
“நான் ஏன் ஜெயலலிதா மாதிரி ஆகவேண்டும்?”
தேனியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்துத் தீவிர பிரசாரத்தில் இருக்கும் குஷ்புவிடம் பேசினேன்.

“உங்கள் கூட்டணிக்கான வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது?”
“இன்றைக்கு மக்கள் முன்னால் நிற்கும் மிகப்பெரிய பிரச்னை, வேலையில்லாத் திண்டாட்டம். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் படித்து முடித்துவிட்டு எத்தனையோ பட்டதாரிகள் வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். படித்த ஏழாயிரம் பட்டதாரிகள் வெயிட்டர் வேலைக்கு விண்ணப்பம் செய்கிறார்கள் என்றால், இங்கே வேலையில்லாத் திண்டாட்டம் எந்தளவுக்குத் தலைவிரித்து ஆடுகிறது என்பதை உணர்ந்து பாருங்கள். பா.ஜ.க ஆட்சியில் கறுப்புப் பணத்தை ஒழிப்பேன் என்று ஆயிரம், ஐந்நூறு ரூபாய் நோட்டுகளை ஒழித்தனர். கறுப்புப் பணப் பேர்வழிகளின் பட்டியல் எங்கே?! தீவிரவாதத்தை ஒழிப்போம் என்று சபதம் போட்டார்கள். புல்வாமாவில் தீவிரவாதத் தாக்குதலுக்கு நம் ராணுவ வீரர்களைப் பறிகொடுத்துவிட்டு வேடிக்கை பார்த்தனர். பிறகு, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்துவிட்டதாகச் செய்திகளைப் பரப்பினார்கள். ‘நீங்கள் பாகிஸ்தான் முகாமை அழித்தது உண்மையானால், ஆதாரங்களை எங்களிடம் காட்டுங்கள்’ என்று காங்கிரஸ் கட்சி கேட்கவில்லை; புல்வாமாவில் 42 உயிர்களைப் பறிகொடுத்த உறவினர்கள் கேட்கிறார்கள். பாகிஸ்தான் தேடிப் போய் முகாமை அழித்ததாகப் பீற்றிக்கொள்ளும் மோடி அரசு, காஷ்மீரில் தினம் தினம் தேடிவந்து தாக்குதல் நடத்திவரும் தீவிரவாதிகளை ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது?
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன் கொடுமையில் தன் உறவினரைக் காப்பாற்ற ஆளும்கட்சிப் பிரமுகர் முயன்றார். அதற்கு ஆட்சியாளரும் துணைபோயிருக்கிறார். இப்போது அந்தப் பிரச்னையை மூடி மறைக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள். அதற்குள் கோவையில் ஐந்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். கோவைப் பிரச்னை, பா.ஜ.க ஆட்சியில் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருக்கும் மேனகா காந்தி கவனத்துக்கு ஏன் போகவில்லை?! சாதாரணப் பிராணிகளுக்குத் துன்புறுத்தல் என்றால் மேனகா காந்தி ஓடிப்போய்க் குரல் கொடுக்கிறார். அப்பாவிச் சிறுமியின் படுகொலையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார். தமிழகத்தை ஒரு பொருட்டாகவே மோடி மதித்ததில்லை. இதையெல்லாம் மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். எனவே, எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும்!”
“ஏற்கெனவே நீங்கள் விலகி வந்த தி.மு.க கட்சிக்காக இப்போது தேர்தல் பிரசாரம் செய்யும்போது, உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்?”
“தி.மு.க-வுக்குப் பிரசாரம் செய்வதில் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. ரொம்ப மகிழ்ச்சியாகத்தான் பிரசாரம் செய்வேன். 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போதே ஜெயலலிதாவை எதிர்த்து, தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்தேன். தி.மு.க கட்சியின் வரலாறு எனக்கு முழுமையாகத் தெரியும். உண்மையைச் சொன்னால், தி.மு.க ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்தமாதிரி, வேறு எந்தக் கட்சியும் நல்லது செய்யவில்லை. இப்போது இருக்கிற முதல்வர் இ.பி.எஸ், துணை முதல்வர் ஓ.பி.எஸ் இருவரும் நடத்தும் ஆட்சியின் லட்சணம் ஐயய்யோ ரகம்.”

“தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த், பிரேமலதாவை எப்படி விமர்சனம் செய்வீர்கள்?”
“சென்னை, சாலிகிராமத்தில் கேப்டன் வீட்டுக்கு எதிர் வீட்டில்தான் நான் குடியிருந்தேன். அப்போதிருந்தே அவரைப்பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். நடிகர் சங்கத் தலைவராகத் தெரியும். அரசியல் தலைவராக எனக்குத் தெரியாது. விஜயகாந்த் சார் மாதிரி தங்கமான மனிதரைப் பார்க்கவே முடியாது. அரசியலில் அவர் தீவிரமாக இறங்கியபோதும் சரி, இப்போதும் சரி அவரைப் பற்றி எப்போதும் விமர்சிக்கமாட்டேன். பிரேமலதா அக்காவைக் குறித்தும் எதுவும் பேசமாட்டேன்.”
“உங்கள் நண்பர் கமலின் அரசியல் பிரவேசம், தேர்தல் பிரசாரம் எப்படியிருக்கிறது?”
“ஒருவர் அரசியல்வாதியாகிவிட்டாலே, எதிரணியில் இருப்பவர்களைக் கடுமையாக விமர்சிக்க வேண்டும், குற்றச்சாட்டுகளைச் சுமத்த வேண்டும் என எதிர்பார்ப்பது தவறு. கமல் சாரைப் பற்றி எனக்குத் தெரியும். ஒரு விஷயத்தில் அவர் இறங்கினால், தைரியமாக, முழுமையாகச் செயல்படக்கூடிய திறன் படைத்தவர். கமல் சார் மாதிரி ஒருவரின் குரல் கண்டிப்பாகப் பாராளுமன்றத்தில் எதிரொலிக்க வேண்டும் என்பது என் ஆசை. ஆனால், அவர்தான் தேர்தலில் போட்டியிடவில்லையே.”
“மோடிக்கு நிகரான தலைவர் ராகுல் காந்தி கிடையாது என்றொரு கருத்து உலவுகிறதே?”
“இந்திய மக்கள் எதிர்பார்க்கும் இளம் தலைவர், ராகுல் காந்தி. ராகுல் காந்தி செய்யும் பிரசாரத்தைக் கவனித்துப் பாருங்கள். ‘என் கொள்ளுத்தாத்தா நாட்டுக்காகச் சொத்தையே இழந்தவர், என் பாட்டி நாட்டுக்காக குண்டடி பட்டு ரத்தம் சிந்தினார், என் அப்பா மக்களைச் சந்தித்தபோது படுகொலை செய்யப்பாட்டார். என் முன்னோர்கள் எல்லாம் இந்த நாட்டுக்காகத் தியாகம் செய்தவர்கள்’ எனச் சொல்லி அனுதாபம் பெறமாட்டார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு என்ன திட்டங்களை நிறைவேற்றுவோம் என்றுதான் பிரசாரம் செய்துவருகிறார். தேர்தல் அறிக்கையில் வருடத்துக்கு 72,000 ரூபாய் கொடுப்போம் என்று பொய்யாக அறிவிக்கவில்லை அவர். பொருளாதார நிபுணர்களை அழைத்து ஆலோசனை செய்துவிட்டு, ‘நிச்சயமாக சாத்தியப்படும்’ என்று தெரிந்து தெளிந்த பிறகே அந்தத் திட்டத்தை அறிவித்திருக்கிறார். மோடி மாதிரி ராகுல் காந்தி விளம்பரம் தேடிக்கொள்ள வில்லை. முதலில் மோடியோடு ஒப்பிட்டுப் பேசுவதே, ராகுல் காந்தி கெளரவத்துக்கு இழுக்கு.”

“அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப் பட்டிருக்கிறதே?”
“தந்தை பெரியார் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட தலைவர். பாரதிய ஜனதா தங்களை விமர்சிப்பவர்களை எல்லாம் தேசத்துரோகிகள் என்று முத்திரை குத்துகிறது. நான் சொல்கிறேன், பெரியார் சிலையை உடைத்தவர்கள்தான் தேசத்துரோகிகள்”
“இந்தியாவில் நேருவின் குடும்ப அரசியல், தமிழகத்தில் கருணாநிதியின் வாரிசு அரசியல், சிவகங்கையில் ப.சிதம்பரத்தின் குடும்ப அரசியல் என்று ஹெச்.ராஜா பேசியிருக்கிறாரே?”
“முதலில் பாரதிய ஜனதா கட்சியின் வரலாறே ஹெச்.ராஜாவுக்குத் தெரியவில்லை. மேனகா காந்தி எங்கிருந்து வந்தார், தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை எங்கிருந்து வந்தார், வசுந்தரா ராஜே சிந்தியா எங்கிருந்து வந்தார்? பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருக்கும் பா.ம.க, தே.மு.தி.க-வில் வாரிசு அரசியல்தானே இருக்கிறது? தேனியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், தென்சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் மகன் நிற்கிறாரே? இப்படி எல்லோருடைய சரித்திரமும் தெரிந்த பிறகு ஹெச்.ராஜாவை வாயைத் திறக்கச் சொல்லுங்கள். பாவம், ‘நான் நேரு குடும்பத்துல பொறக்கலையே, கலைஞர் குடும்பத்துல பொறக்கலையே’ என்று பொறாமையில் பினாத்தித் திரிகிறார்.”
எம்.குணா - படங்கள்: கே.ராஜசேகரன்
சமூகவலைதள வாசகர்களின் கேள்விகளுக்கு குஷ்பு அளித்த பதில்கள் இங்கே...
twitter.com/raju0220: “ராகுல் காந்திக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என்று சொல்கிறார்களே?” “இந்தியாவில் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் வயதான அரசியல்வாதிகள் ஆட்சியில் இருப்பது? கனடாவில் 38 வயதில் பிரதமரானால் எல்லோரும் கைத்தட்டுகிறோம். பிரான்ஸில் 40 வயது நிறைவடையாத இளைஞர் அரசியல் தலைவராக உருவெடுத்தால் பாராட்டுகிறோம். 42 வயதில் அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றபோது, உலகமே பாராட்டியது. இந்தியாவில் ராகுல் காந்தி 48 வயதில் பிரதமரானால் அனுபவமில்லை என்பதா? இந்தியாவில் மட்டும் ஓய்வெடுக்கும் வயதில்தான் அரசியல் ஞானம் வரும் என்று எழுதி வைத்திருக்கிறார்களா என்ன? ராகுல் ரத்தத்திலேயே அரசியல் கலந்திருக்கிறது.”
twitter.com/JamesHarshan: “ஒரு பெண் அரசியல்வாதியாக இன்றைக்கு இருக்கும் இளம் பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”
“நம்பிக்கை, தைரியம், உண்மை. இப்போதைய சூழ்நிலையில் உண்மைக்கு மரியாதை இல்லை என்று யோசித்துக்கொண்டிருப்பது தவறான எண்ணம்.”
twitter.com/azhaguvicky : “பெரியார் பற்றிய உங்கள் கருத்து?”
“நான் ஒரு அக்மார்க் பெரியாரிஸ்ட்!”
twitter.com/ash0k_spills: “நீங்கள் ஆத்திகரா, நாத்திகரா?”
“பெயருக்குப் பின் சாதிப் பெயரைப் போட்டுக்கொண்டு ஆணவத்தில் அலையும் வரை நம்நாடு திருந்தாது. எனக்குத் தெரிந்த ஒரே சாதி, மனித சாதி. ஆத்திகம், நாத்திகத்தைத் தாண்டி சாதியை ஒழிக்கவேண்டும் என்று விரும்புபவள் நான்.”
twitter.com/sabariMJ : “நீங்கள் ஏன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை?”
“காங்கிரஸ் கட்சி சார்பில் யார் போட்டியிடுவது என்பது குறித்து ராகுல் காந்திதான் முடிவுசெய்ய வேண்டும். தமிழகத்தில் யார் யார் எந்தெந்தத் தொகுதிகளில் நிற்கவேண்டும் என்பது அவர் எடுத்த முடிவு. நான் ஒரு சினிமா ஸ்டார் என்பதற்காகத் தேர்தலில் போட்டியிட்டே ஆகவேண்டும் என்று அவசியமில்லை. ‘குஷ்பு மயிலாப்பூரில் போட்டியிடுகிறார்’ என்று எழுதினார்கள். பிறகு, ‘குஷ்பு தேர்தலில் போட்டியிடவில்லை’ என்றும் எழுதினார்கள். தமிழகத்தில் காங்கிரஸுக்குக் கொடுக்கப்பட்ட தொகுதிகளில் ஒரு தொகுதி மட்டும் ரிசர்வ், மீதமுள்ள எல்லாத் தொகுதிகளுக்கும் என் பெயர் அடிபட்டது. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், தேர்தல் முடிந்தபிறகு ‘குஷ்பு ராஜ்யசபா சீட் கேட்கிறார்’ என்றும் வதந்தியைக் கிளப்புவார்கள்.”
twitter.com/AlamSaboor: “சினிமாவில் உச்சத்துக்குச் சென்ற நீங்கள், அரசியலில் ஜெயலலிதா மாதிரி ஆகமுடியவில்லையே என்கிற வருத்தம் இருக்கிறதா?”
“ஜெயலலிதா ஆரம்பத்தில் கொள்கைபரப்புச் செயலாளராக இருந்து படிப்படியாக கஷ்டப்பட்டுத்தான் தலைமைக்கு வந்தார். நான் அரசியலில் இறங்கியே பத்து வருடம்தான் ஆகிறது. ஜெயலலிதா மாதிரி ஆகவேண்டும் என்ற எண்ணம் எனக்கு சத்தியமாக இல்லை. நான் எப்போதும் குஷ்புவாக இருக்கவே விரும்புகிறேன்.”