
இன்பாக்ஸ்

பஞ்சாபி மாநிலம் ஜலந்தர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் அர்ஷ்தீப் சிங். 2018 ஆம் ஆண்டிற்கான 10 வயதிற்குட்பட்ட சிறந்த வைட் லைஃப் போட்டோகிராபர்-2018 விருதினைப் பெற்றுள்ளார். லண்டன் நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம் இந்த விருதினை வழங்கியுள்ளது. 10 வயதான அர்ஷ்தீப் சிங் ‘பைப் அவுல்ஸ்’ என்ற தலைப்பில் , இரு ஆந்தைகள் ஒரு குழாயினுள் இருப்பது போன்ற படத்தை எடுத்ததற்காக இந்த விருதைப் பெற்றுள்ளார். போட்டோசிங்!
உலகிலேயே ‘100 சதவிகிதம் ஆர்கானிக் மாநிலம்’ என்கிற பெருமை சிக்கிமிற்குக் கிடைத்திருக்கிறது. ஐ.நா.சபை இந்த விருதினை வழங்கியுள்ளது. 25 நாடுகள், 51 நாமினேஷன்கள் என நடந்த இந்தப் போட்டியில் சிக்கிம் வெற்றிபெற்றுள்ளது. இந்த விருதினை, சிக்கிம் முதலமைச்சர் பவன்குமார் சாம்லிங், இத்தாலிக்கான இந்தியத் தூதர் (Ambassodor) ரீனட் சந்து இருவருமாகப் பெற்றுக்கொண்டனர். ``சிக்கிம் அரசின் ஆர்கானிக் கொள்கை சுமார் 66,000 விவசாயக் குடும்பங்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறது’’ என்று அம்மாநில அமைச்சர் பிரேம் தாஸ் ராய் கூறியிருக்கிறார். சிறப்பு சிக்கிம்!
இங்கிலாந்து இளவரசர் பிரின்ஸ் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கில் திருமணம், மே மாதம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு, உலகம் சுற்றக் கிளம்பியவர்கள் இன்னும் ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். உலகச் சுற்றுலா மேற்கொண்டிருக்கும் இந்த ஜோடி, சென்ற வாரம் ஆஸ்திரேலியாவில் கால் வைத்துள்ளனர். அங்கு மிகவும் பிரபலமான ‘போண்டி’ கடற்கரைக்குச் சென்ற போது அவர்களுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர், பொதுமக்களை சந்தித்த மேகனுக்கு வித்தியாச அன்பளிப்பு வழங்கப்பட்டது. அந்நாட்டின் ஃபிரெஷ் ‘கேரட்’கொத்துதான் அது. ஃப்ரஷ் கிப்ட்!

ஆசிட் வீச்சுக்கு ஆளான பெண்களின் கதைகள் மலையாளத்திலும் இந்தியிலும் ஒரே நேரத்தில் படமாகிவருகின்றன. மலையாள நடிகை பார்வதி புதுமுக இயக்குநர் மனு அசோகன் இயக்கும் படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கிறார். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வாலின் பயோபிக் பாலிவுட்டில் தயாராகிறது. இதில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்க, படத்தை ‘ராஸி’ படத்தை இயக்கிய மேக்னா குல்சார் இயக்குகிறார். நல்ல செய்தி பரவட்டும்!
இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வருகிறது ‘டெண்டுல்கர் மிடில்செக்ஸ் குளோபல் அகாடெமி’. சச்சின் தெண்டுல்கரும், இங்கிலாந்தின் மிடில்செக்ஸ் கிரிக்கெட் கிளப்பும் இணைந்து உருவாக்கிய இந்த அகாடெமி, மும்பை மற்றும் புனேவில் 7 முதல் 18 வயதிலான சிறுவர், சிறுமியருக்கான கிரிக்கெட் பயிற்சியைத் தொடங்கவுள்ளது. லிட்டில் மாஸ்டரின் நண்பர் வினோத் காம்ப்ளி, சர்வதேச வீரர்கள் டேவிட் மாலன், நிக் காம்ப்டன் என நட்சத்திரப் பயிற்சியாளர் குழு, இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரங்களைக் கண்டெடுத்து பட்டைதீட்டப்போகிறார்கள். ஆசம் ஆசம்!
தனுஷ், தனது இயக்கத்தில் தயாராகி வரும் படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் நான்காம் முறையாக இணைகிறார். சமீபத்தில் வெளிவந்த ‘ராட்சசன்’ படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படத்திலும் நடிக்கவிருக்கிறார். செல்வராகவனும் தனுஷும் அடுத்த ஆண்டு இறுதியில் இணையவிருக்கிறார்கள். இப்படம் இவர்கள் இருவரின் கூட்டணியில் ஏற்கெனவே வந்த புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகமாகவும் இருக்கலாம் என்கிறார்கள். பிஸி குமாரு!