2018 ஸ்பெஷல்
சினிமா
Published:Updated:

2018 டாப் 10 பிரச்னைகள் - கை நழுவிய வாய்ப்புகள்

2018 டாப் 10 பிரச்னைகள் - கை நழுவிய வாய்ப்புகள்
பிரீமியம் ஸ்டோரி
News
2018 டாப் 10 பிரச்னைகள் - கை நழுவிய வாய்ப்புகள்

கோ.தனஞ்செயன் தயாரிப்பாளர்

2018-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 முக்கியப் பிரச்னைகளைப் பற்றி, பல்வேறு துறைசார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

2018 தமிழ் சினிமாவுக்குக் கலவையான வருடமாகவே முடிந்தது. ‘மேற்குத் தொடர்ச்சி மலை’, ‘பரியேறும் பெருமாள்’, ‘96’, ‘வட சென்னை’, ‘காலா’, ‘2.0’ மாதிரியான புதுமையான முயற்சிகள் கொண்டாடப்பட்டன. அதே சமயம் பட வெளியீட்டில் குளறுபடிகள், பட ரிலீஸ் அன்றே இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியானது, கதைத்திருட்டு, மீடூ புகார்கள் என ஏராளமான பிரச்னைகளையும் தமிழ்சினிமா எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

2018 டாப் 10 பிரச்னைகள் - கை நழுவிய வாய்ப்புகள்

ஏழு வார வேலை நிறுத்தம், பல படங்களுக்குப் பின்னுறுத்தலை (backlog) உருவாக்கியது. இது பல கோடி ரூபாய்க்கு நஷ்டத்தை உருவாக்கியது. கியூப்/ யு.எப்.ஓ (UFO) போன்ற டிஜிட்டல் ஆபரேட்டர்கள் தமிழ் சினிமாவில் ஏகாதிபத்தியமாகச் செயல்படுகிறார்கள் என்று தயாரிப்பாளர் சங்கம் கியூப் கட்டணங்களைக் குறைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்து பிப்ரவரி 23 முதல் புதுப்படங்கள் வெளியிடுவதை நிறுத்தி வைத்தது. ஓரிருரு வாரங்களில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த வேலை நிறுத்தம், ஏழு வாரங்களுக்கு நீண்டது. இதனால் தமிழ் சினிமா 200 கோடிரூபாய் வரை வருமானத்தை இழந்தது. டிஜிட்டல் நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் எந்தக் கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. கடைசியில் அரசாங்கம் தலையிட்ட பின், ஒரு வழியாக உடன்படிக்கை ஏற்பட்டது. ஆனால், இந்த மகிழ்ச்சி நீண்ட நாள்கள் நீடிக்கவில்லை. சரியாக ஆறு மாதம் முடிந்தவுடன் இப்போது கியூப் நிறுவனங்கள் மீண்டும் பழைய கட்டணத்திற்கே சென்று விட்டன. இப்போது வேலைநிறுத்தம் பண்ணியதால் உண்டான நஷ்டமும் குழப்பமும் தயாரிப்பாளர்கள் தலையிலேயே விழுந்தது.  

2018 டாப் 10 பிரச்னைகள் - கை நழுவிய வாய்ப்புகள்

ஏழு வாரப் பின்னுறுத்தலால் குறைந்த பட்சம் 30 படங்கள் எப்போதும் வெளியிடுவதற்கு தற்போது தயாராக இருக்கின்றன. ஒவ்வொரு வாரமும் 5 முதல் 7 படங்கள் வெளியாகும் சூழ்நிலை வந்துவிட்டது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக, திரைப்படங்களின் வெளியீட்டை முறைப்படுத்த வேண்டும் என்று ஒரு ‘ரிலீஸ் ரெகுலேஷன் கமிட்டி’ அமைக்கப்பட்டது. அந்த முயற்சியும், பலனைத் தரவில்லை. 2018 முடியும் வரையும், ஏழு வார வேலை நிறுத்தத்தின் பாதிப்பு தொடர்ந்துகொண்டே இருக்கிறது. டிசம்பர் 21-ம் தேதி, ஐந்து பிரபல நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகி, அவர்கள் அனைவருக்குமே வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தியதும் இதனால்தான்.  

`புதிய தமிழ்த் திரைப்படங்கள் ரிலீஸ் அன்றே வெளியாவதை இணையதளங்களில் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்’ என்று உறுதி அளித்த நடிகர்சங்கத் தலைவரின் படமே இணையதளங்களில் முதல்நாளே வெளிவந்தது. இது, இந்தத் திருட்டை இனி ஒழிக்கவே முடியாது என்ற ஒரு முடிவுக்கு அனைவரையுமே கொண்டுவந்துவிட்டது.

2018 டாப் 10 பிரச்னைகள் - கை நழுவிய வாய்ப்புகள்

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும்  அரசாங்கத்திற்கும் இணக்கமில்லாமல் போனதால் தயாரிப்பாளர்கள் கேட்கும் எந்த உதவியையும் தமிழக அரசு செய்யாமல் தவிர்த்துவருகிறது. ‘விஸ்வரூபம்’, ‘மெர்சல்’ படங்களுக்குப் பின் ‘சர்கார்’ படத்திற்கும் அரசாங்கத்திடமிருந்து எதிர்ப்பு வந்தது. தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்தின் வெளியிடுதலில் தொடர்ந்து இடர்ப்பாடுகள் வந்துகொண்டே இருக்கின்றன.

தொடர்ந்து கதை திருட்டுப் புகார்கள் வந்து கொண்டே இருந்தன. ‘சர்கார்’ விவாகரத்திற்கு பின் தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கம் இயக்குனர் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு புத்துணர்வு பெற்றுள்ளதால், இந்த மாதிரி புகார்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது .

சிறிய படங்களுக்கும் புதிய முயற்சிகளுக்கும் மக்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பைக் கொடுத்துக்கொண்டிருக்கிற காலகட்டம். இதில் ஒரு சில குழப்பங்களை அரசும் திரைத்துறைச் சங்கங்களும் முறையாகக் கையாண்டிருந்தால் எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும் ஆண்டாக 2018 இருந்திருக்கும்.