பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

15 வருடப் பிரிவு... ஒரு படம் சேர்த்தது!

15 வருடப் பிரிவு... ஒரு படம் சேர்த்தது!
பிரீமியம் ஸ்டோரி
News
15 வருடப் பிரிவு... ஒரு படம் சேர்த்தது!

15 வருடப் பிரிவு... ஒரு படம் சேர்த்தது!

15 ஆண்டுகளாகப் பிரிந்திருந்த அப்பாவையும்  மகனையும் ஒன்றுசேர்த்திருக்கிறது ஒரு திரைப்படம். ஆச்சர்யமாக இருக்கிறதா?

 அப்பா கே.ராஜன் நடிகர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என்று பரவலாக அறிப்பட்டவர். இவர் மகன் `எல்.கே.ஜி’ இயக்குநர் கே.ஆர்.பிரபு. `சினிமாவில் தனியாக ஒரு படத்தை இயக்கி வெற்றிபெற்ற பிறகே குடும்பத்தினரைச் சந்திப்பேன்’ என்று சபதம் எடுத்துப் பிரிந்திருந்தார், பிரபு.

15 வருடப் பிரிவு... ஒரு படம் சேர்த்தது!

இப்போது படம் வெற்றியடைந்த பிறகு மீண்டும் தன் குடும்பத்தோடு சேர்ந்திருக்கிறார். பெருமிதத்துடன் பேசத் தொடங்கினார்  கே.ராஜன்.

``சரத்குமாரை வெச்சு `தங்கமான தங்கச்சி', `நம்ம ஊர் மாரியம்மா'ன்னு இரண்டு படங்கள் தயாரிச்ச தயாரிப்பாளர் என் மகன் பிரபு. `சின்னப்பூவை கிள்ளாதே' படத்தில் ஹீரோவாக நடித்தார். பிறகு `டபுள்ஸ்', `நினைக்காத நாளில்லை' படங்களில் வில்லனாகவும் நடித்தார். சினிமாவில் தயாரிப்பாளராக, நடிகராக அனுபவம் பெற்ற என் மகன் நிச்சயம்  இயக்குநராகவும் ஜெயிப்பார் என்று எதிர்பார்த்தேன். அதுபோல இப்போது வெற்றி பெற்றிருக்கிறார்’’ என்று சொல்ல, பிரபு தொடர்கிறார்.

``இயல்பாகவே அப்பா கோபக்காரார், அதே கோபம் எனக்கும் உண்டு. ஒருமுறை எனக்கும் அவருக்கும் ஒரு கருத்துவேறுபாடு ஏற்பட்டது. வீட்டை விட்டு வெளியேறினேன் வெளியே வந்த பிறகுதான் எனக்கு இன்னொரு உலகம் தெரிய ஆரம்பித்தது. அப்பாவின் நிழலில் இருப்பதற்கும், வெளியில் இருக்கிற கஷ்டமான சூழலுக்குமான வேறுபாடு புரிந்தது. பெரிய போராட்டங்களைச் சந்தித்தேன்’’ என்று பிரபு சொல்ல... ராஜன் அந்த 15 ஆண்டு சோகத்தைப் பகிர்ந்துகொண்டார்.

``ராமர் 14 வருஷம் வனவாசம் அனுபவித்தார், என் மகன் பிரபு என்னைப் பிரிந்து 15 வருஷம் தனிவாசம் அனுபவித்தார். என் வீடு ராயபுரத்தில். நினைத்தால் உடனே வரலாம். ஆனால், ஒருநாள்கூட வரவே இல்லையே. பிரபுவை நினைத்து, பலமுறை தனிமையில் கண்ணீர்விட்டு அழுதிருக்கிறேன். என்றைக்காவது என் மகன் வருவான் என்று நம்பிக்கையோடு காத்திருந்தேன். இதோ வந்துவிட்டான்’’ அப்பா முகத்தில் நெகிழ்ச்சி.

``உங்கள் படத்தில் நடித்த ஜே.கே.ரித்தீஷ் மறைந்துவிட்டாரே?’’ என்று பிரபுவிடம் கேட்டேன். 

``ரித்தீஷ் சார் நடித்த வேடத்தில் நாங்கள் முதலில் அணுகியது ராமராஜன் சாரைத்தான். தேர்தல் வேலைகள் நிறைய இருக்கின்றன என்று சொல்லிவிட்டார். அதன்பிறகே ரித்தீஷ் சாரை நடிக்க வைத்தோம். அவரும் பிரமாதமாக நடித்திருந்தார்’’ என்று சொல்ல, ராஜன் ரித்தீஷ் தொடர்பான வேறு விஷயங்கள் சொன்னார்.

``நடிகர் சங்கத்தில் விஷாலை ஜெயிக்க வைப்பதற்காக சென்னை கே.கே. நகரில் தனியாக ஆபீஸ் போட்டு 50 லட்சரூபாய் வரை செலவு செய்தார். வெற்றிபெற்ற முதல் மேடையில்  அவரை ஏற்றாமல் எதிரே இருந்த இருக்கையில் ஐந்தாவது வரிசையில் அமரவைத்து அவமானம் செய்தனர். இப்போது நடக்கவிருக்கும் நடிகர் சங்கத்தின் தேர்தலில் விஷால் அணியை எதிர்த்து நிற்பதற்கு நாங்கள் திட்ட மிட்டுக்கொண்டிருந்தோம். அதற்குள் சின்ன வயதிலேயே அகால மரண மடைந்துவிட்டார்.’’

``சினிமா மேடைகளில் உங்கள் பேச்சு சர்ச்சையைக் கிளப்புகிறதே...’’ கேட்டதும் ராஜனின் முகம் கோபமாகிறது.

``உண்மையை உரக்கச் சொல்பவன் நான். அரசாங்கம் `சிகரெட், குடி தவறு' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது, அஜித்  `மங்காத்தா' படத்தில் மது அருந்துவது போலவும், சிகரெட் பிடிப்பது போலவும் நடித்தார். விஜய் `சர்கார்' படத்தில் சிகரட் பிடிப்பதுபோல நடித்ததும் எந்தவகையில் சரியானது. அஜித், விஜய்யைப் பார்த்து அவர்களின் ரசிகர்களும் கெட்டுப்போய் செத்துப்போனால் அவர்களுக்குப் பரவாயில்லையா?” என்று மீண்டும் கொதிக்கிறார்.

‘‘அப்பாவின் கோபம், ஆக்ரோஷம் எல்லாம் எனக்கும் இருந்தது. அவரிடம் எனக்குப் பிடித்ததும் அதுதான்’’ என்று பிரபு சொல்ல, ராஜன் மகனைப் பேரன்போடு அணைத்துக்கொள்கிறார்.

- எம்.குணா, படம்: க.பாலாஜி