Published:Updated:

"முதல் வாய்ப்பு, ஷாருக்கானின் முத்தம், ரஜினியின் ஐடியா, வடிவேலுவின் நம்பிக்கை!" - கிங்காங்

"முதல் வாய்ப்பு, ஷாருக்கானின் முத்தம், ரஜினியின் ஐடியா, வடிவேலுவின் நம்பிக்கை!" - கிங்காங்
"முதல் வாய்ப்பு, ஷாருக்கானின் முத்தம், ரஜினியின் ஐடியா, வடிவேலுவின் நம்பிக்கை!" - கிங்காங்

``என் நிஜப்பெயர் சங்கர். சொந்த ஊர், வந்தவாசி வரதராஜபுரம். ஒரு அக்கா, மூன்று தங்கைகள். இப்போ எல்லோருக்குமே கல்யாணமாகி செட்டில் ஆகிட்டாங்க. ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு உதவியா இருக்கேன்.’’ - 300-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடியனாக நடித்த `கிங்காங்’ சங்கர் தனது திரைப் பயணத்தை விவரிக்கிறார்.

`அதிசய பிறவி’ படம் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சங்கர். ``இந்தப் படத்தில் நடிக்க வைத்த இயக்குநர்தான் எனக்கு `கிங்காங்’ என்ற பெயரை வைத்தார்’’ என சுவாரஸ்ய கதையைப் பகிர்கிறார் `கிங்காங்’ சங்கர். ``என் நிஜப்பெயர் சங்கர். சொந்த ஊர், வந்தவாசி வரதராஜபுரம். ஒரு அக்கா, மூன்று தங்கைகள். இப்போ எல்லோருமே கல்யாணமாகி செட்டில் ஆகிட்டாங்க. ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு உதவியா இருக்கேன்’’ என்பவரிடம் சினிமாவுக்கு வந்த கதையைப் பகிரச் சொன்னோம். 

"முதல் வாய்ப்பு, ஷாருக்கானின் முத்தம், ரஜினியின் ஐடியா, வடிவேலுவின் நம்பிக்கை!" - கிங்காங்

``நான் ஐந்தாம் வகுப்பு வரைதான் படிச்சிருக்கேன். குடும்பத்தில் வறுமை. சாப்பாட்டுக்குக்கூட நிறைய கஷ்டப்பட்ட நேரம் அது. அதனால, படிப்பை விட்டுவிட்டு, குடும்பச் சுமையை நானும் அப்பாவும் சேர்ந்து சுமக்க ஆரம்பிச்சோம். அப்போல்லாம் ஊருக்குள்ள ஓரங்க நாடகம் நடக்கும். அதுல நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு இரவு நாடகத்துக்குப் போனா, ஐந்து ரூபாய் தருவாங்க. 10 நாள்கள் நடிச்சா, 50 ரூபாய் கிடைக்கும். நாடகத்துல நான்தான் பஃபூன். இங்கிருந்து அங்கேயும் அங்கிருந்து இங்கேயுமா பந்தைத் தூக்கிப்போட்டு விளையாடுவதுபோல என்னைத் தூக்கிப்போட்டு நடிப்பாங்க. அப்படி ஒருமுறை தவறி பொதுமக்கள் கூட்டத்துக்குள்ள விழுந்த கூத்தெல்லாம் இருக்கு. அப்படி மூன்று வருடம் நாடகத்துல நடிச்ச பிறகுதான், என் ஸ்கூல் வாத்தியார் ஒருநாள், `உனக்குத்தான் நல்லா நடிக்க, டான்ஸ் ஆட வருதே... நீ ஏன் சினிமாவுக்கு முயற்சி பண்ணக் கூடாது’னு ஐடியா கொடுத்தார். அப்படித்தான் சென்னைக்கு வந்து சேர்ந்தேன்’’ என்றவர், சென்னை கதையைத் தொடர்ந்தார்.

``இங்கே ஒவ்வோர் இடமா வாய்ப்பு கேட்டு நடந்தேன். நடந்த பாதை தூரம். அதில், மேடு, பள்ளம், கேலி, கிண்டல் எல்லாம் இருந்துச்சு. நல்லா இருக்கிறவனுக்கே வாய்ப்பு கிடைக்கிறது குதிரைக் கொம்பா இருக்கும்போது, என்னை மாதிரி ஆட்களுக்குக் கிடைக்குமா? அப்படி அலைஞ்சு திரிஞ்சப்போ, புண்ணியவான் என் குரு கலைப்புலி.ஜி.சேகரன்தான் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அப்படி நான் நடிச்ச முதல் படம், `ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்.’ பாண்டியராஜன் சார் ஹீரோ. பல்லவி, செந்தில் இந்தப் படத்துல நடிச்சிருப்பாங்க.

"முதல் வாய்ப்பு, ஷாருக்கானின் முத்தம், ரஜினியின் ஐடியா, வடிவேலுவின் நம்பிக்கை!" - கிங்காங்

அந்தப் படத்துக்குப் பிறகு பல வாய்ப்புகள் வந்துச்சு. கொஞ்சம் கொஞ்சமா ஐந்து மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்கள்ல நடிச்சுட்டேன். என் வித்தியாசமான தோற்றம்தான், மக்களுக்கு என்னை அடையாளப்படுத்தி வச்சது. என் குள்ளமான தோற்றம், கண் பார்வை... இதை நினைச்சுப் பலமுறை அழுதிருக்கேன். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி, அந்தக் குறைபாட்டை வச்சு என்னைக் கிண்டல் பண்ணுவாங்க. பொது இடங்களில் நிறைய அவமானப்படிருக்கேன். சினிமாவுல நடிச்ச பிறகு, அவைல்லாம் மாறிடுச்சு. வடிவேலு சார் கூட சேர்ந்து காமெடி பண்ணி நடிக்க ஆரம்பிச்ச பிறகு, சுத்தமா மாறிடுச்சு’’ என்பவரைக் குடும்பத்தில் இருப்பவர்களும் விட்டுவைக்கவில்லை.  

``ஆமா, எங்க அப்பா வெளியில போயிட்டு வரும்போது, `உன் பையன் இப்படி ரெண்டும் கெட்டானா இருக்கானே... எப்படி உங்களையும் உங்க பொண்ணுங்களையும் கரையேத்துவான்’னு எதையாவது சொல்லிவிட்ருவாங்க. அதைக் காதுல வாங்கிட்டு, எங்க அப்பாவும் வீட்டுக்கு வந்து என்னைத் திட்டுவார். அவர் இடத்துல யார் இருந்தாலும் அப்படிக் கோபம் வரும்னு நினைச்சுக்கிட்டு, அப்பாவைப் புரிஞ்சுக்குவேன். அப்பா என்னைத் திட்டும்போதெல்லாம், நான் சாமியைத் திட்டிடுவேன். ஒருகட்டத்துக்கு மேல, இதையே நம்ம ப்ளஸ்ஸா மாத்திக்கிட்டா என்னனு தோணுச்சு. எனக்குப் பிடிச்ச டான்ஸ், காமெடி எல்லாத்தையும் முயற்சி பண்ணிப் பார்ப்பேன். கமல் சாரின் பல படங்களைப் பார்த்திருக்கேன். அவருடைய டான்ஸ் எனக்குப் பிடிக்கும். ஆனந்த் பாபுவின் டான்ஸ், பாட்டு ரெண்டும் பிடிக்கும். இவங்க நடிப்பு, பாடி லாங்குவேஜ்... எல்லாத்தையும் உள்வாங்கிப்பேன். `அதிசய பிறவி’ படத்துல ரஜினி சார் கூட பிரேக் டான்ஸ் ஆடியிருப்பேன். அப்போ பிரேக் டான்ஸ் புதுசு. அந்தப் படத்தைப் பார்த்துட்டுப் பலரும் பாராட்டுனாங்க’’ என்பவருக்கு, திருமணத்துக்குப் பெண் பார்க்கும் சமயத்திலும் அவமானங்கள் நடந்திருக்கின்றன. 

``பலரும் `கல்யாணம் பண்ணிக்கலையா’னு சீரியஸா கேட்பாங்க. சிலர் காமெடியா கேட்பாங்க. அவங்களுக்கெல்லாம் சமயத்துல பொறுமையா பதில் சொல்வேன். சிலசமயம் கோபமா பதில் சொல்வேன். எனக்குக் கல்யாணம் செஞ்சு பார்க்கணும்னு அம்மாவுக்கு ரொம்ப ஆசை. `இவனுக்கு எதுக்குக் கல்யாணம்’னு அப்பா கண்டுக்க மாட்டார். இயக்குநர் வேலு பிரபாகரன் சார்தான், `கல்யாணம் பண்ணிக்கோ’னு சொல்லிக்கிட்டே இருந்தார். பல பொண்ணுங்க என்னை ரிஜெக்ட் பண்ணதுனால, ஒருகட்டத்துல எனக்குக் கல்யாணம் மேல வெறுப்பு வந்திடுச்சு. அப்புறம், எங்க சொந்தத்துல ஒருவர் தேடிவந்து பொண்ணு கொடுக்குறோம்னு சொன்னார். அப்படி, என்னைப் பார்த்துப் பிடிச்சிருக்குன்னு சொல்லிக் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்கதான், என் மனைவி கலா. 

`உங்களுக்கு பைக்ல போகணும், சினிமா, பீச்னு சுத்தணும்னுலாம் ஆசையிருக்கும். ஆனா, என்னால பைக் ஓட்ட முடியாது. அக்கம் பக்கத்துல என் குறையைப் பத்தி ஆயிரம் பேசுவாங்க. அவற்றையெல்லாம் சமாளிக்கணும்’னு பேசித்தான், கலாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். தாலி கட்டுறதுக்கு முன்னாடிகூட `சம்மதம்தானே?’னு கேட்டுத்தான் கட்டினேன். 2001-ல் எங்க திருமணம் முடிஞ்சது. நான் எது சொன்னாலும் தட்டிக்கழிக்காம கேட்பாங்க என் மனைவி. முடிந்த அளவுக்கு அவங்க கூட, குழந்தைங்க கூடயும் நேரம் செலவிடுவேன்.

"முதல் வாய்ப்பு, ஷாருக்கானின் முத்தம், ரஜினியின் ஐடியா, வடிவேலுவின் நம்பிக்கை!" - கிங்காங்

எனக்கு இரண்டு பொண்ணுங்க, ஒரு பையன். பெரிய பாப்பா கீர்த்தனா ப்ளஸ் டூ படிக்கிறாங்க. சக்தி ப்ரியா ஏழாம் வகுப்பு, பையன் துரை முருகன் முதல் வகுப்பு படிக்கிறான். எங்க குடும்பத்தை இந்தத் துறைக்குள்ள கொண்டு வர எனக்கு விருப்பமில்லை’’ என்பவரின் கைவசம் தற்போது 12 படங்கள் இருக்கின்றனவாம்.  

`` `சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ஷாருக்கான் கூட நடிச்சிருக்கேன். என்னை மாதிரியே குள்ளமான 30 பேருக்கு ஆடிஷன் நடத்தினாங்க. அதில், தேர்வான ஒரே நபர் நான்தான். ஷாருக்கான் கூட பேசினேன். கூட இருந்த டிரான்ஸ்லேட் பண்றவர், நான் பேசுறதை அவருக்கும் அவர் பேசுறதை எனக்கும் சொன்னார். `உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா, குழந்தைகள் இருக்கா’ இப்படி எல்லாத்தையும் விசாரிச்சார் ஷாருக். `உங்க கூட நடிச்சதுக்கு நான் பெருமைப்படுறேன். நான் உங்க ரசிகன். உங்களுக்கு நிறைய நன்றி சொல்லணும்’னு சொன்னேன். அதுக்கு ஷாருக் சிரிச்சதோடு, என் நெத்தியில முத்தம் கொடுத்தார். நானும் அவருக்கு முத்தம் கொடுத்தேன். அவரையும் சேர்த்து இதுவரை ஐந்து சூப்பர் ஸ்டார் கூட நான் நடிச்சிருக்கேன். தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினி, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இன்னொரு ஸ்டார், பவர் ஸ்டார். சிரிச்சுட்டீங்களா...’’ எனச் சொன்னவர், தொடர்ந்தார். 

`` `நெத்தியடி’னு ஒரு படம். என்னால மறக்க முடியாது. அந்தப் படத்துக்காக எனக்கு டிரெஸ் தைக்கச் சொல்லி காஸ்ட்யூம் டிசைனர்கிட்ட சொல்லியிருக்கார். அவர் பெயர் சம்பத். என்னை நேரில் பார்த்ததில்லை. `கிங்காங்’னு பெயரை வெச்சு, ஆள் பல்க்கா இருப்பேன்னு நினைச்சுட்டார்போல... `காஸ்ட்யூம் மாத்திட்டு வாங்க, ஷாட் ரெடி’னு இயக்குநர் சொன்னதும், சம்பத்கிட்ட போனேன். `நீங்கதான், கிங்காங்கா... ஆள் பெருசா இருப்பீங்கனு என் இஷ்டத்துக்குப் பனியனும் டிராயரும் தச்சுட்டேனே!’னு சிரிச்சார். அப்புறம் என்ன பண்றது, பக்கத்துல இருந்த துணிக்கடைக்குப் போய், டிரெஸ் எடுத்துப் போட்டுக்கிட்டு நடிச்சேன். அந்த சீன் ரொம்பவே ஃபேமஸ்!’’ என்றவர், காட்சியையும் விவரித்தார்.

``எனக்கு அப்பாவாக சுப்பையா நடித்திருந்தார். படத்துல ஒரு கல்யாண விருந்து காட்சி. சமையல்காரரான என் அப்பாகிட்ட, `மைசூர்பாகு வேணும்’னு அடம்பிடிச்சு வாங்கிச் சாப்பிடுவேன். யாரும் பார்த்துடக் கூடாதுனு என்னை ஒரு அண்டாவுல போட்டு மூடி, கை நிறைய மைசூர்பாகு கொடுத்திடுவார். நான் அண்டாவுக்குள்ள இருக்கிறது தெரியாத பாண்டியராஜன் சார், என்னைத் தூக்கி அடுப்புல வச்சிடுவார்... இப்படிக் காமெடியா போகும் அந்த சீன். 

அதேமாதிரி, `அதிசய பிறவி’ படத்துக்கும்... பல நினைவுகள் இருக்கு. ரஜினி சார் கட்டில்ல படுத்துக்கிட்டு, பாட்டை நிறுத்தி நிறுத்திப் போடுவார்; நான் டிஸ்கோ, பிரேக் டான்ஸ் ஆடுவேன். இந்த ஐடியாவைச் சொன்னதே ரஜினி சார்தான். `நான் இந்தமாதிரி நிறுத்தி நிறுத்திப் போடுவேன். நிறுத்தும்போது நீங்க அதே போஸ்ல அசையாம நிற்கணும்’னு சொன்னார். அதுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ். அந்த சீன் எடுக்கிறதுக்கு முன்னாடி கிளாப் போர்டு என் தலையில பட்டு ரத்தம் வந்திடுச்சு. ரஜினி சார்தான், அவர் காரைக் கொடுத்து பக்கத்துல இருந்த ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வெச்சார். தலைக்கு மூணு தையல் போட்டாங்க. அதுக்கு அடுத்த நாள் நடிச்சதுதான், இந்த டான்ஸ் சீன். 

இதே படத்தில் ஒரு ஃபைட் சீன் வரும். அதில் நானும் சண்டை போடுவேன். அந்த சீன்ல, `நீங்க என்னை சிஷ்யானு சொல்லுங்க; நான் உங்களைக் குருவேனு சொல்வேன்’ - இப்படி ஒரு ஐடியா சொன்னார் ரஜினி சார். அந்த ஃபைட் சீனும் செம்மயா வந்தது’’ என்றவர், தனக்கும் வடிவேலுக்குமான பிணைப்பைப் பற்றிச் சொல்கிறார். 

"முதல் வாய்ப்பு, ஷாருக்கானின் முத்தம், ரஜினியின் ஐடியா, வடிவேலுவின் நம்பிக்கை!" - கிங்காங்

``வடிவேலு சார் கூட இதுவரை 30 படங்கள்ல நடிச்சிருப்பேன். மத்த காமெடி நடிகர்கள் மாதிரி இல்லாம, தனியாத் தெரிவார் அவர். `கருப்பசாமி குத்தகைதாரர்’ படத்துக்கு இயக்குநர் ராசு மதுரவன் சார்தான் காமெடி டிராக் எழுதினார். அதுல, என் கண்ணை வச்சுக் காமெடி டிராக் எழுதினார். வடிவேலு திண்ணையில படுத்திருக்கும்போது, அவருடைய கிருதா எனக்குக் கம்பளிப் பூச்சி மாதிரி தெரியும். அதெல்லாம் அல்டிமேட் காமெடி! `பிறகு’ங்கிற படத்துக்கும் ராசு மதுரவன் சார்தான் காமெடி எழுதினார். அந்தப் படத்துக்கும் என் காமெடி சூப்பரா வொர்க் அவுட் ஆச்சு. 

வடிவேலு எங்களை மாதிரி கலைஞர்களுக்கு நிறைய உதவிகள் பண்ணுவார். `கச்சேரி ஆரம்பம்’ படத்துல வடிவேலு, கிரேன் மனோகர், நான் மூணுபேரும் காமெடியில கலக்கியிருப்போம். `சுறா’ படத்துல எனக்குப் போலீஸ் கேரக்டர் கொடுக்கச் சொன்னது, வடிவேலு சார்தான். `கொஞ்சம் பொறுடா... உனக்கு ஏத்தமாதிரி கேரக்டரா  பிடிக்கணும்டா’னு சொல்வார். `கந்தசாமி’ படத்துல கூரையைப் பிச்சுக்கிட்டு வர்ற சீன் கொடுத்தார். `போக்கிரி’ படத்துல லாரி டிரைவர் கேரக்டர் கொடுத்தார். அந்த சீன்ல வேற ஒருவர் நடிக்க வேண்டியது. `கிங்காங் நடிக்கட்டும்’னு சொன்னது வடிவேலு சார்தான். எனக்கு என்ன செட் ஆகும், எந்தக் கேரக்டர்ல நடிச்சா, என்னையும் மக்கள் கவனிப்பாங்கனு யோசிக்கிற நல்ல மனுஷன் வடிவேலு சார். கனவுலகூட நினைக்காத விஷயமெல்லாம் இவர் மூலமா நடந்தது. கூட இருக்கிறவங்களும் நல்லா இருக்கணும்னு நினைக்கிற அவரை, சமீபத்துல அவர் வீட்டுல சந்திச்சேன். `ரெண்டு, மூணு படம் பேசிக்கிட்டிருக்கேன். சீக்கிரமா சேர்ந்து நடிப்போம்’னு சொல்லியிருக்கார். `நீங்க நடிக்கணும்னு, மக்கள்கிட்ட ஏக்கம் இருக்கு’னு சொன்னேன். `கண்டிப்பா பண்ணுவோம்’னு சொன்னார்!’’ எனச் சிரிக்கிறார் கிங்காங் சங்கர்.

அடுத்த கட்டுரைக்கு