Published:Updated:

``நிஜத்திலும், செல்லுலாய்டிலும் `டைட்டானிக்'கின் துயரைத் தாங்கி நின்றது அந்த ஒற்றை இரவு!" - #21YearsOfTitanic

விகடன் விமர்சனக்குழு
``நிஜத்திலும், செல்லுலாய்டிலும் `டைட்டானிக்'கின் துயரைத் தாங்கி நின்றது அந்த ஒற்றை இரவு!" - #21YearsOfTitanic
``நிஜத்திலும், செல்லுலாய்டிலும் `டைட்டானிக்'கின் துயரைத் தாங்கி நின்றது அந்த ஒற்றை இரவு!" - #21YearsOfTitanic

"உயிர் பிழைக்க முறையில்லாமல் ஒருவர் செல்ல முற்படும்போது அவரைச் சுட்டுவிட்டு, `உங்களை என்னால் காப்பாற்ற முடியவில்லை' என்ற குற்ற உணர்ச்சியில் தற்கொலை செய்யும் காட்சி, இறந்தாலும் ஒன்றாக இறப்போம் என்று நீருக்கு மத்தியில் கட்டிப்பிடித்து காதலினால் இறப்பை வரவேற்கும் வயதான தம்பதி, தம் இசையால் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் தன்னிறைவடையும் கலைஞர்கள்... என டைட்டானிக்கின் ஒவ்வொரு சம்பவமும் எவ்வளவு அடர்த்தியானது!"

`ஒவ்வொரு இரவின் கனவிலும் நான் உன்னைக் காண்கிறேன், நான் உன்னை உணர்கிறேன்' என ஜாக், ரோஸையும், ரோஸ், ஜாக்கையும் நினைப்பதுபோல அவர்களின் கடைசி இரவை உலகமும் நினைத்துக்கொண்டிருக்கிறது. உலகின் பல்வேறு விபத்துகளில் வரலாற்றின் பெருந்துயராக இன்றுவரை பார்க்கப்படுபவற்றில், `டைட்டானிக்' கப்பல் மூழ்கிய அந்த இரவும் ஒன்று. அந்த இரவுக்கு ஒவ்வோர் அசைவிலும் உயிர்கொடுத்த `டைட்டானிக்' திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.  

`டைட்டானிக்'கிற்கு முன்பும் சரி, பின்பும் சரி... ஆஸ்கர் வரலாற்றில் அதன் சாதனையை எந்தப் படங்களாலும் எட்ட முடியவில்லை. மொத்தம் 14 பரிந்துரைகள், 11 விருதுகள் என ஒரே படத்தைச் சார்ந்தவர்கள் மீண்டும் மீண்டும் அந்த ஆண்டின் ஆஸ்கர் அரங்கை அலங்கரித்தார்கள். குறிப்பாக, படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த படத்தொகுப்பு என மூன்று விருதுகளை அள்ளிச் சென்றார். மேடையில், `நான்தான் இந்த உலகத்தின் ராஜா' என்று கேமரூன் கத்திய முழக்கம், மொத்த அரங்கையும் அதிரவைத்தது. மேலும், படத்தில் ரோஸை ஜாக் வரைவதுபோல் காட்சி அமைக்கப்பட்டாலும், அந்த ஓவியத்தை உண்மையாக வரைந்தது உட்பட, `டைட்டானிக்'கின் அனைத்து ஓவியங்களையும் தீட்டியது, கேமரூனின் கைதான்! 

``நிஜத்திலும், செல்லுலாய்டிலும் `டைட்டானிக்'கின் துயரைத் தாங்கி நின்றது அந்த ஒற்றை இரவு!" - #21YearsOfTitanic

உலகிலேயே மிகப்பெரிய கப்பலான டைட்டானிக்கின் முதல் பயணம், 2000-க்கும் மேற்பட்ட பயணிகளைத் தாங்கி இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவை நோக்கிச் செல்கிறது. நாயகி ரோஸ் (கேட் வின்ஸ்லெட்) போதுமான அளவுக்கு வசதியான பெண்ணாக இருந்தாலும், டைட்டானிக்கின் மகிழ்ச்சியான பயணத்தில் ஏதோ கூண்டுக்குள் அடைபட்ட பறவையாக, சுதந்திரமற்றவளாகத் தன்னிலையை வெளிப்படுத்துகிறாள். நாயகன் ஜாக் (லியானார்டோ டிகாப்ரியோ) ரோஸிற்கு நேரெதிர். ஏழ்மையானவன்; வருங்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் வாழ்க்கை போகும் போக்கில் மகிழ்ச்சியாக வாழும் இளைஞன். அவனுக்கு டைட்டானிக் பயணம் என்பதே தற்செயலான ஒன்றுதான்.

தன்னிடம் எல்லாம் இருந்தும் வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்துகொள்ளத் தயாராகும் ரோஸும், அடுத்த நொடி வாழ்வதற்கு உத்தரவாதமில்லாத மரணத்தின் பிடியில், ``I'll never let go Jack, I Promise" என்று அவள் சொல்வதற்குக் காரணமான ஜாக்கும், டைட்டானிக்குமே படத்தின் பிரதானம். காதல் காட்சிகளை மையமாகக் கொண்டு படம் பயணித்தாலும், மூன்றாம் வகுப்பினரை மட்டும் உடல் அங்கம் வரை சோதனை செய்து கப்பலுக்குள் அனுமதிக்கும் காட்சி முதல், உயிர் பிழைத்தலுக்கான போராட்டத்தின் சச்சரவுகள் வரை... ஒவ்வொரு காட்சியும் கவனிக்க வேண்டியவை. பகட்டான பணக்காரர்களில் நம் அமெரிக்க மாப்பிள்ளைகளையும், அப்பாஸ்களையும் ஞாபகப்படுத்தும் வில்லன் வரை நிரம்பியுள்ளது, `எலைட்'களின் வர்க்கக் கண்ணோட்ட வெளிப்பாடு. ஆனால், இரண்டாம் அத்தியாயப் பயணத்தில் அனைத்தையும் உடைத்து, பாத்திரங்களின் உள்ளுணர்வின் உருக்கத்தில் மெள்ள  மூழ்கிக்கொண்டிருக்கிறது, டைட்டானிக். 

டைட்டானிக் நடுக்கடலுக்கு வந்தவுடன், வேகத்தைக் கூட்டச் சொல்லி பெருமிதத்தோடு அதன் போக்கை ரசிக்கும் கேப்டன், அதே டைட்டானிக் மூழ்கப்போகிறது என்று தெரியும்போது, தழுதழுக்கும் உடல் மொழியுடன் செய்வதறியாது, `பாவம் செய்துவிட்டோமோ!' என்று தனி அறையில் சாவது, டைட்டானிக்கின் அசைவுகளையும், அதன் பயணிகளையும் சிரிப்பின் மூலமாகவே கட்டுப்படுத்தும் முதன்மைக் கண்காணிப்பாளர், உயிர் பிழைக்க முறையில்லாமல் ஒருவர் செல்ல முற்படும்போது அவரைச் சுட்டுவிட்டு, `உங்களை என்னால் காப்பாற்ற முடியவில்லை' என்ற குற்ற உணர்ச்சியில் தற்கொலை செய்யும் காட்சி, இறந்தாலும் ஒன்றாக இறப்போம் என்று நீருக்கு மத்தியில் கட்டிப்பிடித்து காதலினால் இறப்பை வரவேற்கும் வயதான தம்பதி, தம் இசையால் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் தன்னிறைவடையும் கலைஞர்கள்... என டைட்டானிக்கின் ஒவ்வொரு சம்பவமும் எவ்வளவு அடர்த்தியானது!

``நிஜத்திலும், செல்லுலாய்டிலும் `டைட்டானிக்'கின் துயரைத் தாங்கி நின்றது அந்த ஒற்றை இரவு!" - #21YearsOfTitanic

`My Heart Will Go On' பாடலிலிருந்து ஜேம்ஸ் ஹார்னரின் ஒவ்வொரு பின்னணி இசையும் காதலின் ரிங்டோனாக இன்றும் இசைக்கப்படுகிறது. படத்தின் முதன்மை அழகியல் அதன் கலைதான். கப்பலின் 360° தோற்றமும், நிஜ டைட்டானிக்கை நினைவுபடுத்தி, பார்வையாளர்களை ஆச்சர்யப்பட வைத்தது, மறைந்த நினைவுகளையும் பேச வைத்தது. நிஜ டைட்டானிக்கை வடிவமைத்த `ஒயிட் ஸ்டார் லைன்' நிறுவன நிபுணர்களுடன் இணைந்து பல கலை அலங்கார செட்கள் வடிவமைக்கப்பட்டது. தன் படங்களில் கிராஃபிக்ஸை அள்ளித் தெளிக்கும் கேமரூன், டைட்டானிக்கை எதார்த்தமாகக் காட்டவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். படத்தின் ஆரம்பக் காட்சியில் வரும் மூழ்கிய டைட்டானிக், வட அட்லான்டிக் கடலில் மூழ்கிய நிஜ டைட்டானிக்கையே பிரத்யேகமாக நீர்மூழ்கிக் கப்பல், கேமராக்களைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டது. நிஜ டைட்டானிக்கில் பயணம் செய்தவர்களைவிட இப்படத்துக்காக கேமரூன்தான் அதனுடன் அதிக நேரம் இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. வயதான ரோஸாக நடித்துள்ள குலாரியா ஸ்டூவர்ட் என்ற முதியவர், நிஜ டைட்டானிக்கில் பயணம் செய்து உயிர் பிழைத்தவரே! 

டைட்டானிக் கப்பல் மூழ்கிய நூறாவது வருடத்தை நினைவுபடுத்தும் வகையில், கடந்த 2012- ம் ஆண்டு டைட்டானிக் படம் 3D யில் வெளியிடப்பட்டது. புதிதாக வெளியான படம்போல மீண்டும் பெரிய வசூலைக் குவித்தது. டாம் க்ரூஸ், மடோனா, கேமரூன் டயஸ் நடிக்கவிருந்த `டைட்டானிக்', டிகாப்ரியோவையும், கேட் வின்ஸ்லெட்டையும் ஏற்றிப் பயணித்தது. இவ்வளவு பெரிய படம் தோல்வியடையும் என்று சொன்னவர்களுக்குத் தன் திறமையின் நம்பிக்கையால் பதில் தந்தார் கேமரூன்.

மகிழ்ச்சியின் சூழலாக இரவைப் பார்க்கும்பொழுது, மூழ்கடிக்கும் நீர், நடுங்கவைக்கும் பனிப்புகை, ரத்தம் உறைய வைக்கும் பனி, குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஓலங்களுக்கு மத்தியில் அலறலுடன் அழைக்கும் மரணம்... என நிஜத்திலும், செல்லுலாய்டிலும் டைட்டானிக்கின் மொத்தத் துயரையும் தாங்கி நின்றது, அந்த ஒற்றை இரவு.

அடுத்த கட்டுரைக்கு