Published:Updated:

எல்லாம் முடிந்ததென நினைத்தபோது கிடைத்த டிராகன்கள்..! `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ஒரு க்விக் அறிமுகம்!’’ - அத்தியாயம் 3

தார்மிக் லீ
எல்லாம் முடிந்ததென நினைத்தபோது கிடைத்த டிராகன்கள்..! `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ஒரு க்விக் அறிமுகம்!’’ - அத்தியாயம் 3
எல்லாம் முடிந்ததென நினைத்தபோது கிடைத்த டிராகன்கள்..! `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ஒரு க்விக் அறிமுகம்!’’ - அத்தியாயம் 3

தன் கண் முன்னே தன் தந்தை கொல்லப்பட்டதற்கு ஆர்யா ஸ்டார்க்கும், சான்ஸா ஸ்டார்க்கும் என்ன செய்தனர், இந்தத் தகவலைத் தெரிந்துகொண்ட ஸ்டார்க் குடும்பம் என்ன செய்ய இருக்கிறது, எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்த டினேரியஸ் டார்கேரியனுக்கு மூன்று டிராகன்கள் கிடைத்தபின் அவர் என்ன செய்யப்போகிறார்?

ரண்டாவது அத்தியாயத்தில் அரசன் ராபர்ட் பராத்தியனின் இறப்பு வரை பார்த்தோம். சாகும் முன்பு, ஏழு ராஜ்ஜியங்களையும் நெட் ஸ்டார்க்கை ஆட்சியும்படி உத்தரவிடுவார். கூடவே, தன் மகனான ஜோஃப்ரி பராத்தியனைத் தன்னைவிட ஒரு நல்ல மன்னனாக மாற்ற வேண்டும் என்று சத்தியம் வாங்கிவிட்டு இறந்திருப்பார். இதை அதிகாரபூர்வமாக ஓர் அறிக்கையில் எழுதிக் கையெழுத்துப் போட்டிருப்பார். அதன் பிறகு என்ன... இதோ, `கேம் ஆஃப் த்ரோன்ஸ் : அத்தியாயம் 3’-ல் பார்ப்போம்.

எல்லாம் முடிந்ததென நினைத்தபோது கிடைத்த டிராகன்கள்..! `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ஒரு க்விக் அறிமுகம்!’’ - அத்தியாயம் 3

அதை எடுத்துக்கொண்டு அரியணை நோக்கிச் செல்வார், நெட் ஸ்டார்க். அறிக்கையைக் கொஞ்சமும் பொருட்படுத்தாத செர்சி லானிஸ்டர், அதைக் கிழித்துப்போட்டு நெட் ஸ்டார்க்கைச் சிறையிலடைக்க உத்தரவிடுகிறார். இவரது இந்த முடிவு, அரசவையில் இருக்கும் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. `என்னதான் இருந்தாலும், அது அரசனின் ஆணை' என்ற பேச்சுகளையெல்லாம் இவர் கொஞ்சமும் காதில் வாங்காமல், வில்லத்தனத்தின் உச்சத்தைக் காட்டிக்கொண்டிருப்பார். தன் சகோதரர் ஜேமி லானிஸ்டர் ஆசைப்பட்டதைக் கொஞ்சம் கொஞ்சமாக இவர் செய்துமுடிக்க நினைப்பார். மேலும், அவரது மகனான ஜோஃப்ரி பராத்தியனை அந்தச் சிறு வயதிலேயே அரியணையில் அமரச் செய்யவும் திட்டமிடுவார். அப்போதுதானே அவர் நினைத்தது நடக்கும். 

நெட் ஸ்டார்க்கைச் சிறையிலடைத்த பின், ஸ்டார்க் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரையும் சிறைபிடிக்கத் தொடங்குகிறார், செர்சி லானிஸ்டர். சான்ஸா ஸ்டார்க் ஏற்கெனவே ஜோஃப்ரிமேல் உள்ள காதலால் அங்கேயே தங்கிவிடுவார். இதனால், தன்னைத்தானே சிறையில் அடைத்துக்கொள்கிறோம் என்று சான்ஸா ஸ்டார்குக்கு அப்போது தெரியவில்லை, பாவம். அடுத்ததாக, ஆர்யா ஸ்டார்க்கைச் சிறைபிடிக்கும் முயற்சியின்போது, அங்கிருந்து அவர் தப்பிவிடுவார். இந்த விஷயங்களெல்லாம் வின்டர்ஃபெல்லில் இருக்கும் நெட் ஸ்டார்க்கின் மூத்த மகன் ராப் ஸ்டார்குக்குத் தெரிய வருகிறது. தன் அம்மா கேட்லின் ஸ்டார்க் உதவியோடு, நெட் ஸ்டார்க்கை விடுவிக்கச் செல்லப் பக்கத்து ஊர்களுக்குச் சென்று படை திரட்டக் கிளம்புகின்றனர். அந்த முயற்சியில், தன் சகோதரி லைஸா டல்லியிடமும் உதவிக் கேட்கிறார், காட்லின் ஸ்டார்க். ஆனால், அவர் முடியாதென மறுக்கிறார். 

வெஸ்டிரோஸில் இப்படியாக நடந்துகொண்டிருக்க, எஸ்ஸோஸில் படை பலத்தைத் திரட்டும் முயற்சியின்போது ஏற்பட்ட ஒரு சண்டையில், கல் டிராகோவுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பது டினேரியஸ் டார்கேரியனுக்குத் தெரியவருகிறது. எஸ்ஸோஸில் இருக்கும் கல் டிரோகோ, மரணப்படுக்கைக்குச் செல்கிறார்.  

எல்லாம் முடிந்ததென நினைத்தபோது கிடைத்த டிராகன்கள்..! `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ஒரு க்விக் அறிமுகம்!’’ - அத்தியாயம் 3

வெஸ்டிரோஸ் அரசனின் இறப்பு, எஸ்ஸோஸ் அரசனின் மரணப்படுக்கை... இவை இரண்டும் மற்றவர்களுக்கு லாகவமாகிவிடுகிறது. அனைவரும் இதுதான் சமயம் என்று பல்வேறு சூழ்ச்சியைச் செய்து வருகிறார்கள். இந்தப் பரபர சூழ்நிலைதான் முதல் சீஸனின் எட்டாவது எபிசோடு வரை நிலவும். 8-வது எபிசோடிலேயே இப்படியென்றால், மிச்சமிருக்கும் இரண்டு எபிசோடுகளிலும் என்ன ஆகப்போகிறது என்ற ஆவலும், பரபரப்பும் தன்னால் வந்துவிடும். தனது தந்தையைச் சிறையடைத்த பின்னும் லானிஸ்டர் குடும்பம்மேல் கோபம் கொள்ளாத சான்ஸா, இன்னும் செர்சி லானிஸ்டரின் பேச்சை நம்பிக்கொண்டிருப்பார். குற்றம் செய்ததாகத் தன் தந்தையை ஒப்புக்கொள்ள வைத்து, ஜோஃப்ரி பராத்தியனை மன்னனாக ஏற்றுக்கொண்டதாகச் சொன்னால், நெட் ஸ்டார்க்கை விடுவித்துவிடுவதாகச் சான்ஸாவிடம் சொல்லிக்கொண்டிருப்பார், செர்சி லானிஸ்டர். இதை நம்பி சான்ஸாவும் நெட் ஸ்டார்க்கின் மனதை மாற்றி அவ்வாறு செய்யச் சொல்வார்.  

ராபர்ட் பராத்தியன் இறந்ததையடுத்து, புதிய மன்னன் ஜோஃப்ரி பராத்தியனின் தலையில் மணி மகுடம் ஏறுகிறது. அந்த மயக்கத்திலேயே கைது செய்த நெட் ஸ்டார்க்கின் தலையைத் துண்டிக்கச் சொல்லி உத்தரவிடுகிறான். இது செர்சி லானிஸ்டருக்கே ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது. சுற்றியிருக்கும் அனைவரும் `கொல், கொல்’ என்று கூச்சலிடுவதாலும், தான்தான் மன்னன் என்ற மமதையாலும் அந்த முடிவை எடுத்திருப்பான், ஜோஃப்ரி பராத்தியன். தப்பித்து தலைமறைவாக இருந்த ஆர்யா ஸ்டார்க் கண் முன்பும், தந்திரப் பேச்சால் ஏமாந்துபோன சான்ஸா ஸ்டார்க் கண் முன்பும், நெட் ஸ்டார்க்கின் தலை உடலிலிருந்து துண்டிக்கப்படுகிறது. இதைக் காட்சியாகப் பார்க்கும்போது, குறைந்தது இரண்டு நிமிடங்களாவது உங்களுடைய இதயத்துடிப்பு அதிகமாகும். 

ஒட்டுமொத்த மக்களும் துரோகியைக் கொன்றுவிட்டதாக நினைத்து சந்தோஷத்தில் ஆடிக்கொண்டிருப்பார்கள். `இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே’ என்றபடி ஆச்சர்யத்தோடு தன் மகன் ஜோஃப்ரியைப் பார்த்துக்கொண்டிருப்பார், செர்சி. கதறி அழுது காப்பாற்றச் செல்லும், ஆர்யா ஸ்டார்க்... கொஞ்ச நேரம் இப்படியாகப் பரபரப்பு நிலவிக்கொண்டிருக்கும். 

எல்லாம் முடிந்ததென நினைத்தபோது கிடைத்த டிராகன்கள்..! `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ஒரு க்விக் அறிமுகம்!’’ - அத்தியாயம் 3

வெஸ்டிரோஸில் இப்படியென்றால், எஸ்ஸோஸில் என்ன நடந்திருக்கும் என்பதுதானே உங்களுடைய கேள்வி. மரணப் படுக்கையில் இருக்கும் தன் கணவர் கல் டிராகோவைக் காப்பாற்ற தன்னால் முடிந்த முயற்சிகளைச் செய்துகொண்டிருப்பார், டினேரியஸ் டார்கேரியன். அதற்குச் சில மந்திர தந்திரங்களைக்கூட செய்து பார்க்கிறார். எந்தவிதப் பயனும் இன்றி இறந்துவிடுகிறார், கல் டிராகோ. இதனால், அங்கிருக்கும் டோத்ராக்கி மக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்திருப்பார்கள். கணவரை இழந்த சோகத்தில் அவரின் உடலையே பார்த்துக்கொண்டிருப்பார், டினேரியஸ் டார்கேரியன். 

'கணவர் இறந்த பிறகு மனைவி தீயில் தன்னை எரித்துக்கொள்ள வேண்டும்' என்பது டோத்ராக்கி மக்கள் பின்பற்றி வரும் வழிமுறை. அதற்காக தன்னைத்தானே தயார்படுத்திக் கொள்கிறார், டினேரியஸ் டார்கேரியன். தனது திருமண சீதனமாக வந்த பாதுகாக்கப்பட்ட, அதேசமயம் கற்களாகிவிட்ட டிராகன் முட்டைகளோடு மூட்டிய தீக்குள் மெதுவாக நடந்து செல்கிறார். இது முழுவதும் இரவில் நடக்கிறது. விடிந்ததும், டினேரியஸ் டார்கேரியனின் உடலைப் பார்க்க மக்கள் அனைவரும் எழுகின்றனர். சிறிதளவு காயம்கூட இல்லாமல், ஆடை மற்றும் எரிந்த நிலையில் முடங்கி உட்கார்ந்திருக்கிறார், டினேரியஸ். ஆம், தீ அவரை ஒன்றும் செய்யவில்லை! டார்கேரியர்களைத் தீ தீண்டாது என்ற பழங்கால நம்பிக்கை இங்கெ உண்மை ஆகியிருக்கிறது. அதை உண்மையாகப் பார்த்து டோத்ராக்கி மக்கள் அனைவரும் இவரை வியந்து பார்த்துக்கொண்டிருப்பார்கள். அந்த வியப்பு குறைவதற்குள், அவரது கழுத்துக்கு அருகே ஒரு குட்டி டிராகன் தன் சிறகை விரித்தபடி அமர்ந்திருக்கும்! கூடவே இன்னும் இரண்டு குட்டி டிராகன்களும் அவருடன் எழுந்து மக்களைப் பார்க்கின்றன. வியப்பில் ஆழ்ந்த மக்கள் அனைவரும் மண்ணில் மண்டியிட்டு டினேரியஸ் டார்கேரியனை வணங்குகிறார்கள். ஒரு பக்கம் நெட் ஸ்டார்க்கின் இழப்பு, மறுபக்கம் டிராகன், டினேரியஸின் எழுச்சி... இப்படித்தான் முதல் சீஸன் முடியும்.  

எல்லாம் முடிந்ததென நினைத்தபோது கிடைத்த டிராகன்கள்..! `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ஒரு க்விக் அறிமுகம்!’’ - அத்தியாயம் 3

தன் கண் முன்னே தன் தந்தை கொல்லப்பட்டதற்கு ஆர்யா ஸ்டார்க்கும், சான்ஸா ஸ்டார்க்கும் என்ன செய்தனர், இந்தத் தகவலைத் தெரிந்துகொண்ட ஸ்டார்க் குடும்பம் என்ன செய்ய இருக்கிறது, எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்த டினேரியஸ் டார்கேரியனுக்கு மூன்று டிராகன்கள் கிடைத்தபின் அவர் என்ன செய்யப்போகிறார்? இதற்கு நடுவில் லானிஸ்டருக்கும் ஸ்டார்கிற்கும் நடந்த ஒரு சிறு போரின்போது ஜேமி லானிஸ்டரை, ராப் ஸ்டார்க் சிறைபிடித்துவிடுவார். நெட் ஸ்டார்க்கை ஜோஃப்ரி கொன்றதையடுத்து, ஜேமி லானிஸ்டரை நெட் ஸ்டார்க் என்ன செய்யவிருக்கிறார், ராபர்ட் ஸ்டார்கின் இறப்புக்குப் பிறகு அவரது இரு சகோதரர்களும் என்ன செய்யவிருக்கிறார்கள், நைட்ஸ் வாட்ச்சில் பணியாற்றிவரும் ஜான் ஸ்நோ என்ன செய்யவிருக்கிறார்... இப்படிப் பல கேள்விகளுக்கு விடை சொல்லவிருக்கிறது, இரண்டாவது சீஸன். அது என்னென்ன என்பதை அடுத்த அத்தியாத்தில் பார்க்கலாம். 

பின் செல்ல