
சக நடிகர்களையே சமமாக நடத்தாத உச்ச நட்சத்திரங்களும் இயக்குநர் பிரபலங்களும் சினிமாத் தொழிலாளர்களை மட்டும் சமமாக நடத்திவிடுவார்களா என்ன?
விஜயகாந்த் நடிகராக இருந்து தலைவரானவர். அதற்குக் காரணம், வெறுமனே அவர் படங்கள் மட்டுமல்ல. ‘விஜயகாந்த் நல்ல மனிதர்’ என்று அவருக்கு இருந்த பிம்பமும் முக்கியமான காரணம். மதுரை அரிசி ஆலை முதலாளியாக இருந்த விஜயகாந்த் தமிழ் சினிமாவில் நுழைந்து உச்சத்தை எட்டியபோதும் அதே வெள்ளந்தி மதுரைக்கார மனிதராகவே இருந்தார். அவருடைய நடிப்பு, அவர் படங்களில் இருக்கும் அரசியல் என்று பலவற்றிலும் பலருக்கும் விமர்சனம் இருக்கலாம். ஆனால், விஜயகாந்த் குறித்து அவருடன் பழகிய சினிமாக்காரர்களிடம் விசாரித்தால் ஒரே வார்த்தையில், ‘தங்கமான மனுஷன்’ என்பார்கள்.
தமிழ் சினிமாவுலகம் என்பது ஈகோவுக்கும் ஏற்றத்தாழ்வுக்கும் பெயர்போன இடம். யார் எப்போது இடறி விழுவார்கள், இடறி விழாவிட்டாலும் எப்போது காலை வாரிவிடலாம் என்று காத்திருப்பதுதான் கோலிவுட் யதார்த்தம்.

சக நடிகர்களையே சமமாக நடத்தாத உச்ச நட்சத்திரங்களும் இயக்குநர் பிரபலங்களும் சினிமாத் தொழிலாளர்களை மட்டும் சமமாக நடத்திவிடுவார்களா என்ன? ஹீரோவுக்கும் இயக்குநருக்கும் ஒருவகையான சாப்பாடு, சினிமாத் தொழிலாளர்களுக்கு வேறுவகையான சாப்பாடு என்பது தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி. ஆனால் அந்த மரபை உடைத்துக்காட்டினார் மதுரை மைந்தர். விஜயகாந்த் படத்தின் படப்பிடிப்பில் கடைநிலை ஊழியருக்கும் விஜயகாந்துக்கும் ஒரேவகையான உணவுதான் பரிமாறப்படும். இந்தப் பண்புதான் பலரையும் விஜயகாந்தை நேசிக்கவைத்தது. அதுதான் அவரை ‘கேப்டன்’ ஆக்கியது. திரைத்துறையில் ஆரம்பக்கட்ட முயற்சிகளில் இருந்த பலரையும் கைதூக்கிவிட்டவர் விஜயகாந்த்.
அப்போது, `ஊமை விழிகள்’ படத்தின் தயாரிப்புப்பணிகளில் இருந்தார் ஆபாவாணன். படத்தில் குறைந்த நேரமே வரும் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்க விஜயகாந்தை அணுகினார். ‘எல்லோருமே இளைஞர்கள். திரைக்கல்லூரி மாணவர்கள்’ என்ற வார்த்தையைக் கேட்டதுமே, விஜயகாந்த் உற்சாகமானார். சம்பளம் குறைவுதான். ஆனாலும், நடித்துக்கொடுத்தார். திரைப்படக் கல்லூரி மாணவர்கள் அடுத்தடுத்து தமிழ் சினிமாவுக்குள் படையெடுத்ததற்கு வாசல் அமைத்துக்கொடுத்தவர் விஜயகாந்த்.
இன்று விஜய்யும் சூர்யாவும் உச்ச நட்சத்திரங்கள். ஆனால் அவர்களது ஆரம்பக்காலத்தில் அவர்கள் முன்னேற உதவியவர் விஜயகாந்த். ‘நாளைய தீர்ப்பு’ - விஜய்யின் முதல் படம். எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை. இரண்டாவது படமான ‘செந்தூர பாண்டி’யில் எஸ்.ஏ.சந்திரசேகர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சிறப்பு வேடத்தில் நடித்துக்கொடுத்தார் விஜயகாந்த். விஜய்க்கு ‘செந்தூர பாண்டி’ என்றால், சூர்யாவுக்குப் ‘பெரியண்ணா’.
பல புதுமுக இயக்குநர்கள் படங்களில் நடித்துக்கொடுப்பதாக இருந்தாலும் சரி, புதிய இளைஞர்களின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதாக இருந்தாலும் சரி, சின்னக்கவுண்டரைப் போல தோளில் துண்டைப் போட்டுக்கொண்டு முதல் ஆளாக நின்றவர் விஜயகாந்த்.

அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே தமிழகம் முழுவதும் ரசிகர்மன்ற நெட்வொர்க்கை வலிமையாக உருவாக்கியவர் விஜயகாந்த். அவரது கறுப்பு நிறம், அநியாயத்தைத் தட்டிக்கேட்கும் கேரக்டர்கள், அனல் பறக்கும் வசனங்கள், அந்தரத்தில் பறக்கும் சண்டைக்காட்சிகள்... இவற்றுடன் பலருக்கும் உதவும் அவரது தாராள குணமும்தான் இந்த ‘காந்த்’ காந்தத்தை நோக்கி இரும்பு இளைஞர்களை இழுத்துவந்தது.
சேலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் மஹாலட்சுமி ஐயங்கார் பேக்கரி இருக்கும். அங்கே எவர் நுழைந்தாலும் விஜயகாந்தைப் பற்றி ஒருவார்த்தையேனும் பேசாமல் வெளிவரமாட்டார்கள். ஏனென்றால், அந்தக் கடையின் முதலாளி விஜயகாந்த் கைதூக்கிவிட்டவர்களில் ஒருவர். விஜயகாந்தின் படம் கடையில் நடுவாந்தரமாக மாட்டப்பட்டிருக்கும். இப்படி பல ஊர்களில் பல கதைகள்.
நடிகர்சங்கத்துக்கு எத்தனையோ தலைவர்கள் வந்தார்கள்; போனார்கள். ஆனால் ‘நல்ல தலைவர்’ என்று பட்டியலிட்டால் அதில் விஜயகாந்துக்கு ஒரு முக்கிய இடமுண்டு. நீண்ட வருடங்களாக இழுபறியில் இருந்த நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தவர் விஜயகாந்த். ஆனால் இன்று விஜயகாந்தால் கடனை அடைக்கமுடியவில்லை என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, அவர் சொத்துகளை ஏலம் விடுவதாக அறிவித்திருக்கிறது. ஏன் இந்த நிலைமை? விஜயகாந்த் எங்கே வீழ்ந்தார்?
2005-ம் ஆண்டு செப்டம்பரில் மதுரையில் கட்சியைத் தொடங்கினார் விஜயகாந்த். அந்த மேடையில் அன்று பிரேமலதாவோ, சுதீஷோ இல்லை, சுந்தர் ராஜனும் ராமு வசந்தனும்தாம் மையமாக இருந்தார்கள். ஆனால், இன்றைக்கு அது அப்படியே எதிர்நிலையில் இருக்கிறது. விஜயகாந்த் சறுக்கிய இடம் இதுதான். எந்த வாரிசு அரசியலை அவர் விமர்சித்தாரோ, அதே வாரிசு அரசியலை அவரும் செய்ய ஆரம்பித்ததுதான் அவரது வீழ்ச்சிக்கு காரணம்.
அந்த மேடையில் விஜயகாந்த் பேச ஆரம்பித்தபோது, ‘தலைவா’ என்று தண்ணீர் பாக்கெட்டைக் கிழித்து வீசிய தொண்டன், இப்போது எங்கிருக்கிறானோ தெரியவில்லை. அவன், சினிமா டிக்கெட்டை அப்படிக் கிழித்து வீசிய காலத்தில்கூட நிம்மதியாக இருந்தான். அவனைத் தொண்டனாக்கி, தெருத்தெருவாகக் கொடிகட்ட வைத்து, விஜயகாந்த் அப்படி எதை அடைந்தாரோ தெரியவில்லை. இன்று விஜயகாந்தைச் சுற்றி அவர் குடும்பம்தான் இருக்கிறது. தொடக்கக்காலத்தில் தோள் கொடுத்த ஆரம்பக்கால நண்பர்கள் இல்லை. விஜயகாந்தின் இன்றைய நிலை குறித்து அவர்களில் சிலரிடம் பேசினோம்.

“விஜயகாந்தைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அவருக்கே தெரியுமா என்று தெரியவில்லை” என்று வேதனையுடன் பேச ஆரம்பித்தார், தே.மு.தி.க பொருளாளராகவும் எம்.எல்.ஏ-வாகவும், விஜயகாந்தின் நெருங்கிய நண்பராகவும் இருந்த சுந்தர்ராஜன்.
“ சின்ன வயதிலிருந்து அவருடன் பழகியதால் அவரைப்பற்றி நன்கு தெரியும், தனிப்பட்ட முறையில் கடன் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்த மறப்பவர் அல்லர். இப்போது அவரின் உறவினர்கள், நண்பர்கள் யாரும் விஜயகாந்தைச் சந்திக்க இயலாத நிலை. அதை அவரது குடும்பம் அனுமதிப்பதில்லை. முப்பது வருடங்களுக்கு மேலாக அவருடன் ஒன்றாக இருந்து அவர் சம்பாதித்த பணத்தை வீணாக்காமல் பல சொத்துகளை வாங்கிக் கொடுத்தேன். ஒரு ரூபாய்கூட அவரிடமிருந்து எடுக்க நினைத்ததில்லை. அந்த விசுவாசத்துக்காக ஊத்துக்கோட்டையில் விஜயகாந்த் எனக்கு வாங்கிக் கொடுத்த முப்பது ஏக்கர் நிலத்தை, விஜயகாந்த் மனதை மாற்றி, திருப்பிக் கேட்க வைத்தனர். அதை எழுதிக் கொடுத்துவிட்டுத்தான் வெளியில் வந்தேன். அதை உடனே பலகோடிக்குக் கைமாற்றினார்கள். இப்போதுகூட வங்கிக்கடனை அடைத்துவிடுவோம் என்று பிரேமலதா சொல்கிறார். இது வெளியே தெரியாமல் இக்கடன் பிரச்னையை வங்கியிலேயே பேசி, சுலபமாகத் தீர்வு கண்டிருக்கலாமே? இது வெளிப்படையான விவகாரம் ஆனதற்குப் பின்னால் ஏதோ இருக்கிறது” என்றார்.
விஜயகாந்தின் ஆரம்பக்கால நண்பர்களில் ஒருவரான திருப்பதியிடம் பேசினோம். “விஜயகாந்த், இப்ராஹிம் ராவுத்தர் ஆகியோருக்கு நானும் நண்பராக இருந்தேன். சின்ன வயதில் மதுரையில் நாங்கள் சுற்றாத இடமில்லை.
அப்போதே எல்லோருக்கும் உதவும் குணம் கொண்டவர் விஜயகாந்த். நான் சினிமாவில் நடிக்கச் சென்னை சென்றபோது, நானும் அவர்களுடன் இருந்தேன். திருமணத்துக்குப் பிறகுதான் பழைய நண்பர்கள் பலருடன் அவருக்குத் தொடர்பில்லாமல்போனது. அவர் அரசியலில் வளர்ந்து வரும்போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அரசியலில் உச்ச நிலைக்குப் போயிருக்க வேண்டியவர், உடல்நிலை சரியில்லாமல் போனதாலும் குடும்பத்திலுள்ள சிலரின் தவறான ஆலோசனையாலும் பல விமர்சனங்களுக்கு ஆளானார். அதைவிட, இப்போது அவர் வாங்கிய கடனைக் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறார் என்று சொல்வதைத் தாங்க முடியவில்லை. என் நண்பர் பழையபடி மீண்டு வரவேண்டும்” என்றார்.
விஜயகாந்த்மீது அக்கறை கொண்ட அனைவரின் எண்ணமும் இதுதான். மீண்டு வாருங்கள், மீண்டும் வாருங்கள் கேப்டன்!
- செ.சல்மான், சக்திவேல்; ஓவியம்: ஹாசிப்கான்