Published:Updated:

`` `மீடு'க்கு அப்புறம் ஆண்களுடைய நடவடிக்கைகள் மாறும்; மாறணும்!" - பார்வதி நாயர்

`` `மீடு'க்கு அப்புறம் ஆண்களுடைய நடவடிக்கைகள் மாறும்; மாறணும்!" - பார்வதி நாயர்
`` `மீடு'க்கு அப்புறம் ஆண்களுடைய நடவடிக்கைகள் மாறும்; மாறணும்!" - பார்வதி நாயர்

"பண்ற முதல் படத்துலேயே அஜித் சாரோட வேலை பார்க்குறதுக்குக் கொடுத்து வெச்சிருக்கணும். அவர் மெச்சூரிட்டியான ஆள். செட்ல உள்ளவங்ககிட்ட அதிக உரிமை எடுத்துப்பார், அக்கறையும் காட்டுவார். கஷ்டமான காட்சிகள் கொடுத்தாலும் அதை சரியா செய்யக்கூடிய திறமைசாலி."

`என்னை அறிந்தால்' படத்தில் அருண் விஜய்யின் எலிசபெத்தாக அறிமுகமானவர், பார்வதி நாயர். பின்பு, `உத்தமவில்லன்', `கோடிட்ட இடங்களை நிரப்புக'. `என்கிட்ட மோதாதே' போன்ற படங்களில் நடித்தார். ``சினிமாவைப் பத்தி கனவுலகூட நெனச்சுப் பார்க்க முடியாத குடும்பத்துல இருந்து வந்த நடிகை நான். என் வீட்டுல உள்ளவங்க துபாய்ல இருக்கும்போது நான் மணிப்பால்ல இன்ஜினீயரிங் படிக்க வந்தேன். அவங்களுக்குத் தெரியாமதான் மாடலிங் பண்ண ஆரம்பிச்சேன். டாம்-பாய் லுக்ல இருந்த நான், மாடலிங்குக்குலாம் போக மாட்டேன்னு வீட்டுல ரொம்ப தீர்க்கமா இருந்தாங்க" எனத் தன் சினிமா என்ட்ரியோடு பல கேள்விகளுக்கும் பதில் சொல்லத் தொடங்கினார், பார்வதி நாயர்.

``பெயருக்குப் பின்னாடி சாதிப்பெயரை வைக்கிறதுல இருந்து எல்லாரும் விலகி வந்துட்டு இருக்க நிலைமையில, `பார்வதி நாயர்'ங்கிற உங்களோட பெயரை எப்படிப் பார்க்குறீங்க?"

``பார்வதி வேணுகோபால்ங்கிற பெயரை பார்வதி நாயர்னு மாடலிங்காக மாத்திக்கிட்டேன். இது வீட்டுக்கே தெரியாது. சாதிப் பெயரை பின்னாடி வைக்கிறது தவறில்லை. அதுதான் நம்முடைய அடையாளம். அது சில சமயம் குடும்பப் பெயராகூட அமையலாம். அதைத் தவறா நினைக்க வேண்டாம். இது அவங்களுடைய தனிப்பட்ட விருப்பம்." 

``துபாய் வாழ்க்கை எப்படி இருக்கு. இந்தியாவை மிஸ் பண்றீங்களா?"

``பூர்வீகம் கேரளாவா இருந்தாலும் நான் வளர்ந்தது முழுக்கவே துபாய்லதான். அங்க பல நாட்டு மக்களைப் பார்க்கலாம். பல மொழிகள், பழக்க வழக்கங்கள், கலாசாரம்னு எல்லாத்தையும் ஏத்துக்கிட்டாதான் இங்க வாழவே முடியும். தவிர, இருக்கிற மக்களுக்கு ஃபேஷன் சென்ஸ் அதிகம். அப்பப்போ ட்ரெண்ட் ஆகுற கலர்ஃபுல் உடைகளை இங்க பார்க்க மட்டும்தான் முடியுமே தவிர, வெளிப்படுத்துற சுதந்திரம் மக்களுக்குக் கிடையாது. இந்தியாவை ஒப்பிடும்போது, இங்க மக்கள் தொகை ரொம்பக் குறைவு. அதனால மாசுபடுத்துதலும் குறைவா இருக்கு. இந்தியாவிலும் இப்படியான சுற்றுச்சூழல் இருக்கணும்னு விரும்புறேன். ஏன்னா, அங்கதான் என்னுடைய குடும்பமும், நண்பர்களும் இருக்காங்க. இந்தியாவுல அமைதியான சூழல் இருக்கு. அதை இன்னும் சுத்தமாப் பராமரிச்சா நாடு வேற லெவல்ல இருக்கும்."  

``உங்ககூட வேலை பார்த்த சில செலிபிரிட்டிகளுடனான அனுபவத்தைப் பகிர்ந்துக்கோங்க..."

அஜித் :

``பண்ற முதல் படத்துலேயே அஜித் சாரோட வேலை பார்க்குறதுக்குக் கொடுத்து வெச்சிருக்கணும். அவர் மெச்சூரிட்டியான ஆள். செட்ல உள்ளவங்ககிட்ட அதிக உரிமை எடுத்துப்பார், அக்கறையும் காட்டுவார். கஷ்டமான காட்சிகள் கொடுத்தாலும் அதை சரியா செய்யக்கூடிய திறமைசாலி."

அருண் விஜய் :

``அருண் விஜயோட வேலை பார்க்கும்போதுதான் நடிப்புனா என்னனு கத்துக்கிட்டேன். இவர் கடின உழைப்பாளி. அவர்கூட சேர்ந்து நடிக்கும்போது ஸ்க்ரீன்ல இருக்கிற மத்தவங்களை ஓவர்டேக் பண்ணிட்டுப் போயிடுவார்." 

கமல் :

``உலகத்தின் தலை சிறந்த நடிகர்கள்ல ஒருத்தர், கமல் சார். அதனால்தான் அவருக்கு `உலக நாயகன்'னு பட்டம் கொடுத்திருக்காங்க. அவரைப் பார்த்தா ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்கிற மாதிரி தெரியும். ஆனா, ரொம்பப் பொறுப்பாவும் பொறுமையாவும் நடிப்பைச் சொல்லிக்கொடுக்கக்கூடிய ஒருத்தர். `உத்தம வில்லன்' படத்துல நடிக்கும்போது எனக்கு தமிழ் உச்சரிப்புல சில சிக்கல் இருந்துச்சு. என்னுடைய வசனங்களை, என்கூடயே உட்கார்ந்து ஸ்கூல் டீச்சர் மாதிரி சொல்லிக்கொடுத்தார்." 

பார்த்திபன் : 

``பார்த்திபன் சார் படத்துல அந்தந்த நடிகர்கள் நடிக்கிறதைத் தாண்டி, ஒருத்தருடைய திறமை என்ன, அவங்களை இன்னும் எப்படியெல்லாம் உபயோகப்படுத்தலாம்னு யோசிப்பார். நான் அவர் படத்துல வேலை பார்க்கும்போதுதான் எனக்கு நல்ல ஃபேஷன் சென்ஸ் இருக்குங்கிறதை உணர்ந்தேன்." 

உதயநிதி :

``அவர் படத்துல பார்க்கிற மாதிரிதான், நிஜத்திலேயும் இருப்பார். ரொம்ப அமைதி. நிறைய புத்தகங்கள் படிப்பார்னு நினைக்கிறேன். சினிமா தொழிநுட்பம் மற்றும் தமிழ் மொழி சம்பந்தமாக அவர் பேசும்போது நான் அமைதியாகிடுவேன்." 

``மீடூ பிரச்னை குறித்து என்ன நினைக்கிறீங்க? இந்த மாதிரியான அனுபவத்தை நீங்க கடந்து வந்திருக்கீங்களா?"

``மீடூ நம்ம நாட்டுக்கு மிக முக்கியம். பெண்கள், இப்போதான் நிறைய விஷயங்களை வெளியில சொல்ல ஆரம்பிச்சுருக்காங்க. இனி ஆண்களோட நடவடிக்கைகளும் மாறும்; மாறணும். எல்லாத் துறைகளிலும் பெண்களுக்குப் பாலியல் தொல்லைகள் இருக்கு. அதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறதுக்குப் பெண்களால மட்டும்தான் முடியும். எனக்கும் இந்த மாதிரியான பிரச்னைகள் நடந்திருக்கு. அதை எதிர்கொள்ற மனப்பக்குவம் இருந்ததால அதுல இருந்து தப்பிச்சிட்டேன். இந்த மாதிரியான பிரச்னைகளை உடனே பேசி ஒரு முடிவுக்குக் கொண்டு வரணும். பல வருடங்கள் கழிச்சு அதைப் பத்திப் பேசுறதுல எந்தப் பயனும் இல்லை." 

``சமூக சேவைகள்ல அதிகமா ஈடுபடுறதுக்கான காரணம்?"

``க்ரீன் பீஸ் என்.ஜி.ஓக்கு நான் காலேஜ் படிச்சிட்டு இருக்கும்போதே என்னால முடிஞ்ச உதவிகளை பண்ணிட்டிருந்தேன். HIV எய்ட்ஸ் இருக்குறவங்களுக்கு உதவி செய்ற `ரெட் ரிப்பன் ரெவல்யூஷன்'னுக்கு தூதுவரா இருக்கேன். பெங்களூர்ல இந்திய அரசாங்கத்தோட இணைந்து `ஸ்வச் பாரத்' இயக்கத்தைத் தொடங்கி வெச்சிருக்கேன். பத்தனம்திட்டா மாவட்டத்துல இருக்கிற என்னுடைய தாத்தா கட்டின ஸ்கூலை, இப்போ மறுசீரமைப்பு பண்ணியிருக்கேன். அந்த ஸ்கூல்ல இருக்கிற குழந்தைகளுக்கு இலவசமாப் பாடம் கத்துக்கொடுக்கணும்ங்கிறதுதான் என்னுடைய நீண்ட நாள் கனவு. இன்னும் நிறைய சமூக சேவைகள் செய்வதற்கும் தயாரா இருக்கேன். இதுதான் எனக்கும் சந்தோஷம்."

``ஸ்போர்ட்ஸ்ல உங்களுக்கு இருக்குற ஆர்வம் குறித்துச் சொல்லுங்க?" 

``2016-ல நடந்த செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்ல கர்நாடகாவுக்கு ப்ராண்ட் அம்பாஸடரா இருந்தேன். அதே வருஷத்துல நடிகர் சங்கம் நடத்திய கிரிக்கெட் மேட்ச்ல ஜெயம் ரவி தலைமையிலான `நெல்லை டிராகன்ஸ்' டீமுக்கும் ப்ராண்ட் அம்பாஸடரா இருந்தேன். நான் ஒரு ஸ்குவாஷ் பிளேயர். 6-வது படிக்கும்போது ஸ்குவாஷ் விளையாட ஆரம்பிச்சேன். சென்னையில நடக்குற ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் போட்டிகளுக்கும் தூதுவரா செயல்படுறேன்." 

`` `சீதக்காதி' படத்துல உங்களுக்கு என்ன ரோல்?"

``இதுல நான் பார்வதி நாயராவேதான் நடிச்சிருக்கேன். மேடை நாடகங்கள், சினிமா சம்பந்தப்பட்ட படம்ங்கிறதுனால நிறைய நடிகர்கள் அவங்ளாவே வர்றாங்க. படத்துல எனக்கு இரண்டே காட்சிகள்தான். அதை ஆச்சர்யப்படுற விதத்துல எனக்கு அமைச்சுக் கொடுத்திருக்கார், இயக்குநர் பாலாஜி சார். செட்டுல எல்லாரையும் ஒருங்கிணைக்கிறதே விஜய் சேதுபதி சார்தான். அவர் இருக்கும்போது எல்லாரும் அவர்கூடவே இருப்போம். நிறைய அறிவுரைகள் கொடுப்பார். எந்தவொரு பிரச்னைனாலும் சார்கிட்ட பகிர்ந்துக்கலாம். அவரால முடிந்த உதவிகளை நண்பர்களுக்காகச் செய்வார். நாங்க கலகலப்பாகவும் இருப்போம், பொறுப்பாகவும் செயல்படுவோம். என்ன, இன்னும் ரெண்டு நாள் எக்ஸ்டரா ஷூட்டிங் போயிருந்தா நல்லா இருந்திருக்கும்" என்று முடித்தார் பார்வதி நாயர்.       

அடுத்த கட்டுரைக்கு