Published:Updated:

``நெட்ஃபிளிக்ஸ் வெளியீடான, `ரோமா’வுக்கு ஆஸ்கர் வாய்ப்பு அதிகம்!’’ #Roma

``நெட்ஃபிளிக்ஸ் வெளியீடான, `ரோமா’வுக்கு ஆஸ்கர் வாய்ப்பு அதிகம்!’’ #Roma
``நெட்ஃபிளிக்ஸ் வெளியீடான, `ரோமா’வுக்கு ஆஸ்கர் வாய்ப்பு அதிகம்!’’ #Roma

``விருதுகளுக்கான ஃபார்முலாவில் எடுக்கப்பட்டிருக்கும் `ரோமா’வில் குரோனின் இளவயது படிமங்கள் சோகத்திலிருந்து நம்மை விடுவித்து, படத்தின் தரத்தையும் உயர்த்துகின்றன.’’

மெக்ஸிகோவில் 60-களின் இறுதியில் மாணவர்களின் இயக்கத்தை ஒடுக்க `லாஸ் ஹல்கொனேஸ்' (பருந்துப் படை) என்ற துணை ராணுவப் படை ஒன்று உருவாக்கப்பட்டது. 71-ல் பருந்துப் படை, மெக்ஸிகோ நகரத்தில் ஊர்வலமாகச் சென்ற மாணவர்களைக் கம்பால் அடித்து, துப்பாக்கியால் சுட்டு 120 பேரைக் கொன்றது. `கார்பஸ் கிறிஸ்டி படுகொலை' என்று அழைக்கப்படும் இந்தச் சம்பவம்தான், மெக்ஸிகன் திரைப்பட இயக்குநர் அல்ஃபான்ஸோ குரோனின், `ரோமா' படத்தின் பின்னணி. 

குரோன், `ஒய் து மமா தாம்பியென்' (Y Tu Mamá También), 'ஹாரி பாட்டர் அண்ட் த ப்ரிஸனர்  ஆஃப் ஆஸ்கபான்', 'சில்ரன் ஆஃப் மென்’ மற்றும் 'க்ராவிட்டி' போன்ற படங்களைத் தந்து பிரபலமானவர். 17 வருடங்களாக அமெரிக்காவில் படமெடுத்த குரோன், தன் இளமைப் பருவத்தையொட்டி எடுத்த படத்தின் பெயரான `ரோமா', மெக்ஸிகோ நகரத்தில் உள்ள ரோமா என்ற இடத்தைக் குறிக்கிறது. தன்னை வளர்த்த பணிப்பெண் லிபோவின் பாத்திரத்துக்கு க்லியோ என்று பெயரிட்டார் குரோன். க்லியோவாக, மெக்ஸிகோவின் பூர்வீக இனத்தில் பிறந்த மிக்ஸ்டெக் மொழி பேசும் யலிட்ஸா அபரிசியோ என்ற இளம் பெண், தன் முதல் படத்தில், அமைதி, பொறுமை, பாசம் மூன்றையும் காட்டி நடித்துள்ளார். க்லியோவின் காதலன் ஃபெர்மின், அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று தெரிந்ததும், அவளைக் கைவிட்டுப் போய்விடுகிறான். அவன் பருந்துப் படையில் சேர்ந்து, ஓர் அமெரிக்கரிடமும் ஒரு கொரியரிடமும் பயிற்சி பெறுகிறான்.     

அவளது மட்டுமல்ல சோகக் கதை. அவளுடைய எஜமானி சோஃபியாவினதும்கூட! சோஃபியாவின் குடும்பம் ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்தது. சோஃபியாவின் கணவன் டாக்டர் அன்டோனியோ, அவளையும் அவர்களின் நான்கு குழந்தைகளையும் விட்டுவிட்டு, வேறொருத்தியின் பின்னால் போகிறான். ஆனால், சோகத்தைக் கசக்கிப் பிழியாமல், குரோன் பெரும்பாலும் தன் இளமைக் கால ஞாபகத்திலிருந்து காண்பித்திருக்கும் பிம்பங்கள் நம்மைக் கவர்கின்றன. அவற்றில் சில ஃபெடெரிகோ ஃபெலினி என்ற இத்தாலிய இயக்குநரை நினைவு படுத்துகின்றன. சேறும் சகதியுமாக இருக்கும் ஒரு சேரியில் ஃபெர்மினைத் தேடி க்லியோ செல்லும்போது, பீரங்கியிலிருந்து ஒருவன் வெடி வெடித்து உயரே தூக்கிப் போடப்பட்டு வலையில் விழும் வித்தை நடந்துகொண்டிருக்கிறது. சோகமான காட்சிகளில் இசைக்குழு ஒன்று வாத்தியங்களை வாசித்துக்கொண்டு தெருவில் அணிவகுத்துப் போகிறது. அல்லது ஒரு திருமண கொண்டாட்டத்தின் பாட்டும் நடனமும் பின்னணியாக நடக்கிறது. அன்டோனியோ தன் காதலியுடன் போவது தியேட்டருக்கு வெளியே காட்டப்பட்ட பின், தியேட்டருக்குள் விஞ்ஞானக் கதைப் படமான 'மரூன்ட்' (1969) படத்தில் இரு விண்வெளி வீரர்கள் மிதக்கும் காட்சி காட்டப்படுகிறது. குரோனை மிகவும் கவர்ந்த இந்த அருமையான படம் குரோன், 'க்ராவிட்டி' என்ற விஞ்ஞானக் கதைப் படம் எடுக்கத் தூண்டுதலாக இருந்தது.

`ரோமா'வின் இன்னொரு காட்சியில், கொழுந்தெரியும் காட்டுத் தீயை எல்லோரும் அணைக்க முயலும்போது, ஒருவன் மட்டும் சற்று உருக்கமாகக் கடவுளை வேண்டிப்பாடுகிறான். அந்தக் காட்டுத் தீ எரியும் காட்சி, ஹஸியெண்டா என்று சொல்லப்படும் பெரிய எஸ்டேட்டில் நடக்கிறது. பல குடும்பங்கள் அங்கே கூடுவது, ஜான் ரென்வாவின் (Jean Renoir) ஒப்பற்ற 'ரூல்ஸ் ஆஃப் த கேம்' (1939) என்ற படத்தில் உள்ள சில காட்சிகளை சற்று நினைவு படுத்துகிறது. ஒரு பணிப்பெண் பற்றிய குரோனின் படம், 2015 திரைப்பட விழாவில் மிகவும் ரசிக்கப்பட்ட 'த செகண்ட் மதர்' என்ற பிரேசில் நாட்டுப் படத்தை ஞாபகப்படுத்துகிறது. அது ஒரு வயதான பணிப்பெண் பற்றியது. 'ரோமா'வின் சில காட்சிகள் குரோனின் பழைய படங்களை நினைவுபடுத்துகின்றன. குழந்தை பிறக்கும் நீண்ட காட்சி ஒன்று 'சில்ரன் ஆஃப் மென்' (2006) படத்திலும் இருக்கிறது. அந்தப் படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு உலகத்தில் முதன்முறையாக குழந்தை பிறப்பது ஓர் அதிசயம் போன்றதால், தேவையாக இருந்தது. `ரோமா'வில் அதைச் சுருக்கியிருக்கலாம். 'ஒய் து மமா தாம்பியென்' (2001) படத்தில் மூன்று கதாபாத்திரங்களும் கடற்கரைக்குச் செல்லும் காட்சி இருக்கிறது. `ரோமா'வில் சோஃபியா, க்லியோவையும் தன் குழந்தைகளையும் கடற்கரைக்குக் கூட்டிச் சென்று கதையை ஒரு முடிவுக்குக் கொண்டுவருகிறாள்.

க்லியோவும் ஃபெர்மினும் நெருக்கமாக ஓர் அறையில் இருக்கிறார்கள். அவன் தற்காப்புக் கலைப் பயிற்சியில் தான் கற்றுக் கொண்டதை அவளுக்குச் செய்து காண்பிக்கிறான். க்லியோ, ஃபெர்மினைத் தேடி அவன் பயிற்சி பெறும் மைதானத்துக்குப் போகும்போது, அவன் இனிமேல் அவள் அவனைத் தேடி வரக்கூடாது என்று சொல்லி பயமுறுத்துகிறான். சோஃபியாவின் கணவன் அன்டோனியோவிடமும், ஒரே ஒரு பரிமாணத்தைத்தான் பார்க்க முடிகிறது. சோஃபியா குழந்தைகளிடம் பேசும்போது, அவர்களிடம் அன்டோனியோ அன்பு வைத்திருப்பதாகவும், அவர்களை அவன் வந்து பார்க்கப்போவதாகவும் சொல்கிறாள். ஆனால், படத்தில் அன்டோனியோ குழந்தைகளைப் பார்க்க முயல்வதாகக் காட்டவில்லை. ஃபெர்மினையும் அன்டோனியோவையும் முழுமையாகக் காட்டியிருக்கலாம். அதனால், இரண்டு பெண்களின் நிலைமையின் சோகம் குறைந்துவிடுமோ என்று செய்யவில்லை போலிருக்கிறது. நியோ ரியலிஸப் பாணியில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், நியோ ரியலிஸப் படங்களில் பொதுவாக ஓர் ஏழையான கதாபாத்திரத்தைப் பாதிக்கப்பட்டவராகக் (victim) காண்பித்து அவரிடம் இரக்கம் ஏற்படுத்தும் சூத்திரத்தைப் பின்படுத்தி க்லியோவையே படம் சுற்றுகிறது. முக்கியப் பாத்திரம் பெண் என்பதைத் தவிர, அவளுடைய எஜமானியையும் பாதிக்கப்பட்டவராகக் காண்பித்து, பாலினப் பிரச்னைக்கான செக் பாக்ஸையும் டிக் செய்கிறது. அதேபோல அரசியலுக்கான செக் பாக்ஸிலும் டிக்! எல்லாமே மேலெழுந்தவாரியாக, காட்சிப் பொருள்களாக இருக்கின்றன. பாத்திரங்களிடையே உறவுகள், அரசியல் நடப்பு எதிலும் படம் அவ்வளவாக ஒன்றும் சொல்ல முயலவில்லை.                            

குரோனே ஒளிப்பதிவு பொறுப்பையும் எடுத்துக்கொண்டு, அதை மிகத் திறமையாகச் செய்திருக்கிறார். படத்தை கறுப்பு வெள்ளையில் எடுத்து, அந்தக் காலகட்டத்துக்கு நம்மைக் கொண்டு செல்கிறார். கார்பஸ் கிறிஸ்டி படுகொலை காட்சியைத் தத்ரூபமாக எடுத்திருக்கிறார் குரோன். பெரும்பாலும் லாங் டேக்களாக எடுத்திருக்கிறார். கேமராவிலிருந்து நடு தூரத்திலும் அதற்குப் பின்னாலும் நடப்பதைக் கேமரா நகராமலோ, பக்கவாட்டில் திரும்பியோ (pan) அல்லது பாதையில் நகர்ந்தோ (track) பதிவு செய்கிறது. க்லியோ இரவில் ஒவ்வொரு விளக்காக அணைக்கும்போது, 360 டிகிரி பேன் (pan) செய்து அசத்துகிறார் குரோன். முதல் ஷாட்டில் காம்பௌண்டிற்குள் கார் நிறுத்தும் பாதையில் உள்ள டைல்கள் மேல் டைட்டில் போடப்படுகிறது. பணிப்பெண் பற்றிய படம் என்று அறிவிப்பதுபோல் சோப்புத் தண்ணீர் நுரைகளுடன் டைல்கள் மேல் மீண்டும் மீண்டும் அலைகள்போல் வந்து கொண்டிருக்கிறது. வானத்தின் பிரதிபலிப்பு தண்ணீர்மேல் விழுந்து, அதில் விமானம் போவது தெரிகிறது. 

எண்ட் டைட்டிலில் கடைசியாக, 'சாந்தி சாந்தி சாந்தி' என்ற வரி வருகிறது. குரோனின் 'சில்ரன் ஆஃப் மென்' படத்திலும் இந்த வரி இருக்கிறது. வெனிஸ் திரைப்பட விழாவில் 'கோல்டன் லயன்' பரிசு பெற்ற, நெட்ஃப்ளிக்ஸ் வெளியீடான, 'ரோமா', 2019-ல் அயல் மொழியில் சிறந்த படத்துக்கான ஆஸ்கர் பரிசு பெரும் வாய்ப்பு அதிகம். 2018-ன் தலை சிறந்த படமென்று 'ரோமா' புகழப்படுகிறது. விருதுக்கான ஃபார்முலாவில் எடுக்கப்பட்டிருக்கும் 'ரோமா'வில் குரோனின் இளவயது படிமங்கள் சோகத்திலிருந்து நம்மை விடுவித்து, படத்தின் தரத்தையும் உயர்த்துகின்றன.  

பின் செல்ல