
“குழந்தை மாதிரி நடிப்பு சொல்லிக்கொடுப்பார்! - ராதிகா

மகேந்திரன் - தமிழ்த் திரையுலகின் அரிய வரவு, அபூர்வ நிகழ்வு. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச்சென்ற மகேந்திரன், வணிக சமரசங்களுக்கு அப்பாற்பட்ட சாதனைகளை நிகழ்த்திக்காட்டியவர். அந்த நிகரற்ற படைப்பாளி குறித்த நினைவலைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள், அவருடன் தொடர்புடைய கலைஞர்கள்.

“தமிழ் சினிமா ஜாம்பவான்களான பாரதிராஜா, கே.விஸ்வநாத் போன்றோருடைய படங்களில் நடித்ததை எப்படி பாக்கியமாக நினைக்கிறேனோ, அதுபோல மகேந்திரன் சார் இயக்கத்தில் ‘மெட்டி’ படத்தில் நடித்ததைப் பெருமையாகக் கருதுகிறேன். இயக்குநர்களில் பலர் தங்கள் மனசுக்குள் சிருஷ்டித்து வைத்திருக்கும் நடிப்பு கிடைக்கும்வரை நடிகர்கள், நடிகைகளை லேசில் விடமாட்டார்கள். டேக் மேல் டேக் வாங்கி, தாங்கள் நினைத்ததை சாதித்துவிடுவார்கள். மகேந்திரன் சார் வித்தியாசமானவர். அவரது பாணி தனி. ‘மெட்டி’ படத்தில் நடிக்கும்போது, தன் கற்பனையை நடிகர், நடிகைகள்மீது திணிப்பதைத் தவிர்த்துவிட்டு, என் கேரக்டரை நானே முழுமையாக உணர்ந்து, என் விருப்பத்திற்கு நடிக்க அனுமதி கொடுத்தார். என் நடிப்பில் தெரிந்த சின்னச் சின்ன நுணுக்கங்களைக்கூட நேர்த்தியாகக் கண்டுபிடித்துப் படமாக்கும் அவரது திறமையைப் பார்த்து அசந்துபோனேன்.

‘மெட்டி’ படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்தேன். சென்னையில் 20 நாள்கள் தொடர்ந்து படப்பிடிப்பு. எங்களை அதிகாலை வெளிச்சத்தில் படமாக்க வேண்டும் என்பது மகேந்திரன் சார் திட்டம். அதற்காக அதிகாலை நாலரை மணிக்கே சென்னைக் கடற்கரையில் சூரியோதயத்தில் காட்சிகளைப் படமாக்குவார். சினிமாக் கலைஞர்களிடம் ஒளிந்துகிடக்கும் நடிப்புத் திறனை சிந்தாமல் சிதறாமல் வெளியே கொண்டுவரும் திறன் அவருக்கு மட்டுமே பிரத்யேகமானது. எங்கள் கைகளைப் பிடித்துக்கொண்டு குழந்தை மாதிரி அவர் நடிப்பைச் சொல்லிக்கொடுத்தது இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

சினிமா இயக்குநர் என்பதைத் தாண்டி, மிகச்சிறந்த எழுத்தாளர் அவர். நான் அவருடைய எழுத்துகளுக்கு அப்போதும், இப்போதும் பரம ரசிகை. நான் அவரைப் பார்க்கும்போதெல்லாம் ‘ஏன் சார் அதிகமா எழுத மாட்டேங்கிறீங்க’ன்னு கேட்பேன். பதிலாக சிரிப்பை மட்டுமே தருவார். சினிமாவில் அவர் எழுதிய வசனங்களுக்கு வலிமை அதிகம். ‘முள்ளும் மலரும்’ படத்தில் ‘சார்... ரெண்டு கையி, ரெண்டு காலும் போனாக்கூட காளிங்கிறவன் பொழைச்சுக்குவான் சார், கெட்ட பய சார் அவன்’ என்று ரஜினி பேசுவது எப்போதும் மறக்க முடியாத வசனம். விஜய் நடித்த ‘தெறி’ படத்தில் நானும், மகேந்திரன் சாரும் சேர்ந்து நடித்தோம். அப்போது ‘உங்க கையால துப்பாக்கிச் சூடுபட்டுச் சாகுற மாதிரி நடிக்கப்போறேன்’ என்று காமெடியாகச் சொல்ல, கண்ணீர் வழியும் அளவுக்குக் குலுங்கிக் குலுங்கி அவர் சிரித்த காட்சி அப்படியே என் கண்ணில் நிற்கிறது. தமிழ் சினிமாவைத் தரமான உயரத்தில் வைத்து அழகு பார்த்த பெருமை மகேந்திரன் சாருக்கே உரித்தானது.”
- எம்.குணா, படங்கள்: ஸ்டில்ஸ் ரவி