப் ஷேர் கடலில் குதிக்க, முகம்தெரியாத நபர்கள்கூட திருமணத்தன்று கையில் புத்தகங்களுடன் வந்துவிட்டனர். அஹமத் நகர் பகுதியில் இம்மாத இறுதியில் நூலகம் திறக்கப்போவதாக இந்த ஜோடி அறிவித்துள்ளது.
வால் கிளாக், நைட் லாம்ப் பரிசா குடுக்குறத இனியாச்சும் நிப்பாட்டுங்க ப்ரென்ஜ்!
நந்திதா தாஸின் புடவைக்கு என்ன குறை?
சமீபத்தில் நிறைவுற்ற கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட நடிகை நந்திதா தாஸுக்கு ஆடை வடிவமைக்க ஃபேஷன் டிசைனர்கள் பலர் முன்வந்தும் அவர்களை வேண்டாம் என்று ஒதுக்கியதாகக் கூறியிருக்கிறார் நந்திதா. கேன்ஸ் விழாவில் வருடாவருடம் பங்குகொள்ளும் நடிகை நந்திதா, வெளிவரவிருக்கும் அவரது படமான ‘மான்டோ’வை பிரபலப்படுத்த கேன்ஸ் விழாவில் கலந்துகொண்டார். ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர் போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் `ஓட் கொட்டோர்’ கவுன்களிலும், ஷார்ட் டிரஸ்களிலும் கலக்கிவந்த விழாவில், சிம்பிளான புடவைகள், கான்ட்ராஸ்ட் பிளவுஸ்களில் தனி முத்திரை பதித்தார் நந்திதா.

டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய நந்திதா, தன் புடவைகள் ‘போர்’ என்று எழுந்த விமர்சனங்களுக்குச் சரியான பதிலடி கொடுத்தார். “கேன்ஸ் விழா உடைகளைப் பற்றியது அல்ல... படங்களைப் பற்றியது. வித்தியாசமான நபர்களைச் சந்திப்பதும், உரையாடுவதும்தான் விழாவின் சிறப்பம்சம்” என்றார்.
இந்த ஆண்டு கேன்ஸ் விழாவுக்குத் தங்கள் ஆடைகளைத் தேர்ந்தெடுக்கும்படி பல ஃபேஷன் டிசைனர்கள் வற்புறுத்தியதாகவும், தான் அதைப் புறந்தள்ளியதாகவும் கூறிய நந்திதா, “நான் என் படத்துக்கு பிரெஞ்சு மொழியில் சப்டைட்டில்கள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக இருந்தேன். அப்போது எனக்கு உடை ஒரு பிரச்னையாகத் தெரியவில்லை. `ஏதோ ஒரு புடவையை எடு, கிடைக்கும் பிளவுஸை அணிந்துகொள்’ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்” என்றார். “என் அம்மா எங்கு சென்றாலும் சேலைதான் அணிந்துசெல்வார். அவரிடம் இருந்துதான் நானும் எங்கு சென்றாலும் புடவை கட்டிக்கொள்வது வசதி என்று கற்றுக்கொண்டேன். ‘மறுபடி புடவையா உங்களுக்கு போர் அடிக்கவில்லையா?’ என்று என்னிடம் பலர் கேட்கிறார்கள். ஏன்... எல்லா நிகழ்ச்சிகளுக்கும் கவுன் அணிவது போர் இல்லையா?'' என்று கேட்கிறார்.
நல்லா அடிச்சுக் கேளுங்கம்மணீ!