பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“உடலைச் சிதைத்தாலும் குரல் அடங்காது!”

“உடலைச் சிதைத்தாலும் குரல் அடங்காது!”
பிரீமியம் ஸ்டோரி
News
“உடலைச் சிதைத்தாலும் குரல் அடங்காது!”

“உடலைச் சிதைத்தாலும் குரல் அடங்காது!”

துணிவு, வீரம் என்ற சொற்களைக் கேட்டதும் உங்கள் மனத்திரையில்  சில சித்திரங்கள் தோன்றும். மீசை முறுக்கு, போர்வாள், ஞானச் செருக்கு என்பதில் ஒன்றாக அது விரியும். ஆனால், துணிவென்பது இரண்டு கைகளையும் ஒரு காலையும் ஆதிக்க சாதியின் அரிவாள்களுக்குக் காவுகொடுத்து, உருக்குலைந்த தனது மற்றொரு காலுடன் நீதிக்காக உறுதியுடன் போராடுவது என்பதற்கான வாழும் உதாரணம் பாந்த் சிங்.

“உடலைச் சிதைத்தாலும் குரல் அடங்காது!”


இடதுசாரி இயக்கங்களின் மேடைகளில் பாடும் பிரசாரப் பாடகர் பாந்த் சிங். இயக்குநர் ராஜுமுருகனின்  ‘ஜிப்ஸி’ படத்தில் நடித்திருக்கும் பாந்த் சிங்கின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் ‘துணிவின் பாடகன் பாந்த் சிங்’ சமீபத்தில் ‘காம்ரேட் டாக்கீஸால்’ வெளியிடப்பட்டது.  வெளியீட்டுக்காகச் சென்னை வந்தவரைச் சந்தித்தேன்.

சர்வீஸ் அப்பார்ட்மென்ட்டின் குறுகலான மாடிப்படிகளில் எதிரொலித்துக்கொண்டிருந்தது  பாந்த் சிங்கின் பஞ்சாப் பாடல். அவர் குரலே கைகளாய், கால்களாய், உயிர்ப்பு ததும்பும் ஆன்மாவாய் மாறுகிறது. தன் பாதிக் கையை மேலே உயர்த்தி வரவேற்றார் பாந்த் சிங். யார் இவர்? எதை எதிர்த்துப் போராடினார்?
 
“ உலகில் எந்தப் பெண்ணுக்கு  நடந்தாலும், கதைகளாகக் கேட்டால்கூடத்  தாங்கிக்கொள்ள முடியாத அந்தத் துயரச் சம்பவம் என் மகளுக்கு நடந்தது.  என் இதயம் துருப்பிடித்த கத்தியால் அறுபடு வதைப்போன்ற வேதனை எனக்கு. அந்த நாள் எனக்கு நன்றாக நினை விருக்கிறது. ஜூலை 6, 2002.

என் மகள் ஆதிக்க சாதியைச் சேர்ந்த சில வெறிபிடித்த மிருகங்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டாள். என் மகள் ‘அப்பா, இனி இது ஒருபோதும் வேறு எந்தப் பெண்ணுக்கும் நிகழாமலிருக்க எனக்கு நீதி கிடைக்க வேண்டும். எனக்கான நீதியைப் பெற்றுத் தருவீர்களா அப்பா’ என்று கதறினாள். சிறுவயதிலிருந்து பலமுறை என்னை என் மகள் ‘அப்பா’ என அழைத்திருக்கிறாள். ஆனால் அப்போது அவள் அழைத்தது, என் ஈரக்குலையை அறுத்தது போலிருந்தது.

“உடலைச் சிதைத்தாலும் குரல் அடங்காது!”

அந்த அழைப்பு என்னை ஏதோ செய்தது. என் மகளின் பெயர் பல்ஜித் கவுர். ‘பல்ஜித்’ என்பதற்கு வலிமை மிக்க வெற்றி என்று அர்த்தம் ‘நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் உயர்சாதியினர் நமக்கு வேலை கொடுக்க மாட்டார்கள்’  என எங்கள் கிராமத்துப் பஞ்சாயத்தில் என்னைத் தடுத்தார்கள். நண்பர்கள், உறவினர்கள் உயர்சாதியினரைக் கண்டு அஞ்சினார்கள். அவர்கள் அந்த அச்சத்துக்குப் பழக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் நான் வழக்கு தொடுத்தேன். எங்கள் ஊரில் உயர் சாதியினர் மேல் தொடுக்கப்பட்ட முதல் வழக்கு அதுதான்.

நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அந்த நான்கு மிருகங்களுக்கும் ஆயுள் தண்டனை கிடைத்தது. அன்றைக்கு நான் அடைந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் என் வாழ்நாளுக்குப் போதும். அந்த வழக்கின் தீர்ப்பு என் கிராமத்தின் முகத்தைக் கொஞ்சமாவது மாற்றிய மைத்திருக்கிறது. வளைந்த எங்கள் மக்களின் முதுகுகள் நிமிர்ந்தன. ஆதிக்கச் சாதிவெறி கொஞ்சம் அடங்கியது.

எங்களுக்கு நீதி கிடைத்த பிறகு எங்கள் கிராம மக்களுக்குப் புது நம்பிக்கை பிறந்தது. அவர்கள் இப்போது ஓட்டுக்காகப் பணமோ, மதுவோ வாங்குவதில்லை. உழைப்புக்கான ஊதியம் சலுகை அல்ல; உரிமை என உணர ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களை இப்போது யாராலும் அவ்வளவு சுலபமாக ஒடுக்கவோ, சுரண்டவோ முடியாது’’ என, இரு ‘கைகளையும்’ உயர்த்தி சத்தமாகச் சிரித்தார் பாந்த் சிங்.

‘நீண்ட போராட்டம்’ என்று பாந்த் சிங் இரண்டே வார்த்தைகளில் சொல்லிவிட்டாலும் அவர் எதிர்கொண்ட கொடுமைகள் வலிநிறைந்தவை.

“உடலைச் சிதைத்தாலும் குரல் அடங்காது!”

பஞ்சாபின் மான்ஸா மாவட்டம், பூர்ஜ் ஹப்பார் கிராமம்தான் பாந்த் சிங்கின் ஊர். இடதுசாரி விவசாய இயக்கத்தின் உறுப்பினர். சிறுவயது முதலே ஊரில் தனக்கு மூத்தவர்கள் பாடும் விடுதலைப் பாடலைக் கேட்டும், பாடியும் வளர்ந்தவர். இரும்புப்பொருள்களை வாங்கி விற்பது, சந்தையில் காய்கறிகளை வாங்கி விற்பது எனச் சிறுதொழில்கள் மூலம் வருமானம் ஈட்டியுள்ளார். தன் மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் வேண்டி வழக்கு தொடுத்த காரணத்துக்காக அவர்மீது பலமுறை தாக்குதல் நடந்துள்ளது. முதல் முறை அவரை இரும்புக் கம்பியால் அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். உடல் சரியானதும் மீண்டும் நீதிமன்ற வாய்தாவுக்குச் சென்றுள்ளார். மறுமுறை புல்லட்டை அவர்மீது மோதித் தாக்கியுள்ளனர். அப்போதும் அவர் வழக்கிலிருந்து பின்வாங்கவில்லை. ஆத்திரம் கொண்டவர்கள் ஒரு கோதுமை வயலின் அருகில் அவருடைய இரு கைகளையும், ஒரு காலையும் வெட்டிவிட்டு, மற்றொரு காலை அடித்துச் சிதைத்துள்ளனர். `` `இப்போது மிச்சமிருக்கும் உயிர் எங்கள்மீதான பயத்தை உன் மக்களுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கும்’ என்றனர்.  ஆனால் நான் சோர்ந்து போகவில்லை.  என்னிடத்தில் மிச்சமிருக்கும் என் குரலை வைத்து அடக்குமுறைமீதான பயத்தைப் போக்கவே விரும்பினேன்” என்றவருக்கு பிளாஸ்டிக் டம்ளரில் தண்ணீர் ஊட்டினார் அவரின் மனைவி ஹர்பன்ஸ் கவுர்.

“கைகால்கள் வெட்டப்பட்ட நிலையில் அந்தச் சரலைக் காட்டில் மணல் மூட்டைபோல என் கணவர் கிடந்தார். ரத்த வனமாகிப்போன அந்த நிலத்தில் துடிதுடித்து  நான் அழுதுகொண்டிருந்தேன். எப்போதும் எனது தோள் தட்டித் தேற்றும் அவரது வலதுகரம் என்னைத் தேற்ற எழவேயில்லை. 

அவர் உடலைச் சிதைத்தாலும்  அவர் துணிச்சலையோ உறுதியையோ சிதைக்க முடியவில்லை. எங்களுக்கு எட்டுக் குழந்தைகள். எல்லோரும் இப்போது மிகுந்த மனவுறுதியுடன் இருக்கிறோம். என் மகள் பல்ஜித் கவுர் இப்போது நன்றாக இருக்கிறார். நாங்கள் எங்கள் ஊரில் நிமிர்ந்தே நடந்து செல்கிறோம்” என்றவரின் குரல் நடுங்கிக் கண் கலங்க, பாந்த் சிங் ஒரு பஞ்சாபி தாலாட்டுப் பாடலைப் பாடி “இப்போது இவள்தான் என் வலது கரம்” எனச் சத்தமாகச் சிரித்தார். கிளம்புவதற்குமுன் `இப்போதும் உங்கள்மீது தாக்குதல் நிகழ்கிறதா’ என பாந்த் சிங்கிடம் கேட்டோம்.

“என்னிடம் மிச்சமிருக்கும் என் குரலை அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. ஏனென்றால் என் ஒற்றைக் குரல்வளையிலிருந்து மட்டும் ஒலிக்கவில்லை இந்தக் குரல். அது மனித மாண்பை மீட்டெடுக்க யத்தனிக்கும் ஒவ்வொருவருடைய குரலும்தான். அவர்கள் பாடும் கீதம் என்னுடைய கீதம்தான். அது மக்களுக்கான குரல். மக்களின் கீதம்.”

உரத்து ஒலிக்கிறது பாந்த் சிங்கின் குரல். அதில் நம் அனைவரின் குரல்களையும் கேட்கலாம்.

- சக்தி தமிழ்ச்செல்வன்; படங்கள்: பா.காளிமுத்து