தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

பெண்களுக்கு இது தரும் தைரியத்தை வேறு எதுவும் கொடுக்காது! - ஸ்ரீலதா தேவி

பெண்களுக்கு இது தரும் தைரியத்தை வேறு எதுவும் கொடுக்காது! - ஸ்ரீலதா தேவி
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்களுக்கு இது தரும் தைரியத்தை வேறு எதுவும் கொடுக்காது! - ஸ்ரீலதா தேவி

தனியே... தன்னந்தனியே...

“வயசான பிறகு நிறைய டிராவல் பண்ணணும். ஊர், ஊரா சுத்திப் பார்க்கணும்’’ - நிறைய பேரின் ரிட்டையர்மென்ட் திட்டங்களில் பயணமும் ஒன்றாக இருப்பதைக் கேள்விப்படுகிறோம். ஆனால், ‘`ஓய்வுக்காலத்துக்கான விஷயங்களில் பயணத்தைச் சேர்க்காதீங்க. வயசிருக்கும்போதே ரசிச்சு அனுபவிக்க வேண்டிய பேரின்பம் பயணம்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆசிரியர் ஸ்ரீலதா தேவி.

இவர் வாழ்க்கையின் கால் பகுதியில் கனவுகளில் மட்டுமே பயணங்களைக் கண்டவர். அடுத்த கால் பகுதியில் நிஜமான பயணங்களுக்கான ஆயத்தங்கள் ஆரம்பமாக, இன்று பயணங்கள் முடிவதில்லை என்பதே இவரின் வாழ்க்கையாகியிருக்கிறது.

பெண்களுக்கு இது தரும் தைரியத்தை வேறு எதுவும் கொடுக்காது! - ஸ்ரீலதா தேவி

‘`கோவில்பட்டி பொண்ணு நான். எங்க ஊர்ல கல்யாணத்துக்கு முன்னாடி பெண்களை அதிகம் வெளியில அனுப்ப மாட்டாங்க. சின்ன வயசுலலேயே அம்மா இறந்துட்டாங்க. அப்பாகிட்ட ‘எங்கேயாவது ஊருக்குப் போகலாம்'னு கேட்டா, ‘கல்யாணத்துக்குப் பிறகு போயிக்கலாம்’னு சொல்வார். ப்ளஸ் டூ படிக்கிறபோதே எனக்குக் கல்யாணமாகிடுச்சு. அப்புறம்தான் டீச்சர் ட்ரெயினிங், கம்ப்யூட்டர் கோர்ஸ் எல்லாம் முடிச்சேன்.  கல்யாணத்துக்குப் பிறகாவது ஊரைச் சுத்திப் பார்க்கிற ஆசை நிறைவேறும்னு நினைச்சா, நடக்கலை. புகுந்த வீடு ரொம்பப் பெரிசு. எல்லாரையும் கூட்டிட்டுக் கிளம்பறதெல்லாம் முடியாதுனு சொல்லிட்டாங்க. ஆனாலும், நான் சோர்ந்து போயிடலை...’’ - உற்சாகமாகப் பேசும் ஸ்ரீலதாவுக்கு வருடங்கள் கடந்து அந்த ஆசை நிறைவேறியிருக்கிறது.

‘`கணவர் வேலை விஷயமா வெளிநாட்டுக்குப் போனார். எனக்கு 2004-ம் வருஷம் அரசுப்பள்ளியில் வேலை கிடைச்சது.  அப்போ சிறகுகள் முளைச்ச மாதிரி இருந்தது. வேலைக்குப் போயிட்டே, ரன்னிங், ஸ்விம்மிங், ட்ரெக்கிங், சைக்கிளிங்னு எல்லா குழுக்களிலும் என்னை இணைச்சுக்கிட்டேன். அப்படித்தான் ‘கவுச் சர்ஃபிங்’ குழுவிலும் சேர்ந்தேன். வெளியூர்களிலிருந்தோ, வெளிநாடுகளிலிருந்தோ அந்தக் குழுவைச் சேர்ந்த யாராவது நம்ம ஊருக்கு வந்தாங்கன்னா, நம்ம வீட்டுல இடவசதி இருந்தா அவங்க தங்கறதுக்கு அனுமதிக்கலாம். அதுக்காகப் பணமெல்லாம் வாங்க மாட்டோம். நட்புரீதியான உபசரிப்பு அது. அப்படி சில நண்பர்களுக்கு என் வீட்டில் இடம்கொடுத்தபோது நிறைய நாடுகளை பற்றித் தெரியவந்தது.

பெண்களுக்கு இது தரும் தைரியத்தை வேறு எதுவும் கொடுக்காது! - ஸ்ரீலதா தேவி

எனக்கு ஒரு மகன், ஒரு மகள். ரெண்டு பேரும் ஓரளவுக்கு வளர்ந்ததும் முழுவீச்சில் டிராவல் பண்ண ஆரம்பிச்சேன். முதல்ல தமிழ்நாடு முழுக்க போனேன். அடுத்து ஹைதராபாத், டெல்லி, மும்பை போனேன். பெரும்பாலும் தனியாதான் டிராவல் பண்றேன். டிராவல் பண்ணணும்னு திடீர்னு மனசுல தோணும். பையை எடுத்துட்டு கோயம்பேடு போய், பஸ் ஏறிடுவேன். நான் எடுத்த உடனேயே மொழி தெரியாத, எங்கே இருக்குன்னே தெரியாத இடங்களுக்குப் போகலை. நான் பிறந்து வளர்ந்த ஊருக்குப் பக்கத்துலேயே பல இடங்களைப் பல வருஷங்களா பார்க்காம இருந்திருக்கேன். அந்த இடங்களைத் தேடிப் போனேன். என் ஊர், என் மக்கள், என் மொழி என்கிற அந்த உணர்வு இன்னும் கொஞ்சம் தைரியம் கொடுத்தது. எந்த இடத்துக்குப் போனாலும் ராத்திரிக்குள்ள திரும்பிடணும்னு உறுதியா இருப்பேன். தனியா டிராவல் பண்ற பெண்கள் டெக்னாலஜி விஷயத்துல கொஞ்சம் அப்டேட்டடா இருக்கணும். அந்த வகையில எனக்கு என் செல்போனும் கூகுள் மேப்பும் கைகொடுத்தன’’ - விவரமாகப் பேசுகிறவருக்கு அனுபவங்களே அந்த ஞானத்தைத் தந்திருக்கின்றன.

‘`திருச்சி போகணும்னு திடீர்னு தோணவே, வழக்கம்போல பையை எடுத்துட்டு பஸ் ஏறிட்டேன். நடு ராத்திரியில பஸ் திருச்சியில வந்து நின்னது. அந்த நேரம் ரூம் தேடிப் போக முடியாது. ரோட்டுல தனியாவும் நிற்க முடியாது. வேற வழியே இல்லாம அந்தப் பக்கம் வந்த வேறொரு பஸ்ல ஏறி, இன்னோர் இடத்துல இறங்கி, அங்கிருந்து இன்னொரு பஸ்ல ஏறி, வேறு இடத்துல இறங்கி... இப்படியே விடியற வரைக்கும் சுத்திட்டு, மறுபடியும் திருச்சி வந்தேன். கிளம்பற நேரம் மட்டுமில்லை, போய் சேரும் நேரத்தையும் முன்கூட்டியே உறுதிப்படுத்திக்க வேண்டியது எவ்வளவு அவசியம்னு புரியவெச்ச சம்பவம் அது.

பெண்களுக்கு இது தரும் தைரியத்தை வேறு எதுவும் கொடுக்காது! - ஸ்ரீலதா தேவி

கடந்த டிசம்பர் மாசம் நார்த் ஈஸ்ட் போயிருந்தேன். மொழி தெரியாம சமாளிக்க முடியலை. அன்னிக்கு ராத்திரி ரயில்வே ஸ்டேஷன்லயே தங்கிட்டேன். அவ்வளவு தூரம் வந்தாச்சு. மொழிக்கு பயந்துக்கிட்டு, வந்த வழியிலேயே திரும்பவா முடியும்? கொஞ்சம் தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு, அடுத்த நாள் பகலில் கவுஹாத்தியிலேருந்து கிளம்பி, ஜோர்ஹாட்டுக்குப் போனேன். டென்ட் எடுத்துத் தங்கினேன். அங்கிருந்து நிம்மடி, மஜுலி ஐலேண்ட் எல்லாம் சுத்திப் பார்த்தேன். பயண ஆர்வலர்களுக்கு பயம் ஆகாதுனு உணரவெச்ச இன்னொரு சம்பவம் இது’’ - பயணங்களால் பாடம் படித்தவருக்கும் சோலோ டிராவலே விருப்பத்துக்குரியதாம்.

‘`சோலோ டிராவலில் எந்த முடிவுக்கும் யாரையும் சார்ந்திருக்காம. நினைச்ச உடனே கிளம்பிட முடியும். எனக்குக் கடல் சார்ந்த பகுதிகள் பிடிக்கும். என்னுடன் டிராவல் பண்றவங்களுக்கும் அது பிடிக்கணுமேனு யோசிக்க வேண்டியதில்லை. குழுவா சேர்ந்து போகும்போது என்னிக்கு எந்த இடத்தைப் பார்க்கணும்னு முன்கூட்டியே ஒரு பிளான் போடுவோம். அந்த இடம் பிடிச்சிருந்தாலும் அவங்களுக்காக அவசரமா கிளம்பவேண்டியிருக்கும். சோலோ டிராவல் கொஞ்சம் காஸ்ட்லி. க்ரூப் டிராவல்னா எல்லா செலவுகளையும் பகிர்ந்துக்கலாம்’’ - தனிப்பயணத்தின் ப்ளஸ், மைனஸ் சொல்பவர், ஆண்களைவிடவும் பெண்களுக்குப் பயணம் அவசியம் என்கிறார்.

‘`டிராவல் தரும் தைரியத்தை வேற எந்த விஷயமும் பெண்களுக்குக் கொடுக்காதுங்கிறது என் நம்பிக்கை. இந்த உலகத்துல எந்த மூலைக்கும் தன்னால தனியா போயிட்டு வந்துட முடியும் என்ற தைரியம் வாழ்க்கையில எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தைக் கொடுக்கும்.  படிப்பு கொடுக்காத அனுபவத்தை பயணங்கள் கொடுக்கும்.’’ டீச்சர் சொன்னால் சரியாகத்தானே இருக்கும்!

- சாஹா