Published:Updated:

அன்று அந்த லைஃப் போட்டில் பயணித்தது `பை'யும் புலியும் மட்டுமல்ல... நாமும்தான்! #6YearsOfLifeOfPi

விகடன் விமர்சனக்குழு
அன்று அந்த லைஃப் போட்டில் பயணித்தது `பை'யும் புலியும் மட்டுமல்ல... நாமும்தான்! #6YearsOfLifeOfPi
அன்று அந்த லைஃப் போட்டில் பயணித்தது `பை'யும் புலியும் மட்டுமல்ல... நாமும்தான்! #6YearsOfLifeOfPi

மனிதச் சமூகத்தின் தொடர் கேள்வியாகவும், போராட்டமாகவும், அமைதியாகவும் உணரும் கடவுள் என்ற சமன்பாட்டை இயற்கையின் ஊடாக உணர்வுகளின், விளைவுகளின் விடையாக லைஃப் ஆப் பையில் விளக்கியுள்ளார் ஆங் லீ!

`இதெல்லாம் ஒரு கதையா...! என்ன இது புலி, லைஃப் போட், மனுஷன், கடைசியில் முடிவே சரியில்லை' என்று அனைத்து முன்னணிப் பதிப்பகங்களும் யான் மார்ட்டெலின் `லைஃப் ஆஃப் பை' நாவலைப் பிரசுரிக்க மறுத்தனர். ஆனால், அந்தக் கதை ஒவ்வொரு வாசகனுக்குள்ளும் எழுப்பிய கேள்வியில் மில்லியன் கணக்கில் புத்தகங்கள் விற்றுத் தீர்ந்தன. Knopf Canada பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட லைஃப் ஆஃப் பையின் லண்டன் வெளியீடு அந்த ஆண்டுக்கான மேன் புக்கர் விருது பெற்றது. சிறந்த இலக்கியங்களை நோக்கிப் படையெடுக்கும் ஹாலிவுட்டில் லைஃப் ஆஃப் பைக்கான உரிமையை 20th Century Fox பெற்றது. நாவலைப்போலவே திரைப்படமும் பல சிக்கல்கள் பல முன்னணி இயக்குநர்களை கடந்து ஆங் லீ இயக்குவதாக முடிவானது. லைஃப் ஆஃப் பை திரைப்படத்துக்குத் திரைக்கதை எழுதியவர் டேவிட் மேகீ.

கடல் துயரின் புயல் காற்றில் அடித்து வீசப்பட்ட பை மர்மத் தீவில் மகிழ்ச்சியாகக் கரை ஒதுங்குவதுபோல் தடைகளையும் பிரச்னைகளையும் கடந்த இப்படம் உலகளவில் மெகா ஹிட்டுடன் சிறந்த இயக்குநர், ஒளிப்பதிவு, ஒரிஜினல் இசை, விஷுவல் எஃபெக்ட் என ஆஸ்கர் விருதுகளையும் குவித்தது. அன்று பல திரைப்பட ஜாம்பவான்கள் முன்னிலையில் இவ்விருதுகளை வென்ற லைஃப் ஆஃப் பையின் குழுவினரில் பெரும்பாலானவர்கள் அப்போதுதான் தங்கள் முதல் விருதையே பெறுகின்றனர். ஒரு முழுப் புலியை வெவ்வேறு சூழ்நிலைக்கேற்ப கிராபிக்ஸில் பிரத்யேகமாக வடிவமைத்தது முதல் தனித்துவமான விஷுவல் எபெக்ட்தான் இப்படத்தின் பிளஸ். புலி பல நாள் உணவு ஏதுமன்றி வாடிய உடலுடன் தடுமாறி நடப்பதும், வேகமாக மீன்கள் நீரை விட்டு சீரிப் பாய்வதும், வண்ணமயமான மீன்களுக்கு நடுவே பெரிய திமிங்கலம் கடலில் திமிறிக் குதித்து அனைத்தையும் சிதறடிப்பதும் கிராபிக்ஸின் கண்கவர் காட்சிகள். உயிருக்காகப் போராடும் இளைஞனாக 17 வயது `பை'யின் கதாபாத்திரத்தில் நடித்த சுராஜ் சர்மா தன் முதல் படத்திலேயே உலகம் முழுக்க கவனம் பெற்றார். தன் கதையை முடிக்கும்பொழுது கலங்கிய கண்களுடன் நெகிழ வைத்திருப்பார் இர்ஃபான் கான். மேலும், தபு, ஆதில் உசேன் போன்ற நடிகர்கள் சூழலுக்கேற்றவாறு பொருந்திப் போயிருப்பார்கள்.

`கண்ணே... கண்மணியே' என்ற பாம்பே ஜெயஸ்ரீ யின் தமிழ் தாலாட்டுடன் தொடங்கும் படத்தில் தமிழும் நமக்கான சமாதானங்களும் ஆங்காங்கே படரியுள்ளன. பாண்டிச்சேரியில் அன்பையும் ஆன்மிகத்தையும் ஒருங்கே வழங்கும் அம்மா, விலங்குகளுடன் செயல்படும் எதார்த்த தர்க்கங்களை பேசும் மிருகக்காட்சி சாலை உரிமையாளரான அப்பா என இருவருக்கும் இடையில் தன் வாழ்வு குழம்பிய நிலையில் பயணிக்கிறான் பை. `பை' - பாரிசின் நீச்சல் குளத்தினால் கவரப்பட்ட நீச்சல் வீரர் மாமாவின் பேச்சைக்கேட்டு அந்த நீச்சல் குளத்தின் பெயரான பிசின் மாலிட்டோரை நினைவில் கொண்டு `பிசின் மாலிட்டோர் படேல்' என்று தன் மகனுக்குப் பெயர் வைத்தார் பையின் தந்தை. எப்பொழுதும் பெயர்களைச் சுருக்கி அழைக்கும் நம் சூழல் பிசின் மாலிட்டோரை `பிஸ்..பிஸ் அடிப்பவன்' எனக் கலாய்க்கிறது. பள்ளியின் அவலகங்களிலிருந்து `பை' என்ற கிரேக்க கணிதச் சமன்பாட்டினை தனது பெயராக முன்னிறுத்தி மாணவர்கள் மத்தியில் வெற்றிபெறுகிறான் பை (Pisin என்பதன் சுருக்கம் Pi). ஆனால், தன் ஆன்மிகம் சார்ந்த கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் என்றுதான் பார்க்கும் அனைத்துச் சமயங்களுடன் பயணிக்கிறான். ஆனந்தி என்ற பெண்ணின் மீது காதல் கொள்கிறான். திடீரென்று ஒருநாள் தந்தையின் நிர்பந்தம் காரணமாக தான் விரும்பிய பாண்டிச்சேரி, ஆனந்தி என்ற அனைத்தையும் விட்டுவிட்டு கனடாவுக்குப் பயணமாகிறான். கப்பலில் தன்னுடைய மற்றொரு விருப்பமான குடும்பத்தையும் இழந்து நடுக்கடலில் ஒரு புலியுடன் லைஃப் போட்டில் தஞ்சமடையும் பை, தான் உயிர்பிழைத்த கதையை பின்னாளில் ஒரு நாவலாசிரியரிடம் பகிர்கிறார்.

தன் திரைப்படங்களில் பெரும்பாலும் மனித உறவுகளுக்கும் எண்ணங்களுக்கும் இடையேயான உணர்வுகளைப் பேசுவதில் தனித்துவம் பெற்றவர் இயக்குநர் ஆங் லீ. மனிதச் சமூகத்தின் தொடர் கேள்வியாகவும், போராட்டமாகவும், அமைதியாகவும் உணரும் கடவுள் என்ற சமன்பாட்டை இயற்கையின் ஊடாக உணர்வுகளின், விளைவுகளின் விடையாக லைஃப் ஆஃப் பையில் விளக்கியுள்ளார். படத்தில் `ரிச்சர்ட் பார்க்கர்' என்ற புலி லைஃப் போட்டில் பையுடன் பயணிக்கிறது. பையிற்கு ஆரம்பம் முதலே ரிச்சர்ட் பார்க்கர் மீதும் அதன் ஆன்மாவின் மீதும் தனது ஆன்மிகத்தைப் போல் ஏதோ விடை தெரியாத அபிப்ராயம் உள்ளது. ரிச்சர்ட் பார்க்கரை சமாதானப்படுத்துவதில் அவன் திருப்தியடைகிறான். பாண்டிச்சேரியில் மிருகக் காட்சி சாலையின் கம்பிகளுக்கிடையில் அதற்கான உணவை நீட்டும்பொழுதும், அது கடலில் உயிருக்காக தத்தளிக்கும்போதும் அதன் கண்களில் ஆன்மாவையும் தன் மீதான அதன் கருணையையும் உணர்கிறான் பை. ஆனால், இருவரும் ஒட்டிய உடலில் கரை ஒதுங்கிப் போராடும்பொழுது தன்னை விட்டுவிட்டுப் பதிலேதும் சொல்லாமல் காட்டுக்குள் செல்லும் ரிச்சர்ட் பார்க்கரை பார்த்துக் கதறி அழுகிறான். பையின் பார்வையில் தன்னை பாண்டிச்சேரியிலிருந்து கனடாவுக்கு நிர்பந்தித்தது தன் தந்தையாக இருந்தாலும் கப்பலிலிருந்து லைஃப் போட்டிற்கு நிர்பந்தித்ததும், தன்னை ரிச்சர்ட் பார்க்கருடன் உறவாட வைத்ததும், தன்னை உயிர்பிழைக்க வைத்ததும் கடவுளாகவே உள்ளார் என்று நினைக்கிறான். லைஃப் போட்டில் ஒவ்வோர் இடர்பாட்டின்போதும் தன் கடவுள்களையே பிரார்த்திக்கிறான் அவன். பின்பு, கதையை விவரிக்கையில் தான் உயிரோடு பிழைத்தற்கு காரணமே ரிச்சர்ட் பார்க்கர் என்கிறான். அதைத் தன் கடவுளாகவே பார்க்கிறான். இப்படித் தன் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் காரணம் கடவுள் என்றே சமாதானமடைகிறான் பை. அது இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், பாண்டிச்சேரி, லைஃப் போட், ரிச்சர்ட் பார்க்கர் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது அவனுக்கான ஆறுதல். அவனுக்கான அமைதி!

ஒவ்வொரு விஷயங்களையும் பல கண்ணோட்டத்தில் விவரிக்க முடியும். அந்த வகையில் பார்த்தால், இங்குப் பை, ரிச்சர்ட் பார்க்கர், படம் பார்க்கும் நாம் என மூவரும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கலாம். தன் மிருகக் காட்சி சாலையில் எத்தனையோ விலங்குகள் இருந்தும் ஏனோ ரிச்சர்ட் பார்க்கர் என்ற புலியுடன் பொருந்திப் போகிறான் பை. புலிக்கு `ரிச்சர்ட் பார்க்கர்' என்ற பெயரும் பையிற்கு பிசின் மாலிட்டோர் என்ற பெயரும் தற்செயலான விபத்தாகவே அமைந்தது. `விலங்குகளுக்கு ஆன்மா என்பது கிடையாது. அதன் கண்களில் உன்னுடைய உள்ளுணர்வைத்தான் காண்கிறாய்' என்றும், `'ஒரே நேரத்தில் பல கடவுள்களை வழிப்படுகிறாய் என்றால் எந்தக் கடவுள் மீதும் உனக்கு நம்பிக்கையில்லை என்றுதானே அர்த்தம்' எனப் பையின் தந்தை அவனைக் கண்டிக்கிறார். ஆன்மா, கருணை என்றெல்லாம் ஏதுமில்லாத புலியைப் போலவே இயற்கையின் முன் தன் மத உணவுப்பழக்கத்தையெல்லாம் பையால் தொடரமுடியவில்லை. இறுதியில் காப்பீட்டு உரிமையாளர்களிடம் சொல்லும் கதையில் ரிச்சர்ட் பார்க்கர் செயலோடு தன்னை ஒப்பிடுகிறான். காரணம், ரிச்சர்ட் பார்க்கர் இடத்தில்தான் இருந்திருந்தால் தானும் அவ்வாறுதான் செய்திருப்பேன் என்கிறான். இங்கு இயற்கைதான் எல்லாம். இயற்கைதான் கடவுள். இயற்கையின் முன் ரிச்சர்ட் பார்க்கர் என்ற புலியைப்போல்தான் பை உள்ளான். இங்கு எண்ணிக்கையற்ற முடிவற்ற `பை' என்ற சமன்பாட்டைப் போல்தான் நாம் உள்ளோம்.

நாவலாசிரியரிடம் இரண்டு கதைகளைச் சொன்ன பை, உங்களுக்கு எந்தக் கதை பிடித்துள்ளது என்று கேட்கிறார்.

அதற்கு நாவலாசிரியர், ``நீங்கள் புலியோடு இருந்த கதை. அதுதான் நம்புற மாதிரியும் இருந்தது" என்கிறார். 

அதற்கு பை, ``அதுதான் கடவுளின் விருப்பமும் கூட" என்கிறார். 

சிறந்த இயக்குநருக்கான விருது வாங்க ஆஸ்கர் மேடையில் எரிய ஆங் லீ... தன் நிலைதெரியா சந்தோஷத்தின் மத்தியில் முதலில் பேசிய வார்த்தை...

`Thank You Movie God!'

எக்கடவுளாயினும் அதைப் பின்பற்றுபவர்கள் அவர்களுக்கான வரையறுக்க முடியாத ஒரு காரணம், அன்பு, கோபம் என உணர்வுகளின் கோட்பாடாக தன்னிலையை, தன் கடவுளை உணர்கிறார்கள். பையின் வாழ்க்கைக்கும், அந்த உணர்வாளர்களின் வாழ்க்கைக்கும் தேவைப்படுகிறது அந்தத் தாலாட்டு...!

அதன் அழகிய வடிவமே இந்த ``லைஃப் ஆஃப் பை''!

அடுத்த கட்டுரைக்கு