Published:Updated:

`` `நீங்கதானா இது? நம்ப முடியலை'னு சந்தேகமா கேட்கிறாங்க!" - 'செம ஸ்லிம்' காவேரி

`` `நீங்கதானா இது? நம்ப முடியலை'னு சந்தேகமா கேட்கிறாங்க!" - 'செம ஸ்லிம்' காவேரி
`` `நீங்கதானா இது? நம்ப முடியலை'னு சந்தேகமா கேட்கிறாங்க!" - 'செம ஸ்லிம்' காவேரி

``நான் ரொம்ப வெளிப்படையான கேரக்டர். மனசுல எதையும் வெச்சுக்காம, எல்லாத்தையும் வெளிப்படையா பேசிடுவேன். தானா உடல் எடை குறையுது. எந்த சீக்ரெட்டும் கிடையாது."

`வைகாசி பொறந்தாச்சு' திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி, பிறகு சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்துப் புகழ்பெற்றவர், நடிகை காவேரி. சன் டிவி `தங்கம்' சீரியலில் இளவஞ்சியாக கலக்கியவர், பிறகு நடிப்பில் இருந்து பிரேக் எடுத்தார். காவேரி என்றாலே பப்ளி உடல்வாகு நம் ஞாபகத்துக்கு வரும். ஆனால் ஆளே ஒல்லியாக நமக்கு அதிர்ச்சியைக் கொடுக்கிறார். 

``பல ஆண்டுகளுக்கு முன்பு, என் அம்மாவின் மறைவினால் நான் ரொம்பவே கவலையில் இருந்தேன். இந்நிலையில் எனக்குக் கல்யாணமாக, நடிப்பிலிருந்து சில காலம் பிரேக் எடுக்க நினைச்சேன். குறிப்பா, `தங்கம்' சீரியல் இளவஞ்சி ரோல் எனக்குப் பெரிய புகழைக் கொடுத்துச்சு. அந்த சீரியல் தாக்கத்திலிருந்து வெளியில் வர நீண்ட காலமாச்சு. இந்நிலையில் மீண்டும் நடிக்க முடிவெடுத்தேன். `தங்கம்' சீரியல் இளவஞ்சி ரோல்ல நடிக்கிறப்போ நான் உடல் பருமனா இருந்தேன். அந்தத் தோற்றம், மக்கள் மற்றும் சின்னத்திரையினர் மனதில் ஆழமா பதிவாகிடுச்சு. இப்போவரை நான் அப்படித்தான் இருப்பேன்னு நினைச்சு, புது வாய்ப்புகளுக்காகக் கேட்கிறாங்க.

சமீபத்தில் ஒரு முன்னணி தொலைக்காட்சியில், இரு சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்துச்சு. அதுக்காக என் போட்டோ கேட்டாங்க. அனுப்பினேன். ஆனா, என் தோற்றத்தைப் பார்த்துட்டு, `இந்த போட்டோவில் இருப்பது நீங்கதானா? எங்களால நம்ப முடியலை. நிஜமாவே நீங்கதானா?'னு ஆச்சர்யமாவும் சந்தேகமாவும் பலமுறை கேட்கிறாங்க. அவங்க சந்தேகத்தில் நியாயம் இருக்கு. ஆனா, நான் என்ன பண்றது? வாய்ப்புக்காக, நான் எந்தப் பொய்யையும் சொல்ல விரும்பலை. பிறகு எந்த மனவருத்தமும் யாருக்கும் வேண்டாம். யாருக்கும் எந்தப் பிரச்னையும் இன்றி, சந்தோஷமா நடிப்புத் துறையில் வேலை செய்யவே நான் ஆசைப்படறேன்" என்பவர் தன் உடல் எடைக் குறைந்ததுக்குக் காரணத்தைச் சொல்கிறார்.

``சொன்னா நம்ப மாட்டீங்க! நீண்ட வருஷமா நான் எந்த உடற்பயிற்சியும் பண்றதில்லை. டயட்லயும் ஆர்வம் செலுத்தறதில்லை. சரியான அளவு சாப்பிடுவேன். ஆனா, என்னனு தெரியலை. சில வருஷத்துக்கு முன்னாடி என் உடல் எடை தானா குறைய ஆரம்பிச்சது. ஒருகட்டத்துல பயம் ஏற்பட்டு, மருத்துவரை அணுகினோம். ஆனா, எந்தப் பிரச்னையும் இல்லைனு டாக்டர் சொல்லிட்டார். போன வருஷம், `மெட்டி ஒலி' சீரியல் டீம் மீட்டிங் நடந்துச்சு. அப்போ, `ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிட்டே. உடல் எடையை ரொம்பவே குறைச்சுட்டே. என்ன சீக்ரெட்?'னு பலரும் கேட்டாங்க. தவிர, இதே கேள்வியை வெளிநிகழ்ச்சிகளிலும் பலர் கேட்கிறாங்க. நான் ரொம்ப வெளிப்படையான கேரக்டர். மனசுல எதையும் வெச்சுக்காம, எல்லாத்தையும் வெளிப்படையா பேசிடுவேன். தானா உடல் எடை குறையுது. எந்த சீக்ரெட்டும் கிடையாது. 

பலரும் உடல் எடையைக் குறைக்க ரொம்ப மெனக்கிடுறாங்க. எனக்கு அது இயல்பா நடந்திருக்கு. என் இந்தத் தோற்றத்தைப் பார்த்தால், மக்கள் ரொம்பவே ஆச்சர்யப்படுவாங்க. அதனால் இதுவரை இல்லாத வகையில, புதுமையான, பவர்ஃபுல் ரோல்ல நடிக்கவே விருப்பப்படுறேன். நடிக்கிறதுக்கு நான் முன்பைவிட, இப்போ ரொம்ப உற்சாகமா இருக்கேன். நல்ல வாய்ப்புகள் வந்தால், நிச்சயம் நடிப்பேன். நடிப்பு விஷயத்தில் எந்தச் சமரசமும் செய்துக்க மாட்டேன். நல்ல வாய்ப்பு, தயாரிப்பு நிறுவனம் அமைந்தால், மக்கள் ரசிக்கும்படியா நிச்சயம் நல்லா நடிப்பேன்" என்கிறார், மகிழ்ச்சியுடன்.

அடுத்த கட்டுரைக்கு