அரசியல்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“சுஹாசினிக்கு நான் கொடுத்த வாய்ப்பு..!” - ஜெயராஜ்

“சுஹாசினிக்கு நான் கொடுத்த வாய்ப்பு..!” - ஜெயராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
“சுஹாசினிக்கு நான் கொடுத்த வாய்ப்பு..!” - ஜெயராஜ்

“சுஹாசினிக்கு நான் கொடுத்த வாய்ப்பு..!” - ஜெயராஜ்

“சுஹாசினிக்கு நான் கொடுத்த வாய்ப்பு..!” - ஜெயராஜ்

“எனக்கும், மகேந்திரனுக்குமான நட்புக்கு 60 வயது. 60 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நான் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது, மகேந்திரன் முதலாமாண்டு மாணவர். இயல்பாகவே அவருக்கு ஓவியத்தின் மீது ஈடுபாடு அதிகம். அப்போது, எங்கள் கல்லூரியில் அழகி என்றொரு மாணவி படித்துக்கொண்டிருந்தார். நான் வகுப்பறையிலிருந்து வெளியில் வந்தாலே, சக மாணவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டு ‘டேய் அழகி படத்தை வரைஞ்சு கொடுடா’ என்று நச்சரிப்பார்கள். எனக்குள் பெருமை ஒட்டிக்கொள்ள, ஒருவித பந்தாவோடு சில நொடிகளில் அவர்களுக்கு வரைந்து கொடுப்பேன். அப்போது என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே ‘நல்ல வேலை பண்றீங்க சார்’ என்று கிண்டலடிப்பார் மகேந்திரன். அவருக்கும் அழகியின் படத்தை வரைந்துகொடுத்தேன். சென்னைக்கு வந்து ஓவியரானபோது, எனக்கு 24 வயது. அப்போதும் எங்கள் நட்பு தொடர்ந்தது. ஆயிரம்விளக்குப் பகுதியில் நான் வசித்தபோது தினமும் நானும், மகேந்திரனும் ஒரு  சாதாரண மெஸ்ஸில் தோசை சாப்பிடுவோம். ‘நாம் சாப்பிடும் இந்த தோசை விசேஷமானது’ என்பார், அவர். ‘ரெண்டணாக் காசு கொடுத்து சாப்பிடுற இந்த தோசை எப்படி விசேஷம்?’ என்று கேட்டேன். ‘நாம ரெண்டுபேரையும் தினமும் சந்திக்க வைப்பதாலேயே இது விசேஷ தோசை’ என்று கவித்துவமாய்ப் பேசுவார். பிறகு,  ‘தங்கப்பதக்கம்’ படத்துக்கு மகேந்திரன் கதை, வசனம் எழுதிய பிறகு, அதாவது இருபது வருட இடைவெளிக்குப் பிறகுதான் அவரை நேரில் சந்தித்தேன். அப்போது எனக்குக் கல்யாணம் முடிந்துவிட்டது, அவருக்கும் கல்யாணமாகி, குழந்தைகள் இருந்தனர். சிறந்த எழுத்தாளர், சிறந்த டைரக்டர், சிறந்த தயாரிப்பாளர் என்பதையெல்லாம் தாண்டி, எனக்கு அவர் சிறந்த நண்பர்.  

“சுஹாசினிக்கு நான் கொடுத்த வாய்ப்பு..!” - ஜெயராஜ்

‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தின்போது, ‘என் படத்துக்கு ஒழுங்கு மரியாதையா காஸ்ட்யூம்ஸுக்கு டிசைன் போட்டுக் கொடுங்க’ என்றார். அப்படத்தில் சுஹாசினி அணியும் ஆடைகள், ‘ஜானி’ படத்தில் இரண்டு ரஜினியும் அணியும் ஆடைகள், ஸ்ரீதேவியின் ஆடைகள் ஆகியவற்றுக்கு நான்தான் டிசைன்ஸ் வரைந்து கொடுத்தேன். தவிர, ‘நண்டு’ படத்துக்கு டைட்டில் டிசைன் செய்தேன். திரைப்படம் தொடங்கும்போது நண்டு பொந்திலிருந்து வெளியே வருவதுபோலவும், இடைவேளைக் காட்சியில் மீண்டும் நண்டு பொந்துக்குள் சென்று மறைவதுபோலவும் வடிவமைத்தது, அவருக்குப் பிடித்துப்போனது. தவிர, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்திற்கு ஹீரோயினாக நடிக்க, என் மகள் ஹில்டாவைக் கேட்டார். ‘என்கிட்ட எதுக்குக் கேட்குறீங்க, ஹில்டாவிடமே கேட்டுடுங்க’ என்றேன். ‘வேண்டாம் மாமா. எனக்கு நடிப்புல ஆர்வமில்லை’ என மறுத்துவிட்டாள் மகள்.

“சுஹாசினிக்கு நான் கொடுத்த வாய்ப்பு..!” - ஜெயராஜ்

‘ஜானி’ படப்பிடிப்புக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கே ஒளிப்பதிவாளர் அசோக்குமாருக்கு உதவியாளராக இருந்த ஒரு பெண்ணைப் பார்த்துவிட்டு, ‘அந்தப் பொண்ணு யாரு’ என்று மகேந்திரனிடம் கேட்டேன். ‘கமலோட அண்ணன் பொண்ணு’ என்று சொல்ல, ‘அந்தப் பொண்ணு நம்ம ஹில்டா மாதிரியே இருக்கா, பேசாம அந்தப் பெண்ணையே ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் நடிக்க வெச்சிடு’ என்று சொன்னேன். ‘அடடே, எனக்கு இது தோணாமப்போச்சே!’ என்று சொல்லிவிட்டு, நேராக சுஹாசினியிடமே கேட்டுவிட்டார். ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் சுஹாசினி நடித்தது இப்படித்தான். பிறகு ஒருநாள் சுஹாசினி என் வீடுதேடி வந்து, ‘நீங்கள் இயக்குநர்கிட்ட ஐடியா கொடுத்ததாலும், உங்க மகள் நடிக்க மறுத்ததாலும்தான் நான் நடித்தேன்!’ என்று சொல்லிவிட்டு, என்னிடம் வாழ்த்தும், என் மகள் ஹில்டாவுக்கு நன்றியும் சொன்னார். 

“சுஹாசினிக்கு நான் கொடுத்த வாய்ப்பு..!” - ஜெயராஜ்

மகேந்திரன் மனைவி ஜாஸ்மினை தங்கச்சி என்றுதான் அழைப்பேன். ‘நண்டு’ படப்பிடிப்புக்காக மகேந்திரன் லக்னோ செல்லவேண்டியிருந்தது. மனைவி, குழந்தைகள் ஜான், டிம்பிள், அனுரீட்டா ஆகியோரைச் சென்னையிலேயே விட்டுவிட்டுச் செல்வதாக இருந்தது. நான்தான், ‘நீங்க மட்டும் எதுக்குத் தனியா போறீங்க, தங்கச்சியையும் அழைச்சுட்டுப் போங்க. குழந்தைகளை நாங்க பார்த்துக்கிறோம்’ என்று, இருவரையும் அனுப்பி வைத்தேன். அன்பு நிறைந்த உள்ளத்துக்குச் சொந்தக்காரர். ஆடம்பர வாழ்க்கை அறவே பிடிக்காமல், எளிமையாக வாழ்ந்து மறைந்தார்.”

- எம்.குணா, படங்கள்: ஸ்டில்ஸ் ரவி