
“சினிமா அவருக்குத் தவம்!” - சரத் பாபு

‘‘மகேந்திரன் சார் இதுவரை 12 படங்கள் இயக்கியிருக்கிறார். நான் ‘முள்ளும் மலரும்’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘உதிரிப்பூக்கள்’, ‘மெட்டி’, ‘அழகிய கண்ணே’, ‘கண்ணுக்கு மை எழுது’ ஆகிய ஆறு படங்களில் நடித்திருக்கிறேன் என்பது எனக்குப் பெருமையளிக்கும் விஷயம்.

ஒவ்வொரு காட்சிக்குமான சூழ்நிலைக்கேற்ப லைட்டிங் அமைப்பதில் கெட்டிக்காரர். ஒரு கதாபாத்திரம் 10 பக்கம் பேசவேண்டிய வசனத்தை ஒரே வாக்கியத்தில் பொளேரென அடித்ததுபோல் வசனம் எழுதுவதில், அவருக்கு நிகர் யாருமில்லை. படப்பிடிப்பில் ஹீரோ, ஹீரோயினோடு எப்படிப் பழகுகிறாரோ அதேமாதிரிதான் யூனிட்டில் உள்ள அனைவரிடமும் பழகுவார். சினிமாவுக்கு வந்து 40 வருடத்துக்கும் மேலாகிவிட்டது. இதுவரைக்கும் எந்த நடிகருக்கும் நான் டப்பிங் பேசியதில்லை. ‘நண்டு’ படத்தில் அறிமுகமான நாயகன் கதாபாத்திரத்திற்கு கேன்சர் நோய். உடைந்த குரலில் இந்தி, தமிழ் பேசக்கூடிய அந்தக் கேரக்டருக்குக் குரல் கொடுக்க என்னை அழைத்தார். மறுக்காமல் பேசிக்கொடுத்தேன். நான் சினிமாவில் நுழைந்து முதலும் கடைசியுமாக இன்னொரு நடிகருக்கு டப்பிங் பேசிய ஒரேபடம், ‘நண்டு’தான்.

உலக சினிமாத் தரத்தைவிட, தமிழ் சினிமா எவ்விதத்திலும் குறைந்ததில்லை என்றே எப்போதும் சொல்லிக்கொண்டிரு ப்பார். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டாலே முழுக் கவனமும் காட்சியைப் படமாக்குவதிலேயே இருக்கும். ஒவ்வொரு கேரக்டரும் வசனம் பேசும்போது, இயல்புத் தன்மை மாறாமல் இருக்கவேண்டுமென நினைப்பார். தன் படத்தின் கதைக்குத் தகுந்த மாதிரி லொக்கேஷன்களைப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுப்பார். குறிப்பாக, பாடல் காட்சிகளைப் படமாக்குவதில் ரொம்ப மெனக்கெடுவார். பெரும்பாலும் பாடல் காட்சிகளில் ஹீரோ, ஹீரோயின் வாயசைப்பதைப் படமாக்கமாட்டார். அந்தக் காட்சிக்குரிய இயற்கைப் பின்புலச் சூழலையே முன்னிலைப்படுத்துவார். ‘முள்ளும் மலரும்’ படத்தில் ‘ராமன் ஆண்டாலும்...’ பாடல் காட்சி மலைப்பகுதியில் உள்ள திருவிழாப் பின்னணியில் படமாக்கியிருப்பார். பெரும்பாலும் ஹீரோ, ஹீரோயின்கள் பாட்டுப் பாடி நடனம் ஆடுவதை அவர் தவிர்த்துவிடுவார்.

‘உதிரிப்பூக்கள்’ படத்தில் நான் திருமணம் செய்யவேண்டிய அஸ்வினியை விஜயன் திருமணம் செய்துகொள்வார். ஒருகட்டத்தில் இருவருக்கும் மோதல் வரும். அப்போது சண்டை போடுவதைக் காட்டாமல், இசையை மட்டும் பயன்படுத்தியிருப்பார். விஜயன் துண்டு கீழே விழும், செருப்பு பறக்கும், என் கண்ணாடி சிதறித் தெறிக்கும்... இப்படி சண்டைக் காட்சியை வித்தியாசமாகப் படமாக்கியிருப்பார். இறுதியாக, கீழே விழுந்த விஜயனின் துண்டை எடுத்துக் கொடுத்துவிட்டு, ‘நான் உங்களைத் திருப்பி அடிச்சிருப்பேன். லட்சுமி விதவையாகிடக் கூடாதுன்னு விட்டுட்டுப் போறேன்’ என்று பேசும்போது, தியேட்டர் முழுக்க நிசப்தம் பரவியிருக்கும். சினிமாவைத் தொழிலாகப் பார்க்காமல், ஒரு தவமாகச் செய்தவர் மகேந்திரன். எனக்குத் தெரிந்து எத்தனையோ தயாரிப்பாளர்கள் அவருடைய இயக்கத்தில் படத்தைத் தயாரிக்கக் காத்துக்கொண்டிருந்தார்கள். மூன்று மாதங்களுக்கு முன்பு பார்த்தேன், நன்றாகத்தான் இருந்தார். வயது மூப்பினால் ஏற்படும் உடல் உபாதைகள்தான் அவருக்கும். சென்னையில் உள்ள அவரது வீட்டுக்குப் போனேன், கண்ணயர்ந்து தூங்குவதுபோல ஐஸ் பெட்டிக்குள் கிடந்தார். அஞ்சலிகள் மகேந்திரன் சார்!”
- எம்.குணா, படங்கள்: ஸ்டில்ஸ் ரவி