
என்னை நம்பின பெரிய ஹீரோ அவர்தான்!
“வெங்கட் பிரபுவிடம் நிறைய மாற்றங்கள். கைநிறைய வேலைகளுடன் பரபரப்பாகச் சுற்றிவருகிறார். ‘பார்ட்டி’, ‘மாநாடு’ படங்கள், அஜித் சந்திப்பு, சொந்தத் தயாரிப்பில் இரண்டு படங்கள், வெப் சீரிஸ் இயக்கம் என, பேச ஏராளம் உள்ளன. ஒரு ஞாயிறு நண்பகலில் வெங்கட் பிரபு உடனான நீண்ட உரையாடலில் இருந்து...
“ ‘சமீபத்தில் அஜித்தை சந்திச்சிருக்கீங்க. என்ன சொன்னார்?”
“என்னை நம்பின பெரிய ஹீரோனா அது அஜித் சார் மட்டும்தான். அப்ப எந்த ஹீரோவுமே, ‘கதை இருக்கா, நாம பண்ணலாமா’ன்னு கேட்கலை. அவர்தான் கேட்டார். அந்தச் சமயத்தில் அவர் படம் பண்றது நானா, கௌதம்மேனன் சாரான்னு பேச்சு ஓடிட்டிருந்துச்சு. அப்ப நான் பண்றது தெரிஞ்சதும், அவரோட ரசிகர்களுக்கே அதுல விருப்பம் இல்லை. அவரோட ரசிகர் ஒருத்தர், ‘தயவு செய்து நீங்க பண்ணாதீங்க. கௌதம் சாரே பண்ணட்டும்’னு ஃபேஸ்புக்ல மெசேஜ் அனுப்பினார். அதுக்கு, ‘அஜித் சாரை கௌதம் சார் டைரக்ட் பண்ணணும்னு எனக்கும் ஆசைதான். ஆனா என்ன பண்றது, நான் பண்ண வேண்டியதாப்போச்சு. ஆனா ஒரு ஹீரோவை அவரோட ரசிகனே டைரக்ட் பண்றான் என்பது இதுதான் முதல்முறை’ன்னு பதில் அனுப்பினேன். பிறகு அந்த மெசேஜ் ஸ்கிரீன் ஷாட்டா வைரல் ஆச்சு. படம் வந்தபிறகு என்ன நடந்துச்சுன்னு உங்களுக்கே தெரியும்.

போனமாசம் ‘வாங்க, மீட் பண்ணுவோம்’னு சும்மா ஜாலியாதான் கூப்பிட்டார். ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ‘நேர்கொண்ட பார்வை’ ஷூட்ல இருந்தார். அப்ப எடுத்த ஒரு போட்டோவை ஷேர் பண்ணினேன். ‘மங்காத்தா’ வந்து எட்டு வருஷம் ஆகுது. ஆனாலும் நாங்க சந்திச்சதுக்கே அப்படி ஒரு வரவேற்பு. எங்க காம்பினேஷனை ரசிகர்கள் எதிர்பார்க்குறாங்கன்னு நினைக்கும்போது சந்தோஷம். அடுத்து சேர்ந்தா எந்த மாதிரி, எப்படிப் பண்ணலாம்னு பேசியிருக்கோம். மற்ற விஷயங்கள் போகப்போகத் தெரியவரும்.”
“சரி, மறுபடியும் சேர்ந்தா, அது ‘மங்காத்தா-2’ என்று இருக்குமா அல்லது வேறு கதையா?”
“என் எல்லாப் படங்களையுமே இரண்டாம் பாகம் எடுக்குறதுக்கான வாய்ப்புகளோடதான் முடிப்பேன். ‘மங்காத்தா’வும் அப்படித்தான். ஆனால், என்ன பண்ணப்போறோம்னு இன்னும் முடிவாகலை. அந்தச் சந்திப்புல, ‘சின்னதா அழகா பண்றது பற்றிக்கூட யோசிங்க’ன்னு சொன்னார். ஒரு டைரக்டரை வசதியா ஃபீல் பண்ணினார்னா அவர்கூட நிறைய டிராவல் பண்ணுவார். அப்படி எங்க காம்பினேஷன் திரும்ப அமையும்னு நம்புறேன்.”
“ `பார்ட்டி’யில் என்ன ஸ்பெஷல்? ஏன் இவ்ளோ தாமதமாகுது?”
“ ‘உன்கிட்ட கதை கேட்டா எனக்கு எதுவும் புரியாது. நீ படமா எடுத்துக் காட்டு’- இது அம்மா கிரியேஷன்ஸ் சிவா சார் ‘சரோஜா’ சமயத்துல என்கிட்ட சொன்னது. ‘பார்ட்டி’ படத்தை அவர்தான் தயாரிக்கிறார். இதுக்கும் அவர் கதை கேட்கலை. வெவ்வேறு கதைகள், முன்னப்பின்ன போகும் திரைக்கதை. சத்யராஜ் சார், ஜெயராம் சார், நாசர் சார், ஜெய், சிவா, சந்திரன், ஷாம், ரம்யா கிருஷ்ணன் மேடம், ரெஜினா, நிவேதா, சஞ்சிதான்னு ஏகப்பட்ட ஆர்ட்டிஸ்ட். பிஜி தீவில் 60 நாள்கள் ஒரே ஷெட்யூல்ல எடுத்து முடிச்சோம். இது, பிஜி அரசின் சுற்றுலாத்துறையுடன் சேர்ந்து பண்ணின படம். அந்த அரசின் மானியம் வரவேண்டி இருக்கு. அந்த புராசஸ் முடிஞ்சதும் படம் சீக்கிரமே ரிலீஸ் ஆகும்.”
“சிம்புகூட ‘மாநாடு’. ஆனா, அவரை ஸ்பாட்டுக்கு வரவைக்கிறதே பெரிய சவால்னு விமர்சனங்கள் இருக்கே?”
“அப்படி சவாலா இருந்தா மணிரத்னம் சார் படத்தையும், சுந்தர் சி சார் படத்தையும் அவர் இவ்வளவு சீக்கிரம் முடிச்சிருக்க முடியாதே? ஹீரோவா ஆகுறதுக்கு முன்பிருந்தே அவர் என் நண்பர். ‘சென்னை-28’-ஐ ரிலீஸுக்காக பெரியபெரிய கம்பெனிகளுக்குப் போட்டுக் காட்டினோம். ‘இது குப்பை. ஒர்க்கவுட் ஆகாது’ன்னு சொல்லிட்டாங்க. ‘ஓகே. ஒவ்வொரு ஏரியாவா விப்போம்’னு முடிவு பண்ணினப்ப, படத்தைப் பார்த்துட்டு, ‘ஒரு ஏரியாவையாவது நான் வாங்கி ரிலீஸ் பண்றேன் பிரதர்’னு சிம்புதான் மதுரை ஏரியாவை வாங்கி ரிலீஸ் பண்ணினார். ‘வித்தியாசமா ஒரு படம் பண்ணணும்’னு பேசிட்டே இருந்தோம். அப்படித்தான் ‘மாநாடு’ அமைஞ்சுது. அவருக்கு இந்தக் கதை மேல பெரிய ஈர்ப்பு இருக்கு. நிச்சயம் அவர் வருவார். இந்தப் படத்துக்காக லண்டன்ல ஒரு சின்ன ட்ரெயினிங்ல இருக்கார். வந்ததும் தொடங்கிடுவோம். ‘மாநாடு’ அரசியல் படம்தான். ஆனா, ‘ஒரு ஹீரோ இந்த சிஸ்டத்தை எதிர்த்துச் சண்டைபோட்டு எப்படி அதைச் சரி பண்றார்’னு நீங்க எதிர்பார்க்கிற அரசியலா இருக்காது. இது ஒரு புது முயற்சியா இருக்கும்.”
“தயாரிப்புல பரபரப்பா இறங்கிட்டீங்க போலிருக்கே. புரொடக்ஷன் ஏரியா எப்படி இருக்கு?”
“என் ‘பிளாக் டிக்கெட்’ கம்பெனியில்தான் ‘சென்னை-28’-ன் பார்ட் 2 பண்ணினோம். அடுத்து, ‘ஆர்.கே.நகர்’ படம். என் உதவி இயக்குநர் சரண்ராஜ்தான் இதை டைரக்ட் பண்ணியிருக்கார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடந்த சமயத்துல அங்க நடக்குற கதை. எலெக்ஷன் சம்பந்தப்பட்ட வசனங்களுடன் கன்னத்துல ஓங்கி அறைஞ்சமாதிரி சொல்லியிருக்கோம். தொடர்ந்து, டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவி சாருடன் இணைந்து சிம்பு தேவன் சார் டைரக்ஷன்ல ஒரு படம். ஷூட்டிங் முடிஞ்சிடுச்சு. யூனிக்கான ஆன்தாலஜி ஸ்க்ரிப்ட். மொத்தம் ஆறு கதைகள். எல்லாக் கதைகளும் ஒண்ணாகும்னு இல்லாம வேற பேர்ட்டர்ன்ல அழகா கோத்திருக்கார். ஆனா ஒரே படமா பார்க்கிற மாதிரியான வித்தியாசமான திரைக்கதை. ஒவ்வொரு கதைக்கும் தனித்தனி நடிகர்கள், கேமராமேன்கள், எடிட்டர்கள், மியூசிக் டைரக்டர்கள்னு வித்தியாசமான முயற்சி. இந்தப்படத்தோட அறிவிப்பு இந்தமாதம் வெளிவரும்.”
“ஒருபக்கம் சினிமாவுக்கான தொழில்நுட்பம் வளருது. இன்னொரு பக்கம் ஒரு படத்தை ரிலீஸ் பண்றதுல இவ்வளவு சிக்கல்கள். என்ன பண்ணினா இந்தப் பிரச்னைகள் தீரும்?”
“எல்லாரும் உண்மையா இருந்தாலே போதும். அவங்க வேலைக்கு சரியான சம்பளம், பிசினஸுக்கு சரியான லாபம்னு அதை மட்டும் எடுத்துகிட்டாங்கனா இங்க எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனா, ‘எதுக்கு அவங்களுக்கு அதிகமா கொடுக்கணும்’னு நினைக்கும்போதுதான் ஏமாத்தணும், பொய் சொல்லணும், கணக்கு தப்பா காட்டணும்னு தோணுது. அடுத்து நம்ம ஊர்ல எதுவுமே வெளிப்படையா இல்லை என்பதுதான் பிரச்னை. வெளிப்படைத்தன்மை வந்துடுச்சுன்னா உழைப்புக்கேற்ற ஊதியம், அரசுக்கும் வரி சரியா போய்ச் சேரும். இன்னொரு பக்கம் டிஜிட்டல் மார்க்கெட் இவ்வளவு வேகமா வளருது. ஏன்னா எவ்வளவு வியூஸ், ரெவென்யூனு தெளிவா கண்ல தெரியுது. அதுல ஏமாற்ற முடியாது. அப்படி நான்கூட தென்னிந்தியாவில் முதன்முதலா ஹாட் ஸ்டாருக்கு ஒரு வெப்சீரிஸ் பண்றேன்.”

“வாழ்த்துகள். அது, என்ன மாதிரியான வெப்சீரிஸ்?”
“ ‘இதுதான் நம்ம முதல் படம்’னு அன்னைக்கு நான் எஸ்.பி.பி.சரணுக்குச் சொன்ன அந்தக் கதையைத்தான் இப்ப ஹாட் ஸ்டாருக்குப் பண்றேன். அப்ப கொடுத்த பட்ஜெட்டைவிடப் பெரிய பட்ஜெட்ல பண்றோம். ஆனா அதுக்கு 12 வருஷம் காத்திருக்க வேண்டியதாப்போச்சு.”
“ஆரம்பத்தில் நடிக்கிறதுலதான் உங்க ஆர்வம். அந்த ஏரியா இப்ப எப்படி இருக்கு?”
“சின்ன வயசுல இருந்தே நடிக்கணும்னுதான் ஆசை. அப்ப அமையலை. ஆனா டைரக்ஷன்ல ஓடிட்டிருக்கும்போது இப்ப ஏகப்பட்டபேர் கூப்பிடுறாங்க. சிம்புதேவன் சார் படத்துலயும் ஒரு கேரக்டர் பண்ணியிருக்கேன். நிதின் சத்யா தயாரிப்பில் வைபவ் ஹீரோவா நடிக்கிற படத்தில் முதல்முறையா வில்லனா பண்றேன்.’’
“ ‘அப்பா பொருளாதார நெருக்கடியில் இருந்தார்’னு சில இடங்கள்ல சொன்னீங்க. டைரக்ஷன், மியூசிக்னு நல்லாதானே இருந்தார். அப்படி என்ன நெருக்கடின்னு சொல்லலாமா?”
“அப்பா ஆரம்பத்தில் நல்லா சம்பாதித்தார். ஆனா பரீட்சார்த்தமான சில தொழில்கள்ல தவறான இன்வெஸ்ட்மென்ட் பண்ணிட்டார். அது பெரிய நஷ்டம். சொன்னா நம்புவது சிரமம். சன் டிவி ஆரம்பிக்கும்போது அந்த நேரத்துல ‘நம் டிவி’ன்னு ஒரு சேனல் ஆரம்பிச்சாங்க. ‘நிகழ்ச்சித் தயாரிப்பு ஏரியா முழுவதையும் அப்பாதான் பார்த்துக்கிட்டாங்க. ஸ்விட்சர்லாந்துல இருந்து அப்லிங்க் பண்றமாதிரி திட்டம். ஆனால் அப்பாவோட பார்ட்னர் ஏமாத்திட்டார். தயார் பண்ணிவெச்சிருந்த எல்லா நிகழ்ச்சிகளும் வேஸ்ட். அந்தச் சமயத்தில் உடையார் அங்கிள் ஜிஈசி-ன்னு ஒரு சேனல் ஆரம்பிச்சாங்க. ஏற்கெனவே ரெடி பண்ணி வெச்ச அந்த நிகழ்ச்சிகளை இந்த சேனலுக்குக் கொடுத்தாங்க. அந்த சேனலின் என்டர்டெயின்மென்ட் ஏரியாவை அப்பாவும் பொலிட்டிகல் ஏரியாவை சோ சாரும் பார்த்துக்கிட்டாங்க. அந்த சேனலைத்தான் விஜய் மல்லையா வாங்கி விஜய் டிவி ஆக்கினார். பிறகு அதை ஸ்டார் நிறுவனம் வாங்க, அது இன்னைக்கு ஸ்டார் விஜய் ஆகிடுச்சு. அப்படி அந்த சேனலுக்குப் பிள்ளையார்சுழி போட்டதுன்னா, அது எங்க அப்பாதான். இப்படி கிரியேட்டிவா புதுப்புது முயற்சிகள் பண்ணிப் பார்ப்பார். எப்போதும் எதிர்காலத்தை மனசுல வெச்சு யோசிக்கிறதுதான் அப்பா ஸ்பெஷல். அதனாலயே சில இழப்புகளையும் சந்திச்சிருக்கார்.”
“பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர், டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர்னு பல கலைகள்ல திறமையாளரான உங்க அப்பா, சரிவரக் கொண்டாடப்படாததுக்கு அவர் மேல உள்ள அந்த ஃபன் இமேஜும் ஒரு காரணம்னு நினைக்கிறீங்களா?”
“அப்பா நிறைய செய்திருக்கார். அவருக்கான அங்கீகாரம் கிடைச்சதே இல்லை. அது எதனாலன்னும் தெரியலை. சிலருக்கு அப்படி அமைஞ்சிடும். கூட இருக்கிற எல்லாரையும் சிரிக்கவெச்சு சந்தோஷப்படுத்திக்கிட்டு... அது ஒரு மனசு. அது தவறு கிடையாது. அதை மாத்திக்கணும்ங்கிற அவசியமும் இல்லை. அந்தத் தன்மை அப்பாட்ட இருந்துதான் எனக்கும் வந்ததுன்னு நினைக்கிறேன். அப்பா மாதிரியே என் உழைப்புக்கான அங்கீகாரம் எனக்குக் கிடைச்சதே இல்லை. நான் சில படங்கள்தான் பண்ணியிருக்கேன். ஆனா, மனசுக்கு நிறைவா உழைச்சிருக்கேன். ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு ஜானர்ல முயற்சி பண்ணியிருக்கேன். ஆனா என்னை சீரியஸ் பிலிம் மேக்கரா யாருமே பார்க்கலையோன்னு தோணுது. அவார்டு வாங்கினாதான் ஒரு பிலிம் மேக்கர்னு ஏத்துப்பாங்களோ என்னவோ?”
“இளையராஜா-75 நிகழ்ச்சியில் அப்பா உட்பட உங்க குடும்பத்துல யாரையும் அங்க பார்க்க முடியலை. ஏன்?”
“பெரியப்பாகிட்ட இருந்தோ தயாரிப்பாளர் சங்கத்துல இருந்தோ எங்களுக்கு அழைப்பிதழ் வரலை. பெரியப்பா வேண்டாம்னு சொன்னதால அவங்க கூப்பிடலையா, இல்ல அவங்களே விட்டுட்டாங்களான்னு ஆராயவும் விரும்பலை. தவிர, நாங்க அதைப் பெருசாவும் எடுத்துக்கலை. பாரதிராஜா சார், பெரியப்பா, அப்பா எல்லாரும் ஒண்ணாதான் பயணப்பட்டாங்கன்னு எல்லாருக்குமே தெரியும். அடுத்து பெரியப்பாவை அறிமுகப்படுத்தினது, பஞ்சு அருணாசலம் சார். அதேபோல எங்க அப்பாவை அறிமுகப்படுத்தினது பாரதிராஜா சார்தானே தவிர பெரியப்பாகூடக் கிடையாது. பாரதிராஜா சார்தான் அப்பாவுக்குப் பாட்டு எழுத வாய்ப்பு கொடுத்தாங்க. அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் இடையே மனஸ்தாபம் இருந்தாலும் யுவன், நான், கார்த்திக், பவா, பிரேம்ஜி, வாசுகின்னு அடுத்த தலைமுறைப் பசங்களுக்குள்ள எந்தப் பிரச்னையும் இல்லை. அவங்க பேசிக்காம இருந்த சமயத்துலயே நானும் யுவனும் `சென்னை-28’-ல வேலை செஞ்சோம். அது இன்னைக்குவரை தொடருது. அவ்வளவு ஏன், பிரேம்ஜி இப்ப ஒரு படத்துக்கு மியூசிக் பண்றான்னா, பெரியப்பாவைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்கிட்டுதான் வேலையையே ஆரம்பிப்பான். அதெல்லாம் அப்படியேதான் இருக்கு. தமிழின் அடையாளமா, தமிழினத்தின் அடையாளமா பெரியப்பா இருக்கார்ங்கிறது எங்களுக்குப் பெருமை. அவரோட பாடல்களைத்தான் இன்னும் கேட்டுட்டு இருக்கோம். இளையராஜா-75 நிகழ்ச்சிக்கு நாங்க நேர்ல போகலையே தவிர டிவியில பார்த்து சந்தோஷப்பட்டுக்கிட்டோம். அவ்வளவுதான்.”
-ம.கா.செந்தில்குமார்
படங்கள்: கே.ராஜசேகரன்