Published:Updated:

``எனக்கும் என் மகன் ராசுக்குட்டிக்கும் இடையே நடக்கும் கதைதான் ‘சூப்பர் டீலக்ஸ்’..!’’ - காயத்ரி

``எனக்கும் என் மகன் ராசுக்குட்டிக்கும் இடையே நடக்கும் கதைதான் ‘சூப்பர் டீலக்ஸ்’..!’’ - காயத்ரி
``எனக்கும் என் மகன் ராசுக்குட்டிக்கும் இடையே நடக்கும் கதைதான் ‘சூப்பர் டீலக்ஸ்’..!’’ - காயத்ரி

`நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, `புரியாத புதிர்’, `ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன்’, `சூப்பர் டீலக்ஸ்’, `மாமனிதன்’ எனத் தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களில் பயணித்து வருபவர் காயத்ரி. 

வருகிற மார்ச் 29-ம் தேதி வெளியாகவிருக்கும், `சூப்பர் டீலக்ஸ்’ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்தப் படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் காயத்ரி. அந்தப் படத்தில் நடித்தது குறித்துக் கேட்டால்,   

``என் கேரக்டர் பெயர் ஜோதி. என் மகன் பெயர் ராசுக்குட்டி. ராசுக்குட்டிக்கும் ஜோதிக்குமான வாழ்க்கை ஒரு சீராப் போயிட்டு இருக்கும். ஒரு நாளில் ஒரு விஷயம் நடக்கும். அதனால் அவங்க வாழ்க்கை வேறமாதிரி மாறிடும். அதை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் கதை’’ என சூப்பர் டீலக்ஸில் நடித்த அனுபவங்கள் மற்றும் தன்னுடைய சினிமா பயணம் என பல விஷயங்கள் பற்றித் தொடர்கிறார்,

``இந்தப் படத்தின் டிராவல் ரொம்ப சூப்பராக இருந்தது. `உங்கள் கேரக்டருக்கு இன்னும் பெயர் வைக்கல. இனிமேதான் யோசிக்கணும்’ என்று சொன்ன இயக்குநர்களிடமும் வேலைப் பார்த்திருக்கிறேன். இதுபோல இதுவரை நான் நடித்த படங்களின் இயக்குநர்களில் தியாகராஜன் குமாரராஜா வித்தியாசமானவரென்று சொல்லுவேன். 

காரணம், அவர் எங்களைக் கையாண்ட விதம். அடுத்த ஷூட்டிங் வரும்போது என்ன சீன் இன்றைக்கு இருக்கு என்பதற்கான வாய்ஸ் நோட் முன்கூட்டியே வாட்ஸ் அப்பில் அனுப்பிவிடுவார். அவருடைய கதைகளில் அவ்வளவு டீட்டெயிலிங் இருக்கும். அவர் சொல்லி முடிக்கும்போதே எல்லாம் புரிந்திருக்கும். எனக்கு அது வித்தியாசமாக இருந்தது. ரொம்பவே பர்ஃபெக்ட்டான ஆள். ஷாட் தனக்குத் திருப்தி ஆகும் வரை எத்தனை டேக் வேண்டுமானாலும் போவார். நாம் சில சஜக்‌ஷன் கொடுத்தால் அதையும் ஏற்றுக்கொள்ளக்கூடியவர் தியாகராஜா சார்’’ என்றவரிடம், எப்படிக் கமிட் ஆனீர்கள் என்று கேட்டதற்கு, 

`` ‘இப்படி ஒரு படம் எடுக்கப்போறோம். நீங்கள் அம்மா கேரக்டரில் நடிக்க வேண்டும்... முடியுமா’னு கேட்டார். `என்னப்பா திடீர்னு உங்களை அம்மாவாக நடிக்கச் சொல்றேனு நினைக்கிறீர்களா... நடிப்பில் விருப்பம் இல்லைனா வேண்டாம்னுகூட சொல்லலாம்’னு சொன்னார். இவ்வளவு பெரிய இயக்குநர் `இந்தக் கேரக்டரில் நடிக்க விருப்பமில்லைனாலும், பிரச்னை இல்லைனு சொல்றாரே’னு ஷாக் ஆகிடுச்சு. `அப்படியெல்லாம் இல்லை சார். நான் பண்றேன்’னு சொல்லி கமிட்டான படம்தான் இது. 

``அம்மா ரோலில் நடிப்பதில் உங்களுக்கு உண்மையில் தயக்கம் இருந்ததா..?’’ 

``அப்படி நடிப்பதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும், அதில் நம்முடைய திறமையைக் காட்டப் போறோம். அவ்வளவுதான். இன்னும் சொல்லப்போனால் இந்த அம்மா கேரக்டர் நான் எடுத்து நடிக்க வழிகாட்டியே `காக்கா முட்டை’ ஐஸ்வர்யாதான். அதில் அம்மாவாகத்தான் அவர் பண்ணியிருந்தார். அதனால் அவங்களுக்கு வாய்ப்பு வராமல் இல்லையே. போனில்கூட ஐஸ்வர்யாவும் நானும் பெருசாப் பேசினது கிடையாது. ஆனால், எனக்கு என்னத் தேவையாக இருந்தாலும் அதைத் தயங்காமல் கேட்பேன். அவரும் என்னிடம் தயங்காமல் கேட்பார்’’ என்றவரிடம், விஜய் சேதுபதி பற்றிக் கேட்டேன்,

``அவர் எப்போதுமே என்னுடைய நலம் விரும்பியாக இருக்கிறார். எல்லார்கிட்டயும் சொல்கிறதுதான், என்னை ஒரு நல்ல ஆர்டிஸ்ட் என அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார். அவருடைய ஆக்டிங்கைப் பார்த்துட்டு, 'பொறாமையா இருக்கு’னு சொல்லியிருக்கிறேன். `சூப்பர் டீலக்ஸ் டிரெய்லர் பார்த்துட்டு, அதில் டப்பிங் பேசியதைப் பார்த்ததாக அவரிடம் சொன்னேன். `உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கு’னு மெசேஜ் பண்ணேன். அவர் சந்தோஷப்பட்டு சிரிச்சார். `உங்களை நிரூபிக்க வாய்ப்பும் கிடைக்கிறது. அதே நேரம் அதைச் சரியா பயன்படுத்தி, நிரூபிச்சும் காட்டிடுறீங்க’னு சொல்லியிருக்கிறேன். 

விஜய் சேதுபதியுடன் இவ்வளவு படங்கள் டிராவல் ஆகியிருக்கேன். அவருக்கு என்னுடைய நடிப்புப் பிடிக்கும். ஒரு சீனைப் புரிந்துகொண்டு நான் நடிப்பேன் என்பதில் அவருக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் சில நெகட்டிவ் விஷயங்களையும் சொல்லியிருக்கிறார். 'டப்பிங் பேசும்போது கொஞ்சம் பொறுமையாக நிறுத்திப் பேசணும். அப்போதுதான் மற்றவர்களுக்குப் புரியும்’ என்பார். அதை இப்போ மாற்றிக் கொண்டிருக்கிறேன்.’’

``உங்களுக்கு வரும் பாராட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``மத்தவங்க சொல்லிக் கேட்கும்போது சந்தோஷமாக இருக்கு. ஐஸ்வர்யா ராஜேஷூம் என்னுடைய எல்லாப் படங்களும் பார்த்துட்டு என்னிடம் பேசுவா. சேது மாதிரிதான் ஐஸூம் எனக்கு. `இது வேற மாதிரி பண்ணியிருக்கலாம், இதை அப்படியே தொடர்ந்து பண்ணு’ எனவும் சொல்லியிருக்கா. இப்போதும், ஐஸூவோடு சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். ஐ லவ் டூ வொர்க் வித் ஹெர். என்னைத் தனியாக விட்டால் சந்தோஷமாக இருப்பேன். கூட்டம் எனக்கு ஒத்துக்கவே ஒத்துக்காது. ரொம்ப வித்தியாசமா பீல் பண்ணுவேன். ஃப்ரெண்ட்ஸ், வீட்டில் இருப்பவர்களுடன்தான் சேட்டைகள் எல்லாம் தெரியும்.’’

``கிளாமர் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா?’’

``கிளாமர் படம் கொடுத்தால் கண்டிப்பாகப் பண்ணுவேன். எனக்கு அப்படி நடிக்கவும் பிடிக்கும். அதில் நல்ல கதையும் வந்தால் கண்டிப்பாக நடிக்கத் தயாராக இருக்கிறேன்.’’

``காதல், திருமணம் எப்போது எதிர்பார்க்கலாம்?’’

``எனக்கு இப்போதாங்க கரியரே ஆரம்பித்திருக்கிறது. கரியர் என்றால் கல்யாணம் பண்ணக் கூடாது, கல்யாணம் பண்ணிக்கிட்டா கரியரை விட்டுவிட வேண்டும் என்கிற நிலை எல்லாம் இப்போது இல்லை. இப்போது சமந்தா திருமணத்துக்குப் பிறகு மறுபடியும் வந்துவிட்டார். சாயிஷாவும் தொடர்ந்து நடிப்பதாகச் சொல்கிறார்கள். இப்போ இருக்கிற இன்டஸ்ட்ரி அக்சப்ட் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. அதனால், கண்டிப்பாகத் திருமணம் செய்தாலும் தொடர்ந்து நடிப்பேன். ஆனால், இப்போதைக்கு ஐடியா இல்லை.’’

`` `மாமனிதன்’ படம் எப்படிப் போயிட்டு இருக்கு?’’

``1980 முதல் 2000-ம் ஆண்டு தேனி பக்கத்தில் நடக்கும் கதை. இது டைரக்டருக்கும் நெருக்குமானக் கதைனு சொல்லலாம். சீனு ராமசாமி சார் டைரக்‌ஷனில் நடிப்பது ரொம்பவே பிடிச்சிருக்கு. மறுபடியும் சேதுவுடன் நடிப்பது ரெட்டிப்பு மகிழ்ச்சி'' என்றார் காயத்ரி. 

அடுத்த கட்டுரைக்கு