
“பா.ஜ.க-மீது இருப்பது வெறுப்பல்ல... அச்சம்!”
“ரஜினி, வந்தா ராஜாவாதான் வருவேன் என்பதுபோல், ‘நாடாளுமன்றத் தேர்தல் வேண்டாம், சட்டமன்றத்தில் பார்த்துக்கொள்ளலாம்’ எனக் கூறிவிட்டார். கமலோ, மத்திய அரசையோ காங்கிரஸையோ விமர்சிக்காமல், மாநிலக் கட்சிகளை மட்டும் விமர்சித்துவிட்டு, நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துக் களம் காண்கிறார். அதனாலேயே அவர்மீது சந்தேகம் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை...”
“யாராவது என்னிடம், ‘பல வேலைகளைச் செய்ய எப்படி நேரத்தைத் திட்டமிடுகிறீர்கள்’ எனக் கேட்டால், அதற்குக் கருணாநிதியைத்தான் கைகாட்டுவேன். நம் கண் முன்னே ஒருவர் 70 ஆண்டுகளுக்கும் மேல் நாள்தோறும் காலை முதல் நள்ளிரவு வரை அரசியல், இலக்கியம், பத்திரிகை என ஓய்வில்லாமல் உழைத்தார். அவரைப் பார்த்தால் இப்படி ஒரு கேள்வியே யாருக்கும் தோன்றாது...”
“இந்தியாவில், எந்தக் கட்சியும் தேசியக் கட்சி இல்லை. எல்லாமே பிராந்தியக் கட்சிகள்தாம். காஷ்மீர் முதல் தமிழகம்வரை அனைத்து மாநிலங்களிலும் வெற்றிபெறும் திறன் உள்ள கட்சி என ஒன்றைக் காட்டுங்கள். ஒரு பகுதியில் உங்கள் கட்சி ஹீரோ என்றால், இன்னொரு மாநிலத்தில் காமெடியன்தான். அப்படி இருக்கும் நிலையில், இங்கு எதுவுமே தேசியக் கட்சி இல்லை...”
- எந்தக் கேள்வியாக இருந்தாலும் அதற்கான பதிலை தனக்கே உண்டான பகடியுடன் விளக்குகிறார் இயக்குநர் கரு. பழனியப்பன். விகடனில் மாணவப் பத்திரிகையாளராகத் தன் பயணத்தைத் தொடங்கி, பிறகு உதவி இயக்குநர், இயக்குநர், நடிகர், அரசியல் விமர்சகர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் எனப் பல தடங்களைப் பதித்தவர் பழனியப்பன். அவருடனான சந்திப்பில் இருந்து...

“இதழியல் பணி, திரைப்பட இயக்கம், நடிப்பு, இலக்கிய ஆர்வம், இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர். எப்படி இருக்கிறது இந்தப் பயணம்?”
“எழுத்தாளர் சுஜாதா, இயக்குநர் மணிவண்ணன் இருவரும் என் முன்னுதாரணங்கள். எல்லா எழுத்தாளர்களையும், அவர்கள் எழுதும் கதை அல்லது துறை சார்ந்து வகைப்படுத்திவிடலாம். ஆனால் சுஜாதாவை அப்படி ஒரு வகைக்குள் அடைக்க முடியாது. காரணம், அவரின் எழுத்துப் பணி பல தளங்களைத் தொட்டது. இயக்குநர் மணிவண்ணனும், தான் இயக்கிய 50 படங்களில் கிட்டத்தட்ட 20 படங்களை வெற்றிப்படங்களாகக் கொடுத்தவர். அந்த இருபதும் வெவ்வேறு வகைப் படங்கள். நானும் அப்படி ஒரு வகைக்குள் அடங்க விருப்பமில்லாத கலைஞன்தான்.”
“தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குள் எப்படி வந்தீர்கள்?”
“ஜீ தமிழ்ச் சேனலிலிருந்து மூன்றாண்டுகளுக்கு முன்பே என்னிடம் இந்த நிகழ்ச்சி குறித்துப் பேசியிருந்தனர். எனக்கும் அதில் பேரார்வம் இருந்தது. அதன் பிறகு சில காரணங்களால் என்னால் நேரம் கொடுக்க இயலவில்லை. மீண்டும் கடந்த ஆண்டு என்னிடம் இதைப் பற்றிக் கேட்கும்போது உடனே ஒப்புக்கொண்டேன்.”
“இதுபோன்ற விவாத நிகழ்ச்சிகள் நிறைய இருக்கின்றன. உங்கள் நிகழ்ச்சி அவற்றிலிருந்து எந்தவகையில் வேறுபடுகிறது? இந்த நிகழ்ச்சிக்கு, நீங்கள் எப்படித் தயாராவீர்கள்?”
“ `கோட்’ போடக் கூடாது என்ற முடிவில் மட்டும் தீர்க்கமாக இருந்தோம். மற்றபடி, பிற விவாத நிகழ்ச்சிகளைப் போன்றதுதான் இதுவும். இதற்கான விவாதப்பொருளை முடிவு செய்வதற்கு ஒரு தனிக் குழு இருக்கிறது. சுமார் 60 பேர் கொண்ட ஒரு பெரிய அணிதான் இந்த மொத்த நிகழ்ச்சியையும் நடத்துகிறது. என்னிடம் அவர்கள் முடிவு செய்துள்ள விவாதப்பொருளைச் சொல்வார்கள். எந்த விவாதப்பொருளாக இருந்தாலும் என் கருத்தியலைச் சொல்லும் சுதந்திரம் எனக்கு உண்டு. இப்படி நானும் அவர்களுமாகச் சேர்ந்து நடத்தும் ஒரு கூட்டு முயற்சிதான் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சி.”
“மேடைப்பேச்சு உங்களுக்குக் கைவந்த கலை. ஒரு கருத்தை அழகியலோடு, எளிய மனிதர்களுக்கும் புரியும்படி பேசுகிறீர்கள். இது உங்களின் இயல்பா, பயிற்சியின் மூலம் கைவந்ததா?”
“முதலில் நான் சொற்பொழிவாளன் இல்லை. அதை எங்கும் கற்றுக்கொள்ளவும் இல்லை. நான் பேசுவதெல்லாம் என் மன ஓட்டத்தில் இருப்பவைதாம். யார் இருக்கிறார்கள், யாருக்காக எப்படி வளைந்து கொடுத்துப் பேசவேண்டும் என்றெல்லாம் யோசிக்காமல் மனதில் பட்டதைப் பேசுவதுதான் என் வழக்கம். பல எளிய மனிதர்களை நாள்தோறும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சந்திக்கிறேன். அவர்கள்தாம் என் ஆசான்கள். அங்கிருந்து பேசுவதால்தான் அவர்களை என்னால் எளிதில் நெருங்க முடிகிறது.”
“நீண்ட நாள்களுக்குப் பிறகு, ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘நட்பே துணை’ படத்தில் நடிக்கிறீர்கள். அதில் உங்கள் கதாபாத்திரம் எப்படிப்பட்டது?”
“நாயகன் ஆதியின் கதாபாத்திரத்துக்கு எதிரானதாக இருக்கும். ஆனால், அதை ஒரு முழுமையான வில்லன் என்று சொல்லிவிட முடியாது. கதையை முன்னகர்த்தும் அளவுக்கு ஒரு முக்கியப் பங்குள்ள பாத்திரம். தயாரிப்பாளர் சுந்தர்.சி என்னைத் தொடர்புகொண்டு `நீங்கள் அதில் நடித்தால் சரியாக இருக்கும்’ என்றார். அவர் சொன்னதால், கதையைக்கூடக் கேட்காமல் நடிக்கத் தயாராக இருந்தேன். இருந்தாலும் இயக்குநரும் ஆதியும் வந்து என்னிடம் கதையைச் சொன்னார்கள். எனக்கும் பிடித்துப்போனது.”

“மந்திரப் புன்னகையின் நாயகன், பிரிவோம் சந்திப்போமின் நாயகி என, உளவியல் சிக்கல் உள்ள கதாபாத்திரங்களை உங்கள் படங்களில் அதிகமாகக் காட்டுவதற்கான காரணம் என்ன?”
“அந்த இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமல்ல, என் படங்களில் பொதுவாகவே உளவியல் சிக்கல்கள் பெரும்பங்கு வகிக்கும். உதாரணத்துக்கு, பார்த்திபன் கனவு படத்தில் வரும் ஸ்ரீகாந்த் பாத்திரமும் ஓர் உளவியல் பிரச்னையோடுதான் இருக்கும். உண்மையில், எல்லா மனிதர்களுக்கும் ஏதோவொரு வகை உளவியல் சிக்கல் இருக்கும். அதைப் படம்பிடிக்க வேண்டுமென்பதே என் நோக்கம். ‘பிரிவோம் சந்திப்போம்’ படத்திலும் ‘மந்திரப் புன்னகை’ படத்திலும் அதை வெளிப்படையாகச் சொல்லியிருப்பேன், அவ்வளவுதான்.”
“பா.ஜ.க மீது மட்டும் ஏன் உங்களுக்கு இவ்வளவு வெறுப்பு?”
“உண்மையில் அது வெறுப்பல்ல, அச்சம். இந்தியாவினுடைய அழகே அதன் பன்முகத்தன்மைதான். பல ஆண்டுகளாக வெவ்வேறு மொழி, கலாசாரப் பின்னணியில் இருக்கும் மக்கள் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஒன்றியத்தை, ஒற்றைத் தன்மையுள்ள தேசமாக மாற்ற முயலும் பா.ஜ.க-வின் முன்னெடுப்புகளால் வந்த அச்சம். பன்முகத்தன்மை கொண்ட ஒன்றியத்தை ஒரு பொது அடையாளத்துக்கு மாற்ற முனையும்போதுதான் அது துண்டு துண்டாக உடையும். அப்படியானால், இந்தியாவுக்குள் பிளவுவாதம் தோன்றக் காரணமாக இருக்கும் பா.ஜ.க ஆன்டி-இந்தியனா? இந்தப் பன்முகத் தன்மையைப் போற்றும், மதிக்கும், விரும்பும் நாங்கள் ஆன்டி-இந்தியனா?”
“செய்தி ஊடகங்களைச் சில நேரங்களில் கடுமையாக விமர்சிக்கிறீர்கள். என்ன காரணம்?”
“பல நேரங்களில் மக்களைத் திசைதிருப்பும் வகையிலான விவாதம், பேட்டிகள் வருகின்றன. ஒரு நடிகருக்கோ நடிகைக்கோ திருமணம் நடக்கும்போது, நாள் முழுக்க அவர்கள் குறித்த செய்தியையே மீண்டும் மீண்டும் காட்டுவதில் இருக்கும் அக்கறையை, மக்களுக்கான களப்பணியில் ஈடுபட்டு வரும் முகிலன் போன்ற ஒரு சூழலியல் ஆர்வலர் தொலைந்ததில் ஆர்வம் கொள்ளாதவைதாம் நம் ஊடகங்கள். அதுவும் சில உண்மைகளை உலகுக்குச் சொல்வதால் தனக்கு என்ன வேண்டுமானாலும் நேரலாம் என அவர் கூறிய ஒரு சில மணிநேரத்தில் அவரைக் காணவில்லை. ஆனால் அது இங்கு ஒரு முக்கியச் செய்தியாகப் பார்க்கப்படவில்லை. அவர் காணாமல்போய் ஏழு நாள்களாகிவிட்ட நிலையிலும் `ஒருவரிச் செய்தி’ வெளியிடுவதும், கண்டுகொள்ளாமல் இருப்பதும் எனத் தொடர்ந்தால் எனக்குமட்டுமல்ல, மக்களுக்கும் ஊடகங்கள்மீது வெறுப்பு வரும்.”
- சந்தோஷ் மாதேவன், படம்: ப.சரவணகுமார்
ஓவியம்: பிரேம் டாவின்ஸி