Published:Updated:

9 நாள்கள் நாம் டெக்னாலஜியை இழந்தால்? சயின்ஸ் ஃபிக்ஷன், ஹாரர் கலந்த ஒரு சுவாரஸ்ய கதை! '9' படம் எப்படி?

9 நாள்கள் நாம் டெக்னாலஜியை இழந்தால்? சயின்ஸ் ஃபிக்ஷன், ஹாரர் கலந்த ஒரு சுவாரஸ்ய கதை! '9' படம் எப்படி?
9 நாள்கள் நாம் டெக்னாலஜியை இழந்தால்? சயின்ஸ் ஃபிக்ஷன், ஹாரர் கலந்த ஒரு சுவாரஸ்ய கதை! '9' படம் எப்படி?

சென்ற வருடம் 'மை ஸ்டோரி', 'கூடே', 'ரணம்' என மூன்று படங்களில் நடித்த பிரித்விராஜ், இந்த வருடத்தின் தன் முதல் படமாக, சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் தான் இணைந்து தயாரித்த '9' படத்தைக் களமிறக்கியுள்ளார். சயின்ஸ் ஃபிக்ஷன், ஃபேன்டஸி, ஹாரர், சைக்காலாஜிக்கல் த்ரில்லர் என எல்லாம் கலந்த திகில் சினிமாவான இது அனைவரையும் ஈர்க்கிறதா?

மிகப்பெரிய வால் நட்சத்திரம் ஒன்று பூமியை நோக்கி வருகிறது. அது பூமியில் தரை இறங்கியவுடன் 9 நாள்களுக்கு நவீன தொழில்நுட்பங்கள் எதுவுமே செயல்படாது. அதைக் குறித்து ஆராய வானியல் விஞ்ஞானியான பிரித்விராஜ் தன் மகன் மற்றும் ஒரு சிறு ஆராய்ச்சிக் குழுவுடன் இமயமலைக்குச் செல்கிறார். அங்கு அவர் வீட்டிற்குப் புதிதாக வரும் ஒரு பெண்ணால் அவர் மகனுக்கு ஆபத்து வருகிறது. உண்மையில் அந்தப் பெண் யார்? அவளின் நோக்கம் என்ன? பிரித்விராஜ் தன் மகனை ஆபத்தில் இருந்து காப்பாற்றினாரா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் த்ரில் மற்றும் ஹாரர் கலந்து சில ட்விஸ்ட்கள் வைத்து விடைகளைச் சொல்கிறது படம்.

ஸ்க்ரிப்டாகவே சற்று சவாலான கதைதான். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் படத்தின் கிராஃப் பிரமிப்பூட்டுவதாக இருக்கிறது. பல பிரபல ஹாலிவுட் படங்கள்போல உலகிற்கு ஆபத்து என ஒரு சயின்ஸ் ஃபிக்ஷனாக தொடங்கும் படம், ஒரு மலைக் கிராமத்தில் நடக்கும் ஹாரர் மற்றும் ஃபேன்டஸி கலந்த படமாக செல்ஃப் எடுக்கிறது. அதே திகிலில் பயணிக்கலாம் என உட்கார்ந்தால், இறுதியில் நிறம் மாறி சைக்காலாஜிக்கல் த்ரில்லாராக உருவெடுக்கிறது. சரி, அப்படியே முடித்துவிடுவார்கள் என நாம் நினைக்கும்போது, படத்தின் கடைசி ஃப்ரேமில் 'இது அதுவுமல்ல... இது என்னவென்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்!' என்கிற ரீதியில் முடிகிறது. பல ஹாலிவுட் படங்களின் மாஷ்அப்பாக படம் தெரிந்தாலும், விதவித தளங்களில் பயணிக்கும் கதையை ஒருசேரக் கோர்த்த விதம் அருமை. அதற்காகவே படத்தை எழுதி இயக்கிய ஜெனுஸ் முகமத்திற்கு ஒரு ஸ்பெஷல் அப்ளாஸ்!

விஞ்ஞானி அல்பர்ட்டாக பிரித்விராஜ். ஆனால், அவருடைய 'அப்பா' முகத்திற்கு மட்டுமே படத்தில் முக்கியத்துவம். மனைவியின் இறப்பைத் தாண்டி, தன் மகனைத் துரதிர்ஷ்டம் பிடித்தவன், தீயசக்தி என்று தன் சொந்தமே வசைச் சொற்களால் ஒதுக்குவதைப் பார்த்து வருந்தும் ஒரு கதாபாத்திரம். இறுக்கமான முகத்துடன் மகனிடம்கூட சிரித்து பேசாத ஆல்பர்ட் தனக்குள் புதைத்து வைக்கப்பட்ட உணர்வுகளால் ஏற்படும் விளைவுகளை நேரடியாகப் பார்க்கிறார். கண்டிப்புடன், தன் மகனிடம் அதிக நேரம் செலவிடாத ஒரு மனிதராக, கண்களில் எப்போதும் தெரியும் சோகத்துடன்... இது பிரித்விக்கு ஒரு 'கேக்வாக்' கேரக்டர்தான். அவரின் குருவாக மாபெரும் வானியல் விஞ்ஞானியாக பிரகாஷ்ராஜ். சிறிது நேரமே திரையை ஆக்கிரமித்தாலும், உடைந்த மலையாளத்தில் பேசினாலும், இந்தக் கதையை தொடங்கி வைப்பதும், முடித்து வைப்பதும் அவரின் கதாபாத்திரம்தான்.

பிரித்வியின் மனைவியாக மம்தா மோகன்தாஸ். சம்பிராதாயத்துக்கு ஃப்ளாஷ்பேக்கில் ஒரு டூயட், பின்பு நினைவுகளாக (?) ஒரு சில காட்சிகளில் மட்டுமே தோன்றும் கதாபாத்திரம். மற்றொரு நாயகியாக. திகிலூட்டும் பேரழகியாக வமிகா கப்பி. சட்சட்டென மாறும் முகபாவங்கள், ஒவ்வொரு கதாபாத்திரத்திடம் பேசும்போதும் ஒவ்வொரு உடல்மொழி, சில சமயம் திகிலூட்டும் குரல் என நடிப்பதற்கு நிறையவே ஸ்கோப் உள்ள கதாபாத்திரம். தமிழில் 'மாலை நேரத்து மயக்கம்' படத்தில் அறிமுகமானவர். நிச்சயம் ஒரு பெரிய ரவுண்டு வருவீங்க!

படத்தின் மையக்கரு பிரித்வியின் மகனாக வரும் ஆடம். எப்போதும் குறும்பு, எல்லோரின் கேள்விகளுக்கும் திமிர் கலந்த எள்ளல் பதில்கள் என... உண்மையிலேயே இவன் குழந்தைதானா என்று கேட்க வைக்கும் கதாபாத்திரம். முக்கியமாக, தன் தந்தையுடன் தனிமையில் இவர் உரையாடும் காட்சிகள் கவனிக்கத்தக்கவை. படத்தின் இறுதியில் அந்தக் காட்சிகளின் நிறங்கள் மாறுகையில் இந்தச் சிறுவன் பேசிய வசனங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

தன் தந்தை வீட்டிற்குள் இருக்கும் தீயசக்தியை நம்ப மாட்டேன் என அடம்பிடிக்க, "சரி, உள்ளப்போய் அடி வாங்கிட்டு வாங்க!" என்கிற ரீதியில் அவரை அனுப்பிவிட்டு, அப்பாவியாக லக்கேஜ் பேக் செய்து அமர்ந்திருப்பது, பேயிடம் இருந்து தப்பிக்க தன் தந்தை மோனேஸ்டரிக்கு கூட்டிப்போகச் சொன்னதாக கப்ஸா விடுவது என ஆங்காங்கே 'வாவ்' சொல்ல வைக்கிறான் ஆடம். அதுவரையில் அவன் மீது நமக்கு ஒரு வெறுப்பு வந்தாலும், க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டுக்குப் பிறகு, பிரகாஷ் ராஜ் சொல்வதுபோல ஒரு ஜீனியஸாகதான் தெரிகிறான் ஆடம்.

குறைகளாகச் சொல்ல வேண்டும் என்றால், வால் நட்சத்திரம் பூமியில் விழுவது இங்கே ஒரு கதாபாத்திரத்தின் எண்ண மாற்றங்களுக்கு ஒரு கருவியாக மட்டுமே பயன்பட்டிருக்கிறது. ஆனால், அந்த சயின்ஸ் பிக்ஷன் கிளைக்கதையே முதல் அரை மணி நேரத்திற்கும் அதிகமாகத் திரையை ஆக்கிரமித்துக்கொள்கிறது. அதுவும் அவர்கள் பேசும் அறிவியல் எந்த அளவிற்கு உண்மை என்பது எல்லாம் வானியல் ஆராய்ச்சியாளர்களுக்கே வெளிச்சம்! வானியல் விஞ்ஞானியாக அறிமுகமான பிரகாஷ் ராஜ், இறுதியில் மனோதத்துவ நிபுணர்போல விளக்கம் சொல்லி கிளாஸ் எடுப்பதேல்லாம் டூ-மச் செல்லம்! அந்த ட்விஸ்ட்டுக்குப் பிறகு கதையை நாம் கிரகித்த விதமே மொத்தமாக மாறியிருக்க, ஆங்காங்கே லாஜிக் மீறல்கள் துருத்திக்கொண்டு நிற்கின்றன. அதற்கெல்லாம் விடைகள் யாராலும் சொல்ல முடியாது என்பதற்காகவே அப்படி ஒரு க்ளைமாக்ஸா பாஸ்?

ஹக்காவாக வரும் பெரியவர், பிரித்வியின் ஆராய்ச்சிக் குழுவில் இருக்கும் திவ்யா மற்றும் சந்தீப் பாத்திரங்கள் கதையை நகர்த்த உதவுகின்றன. பின்னணி இசை பல படங்களில் நாம் பார்த்து பழகிய சாதாரண காட்சிகளுக்கும் கோணங்களுக்குமே திகில் போர்வை போர்த்துகிறது. ஸ்க்ரிப்ட்டாக பார்த்தாலே மெகா பட்ஜெட் கேட்கும் கதையாகத் தோன்றினாலும், சரியான காட்சி அமைப்புகள் மற்றும் திரைக்கதை மூலம் நிறைவான ஒரு படைப்பாகக் கொடுத்திருக்கிறார்கள். படத்தைத் தயாரித்து நடித்த பிரித்விராஜ்க்கு வாழ்த்துகள்!

அடுத்த கட்டுரைக்கு