Published:Updated:

``சுயமரியாதை இழந்து படம் பண்ண விருப்பமில்லை!’’ - `சில்லுனு ஒரு காதல்’ கிருஷ்ணா

``சுயமரியாதை இழந்து படம் பண்ண விருப்பமில்லை!’’ - `சில்லுனு ஒரு காதல்’ கிருஷ்ணா
``சுயமரியாதை இழந்து படம் பண்ண விருப்பமில்லை!’’ - `சில்லுனு ஒரு காதல்’ கிருஷ்ணா

`சில்லுனு ஒரு காதல்’, `நெடுஞ்சாலை’ படங்களை இயக்கிய கிருஷ்ணா, தனது திரை அனுபவம் குறித்துப் பேசுகிறார்.

``நான் பிறந்து வளர்ந்தது, நாமக்கல் பக்கத்துல இருக்கிற குமாரபாளையம். என் குடும்பத்துல டாக்டர், இன்ஜினீயர், ஐ.டி கம்பெனி... இப்படி வேலை பார்க்கிற ஆட்கள்தான் அதிகம். நானும், இப்படியான துறைகளை நோக்கித்தான் போக நினைச்சேன். ஆனா, மணிரத்னம் சார் இயக்கிய `நாயகன்’ படம் என் போக்கை மாத்திடுச்சு. இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, சினிமா இயக்குநர் ஆகணும்னு ஆசை வந்துச்சு. நினைச்ச மாதிரி, இயக்குநர் ஆகிட்டேன்’’ - என்கிறார் இயக்குநர் கிருஷ்ணா. `சில்லுனு ஒரு காதல்’, `நெடுஞ்சாலை’ படங்களுக்குப் பிறகு, `ஹிப்பி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அவரிடம் பேசினேன்.

``டிகிரி முடிச்சுட்டுதான் சினிமாவுக்குப் போகணும்னு வீட்டுல சொன்னதால, காலேஜ் முடிஞ்சு வந்தேன். `ஹைக்கூ’ விளம்பரக் கம்பெனியில வேலைபார்த்து, கிட்டத்தட்ட 60-க்கும் அதிகமான விளம்பரங்கள்ல வொர்க் பண்ணேன். அப்போதான் இயக்குநர் கெளதம் மேனன் சார் அறிமுகம் கிடைச்சது. ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகரன் சார் மூலமா கிடைச்ச நட்பு அவர். நாங்க மூணுபேரும் ஒண்ணா சேர்ந்து `மின்னலே’ படத்துல வொர்க் பண்ணோம். தொடர்ந்து இவங்ககூட `காக்க காக்க’ படத்திலும் வொர்க் பண்னேன். `மின்னலே’ படத்துல லாரி டிரைவரா ஒரு காட்சியில் நடிச்சிருப்பேன். அந்தக் காமெடி செம ஹிட்! அதுக்குப் பிறகு, பல படங்கள்ல காமெடி கேரக்டர் பண்ணக் கூப்பிட்டாங்க, நான் மறுத்துட்டேன்.

அப்புறம்தான், `சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு இது. `காக்க காக்க’ படத்துல இணை இயக்குநரா வேலை பார்த்ததுனால, சூர்யா - ஜோதிகாகிட்ட எனக்கு நல்ல அறிமுகம் இருந்தது. நான் சொன்ன கதை அவங்களுக்கும் பிடிச்சது. ஹீரோ யாரா இருந்தாலும் பரவாயில்ல, பண்றேன்’னு ஜோதிகா மேடம் சொன்னாங்க. பிறகுதான் சூர்யா சார்கிட்ட கதையைச் சொன்னேன். ஒரு குழந்தைக்கு அப்பாவா நடிக்க ரொம்ப யோசிச்சார். கதையில ஜோதிகா இருக்காங்க... அதனால, ஓகே சொல்லிட்டார். இந்தப் படம் எனக்கு நல்ல பெயரைக் கொடுத்தாலும், அடுத்த வாய்ப்பு உடனே கிடைக்கலை. காரணம், பல ஹீரோக்கள் என்னை நம்பிப் படம் பண்ண யோசிச்சாங்க. நானும் யார்கிட்டேயும் கெஞ்சி, வாய்ப்பு கேட்கிற ஆளில்லை. எல்லோருமே மனுஷங்கதானே? அவங்க நமக்கு மரியாதை கொடுத்தா, நாமளும் அவங்களுக்குக் கொடுக்கணும். சுயமரியாதையை விட்டுக்கொடுத்துப் படம் பண்ண எனக்கு விருப்பமில்லை. நம்மள நம்பி யார் வர்றாங்களோ, அவங்களை வச்சுப் படம் பண்ணுவோம்னு இருந்துட்டேன்’’ என்றவர், தொடர்ந்தார்.

``இடையில, `ஏன் இப்படி மயங்கினாய்’ங்கிற த்ரில்லர் படம் பண்ணேன். ஹீரோ ரிச்சர்ட். ஹீரோயின் காயத்ரி சங்கர். `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ காயத்ரிக்கு இதுதான் முதல் படம். ஆனா, ஃபைனான்ஸ் பிரச்னை காரணமா, படம் ரிலீஸ் ஆகலை. இது என்னை ரொம்பப் பாதிச்சது. அதுலயிருந்து வெளியே வர கொஞ்சம் டைம் ஆகிடுச்சு.

அப்புறம்தான், `நெடுஞ்சாலை’ இயக்கினேன். இதுவும் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. மறுபடியும் ஆரியை வச்சு, `மானே தேனே பேயே’ படத்தை இயக்குவதாக இருந்தது. ஹீரோயினா கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் ஆனாங்க. இதுதான் கீர்த்திக்கு முதல் படமா இருந்திருக்க வேண்டியது. ஆனா, 15 நாள் ஷூட்டிங் நடந்து, படம் டிராப் ஆகிடுச்சு. இப்படிப் பல பிரச்னைகள் என்னைச் சுத்தி இருந்தன. இப்படிப் போய்க்கிட்டு இருக்கும்போதுதான், தெலுங்குல ஹிட்டான `RX 100’ படத்தைத் தமிழில் ரீமேக் பண்ணச் சொல்லிக் கேட்டாங்க. ஆனா, எனக்கு ரீமேக் பண்றதுல உடன்பாடில்லை. ஆனா, அந்தப் படத்தின் ஹீரோ கார்த்திகேயா கும்மகொண்டா நடிப்பு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதனாலதான், அவரை வெச்சு இப்போ `ஹிப்பி’ படத்தை எடுத்திருக்கேன். தாணு சார் எனக்குப் பல வருடப் பழக்கம். `நீ எந்த மொழியில படமெடுத்தாலும், நான் தயாரிக்கிறேன்’னு சொல்வார். அவர்தான் இந்தப் படத்தைத் தயாரிச்சிருக்கார். `ஹிப்பி’க்குப் பிறகு தமிழ், தெலுங்குல ஒரு பைலிங்குவெல் மூவி எடுக்கலாம்னு பிளான். தெலுங்கு முன்னணி ஹீரோ ஒருத்தர் நடிக்கிறார், சீக்கிரமே அப்டேட்ஸ் வரும்’’ என்று முடித்தார் கிருஷ்ணா.

அடுத்த கட்டுரைக்கு