
“என்னை ஜெயிலில் தள்ளப்போறாங்களாம்!”
பாண்டவர் அணி, சங்கரதாஸ் அணி என்று பிரிந்து யுத்த களம் காண்கிறது கோலிவுட் உலகம். ‘இரண்டு அணிகளுக்குப் பின்னாலும் இரண்டு அரசியல் கட்சிகள்’ என்று பேசப்படும் சூழலில் விஷாலைச் சந்தித்தேன்.

“கடந்த தேர்தலில் உங்களோடு இருந்த ஆர்.கே.சுரேஷ், உதயா, சங்கீதா, குட்டிபத்மினி உட்பட பலர் இன்று எதிரணியில். என்ன காரணம்?”
“நண்பர் உதயா, `எங்கள் படங்களை தியேட்டருக்குக் கொண்டுவர விஷால் உதவி செய்யவில்லை’ன்னு என்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைக்கிறார். நான் சொன்னேன்னுதான் அவரோட ‘உத்தரவு மகாராஜா’ படத்தை 12 தியேட்டர்ல ரிலீஸ் பண்ணினாங்க. ஆனா, இரண்டு காட்சிகள்கூட ஓடலைன்னா அதுக்கு அவங்க என்ன செய்வாங்க? அப்படித்தான் உதயம் தியேட்டர்ல இருக்கிற பாலாஜிக்கு போன்செய்து, ‘என் நண்பன் உதயாவோட படத்தை ரெண்டு காட்சிகளாவது போடுங்க’ன்னு கேட்டேன். நான் சொன்னதுக்காகப் போட்டாங்க. காலைக் காட்சிக்கு வெறும் நாலே நாலுபேர் வந்திருக்காங்க. அதை நான் வெளிப்படையா பேசினதுல உதயாவுக்கு அவமானமாகிடுச்சு. அந்தப் படத்துக்காக உதயாவுக்கு நான் 10 லட்சம் கொடுத்திருக்கேன். பட ரிலீஸுக்காக ஆல்பர்ட் என்ற என் நண்பர் 86 லட்சம் கொடுத்திருக்கார். கடைசி நேரத்துல என்கிட்ட கொடுக்க பணம் இல்லை. அதுக்காக கோவிச்சுக்கிட்டு எதிரணிக்கு போனா நான் என்ன செய்ய முடியும்? ‘மலேசிய நட்சத்திர கிரிக்கெட் விழாவுல ஊழல் நடந்திருக்கு’ன்னு சங்கீதா சொல்லியிருக்காங்க. அந்த நிகழ்ச்சி நடந்தப்ப சங்கீதா எங்க செயற்குழு உறுப்பினர். அப்போ ஊழலுக்கு அவங்களும் உடந்தையா?
ஐசரி கணேஷிடம் நடிகர் சங்கக் கட்டடம் கட்டப் பணம் வாங்கியது உண்மைதான். அந்தப் பணத்துக்கு இன்னும் வட்டி கட்டிக்கொண்டிருக்கிறோம். அதுதவிர அவர் நன்கொடையாக ஒரு கோடி கொடுத்திருக்கார். அதை மறுக்கவில்லை. கார்த்தி ஒரு கோடி நன்கொடை கொடுத்திருக்கிறார். நான் 37 லட்சம் கொடுத்தேன். மயானம் மாதிரி தரைமட்டமா கட்டாந்தரையா கிடந்த நிலத்தை அண்ணாந்து பார்க்கிற அளவுக்குக் கட்டடமா உருவாக்கியிருக்கோம். ‘சின்னப்பசங்கன்னு நினைச்சோம். இப்படி அசத்திப்புட்டீங்களே’ன்னு, பார்க்கிறவங்க பிரமிச்சுப் பாராட்டுறாங்க. ஆனா இவங்க ஊழல்னு சொல்றாங்க. நாங்க ஊழல் பண்ணினோம்னு ஆதாரத்தைக் காண்பிச்சா, சரத்குமார், ராதாரவியை சங்கத்தோட அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கினமாதிரி நாங்களாவே வெளியே போயிடுவோம். அதை விட்டுட்டு நடிகர் சங்கக் கட்டடத்தைக் கட்டக்கூடாதுன்னு சொல்றதுக்கு நீங்கள் யார்?”
“ ‘எங்களுக்கு ரஜினி ஆதரவு இருக்கு’ன்னு பாக்யராஜ் சொல்லியிருக்காரே?”
“ராதாரவி பதவியில இருந்தப்போ பாக்யராஜ் சார் எங்கே போயிருந்தார்? போனமுறை ராகவேந்திரா மண்டபத்துல மீட்டிங் போட்டப்ப, பெரிய டைரக்டராச்சேன்னு அழைச்சோம். அதுக்கே ரொம்ப யோசிச்சுட்டுதான் வந்தார். இப்ப ‘ரஜினி ஆதரவு எங்களுக்கே’ன்னு சொல்றார். இப்படித்தான் போன தேர்தல்ல ராதாரவி சாரும் சொல்லிட்டிருந்தார். இதை இவங்க சொல்லக்கூடாது, ரஜினி சார்தான் சொல்லணும்.”
“போன தேர்தல்ல உங்களுக்கு ஆதரவா இருந்த ஐசரி கணேஷ் இப்போது எதிர்த்து நிற்கிறாரே?”
“ஒருநாள் நானும் கார்த்தியும் பேசிட்டிருக்கும்போது, ‘நமக்கு எதிரா ஒரு டீம் ரெடியாகுது. அதை ஐசரி கணேஷ் சார்தான் உருவாக்குறார்’னு கார்த்தி சொன்னார். ‘நமக்கும் ஐசரி சாருக்கும் ஒரு பிரச்னையும் இல்லையே. வா நேர்லபோய்ப் பேசுவோம்’னு நானும் கார்த்தியும் கிளம்பிப் போனோம். அவரைப் பார்த்த அடுத்த நொடியே, ‘நீங்க ஏன் தி.மு.க தலைவர் ஸ்டாலினைப் பார்க்கப் போனீங்க?”ன்னு கேட்டார். `சின்னவயசுல வேளச்சேரியில இருந்த காலத்துல இருந்தே அவரை எங்களுக்குத் தெரியும். அவர் எங்க குடும்பத்துல ஒருத்தர் மாதிரி. அதனாலதான் அவரைப் பார்க்கப் போனேன், அதிலே என்ன தப்பு?’ என்றேன். ‘உங்கள் மேலே ஆளுங்கட்சி பயங்கரக் கோபமா இருக்கு. பத்து அமைச்சருங்க உங்களுக்கு எதிரா வேலை பார்க்க ரெடியா இருக்காங்க, நீங்க இந்தத் தேர்தல்ல ஜெயிக்க முடியாது’ன்னு சொன்னவர், ‘என் 26 காலேஜ்களையும் காப்பாத்திக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கேன். எனக்கு ஓட்டு போடறதுக்காக உறுப்பினருக்குப் பத்தாயிரம் ரூபாய் கொடுக்கக்கூடத் தயாரா இருக்கேன். நடிகர் சங்கக் கட்டடத்தை உங்களால திறக்க முடியாது’ன்னு படபடன்னு பேசினார்.
`சார், நடிகர் சங்கத்துல மொத்தம் 3,179 ஓட்டுகள் இருக்கு. ஒவ்வொரு உறுப்பினரும் எப்போ நம்ம கட்டடத்தைப் பார்க்கப்போறோம்னு ஏங்கிட்டிருக்காங்க. இந்தச் சமயத்துல இப்படியெல்லாம் சொல்லாதீங்க. நானும், கார்த்தியும் தப்பு பண்ணிட்டோம்னு நிரூபிச்சுட்டீங்கனா பதவியைத் தூக்கிப்போட்டுட்டு அடிப்படை உறுப்பினர் கார்டையும் எடுத்துப்போட்டுட்டுப் போயிட்டே இருக்கோம்’னு சொன்னேன். ‘உங்க மேல எஃப்ஐஆர் போட்டு ஜெயிலுல தள்ளுறதுக்கு வேலை நடந்துகிட்டிருக்கு’ன்னு சொன்னார். ‘என் நேர்மை மேல நடிகர் சங்க உறுபினர்களுக்கு நம்பிக்கை இருக்கு. ஜெயில்ல இருந்துகிட்டே ஜெயிச்சுக் காட்டறேன். உங்களுக்கு விருப்பம் இருந்தா எலெக்ஷன்ல நில்லுங்க. அதை விட்டு ஆளுங்கட்சி எனக்கு எதிரா இருக்கறதா பொய் சொல்லாதீங்க. நாலுமாசம் கழித்து நடிகர்சங்கக் கட்டடத்தைத் திறக்கிறதுக்கு இப்ப இருக்கிற முதலமைச்சரைத் தான் அழைக்கப்போறோம். கட்டடக் கல்வெட்டுல இப்ப உள்ள முதல்வர் பெயரைத்தானே பொறிக்கப்போறோம். அப்புறம் எதுக்கு இந்த அரசு விஷாலை எதுக்கணும்’னு கேட்டுட்டு நானும் கார்த்தியும் வந்துட்டோம்.”

“தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்த நிதியில் பெரும் பகுதியை நீங்கள் செலவு பண்ணிட்டதா சொல்றாங்களே?”
“கவுன்சிலில் இருக்கும் உறுப்பினர்களுக்குக் கொடுத்தது எப்படி ஊழலாகும்? சொசைட்டி சட்டப்படி உறுப்பினர்களுக்கு டிரஸ்ட் பணத்தைக் கொடுப்பது தவறே இல்லை. தீபாவளி, பொங்கல் பரிசுகளை நல்லா வசதியாக இருக்குற பெரிய நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் எல்லாரும் வாங்கியிருக்காங்க. அது தவறுன்னா அந்தப் பரிசை வாங்காமல் அப்பவே தவிர்த்திருக்கலாமே.”
“தயாரிப்பாளர் சங்கத்தில் உங்களை வேலை செய்ய விடாமல் யாராவது தடுத்தாங்களா?”
“உண்மையைச் சொல்லணும்னா தயாரிப்பாளர்கள் நிலைமை விவசாயிகள் போலத்தான். முதல்போட்டுப் பயிரை உருவாக்கி விற்றால் கடைசியில் மூன்றில் ஒரு பங்கு லாபம்கூடக் கிடைக்காது. விவசாயிட்ட இருந்து ஒரு கிலோ முப்பது ரூபாய்ன்னு வாங்குற தக்காளியை கோயம்பேட்டுல 100 ரூபாய்க்கு விக்கிறாங்க. இடையில உள்ளவன் 70 ரூபாயை அடிச்சிட்டுப் போயிடுறான். எங்கேயாவது பணக்கார விவசாயியைப் பார்த்திருக்கீங்களா? பிரச்னைகளைத் தீர்க்க தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கான பதவிக்காலம் ரெண்டு வருஷம் என்பது போதவில்லை.”
“தயாரிப்பாளர் சங்கத் தலைவரா இருந்த உங்களோட ‘அயோக்யா’ படத்துக்கே ரிலீஸில் பிரச்னை வந்துச்சே?”
“திட்டமிடல் எதுவுமே இல்லாமல் படத் தயாரிப்பில் இறங்கி விடுறாங்க. நாமளும் சம்பளம் வாங்கிட்டு நடிச்சிடுறோம். அதை ரிலீஸ் செய்ய முயற்சி பண்ணும்போது அவங்களோட பழைய படங்களோட பிரச்னை எல்லாம் ஒண்ணா சேர்ந்து இந்தப் படத்தை இடைஞ்சல் பண்ணுது. ஒரு பிளாக் பஸ்டரா வர வேண்டிய படத்தை நாசமாக்கிட்டாங்க. ஒரு குழந்தையைக் கொன்னுட்டாங்கன்னுதான் சொல்லணும். ஒரு படத்தோட ரிலீஸுக்கு முன்னாடி அந்த ஹீரோவுக்கு வரும் பாருங்க ஒரு நெஞ்சுவலி, அது என் எதிரிக்குக்கூட வரக் கூடாது. அதனாலதான் இனி சத்தியமா வெளி பேனர் படங்களில் நடிக்கவே மாட்டேன், சொந்தப் படங்கள்ல மட்டுமே நடிப்பேன்னு முடிவு பண்ணிருக்கேன். சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, ஆர்யா, விமல்னு ஏகப்பட்டபேர் இந்த இடியாப்ப சிக்கல்ல போனவருஷம் சிக்கித் தவிச்சாங்க.”
“ `தயாரிப்பாளர்கள் சங்கம் என்னை அழிக்கப் பார்க்குது’ன்னு வடிவேல் குற்றம் சாட்டியிருக்கிறாரே?”
“ ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ பட ஷூட்டிங் ஆறுநாள் மட்டுமே நடந்திருக்கு, எட்டரைக் கோடி ரூபாய் செலவாகியிருக்கு. நான் எந்தளவுக்கு இறங்கிப்போய் சமரச முயற்சியில வேலை பார்த்தேன் என்பது ஷங்கர் சார், ‘ஐங்கரன்’ கருணா சார், சிம்புதேவன் மூவரையும் கேட்டுப்பாருங்க, தெளிவா சொல்லுவாங்க. இப்போகூட நான் நடிச்சிட்டிருக்கிற சுந்தர்.சி சார் படத்துல நடிக்கிறதுக்கு வடிவேலு அண்ணனைக் கேட்டாங்க. வெளிநாட்டுல, ஷூட்டிங்ல நடிக்கும்போது இடையில ஏதாவது இடைஞ்சல் பண்ணுவாங்களோன்னு பயத்துலயே அவர் நடிக்க ஒப்புக்காமப்போயிட்டார்.”
“இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்தியதிலும் பிரச்னைன்னு சொல்றாங்களே?”
“ஆரம்பத்துல இளையராஜா இசை நிகழ்ச்சியை மூணு தனியார் நிறுவனம் எடுத்து நடத்த முன்வந்தாங்க. கடைசில ஒரு நிறுவனத்தின் கையில் பொறுப்பை ஒப்படைச்சோம். இசை நிகழ்ச்சி பிரமாதமா நடந்தது. ரஜினிசார், கமல்சார் கலந்துகிட்டு சிறப்பிச்சாங்க. கோர்ட்டு, கேஸ், ஸ்பான்ஸரிடம் மிரட்டல்னு ஏகப்பட்ட கெடுபிடி. இதனால பொருளாதார ரீதியா கடைசியில நாங்க நினைச்ச மாதிரி எதுவும் நடக்கலை”
-எம்.குணா, படங்கள்: கே.ராஜசேகரன்

விஷாலின் குற்றச்சாட்டுகள் குறித்து ஐசரி கணேஷ் அளிக்கும் விளக்கம் இது.
“நான் மிரட்டினேன்னு இப்போ சொல்கிறவர், அப்போதே ஏன் சொல்லலை? அப்பவே மீடியாவுல பேசியிருக்க வேண்டியதுதானே. இப்போ தேர்தலில் போட்டி கடுமையாக இருப்பதால் இப்படி சொல்வது எந்த விதத்தில் நியாயம்? விஷால் சொல்வது முற்றிலும் பொய். அவர் தோல்வி பயத்தில் பிதற்றுகிறார். நடிகர் சங்கத் தேர்தல் பிரசாரத்துக்கு எங்கள் காலேஜ் மாணவர்களைப் பயன்படுத்துவதாகச் சொல்வது தவறு. என்னோட கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டாச்சு. பசங்க அவங்கவங்க வீடுகள்ல இருக்காங்க. அப்புறம் எப்படி அந்த மாணவர்கள் தேர்தல் பிரசாரம் செய்ய முடியும்.”