தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

பாலிவுட் டான்ஸ் ஆடும் பலே பலே பாட்டிகள்!

பாலிவுட் டான்ஸ் ஆடும் பலே பலே பாட்டிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
பாலிவுட் டான்ஸ் ஆடும் பலே பலே பாட்டிகள்!

வாவ்

பாட்டிகளின் டான்ஸ் ட்ரூப்... படிக்கும்போதே சிரிப்பு வரலாம். ஆனால், இதைச் சாத்தியப்படுத்தி பாலிவுட் டான்ஸ் மாஸ்டர்கள்வரை பாராட்டைப் பெற்று, தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளார் அகமதாபாத்தில் வசிக்கும் நடனக் கலைஞர் ஸ்வாதி படேல்.

பாலிவுட் டான்ஸ் ஆடும் பலே பலே பாட்டிகள்!

‘`ஐந்து வயதில் நடனம் பயிலத் தொடங்கினேன். பாரம்பர்ய நடனத்தில் முதுகலைப் பட்டம் பெற்றபின், என் குரு கிருபா ஜோஷியுடன் இணைந்து பல வருடங்கள் பணிபுரிந்தேன். நடனம் என் உயிர் மூச்சாகியது. 2012-ல் ரியாலிட்டி ஷோக்கள் பிரபலமடையத் தொடங்கியபோது, நடனத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்தேன். குடும்பப் பொறுப்புகளை முடித்த, பணி ஓய்வுபெற்ற பாட்டிகளை ஒருங்கிணைத்து நடனக் குழுவை ஏற்படுத்தும் எண்ணம் தோன்றியது. வயதான பெண்கள் மேடையில் நடனமாட விரும்ப மாட்டார்கள், உடலும் ஒத்துழைக்காது எனச் சொல்லி பலரும் என்னை எச்சரித்தனர்; கேலி செய்தனர். ஆனால், நான் கோயில், பூங்கா என்று பல இடங்களுக்குச் சென்று வயதானவர்களைச் சந்தித்துப் பேசி, அவர்களில் நடன ஆர்வம் உள்ளவர்களைக் கண்டெடுத்தேன். நடனம் கற்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள், அதனால் ஏற்படும் புகழை எடுத்துக் கூறினேன். மகிழ்ச்சியுடன் முன்வந்தனர். உரிய பயிற்சி அளித்து, அவர்களிடம் ஒளிந்துகிடந்த திறமைகளைப் பட்டை தீட்டி வெளிக்கொண்டுவர உறுதியளித்தேன்’’ என்கிறவர் தன் குழுவை அறிமுகப்படுத்துகிறார்.

லத்திகாவுக்கு 67 வயது. தோள்பட்டைப் பிடிப்பினால் கையைத் தூக்க முடியவில்லை. என்றாலும், தொடர் பயிற்சியால் குழுவின் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பு பாதிக்காத வகையில் நடனமாட தன்னைத் தயார்படுத்தியிருக்கிறார். 64 வயதாகும் அருணா, சிறு வயதில் பரதநாட்டியம் பயின்றவர். படிப்பு, வேலை, குடும்பப் பொறுப்புகளினால் தொடர்ந்து நடனமாட முடியாத வருத்தம் இருந்தது அவருக்கு. இப்போது ஸ்டெப்ஸுக்கு உடல் முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்றாலும், முகத்தில் வெளிப்படுத்தும் பாவங்களில் ஸ்கோர் செய்கிறார்.

பாலிவுட் டான்ஸ் ஆடும் பலே பலே பாட்டிகள்!

62 வயதாகும் ஷில்பா கைவிரல்களில் நகச்சுற்று நோயினால் அவஸ்தைப்பட் டாலும் அதைப் பொருட்படுத்தாமல் நடனத்தில் கலக்குகிறார்.

‘`ஜூலை 2014-ல், பாட்டிகளின் நடனம் முதன்முதலில் அகமதாபாத்தில் அரங்கேறியது. பலரும் பிரமித்தனர். நான்கு வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து பல நடன நிகழ்ச்சிகளை நடத்திவருகிறோம். பாலிவுட் டான்ஸ் மாஸ்டர்களான கணேஷ் ஆச்சார்யா, தர்மேஷ் இருவருடன் நடனமாடி அசத்தினர் எங்கள் குழுவினர்” என்று பூரிக்கிறார் ஸ்வாதி படேல்.

-   ஸ்ரீ அகத்திய ஸ்ரீதர்