Published:Updated:

அன்பும் அறமும் - 20

அன்பும் அறமும் - 20
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பும் அறமும் - 20

சரவணன் சந்திரன் - ஓவியம்: ஹாசிப்கான்

பிணைப்பில்லாத  கைகள்!

பாலக்காடு எல்லையில் உள்ள காட்டுக்குள் நுழைந்ததும், ஒத்தையடிப்பாதை ஒன்றுக்குள் அழைத்துச் சென்றார் நண்பர் ஒருவர். அவர், பொள்ளாச்சியைச் சேர்ந்த தோற்றுப்போன தொழிலதிபர். பழைய பாணியிலான ஓட்டுவீடு அது. வாசலில் குண்டுபல்பு வெளிச்சம், வறுமையைக் கொப்புளித்துக்கொண்டிருந்தது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு வயிறுகள், இவருக்காக மஞ்சள் ஒளிவெள்ளம் கொஞ்சமாய்ப் பாயும் அந்த இடத்தில் காத்துக்கொண்டிருந்தன. நண்பர் வாங்கிப் போன சிக்கன் குழம்பையும் பரோட்டாக்களையும் அங்கு இருந்த நபரின் கையில் கொடுத்தபோது, ``எதுக்கு நண்பா எனக்காக நீ கஷ்டப்படுற!” என்றார்.

பொள்ளாச்சியில் இவர் தொழிலில் உச்சத்தில் இருந்தபோது இவரிடம் வேலைபார்த்தவர் அவர். ``நான் நொடிச்சுப்போன பிறகு, பலமுறை வந்து பார்த்திருக்கான். தொழில் நல்லா நடந்தப்போ அவன்தான் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டான். நோட்டு அவன் கையிலதான் புரளும். ஒரு பைசா ஏமாத்தினதில்லை. நானும் அவனை ஏமாத்தினதில்லை. அப்போ நல்லா இருக்கும்போது இப்படி அடிக்கடி வாங்கிட்டுப் போய்க் கொடுப்பேன். என்னை வந்து பார்க்கிறப்பலாம், `எப்டியாச்சும் எழுந்து வந்திரு. எனக்கு சிக்கனும் பரோட்டாவும் வாங்கித் தர்றதுக்காவது எழுந்து வந்திரு’னு சொல்லிக்கிட்டே இருப்பான்” என்றார்.

ஒரு தொழிலாளிக்கும் அவரது சிறு முதலாளிக்கும் இடையிலான பிணைப்பு, சிக்கன் மசாலாபோல அடர்த்தியாக மணம் வீசியது. வெறும் பரோட்டாக்கள் அல்ல இவை... ஒருவனை மேலே எழுப்பிக் கொண்டுவரும் புரோட்டீன்கள். அந்த ஒரு வார்த்தை, அவரை மேலே இழுத்துக்கொண்டு வந்துவிடும் என உறுதியாக நம்பினேன்.

அன்பும் அறமும் - 20

பிணைந்த கைகள் போன்ற ஒரு சித்திரம் எனக்குள் மேலெழுந்து வந்தது, ஒரு லோகோவைப்போல. சக மனிதனுடனான அடிப்படை நம்பிக்கை சார்ந்த பிணைப்பு அது; ஒருவரையொருவர் எந்தக் கட்டத்திலும் ஏமாற்றிக்கொள்ளவில்லை என்பது கொடுக்கிற கம்பீரம் அது. அந்தக் கம்பீரம்தான் இப்போது மெள்ள காணாமல்போய்க்கொண்டிருக்கிறது.

குட்டியூண்டு சலூன் ஒன்றை நடத்தும் நண்பர் ஒருவர், கண்காணிப்பு கேமராக்களைப் போட்டார் முதலில். அதற்கடுத்ததாக ஒரு படி மேலே போய், வட இந்தியத் தொழிலாளர்களைப் போட்டுவிட்டு, ``நீங்க வேணா செக் பண்ணிப்பாருங்க. இவங்க ஏமாத்தவே மாட்டாங்க. புது ஊர்ல திருட்டுத்தனம் பண்ற தைரியம் பொதுவாவே யாருக்கும் வராது” என்றார். விளையாட்டாக நானும்கூட ஒருதடவை தனியாகக் கொஞ்சம் காசு கொடுத்து `எக்ஸ்ட்ராவாக மசாஜ் பண்ணிவிடுகிறாயா?’ என்று கேட்டபோது, மூர்க்கமாகத் தலையாட்டி மறுத்துவிட்டான். கீச்சுக்குரலில் அவன் மொழியில் கம்பீரத்தை போதித்தான். இப்படி ஒரு கோணமும் இருக்கிறது இதில். இவர்களைத்தான் `எங்க ஏரியா உள்ளே வராதே!’ என ஒரு கூட்டம் துரத்தியும்கொண்டிருக்கிறது.

எங்கள் கடையில்கூட `கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும்!’ என ஒருதடவை பேச்சு வந்தபோது, எங்களுடைய கடை கட்டிங் மாஸ்டரின் கண்களைத் தற்செயலாகப் பார்த்தேன். அப்போது, இறந்துபோன மீன்களின் கண்களில் இருப்பதைப்போல ஒரு சோர்வு வந்துபோனதைக் கவனித்தேன். அந்த முடிவை ஒத்திப்போட்டு விட்டேன். `என்னை நம்பவில்லையா?’ என அந்தக் கண்கள் கெஞ்சின. இப்படியும் ஆள்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் அவர்களை ஒருபோதும் சொல்ல மாட்டேன். கையெடுத்துக் கும்பிடக்கூடச் செய்வேன். `எவன் நாசமாய்ப்போனால் என்ன?’ என்று, நேர்மை தரும் கம்பீரத்தைத் தொலைத்தவர்களைப் பற்றித்தான் இந்த இடத்தில் பேசுகிறேன். பிணைப்பில்லாத இரண்டு பக்கக் கைகளையும் பற்றித்தான் சொல்கிறேன்.

அன்பும் அறமும் - 20கைகளை இறுக்கியபடி புதுவாழ்வுக்குள் அடியெடுத்துவைக்கும் ஆண்களையும் பெண்களையும் நோக்கியும் விரிவாக இதைப் பேச விரும்புகிறேன். ஒருமுறை இளம்பெண் ஒருவர் தேடி வந்தார். அவரின் கணவரை விவாகரத்து செய்ய வேண்டும் என்றார். காரணம் கேட்டபோது, ``என்னுடைய ரூமுக்குள்ளேயே ஹிடன் கேமரா வைக்கிறான்” என்றார். இதுமாதிரி ஐட்டங்கள் விற்கும் கடைத்தெருவில், தன்னுடைய கணவனது செல்போனுக்குள் பதிவுசெய்கிற மாதிரி ஏதாவது சிப் இருக்கிறதா எனத் தேடிய இளம்பெண் ஒருவரையும் நன்றாக அறிந்திருக்கிறேன். அடிப்படை நம்பிக்கை தகர்ந்துவிட்டது எப்போதோ!

ஒரு பையனுக்கு எப்போதும் ஒரு பழக்கம் உண்டு. அதைக் கேட்டால், நீங்களே எரிச்சல் பட்டுவிடுவீர்கள். அவருடைய மனைவி என்ன சொன்னாலும், `ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பிடு. இல்லாட்டி வாட்ஸ்அப்ல மெசேஜா போட்டுடு. அதுவும் இல்லாட்டி மெயில் அனுப்பு’ என்பாராம். ``என்னப்பா உன்னுடைய பிரச்னை!’’ என்று கேட்டால், ``பாஸ், அவ இப்ப ஒண்ணு சொல்லுவா. கொஞ்ச நேரம் கழிச்சு மறந்துட்டு வேறொண்ணு சொல்லுவா. ஆதாரத்தைக் கையில வெச்சுக்கிட்டா சட்டுன்னு எடுத்துக் காட்டிடுவேன்” என்றார். ``எப்பப் பார்த்தாலும் கோர்ட்ல ஆதாரத்தைக் காட்டுற மாதிரி வாழ முடியுமா?” என எரிச்சலோடு கேட்டார் அந்தப் பெண்.

இந்தத் தலைமுறை, எல்லாவற்றையும் இப்படிப் பதிவுசெய்யத் தொடங்கிவிட்டது. சாதனங்கள் கிடைத்தால், அதில் இருக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திப் பார்க்கத்தான் செய்வார்கள். இரவு மனக்கிளர்ச்சியில் பரஸ்பரம் அனுப்பக்கூடிய எல்லா விஷயங்களும் பதிவுசெய்யப்படுகின்றன. ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியாத சாதனங்களுக்கு இங்கே மதிப்பே இல்லை; மனிதர்களுக்கும்தான். எப்போதுமே `ஆதாரம்’ என்கிற சுத்தியலை வைத்துக்கொண்டு எதிரே இருப்பவரின் மண்டையில் போடத் தயாராகிற பாவனையிலேயே வாழ்ந்துகொண்டிருப்பது முறைதானா? வம்பும் வழக்கும் அனுதினமும் அறைக்குள் நடக்க முடியாது அல்லவா? காமம் தாண்டி வாழ்வியல் அணுக்கத்தையும் பிணைப்பையும் போதிக்கும் கட்டில்கள்தான் அறையில் இருக்க வேண்டுமே தவிர, நீதிமன்றக்கூண்டுகள் அல்ல.

எனக்குத் தெரிந்த, 40 வயதுக்கு மேற்பட்ட நடிகை அவர். நடிகை என்றாலே, பொதுப்புத்தி எப்போதுமே கொஞ்சம் எதிராகத்தான் பார்க்கிறது. சில நேரங்களில், அவர்களே இந்தப் பொதுப்புத்திக்கு அஞ்சாமல் தீனியும் போடுகிறார்கள். அப்படியான விளம்பரத் தேவைகள்கூடச் சிலருக்கு இருக்கின்றன. அப்படியானவர்களைப் பற்றி இங்கே சொல்லவில்லை. அந்த நடிகைக்கு நான்கு பெண் குழந்தைகள். ஒருதடவை அவர் என்னிடம், ``எங்க வீட்ல எல்லோருடைய பாஸ்வேர்டும் எல்லாருக்கும் தெரியும். மொபைல்ல யாருமே பாஸ்வேர்டு வைக்க மாட்டோம்” என்றார். இது எனக்குப் புதுவிதமான திறப்பாக இருந்தது. அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போதே என்னுடைய மொபைலில் இருந்த பாஸ்வேர்டை அழித்து, மொபைலைத் திறந்தவெளியில் உலவவிட்டேன். ஒருவரின் சுதந்திரத்தை பாதிக்கிற செயல் என்கிற கோணத்தில் அவர் இதைச் சொல்லவில்லை. பாஸ்வேர்டு தெரிந்திருந்தாலும் திறந்து பார்க்காத உச்சநம்பிக்கைகொண்ட உறவுநிலை என்கிற பதத்தை அவர் சுட்டிக்காட்டினார். ஒரு வரியில் அவர் சொன்ன விஷயம் ஒன்றை, எப்போதும் நெஞ்சில் ஏந்தியிருக்கிறேன். வாழ்வில் அது எனக்கு உதவக்கூடச் செய்கிறது.

அன்பும் அறமும் - 20

இங்கே பாஸ்வேர்டுகள்தான் பலரது பஞ்சாயத்தாக இருக்கின்றன. கல்யாணம் ஆன இளைஞர் ஒருவர், உச்சகட்ட மன உளைச்சலில் வந்து நின்றார். அவருடைய முன்னாள் காதலியின் பெயரை பாஸ்வேர்டாக வைத்ததே, அவருடைய மணவாழ்வுச் சிக்கலுக்குக் காரணமாக அமைந்துவிட்டது. அவர் மனைவி பெண்டெடுத்துவிட்டார் அவரை. அந்தப் பாஸ்வேர்டைத் தூக்கி எறிந்தால்தான் என்ன? புதுவாழ்க்கைக்கு வந்துவிட்டு அதைச் சுமந்துகொண்டு அலைவது இன்னொருவருக்குத் துயரம் இல்லையா? பாஸ்வேர்டு என்பதை இந்த இடத்தில் ஒரு குறியீடாகவே சொல்கிறேன். நம்பிக்கையற்ற பிணைப்பு என்பதைச் சுட்டுவது இது. ஒரு தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இருக்கும் பிணைப்புகூட உடன் வாழும் சக உயிர்களிடம் இல்லாமல்போவது ஏனோ?

நம்பிக்கைகள் கைப்பிடித்து வாழும் வாழ்வில், சின்னச் சின்ன சந்தோஷங்களைத் தந்தபடியே இருக்க வேண்டும். கண்காணிப்பின் முனையில் காலம்தள்ள முடியாது. கடையாகட்டும், அந்த மஞ்சள் பூத்த வீட்டு அறையாகட்டும், கண்காணிப்புக் கேமராக்களின் பார்வையிலேயே நடமாட முடியாது. கடைகளுக்காவது, கண்காணிப்புக் கேமராக்கள் போடுகிற தேவை இப்போதெல்லாம் வந்துவிட்டது. அதன் தேவை இருப்பதை மறுக்கவும் முடியாது. நம்முடைய சட்டை எல்லோருக்கும் பொருந்தாது அல்லவா?

ஆனால், ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் என வாழவேண்டியவர்கள், கரிய ஒளிக்கண்களைப் பார்த்துக்கொண்டே தூங்க முடியாது அல்லவா! சந்தேகத்தின் கரிய நிழல் படிந்துவிட்டால், பிணைப்பு எல்லாம் கட்டிலுக்கு அடியில் பதுங்கிக்கொள்ளும். அந்த நடிகை சொல்லி நெஞ்சில் ஏந்திய வாசகங்கள் இவைதான். `எதுக்காக ஒருத்தர்கிட்ட மறைக்கிற மாதிரியான வேலையை வாழ்க்கையில செய்யணும்? கண்காணிக்கிறாங்கங்கிற பயத்தோட செத்துச் செத்து வாழ்ற வாழ்க்கையைவிட, நெஞ்சுல பாரம் இல்லாத வாழ்க்கை மகிழ்ச்சியா இருக்கும்’.

இதை எல்லோரும் நெஞ்சில் ஏந்த வேண்டும் என்கிற எந்த அவசியமுமில்லை. ஆனால், ஓர் அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். இங்கே எவரும் எவரிடமிருந்தும் தப்பிக்க முடியாது. கண்காணிப்பின் வளையத்தில் கம்பீரமாக வளையவருவதைக் கற்றுக்கொண்டு விட்டால், சிக்கலில்லாத பதற்றமில்லாத வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியும். பதற்றமில்லாத வாழ்வு கொடுக்கும் கம்பீரத்தில், பிணைப்பு என்பது மலைச்சுனைகளைப்போல ஊற்றெடுக்கும். குளிர்ந்த அந்த நீருக்கு சுவை அதிகம்.

- முற்றும்