
ஷாஜி, ஓவியங்கள் : ரவி

சொர்க்கமிருப்பது உண்மையென்றால்
அது பக்கத்தில் நிற்கட்டுமே
பெரும் வெட்கங்கள் ஓடட்டுமே
இந்தக் கொக்குக்குத் தேவை கூரிய மூக்கினில்
சிக்கிடும் மீன் மட்டுமே
அதன் தேவைகள் வாழட்டுமே
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்… ஏன்… ஏன்… ஏன்…?
குடிகாரர்களின் கோலாகலங்களுக்கு நடுவே உரத்து ஒலிக்கும் பாடல், ‘நீ ஏனிங்கு வந்தாய்?’ என்று என்னைக் கேள்வி கேட்கிறதா? பெயர்போன ஒரு குடிகாரனின் மகனாக இருந்தும், அந்த மது விடுதிக்குள் நுழையும்போது எனது கால்கள் நடுங்கின. அங்கு எல்லாமே மங்கலாகத் தெரிந்தது. ரப்பர் பாலை உறைக்கும் அமிலம் போன்று மூக்கைத் துளைக்கும் வாடையொன்று வெங்காயப் பச்சடி மற்றும்

மாட்டிறைச்சி வறுவலின் வாடைகளுடன் கலந்து அங்கே மிதந்தது. திரைப்படங்களிலிருந்து வெட்டி ஒட்டியதுபோல் மிகக் குறைவாக உடையணிந்த கவர்ச்சி நடிகைகளின் புகைப்படங்கள் ஒளிமயமாக்கப்பட்டு சுவர்களில் ஜொலித்தன. ஜெயமாலினி, ஜோதிலட்சுமி, விஜயலலிதா, அனுராதா, ஹலம்…
திரைப்படங்களின் காபரேப் பாடல் காட்சிகளில், உணவு மேஜைகளின்மேல் மதுப்புட்டிகளும் குவளைகளும் தின்பண்டங்களுமாக அமர்ந்திருப்பவர்களைப்போல் பலர் ஆங்காங்கே அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தனர். எங்கிருந்தோ சில தமிழ் கெட்டவார்த்தைகள் ஓங்கி ஒலிக்கின்றன. ஒரு மேஜைக்குப் பின்னால் அந்தப் பக்கம் பார்த்து அமர்ந்து குடிப்பவர் எனக்குப் பரிச்சயமானவரா? இருக்காது!
ஏற்கெனவே போதிய போதையிலிருந்த ஆண்ட்டி, அரைப் புட்டி ‘ஹனி பீ’ பிராந்தியையும் இரண்டு ‘கல்யாணி’ பீரையும் வரவைத்தார். தொட்டுக்கொள்ள கடுகு மாங்காய் ஊறுகாய். கடித்துச் சவைக்க மாட்டுக்கறி உலர்த்து. நீள்குவளைகளில் பாதி அளவுக்குப் பிராந்தியை ஊற்றி அதன்மேல் பீரும் சாய்த்து ஊற்றியபோது, அது சோப்பு நுரைபோல் பொங்கி வந்தது. “எடுத்துக் குடிக்கடா பாட்டுக்காரா... சியேழ்...ஸ்ஸ்ஸ்..” என்று சொல்லியபடியே அந்தப் பொன்வண்ணத் திரவத்தை ஆண்ட்டி உறிஞ்சிக் குடிக்கத் தொடங்கினார். எத்தனையோ திரைப்படங்களில் பார்த்த இந்த மதுபானக் காட்சியில், இதோ இப்போது நானும் நடிக்கிறேன்!
குவளையை வாயருகே கொண்டுவந்தபோதே எனக்குக் குமட்டியது. அமிலம், பூஞ்சணம்பிடித்தக் கோதுமை, புளித்துப்போன பழையகஞ்சி எல்லாம் கலக்கிய ஒரு முடைநாற்றமும் ஒவ்வாத நாச்சுவையும். இந்தக் கருமத்தை எப்படி இவரால் ரசித்துக் குடிக்க முடிகிறது?

குடிப்பங்காளிகளான நாராயணன் வைத்தியர், எம்.எஸ்.தங்கப்பன் போன்றவர் களுடன் எங்கள் வீட்டில் நடத்தும் குடிக் கொண்டாட்டங்களில் மூக்கைப் பொத்தி முகம் சுளித்துக்கொண்டு ஒரே இழுப்பில் குவளையைக் காலி செய்யும் எனது அப்பாவை மனதில் நினைத்துக்கொண்டு ஒரே மூச்சில் நான் அதைக் குடித்து இறக்கினேன். தொண்டையை எரித்து, நெஞ்சைத் துளைத்து அந்த நெருப்புத் தைலம் வயிற்றுக்குள் விழுந்து மெல்லக் குளிரத் தொடங்கியது. விரைவில் அடுத்த குவளை நுரைந்து நிரம்பியது. அது முடிந்தவுடன் அடுத்தது. முடைநாற்றமும் கெட்ட சுவையுமெல்லாம் எங்கோ மறைந்துபோயின. நான் குடித்துக்கொண்டேயிருந்தேன்.
‘சொர்க்கம் மதுவிலே யஹூ யஹூ…’, ‘நீ மாயல்லே என் மழவில்லே…’, ‘ஆப் ஜைஸா கோயி மேரி…’ தமிழ், மலையாளம், ஹிந்தித் திரைப்பாடல்கள் மாறி மாறி ஒலித்தன. முதலில் வந்த குடிகாரர்கள் தள்ளாடி வெளியே போனார்கள். திடமான சுவடுகளுடன் உள்ளே வந்தவர்களின் கால்கள் வெகுவேகமாகத் தள்ளாடத் தொடங்கின. எங்களது மதுப்புட்டிகள் காலியாகின. ஆண்ட்டி மேலும் மேலும் எதேதோ வாங்கிக் குடித்தார். எனக்கும் ஊற்றினார். இறுதியில் திக்குத் தெரியாமல் தண்ணீரில் மிதக்கும் மீனைப்போல் ஆகிவிட்டேன். முகம் முழுவதும் கறி மசாலாவை அப்பிக்கொண்டு மாட்டிறைச்சியைக் கடித்து இழுக்கும் ஆண்ட்டியின் உருவம் எனது கண்முன்னே மங்கலாகத் தெரிந்தது. கட்டுப்படுத்த முடியாத குமட்டல் என்னைத் திக்குமுக்காட வைத்தது. “எனக்கு வாந்தி வருதே... அய்யோ…”
சறுக்கியும் விழுந்தும் கைகழுவும் இடத்தைத் தேடி ஓடினேன். அப்போது அதோ என் கண்முன்னே தோன்றுகிறார் பூச்சக்குழி மாமா! எனது அம்மாவின் சொந்தத் தம்பி. நாங்கள் உள்ளே வந்தபோது மறுபுறம் பார்த்துக் குடித்துக்கொண்டிருந்தவர் இவரோ! “பாருக்குள்ளே ஏறிக் குடிக்கிற அளவுக்கு நீ வளந்திட்டியாடா வேசமவனே..?” போதையில் மிதந்து நிற்கும் மாமா, வெறிபிடித்த நாயைப்போல் என்னைக் கடிக்க வருகிறார். எல்லாமே முடிந்துவிட்டன. எனது குடிக்கதை வீட்டிலும் ஊரிலும் அனைவருக்கும் தெரியவர இனி நேரம் அதிகமில்லை. ஆனால், இப்போது பிடிபடக் கூடாது. நான் அங்கிருந்து குதித்து வெளியேறி ஓடினேன்.
சோஃபாப் பணம்
சுடும் வெயிலில் தட்டுத்தடுமாறி ஓடிக்கொண்டிருந்த எனது கண்முன்னே ‘தையில் ஃபர்னிச்சர்ஸ்’ எனும் பெயர்ப்பலகை தெரிந்தது. அது எனது நண்பனும் அரைகுறை கிட்டார் கலைஞனுமான ஓச்சப்பனின் மரச்சாமான் கடை. என்னைத் துரத்திக்கொண்டுவரும் மாமனின் கண்ணிலிருந்து தலைமறைவாக வேண்டும். எங்கேயாவது கொஞ்ச நேரம்படுக்க வேண்டும். நான் ஓச்சப்பனின் கடைக்குள்ளே ஓடி ஏறினேன். ஆண்களும் பெண்களுமாக மூன்று நான்கு வாடிக்கையாளர்கள் அங்கே நின்றிருந்தனர். வேலைப்பாடுகளும் ஜரிகைகளும் நிறைந்த ஒரு சோஃபாவை அவர்களுக்குக் காட்டி விளக்கிக் கொண்டிருந்தார் ஓச்சப்பன். ஒரு கட்டிலின்மேல் இடித்துச் சறுக்கி அவர்களுக்கு முன்னால் சரிந்து அந்த சோஃபாவின்மேலேயே குப்புற விழுந்தேன். ‘ப்ளாவுவ்வே… ள்வ்வே…’ குழம்புப் பானை உடைந்ததைப்போல் வாந்தியெடுத்தேன். எனது கண்கள் இருட்டாகிப்போனது. நினைவு திரும்பும்போது, அடுத்த நாள் அதிகாலை. அக்கடைக்குப் பின்னாலிருந்த ஓச்சப்பனின் அறைக்குள்ளே வெறும் தரையில் படுத்துக் கிடக்கிறேன். உடம்பெல்லாம் உலர்ந்த வாந்தியின் மிச்சசொச்சங்கள்.
“சரக்கடிச்சு வாந்தியெடுத்து அசிங்கம் பண்ண ஏங்கடை தானாடா கெடச்சது ஒனக்கு? ஓன் வாந்திய அள்ளறது ஏன் வேலையாடா மயிரு?” ஓச்சப்பன் கடும் சினத்தில் குமுறுகிறார். வாடிக்கையாளர்கள் வாங்க முடிவெடுத்திருந்த அந்த உயர்விலை சோஃபாவின்மேல்தான் வாந்தியெடுத்தேன் போலும். அவர்கள் ஓடிப்போனார்களாம். பெரும் நஷ்டம். சோஃபாவின் நுரைமெத்தை நனைந்து நாறிப்போனது. அதைச் சரிசெய்ய குறைந்தது 700 ரூபாய் ஆகும். “அந்தக் காசத் தராம நீ இங்கேர்ந்து நகர முடியாதுடா முட்டாள்.” காசு விஷயத்தில் ஈவு இரக்கமில்லாத கடும் வியாபாரி ஓச்சப்பன். “700 ரூபாய்க்கு நான் எங்கே போவேன் ஓச்சப்பா?” “எனக்குத் தெரியாது. எனக்கு ஏங்காசு வேணும். இப்ப வேணும்.”

700 ரூபாவுக்கு என்ன பண்ணுவேன் என்ற கவலையுடன் நெடுநேரம் அங்கேயே கிடந்தேன். இறுதியில் எனக்குப் பிச்சையெடுக்க ஒரு பெருவழியைக் காட்டித் தந்தான் ஓச்சப்பன். “ரெண்டு மூணு மாசம் முன்னாடி நீ ஒருத்தன இங்கே கூட்டிட்டு வந்தேல்ல? அந்த ராலீஸ் கம்பெனியோட புடுங்கி! எப்பவும் புல்லட்டுல பறக்குற பணக்காரப் பய! அவங்கிட்டேர்ந்து காச வாங்கிக் குடு.” எனது நண்பர் ராலீஸ் சுரேஷைப் பற்றித்தான் சொல்கிறார்.
சிலகாலம் முன்பு, நெடுங்கண்டம் ஜீனா திரையரங்கின் முன்னால் ‘கண்டு கண்டறிஞ்ஞு’ என்று ஒரு மலையாளப் படத்தைப் பார்க்க சீட்டெடுக்க நின்று கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் கொஞ்சம் தடித்து மிகவும் வெளுத்த தோல்வண்ணம்கொண்ட அழகான ஓர் இளைஞன் நின்றுகொண்டிருந்தார். திரை நடிகர்களைப்போன்ற உயர்ரக உடை. எங்களூர்களைச் சேர்ந்தவர் அல்லர் என்பது உறுதி. சீட்டு கிடைக்கத் தாமதமாகியபோது, நான் அவரிடம் பேசத் தொடங்கினேன். அவரது மலையாளம் மிகுந்த தமிழ்ச் சாயலுடன் இருந்தது. சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தமிழும் ஆங்கிலமும்தாம் அவரது விருப்ப மொழிகள். ராலீஸ் இந்தியா எனும் பூச்சிக்கொல்லி மருந்து நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி. ஏலக்காய் மற்றும் தேயிலைத் தோட்டங்களால் நிரம்பிய இடுக்கி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் பலவகையான பூச்சிக்கொல்லி மருந்துகளை டன் கணக்கில் விற்றுத் தள்ளுபவர். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நெடுங்கண்டத்திற்கு வந்து சில நாள்கள் தங்குவார். வேலைக்கு அடுத்து சினிமாதான் அவருக்கு எல்லாமே. தமிழ்ப் படங்களைப் பற்றி எனக்கிருந்த புரிதல் காரணமாக இருக்கலாம், சுரேஷ் என்னை அவரது

நண்பனாக்கிக்கொண்டார்.
தாராளமான வாழ்க்கையைத்தான் சுரேஷ் வாழ்ந்துகொண்டிருந்தார். வசதியான அறை, விலையுயர்ந்த இருசக்கர வாகனம், சொகுசு ஆடைகள், தினமும் மாற்றி மாற்றி அணிய வேறு வேறு கைக்கடிகாரங்கள், பூசிக்கொள்ள பலரகமான நறுமணங்கள். ஆனால், பழகுவதில் மிகுந்த எளிமையும் நட்பும். “உங்களுக்கு எந்தவொரு தேவையிருந்தாலும் எங்கிட்டெ சொல்லத் தயங்காதே” என்று அவர் என்னிடம் சொல்லியிருந்தார். எனக்கு எப்போதுமே பொருளாதார நெருக்கடிதான். இருந்தும் ஒருபோதும் நான் சுரேஷிடம் உதவி கேட்டதில்லை. பணம் நட்பிற்கு எதிரி என்பதை அப்போதே உணர்ந்திருந்தேன். ஆனால், இப்போது ஓச்சப்பன் கழுத்தை நெரிக்கிறார். அவரது சோஃபாக் கடனை அடைக்க, சுரேஷிடம் கையேந்துவதைத் தவிர வேறு வழியெதுவும் எனக்குத் தெரியவில்லை. சில மாதங்களாக ஊருக்கு வராமலிருந்த சுரேஷ், பாட்டுக் கச்சேரி முதற்கொண்டு நடந்த கதைகள் அனைத்தையும் கேட்டுவிட்டு தலையறைந்து சிரித்தார். பின்னர் என்னுடன் ஓச்சப்பனின் கடைக்கு வந்தார். “நீங்க இவனுக்கு நல்ல ஃபிரண்டுன்னு சொன்னானே... நல்ல ஃபிரண்டுங்க இப்படித்தான் பண்ணுவாங்களா? ஒரு மிஸ்டேக் நடந்தா நாம நம்ம ஃபிரண்டுகூட நிக்க வேண்டாமா?” என்று கேட்டுக்கொண்டு 700 ரூபாயை ஓச்சப்பனுக்கு எண்ணிக் கொடுத்தார்.
ஜாஸெட் இல்லாத பாண்டிக்காரன்
பத்து காசுக்குத் தேறாதவன், சினிமாப் பைத்தியம், உதவாக்கரை, ஊர்சுற்றி போன்ற நன்மதிப்புகளுடன், பட்டப்பகலில் மதுபான விடுதியில் ஏறிச் சரக்கடிக்கும் குடிகாரன் என்ற மதிப்பும் என்மேல் பதிந்தது. சிலநாள் சினிமாவுக்குக்கூடப் போகாமல் வீட்டிலேயே கழித்தேன். அப்போது ஒருநாள் ‘கல் ராஜு’ என்னைத் தேடிவந்தான். பாம்பனார் எனும் ஊரிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் வசிக்கும் கிட்டார் கலைஞன் ராஜு, தமிழன். சோற்றில் கல் கடிப்பதுபோல் பாட்டில் அடிக்கடி சுருதிப் பிழை வாசிப்பதால் அவனுக்குக் கிடைத்த பட்டப்பெயர், ‘கல் ராஜு’ என்பது. ராஜுவின் அம்மா, தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து எடுக்கும் வேலைசெய்தார். அவனது அண்ணண் சுப்பையா ஓர் இசைக்கலைஞர். ஹார்மோனியம் வாசிப்பார். ஆனால், இசையை வைத்துக்கொண்டு அரிசியை வாங்க முடியாததால் அவரும் தேயிலைத் தோட்டத்தில் தாற்காலிகக் கங்காணியாக வேலைசெய்தார். ராஜு மட்டும் எந்தவொரு வேலைக்குமே போகமாட்டான். எப்போதுமே தன்னை ஒரு முழுநேர இசைக்கலைஞனாக பாவித்துக்கொண்டே வாழ்ந்தான்.
தேயிலைத் தோட்டத்தின் இலவசக் குடியிருப்பிலிருந்த அவர்களது வீட்டில் இசை கேட்கும் கருவிகள் எதுவுமே இருந்ததில்லை. அவ்வீட்டிற்கு மிகவும் அருகிலிருந்த ‘சாந்தி சினிமாக் கொட்டகை’தான் ராஜுவின் இசை கேட்கும் கருவி; அவனது இசைப்பள்ளி. அங்கே இடைவிடாமல் ஒலிக்கும் தமிழ் திரைப்படப் பாடல்கள்தாம் அவனுடைய வாழ்வின் ஆதாரமே. கொடும் குளிர் உடம்பைத் துளைக்கும் பல இரவுகளில் ராஜுவும் நானும் அங்கே இரவுக் காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். படம் பார்க்கக் கையில் பணமில்லாத நாள்களில் ராஜுவின் வீட்டின் ஜன்னலோரம் அமர்ந்துகொண்டே படத்தின் ஒலிச்சித்திரத்தையும் பாடல்களையும் கூர்ந்து கேட்போம். ராஜுவுக்கு படம் முக்கியமில்லை. பாடல்தான். ஆனால், என்னால் படத்தையும் பாட்டையும் பிரித்துப் பார்க்கவே முடியவில்லை. ஒரே வசனங்களையும் பாடல்களையும் மீண்டும் மீண்டும் கேட்க முடிவது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்! ராஜுவின்மேல் எனக்குப் பொறாமையே இருந்தது.

நெருங்கிவரும் சிவராத்திரி அன்றைக்கு ஒரே இரவில் இரண்டு திரைப்பாடல் கச்சேரிகளை நடத்த ஒப்பந்தம் எடுத்திருக்கிறான் ராஜு. அதில் ஹிந்தி பாட என்னை அழைக்கத்தான் வந்திருக்கிறான். பாம்பனார் கோவிலிலும் அங்கிருந்து ஒருமணி நேரத் தொலைவிலுள்ள பசுமலைக் கோவிலிலும்தாம் கச்சேரிகள். முதல் நிகழ்ச்சி, மாலை ஆறரை மணிக்கு. அடுத்தது, இரவு பத்தரை மணிக்கு. “ராஜுவோட கச்சேரிக்குக் கெளம்புறேன். வர நாலஞ்சு நாளாகும்” என்று அம்மாவிடம் சொன்னபோது, “ஒனக்குக் கொட்டவும் பாடவும் கூட்டுச் சேரவும் இந்த பாண்டிக்காரன்மார மட்டுமாடா கெடைக்குது? பாண்டி நாட்டுல மொளச்சது முள்ளு, பொறந்தது திருடன் அப்டீன்னுதா சொல்றாங்க” என்று எங்கேயோ கேட்டதை வைத்து எனக்குப் பாடம் நடத்தினார். “விஜயகுமார், சுரேஷ், ராஜுன்னு எனக்குத் தெரிஞ்ச தமிழங்க எல்லாமே ஒங்களவிட நல்லவங்க” என்று சொல்லிவிட்டு நான் புறப்பட்டேன்.
பீர்மேடு எனும் ஊரிலுள்ள அரசு விருந்தினர் விடுதியில்தான் ஒத்திகை. அக்காலத்துக் கிராமத்துக் கச்சேரிகளின் ஒரு முக்கியக் கவர்ச்சிப் பொருள் ‘ஜாஸெட்’ என்று அழைக்கப்பட்ட ஜாஸ் டிரம்ஸ். அதைக் கொட்டுகிறோமோ இல்லையோ பெரிய பெரிய பல முழவுகளைக்கொண்ட அச்சாதனம் மேடையில் இருக்க வேண்டும். கோட்டயம் ஊரின் பெயர்பெற்ற டிரம்ஸ் கலைஞன் ஜேக்கப் தாமஸ் கொட்ட வந்தார். ஆனால், டிரம்ஸ் மட்டும் வரவில்லை. ரோசம்மா எனும் இளம்பெண்தான் முக்கியப் பாடகி. அவளுடன் துணைக்கு வந்திருக்கும் அவளது அப்பாவும் ஒரு பாடகராம். ஆனால், தமிழ் மட்டும்தான் பாடுவாராம்! பணம் கொடுக்காமல் தமிழ் பாட ஆள் கிடைத்த மகிழ்ச்சி ராஜுவுக்கு.
ஆனால், அவரது பாடல்கள் வேலைக்கு ஆகாது என்று எனக்கு ஆரம்பத்திலேயே தோன்றியது. பாட கடினமான கிட்டப்பா, சின்னப்பா ரகப் பாடல்களைத்தான் பாடுகிறார். கேட்க நன்றாகவும் இல்லை. “புதிய தமிழ்ப் பாட்டு எதுவுமே தெரியாதா சேட்டா?” என்று நான் கேட்டதற்கு “தெரியுமே... எது வேணும்? ‘உள்ளத்தின் கதகுகள் கண்கெளெடா, இங்கே உயர்வுக்குக் காரணம் பெண்கெளெடா...’ ” என்று படுகிழவனது போன்ற தனது குரலில் தப்புத் தப்பாகப் பாடிக் காட்டினார். 25 ஆண்டுகளுக்கு முன்பு, ‘இரவும் பகலும்’ படத்தில் வந்த டி.எம்.எஸ் பாடலைத்தான் புதுப்பாடல் என்று நினைத்து வைத்திருக்கிறார் மனிதர்!
பெரும்பாலும் தமிழர்கள் வாழும் ஊர்களில்தாம் இரண்டு கச்சேரிகளுமே. தமிழ்ப் பாடல்களை நன்றாகப் பாடவில்லை என்றால் எல்லாம் நாசமாகிவிடும். எனது வற்புறுத்தல் காரணமாகக் கடைசி நேரத்தில் தமிழ்ப்பாட்டு விஜயகுமாரைத் தேடிப்போனார் ராஜு. விஜயகுமார் கிடைக்கவில்லை. அவர் மதுரைப் பக்கம் எங்கேயோ பாடப் போயிருந்தார். நிகழ்ச்சி நாள் காலையில், ராஜு அந்த ரகசியத்தை எங்களுக்குச் சொன்னார். “கோட்டயம் டவுனிலிருந்து வரும் ‘பல்லவி’ இசைக்குழுன்னுதா கச்சேரி எடுத்திருக்கே. யாரு கேட்டாலும் நீங்க எல்லாரும் கோட்டயம்காரங்கதான்னு சொல்லணும்.”
கொட்டுவதற்கு டிரம்ஸ் இல்லாமல், தமிழ் பாட சரியான பாடகன் இல்லாமல், ‘பல்லவி ஆர்கெஸ்ட்ரா, கோட்டயம் -1’ என்ற துணிப் பதாகை கட்டிய வாடகை வாகனத்தில் கோயிலின் முன் நாங்கள் சென்றிறங்கும்போது, அங்கே ஒரு ரணகள ரகளை நடந்துகொண்டிருந்தது. திருவிழா ஏற்பாட்டாளர்கள் பல குழுக்களாகப் பிரிந்து சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். பக்கத்துத் தேயிலைத் தோட்டத்தில் கங்காணியாக வேலை பார்க்கும் சுப்பையாவின் தம்பி ராஜு, அங்கிருந்தும் இங்கிருந்தும் ஆளைச் சேர்த்து ‘செட்டப்’ செய்த கச்சேரிக் குழுதான் கோட்டயம் பல்லவி என்கின்ற இல்லாப் பெயரில் வந்திறங்கியிருக்கிறது. இவன்களை மேடையேற விடமாட்டோம் என்று சிலர் கத்தினர். “நான் மட்டும்தா இங்கேருந்து. மற்ற எல்லாருமே கோட்டயம்காரங்க தா” என்று ராஜு சொன்னவுடன் சிலர் எங்களை விசாரணை செய்யத் தொடங்கினர்.
மலையாளப் பாடகனிடம் “ஓன் வீடு கோட்டயத்துல எங்கேடா இருக்கு?” என்று கேட்டார்கள். பயந்துபோன அவன் “ஏ வீடு கோட்டயமில்ல. இங்கே மேரிகுளத்துல தா” என்று உண்மையைக் கக்கினான். ஒருவர் என்னிடம் வந்து “டேய் எலும்பா… ஓம் மூஞ்சி எனக்கு நல்லாத் தெரியுதே! நீ கட்டப்பனைக்காரன்தானேடா?” என்று கேட்கிறார். டிரம் அடிக்க வந்தவரைத் தவிர அனைவரும் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மை அம்பல மானது. குழுச் சண்டை வலுவடைந்தது. நாலாபக்கமும் கெட்டவார்த்தைகள் பறந்தன. அது கைகலப்புகளில் முடிந்தது.
இறுதியில் யாரோ காட்டிய கருணையினால் எட்டரை மணியளவில் நாங்கள் மேடையேறினோம். இசைக்கருவிகளை எடுத்துவைத்து ஒலிப் பரிசோதனை ஆரம்பித்தபோதுதான் ஜாஸெட் இல்லை என்பதைக் கூட்டம் கவனித்தது. “டேய்.. ஃபிராடுகளா... எங்கேடா ஜாஸெட்? ஜாஸெட் இல்லாம ஒரு நாறியும் இன்னிக்கு இங்கே பாட மாட்டா”. மீண்டும் எல்லாமே கைவிட்டுப் போயின. பல பேரின் பாதம் தொட்டுக் கும்பிட்டு மன்னிப்புக் கேட்டு, கெஞ்சிக் கூத்தாடி ஒருவழியாக ஒன்பது மணிக்குக் கச்சேரியை ஆரம்பித்தோம். குழு குழுவாகப் பிரிந்து, கூச்சலிட்டும் அஸ்தானத்தில் கைதட்டியும் கூட்டம் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தது. நாங்களும் அபசுருதியும் அவதாளமுமாக பாடிக்கொண்டிருந்தோம். ரோசம்மா பாடத் தொடங்கியபோது, “அடியே ரோசம்மா... ஓம் பாட்டாவது மைராவது... திரும்பி நின்னு பாடுடீ... பார்வை சுகமாவது கெடைக்கட்டுமே” என்றெல்லாம் ஆள்கள் கத்தினர். ரோசம்மாவின் அப்பா பாடிய ‘யாருக்காக, இது யாருக்காக’ பாடலைத் தொடக்கம் முதல் ஒடுக்கம் வரை கூட்டம் கூச்சலிட்டு விரட்டியது. அதன்பின் தமிழும் நானே பாட நேர்ந்தது. எதுவுமே விளங்கவில்லை. நேரம் இரவு பத்தரை. பசுமலைக் கோவிலில் கச்சேரி ஆரம்பிக்க வேண்டிய நேரம்.
“இங்கிருந்து தொலைவில் இன்னோர் அரங்கிலும் இன்றைய இரவு எங்களுக்குக் கச்சேரி இருப்பதால், அடுத்துவரும் ஒரு பாடலுடன் இந்தக் கச்சேரி முடிவடைகிறது” என்று ஒலிபெருக்கியில் நான் அறிவித்தேன், ராஜு சொன்னதால்தான். பாக்யராஜின் ‘எங்கள் சின்ன ராசா’ படத்தில் வந்த ‘எடுடா மேளம், அடிடா தாளம், இனிதான் கச்சேரி ஆரம்பம்’ எனும் டப்பாங்குத்துப் பாட்டைப் பாடத் தொடங்கினேன். அப்போது, பலர் திரளாக மேடையை நோக்கி வருவதைக் கண்டேன். நான் பாடி முடித்ததும் அவர்களில் ஒருவர் மேடைமேல் பாய்ந்தேறி என் கையிலிருந்து மைக்கைப் பறித்தார். “நண்பர்களே... இனிதா கச்சேரி ஆரம்பம் என்று இங்கே பாடுவதைக் கேட்டீர்கள் அல்லவா? அதாவது இனிமேல்தான் கச்சேரி ஆரம்பமே. நாம் நிறுத்தச் சொல்லும்வரை இவர்கள் இங்கே பாடுவார்கள்.” வாயிலிருந்து மைக்கை விலக்கியவாறு “நாங்க நிறுத்தச் சொல்ற வரெ பாடிக்கிட்டே இருக்கணும். கேட்டியாடா மாங்கா மண்டைகளா” என்று எங்களிடம் குமுறிக்கொண்டு மேடையைவிட்டு இறங்கினார். உடன் மற்றொருவன் “அவன்டெ ஆம்மேடெ அடிடா மேளம்” என்று அலறிக்கொண்டு ஒரு பட்டாக்கத்தியை மேடைப் பலகைமேல் குத்தி இறக்கினார். பயந்து நடுங்கி மூத்திரம் போகும் நிலைமைக்கு ஆளாகினோம்.

“ஆ... இனி ஒரு மலையாளம் பாட்டு வரட்டும்... அடுத்தது ஒரு இந்தி… இப்ப ஒரு தமிழ்...” என உத்தரவுகளைப் போட்டுக்கொண்டு அவர்கள் எங்களைப் பலவந்தமாகப் பாடவைத்தனர். வாயில் வருவது கோதையின் பாடல் என்பதுபோல் தெரிந்ததும் தெரியாததுமான பல பாடல்களைப் பாடினோம். இறுதியில், இரவு பனிரண்டரை மணிக்கு அந்தப் பாட்டுக் கடுங்காவல் தண்டனையிலிருந்து எங்களை விடுதலை செய்தனர். கும்மிருட்டினூடாக நிலம் தொடாமல் பாய்ந்த எங்களது வாகனம், ஒன்றரை மணிக்கு பசுமலை தேயிலைத் தோட்ட நுழைவாயிலை அடைந்தது. கோயில் மைதானத்திலிருந்து கிளம்பிப் போகும் மக்களைத் தூரத்திலிருந்தே பார்த்தோம். ஒருசிலர் எங்கள் வாகனத்திற்குக் கை நீட்டினர். “நீங்கள் பாட்டுக் கச்சேரிக் குழுவா?” “ஆமா சேட்டா” “அப்டீன்னா அந்தப் பக்கமே போகாதே. அங்கே பயங்கரமான அடிதடி நடந்திட்டிருக்கு. நீங்க நேரகாலத்துக்கு வராததால பெரும் கலவரமாகிப்போச்சு.”
உடம்பில் ஊசி துளைப்பதுபோன்ற கடுமையான இரவுக் குளிரில் இசைக்கருவிகளும் பெட்டிகளுமாக ரோசம்மா உட்பட அனைத்து பாடகர்களையும் வாத்தியக்காரர்களையும் கோயிலின் முன்னால் வெறும் தரையில் குத்தவைத்து உட்கார வைத்தனர். இருபதுக்கும் மேல் நபர்கள் எங்களைச் சூழ்ந்து நின்று கடுமையான கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொண்டிருந்தனர். பொருள்களை இறக்கிய பின்னர், எங்களது வாகனத்தை பலவந்தமாக அனுப்பி விட்டிருந்தனர். அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டநஷ்டங்களுக்கு நஷ்டஈட்டுத் தொகையைக் கொடுக்காமல் எங்களை அங்கிருந்து நகரவிட மாட்டோம் என்று தீர்மானமாகச் சொன்னார்கள். ரோசம்மாவைப் பார்த்து, “இவள மாதிரி ஃபிகருக இன்னும் ரெண்டு மூணு இருந்திருந்தா பாதி காசு வரவு வெச்சிருக்கலாம். இத ஒண்ண மட்டும் வெச்சுக்கிட்டு என்னத்தான் செய்றது” என்றான் ஒருவன். “அப்படியெல்லாம் பேசாதே அண்ணாச்சீ” என்று அவர்களிடம் மன்றாடிய ராஜுவை “தேவடியா மவனே... எல்லாத்துக்கும் காரணம் நீ ஒருத்தன் தான்டா” என்று சொல்லி இரண்டு பேர் சரமாரியாக அடித்தனர். அதைத் தடுக்க முயன்ற எனக்கும் முகம் அடைத்து அடி விழுந்தது. எனது தலை மரத்துப்போனது. கண்ணில் மின்மினிகள் பறந்தன. இந்த ஜென்மத்தில் இனிமேல் எனக்குப் பாட்டும் வேண்டாம் கூத்தும் வேண்டாம். பாட்டுக் கச்சேரி எனும் ஏற்பாட்டுக்கு சாகும்வரை இனி போகமாட்டேன் என்று சபதம் எடுத்தேன்.
‘அடுத்தத் திருவிழாவிற்கு முற்றிலும் இலவசமாக ஒரு கச்சேரியை நடத்தித்தருகிறோம்’ என்று எழுதிவைத்து, விடியற்காலையில் அங்கிருந்து ஒரு வழியாகத் தப்பித்தோம். இசைக்கருவிகளையும் பெட்டிகளையும் தலையில் சுமந்துகொண்டு, பெங்கால் அகதிகளைப்போல் பசியில் வாடி வறண்டு, தூக்கக் கலக்கத்தில் கண்கள் சுளுசுளுத்துத் தேயிலைத் தோட்டங்களின் மண்வழிகளினூடாக கால்குழைந்து நடந்தோம். வண்டிப்பெரியார் டவுனை அடையும்போது, உச்சி வெய்யில் உறைத்திருந்தது. ‘அடியையும் வாங்கினான் புளியையும் குடித்தான்’ என்ற பழமொழியைப்போலாகியது எனது நிலைமை. இந்தக் கூத்துகளுக்குப் பின்னால் நான் அலைந்துகொண்டிருந்த நேரத்தில் ஒரு வீடியோ சினிமாவில் துணை இயக்குநராகப் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு வந்தது. அதன் ஆள்கள் என்னைத் தேடி வீட்டுக்கே வந்தனர். ஆனால், என்மேல் இருந்த கோபத்தினால் “இந்த கருமத்துக்கெல்லாம் அவன அனுப்ப மாட்டேன்” என்று அம்மா அவர்களை உதாசீனப்படுத்தி அனுப்பிவிட்டார். இதை அறிந்ததும் நான் பெரும் கவலையோடு அவர்களைத் தேடி ஓடினேன்.
- (தொடரும்)