என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

ஜாலியா இருக்கணும்!

நித்தி - ஆதீ டூயட் கச்சேரிகுள.சண்முகசுந்தரம், கே.ராஜாதிருவேங்கடம்படங்கள் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

##~##

ற்சாக உதறலில் இருந்தது மதுரை ஆதீனம்.

 ஹைடெக் மைக்குகள்... லேப்டாப்கள் சகிதம் நித்தியானந்தாவின் சீடர்கள்... ''மைக் ஒன் காலிங் மைக் டூ... அங்கே கூட்டம் ஜாஸ்தியா இருக்கு. கன்ட்ரோல் பண்ணுங்க... ஓவர்!'' என்று உத்தரவுகள் தூள் பறந்துகொண்டு இருக்க... 100 கார்கள் புடைசூழ வந்து இறங்கினார்கள் நித்தியானந்தாவும் மதுரை ஆதீனமும்.

''நித்தியானந்தராகிய நான் இன்று முதல், 293-வது குருமஹா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் என்று அழைக்கப்படுவேன்!'' - உச்சந்தலை யில் கீரிடம் மினுங்க, முகம் எல்லாம் புன்னகை பூத்திருக்க... மதுரை ஆதீனத்தின் இளவரசராக முடிசூட்டிக்கொண்டார் நித்தியானந்தா. அருகில் 'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்’ பூரிப்புடன் நின்று நித்தியின் தோளை இறுக்கி நெருக்கி போஸ் கொடுத்துக்கொண்டு இருந்தார் மதுரை ஆதீனம் அருணகிரி. திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட தமிழகத்தின் 18 சைவ மடங்களில் மிக மூத்த முதல் மடமான மதுரை ஆதீன குருபீடத்துக்கு இனி நித்தியானந்தாதான் இன்சார்ஜ்.

ஜாலியா இருக்கணும்!

முடிசூட்டு விழா முடிந்த கையோடு ஆதீனத்திடம் பேசினோம். ''இந்த மடத்துக்குத் தகுதியான ஆற்றல் மிக்க, ஞானம் மிக்க, தெளிவு மிக்க, பேச்சாற்றல் மிக்க, வீரமிகு, போர்க் குணம்கொண்ட, ஆங்கில அறிவு படைத்த, அழகு நிறைந்த, தலைமைப் பண்பும் நிர்வாகத் திறமையும்கொண்ட ஒருவரைத் தேடிக்கொண்டே இருந்தேன். ஒருநாள் சிவபெருமான் என் கனவில் தோன்றி, அத்தனை தகுதிகளும் நிறைந்த ஒருவர்... இந்த ஆதீனத்தைத் திறம்பட நடத்தக்கூடியவர் நித்தியானந்தாதான் என்பதை எனக்கு உணர்த்திச் சென்றார். அப்போதுதான் வெண்ணெயைக் கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்தது எங்களுக்குப் புரிந்தது. இதற்கு மேலும் காத்திருக்கக் கூடாது என்றுதான் நாங்கள் பெங்களூருக்குக் கிளம்பிப்போய் என் இளவரசனுக்குப் பட்டம் சூட்டிவிட்டோம். (இங்கு 'நாங்கள்’, 'எங்கள்’ என்பது அருணகிரியைக் குறிக்கும்!)

பிடதி ஆசிரமத்தில் இளம்பெண்கள் நடனமாடியபடி ஜாலி மூடில் இறைவனை வழிபடுவது எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. நாங்களும் நடனமாடினோம். இறைவனை வழிபடுவதற்கு நடனமும் ஒரு வகைதான் என்பதை எனக்கு உணர்த்திவிட்டார்கள்!''

''உங்களுக்கும் நித்திக்கும் எப்படிப் பழக்கம் ஆனது?''

''பத்து வருடங்களுக்கு முன்பு திருவண்ணா மலையில் நாங்கள் தங்கி இருந்த விடுதிக்கே, எங்களைத் தேடி வந்து ஆசி பெற்றார் நித்தியானந்தா. அப்போதே அவரது பேச்சாற்றலும் துறுதுறுப்பும் எங்களைச் சுண்டி இழுத்தது. 'வருங்காலத்தில் எல்லாம் நல்லபடியாக அமைய வேண்டும்’ என்று நித்தியாவை ஆசீர்வதித்தோம். அடுத்த வருடம் மதுரை ஆதீனத்துக்கே வந்தார். 'உங்கள் ஆசீர்வாதத்தில் வெளிநாடுகளில் எல்லாம் தியான பீடத்தின் கிளைகளை ஆரம்பிச்சிருக்கேன்’ என்று சொன்னார். 'எல்லாம் நல்லபடியாக நடக்கும்’ என்று அப்போது வார்த்தைகளால் ஆசீர்வதித்தாலும், இவர் ஒரு பெரிய துன்பத்தில் சிக்கிக்கொள்ளப்போகிறார் என்று எங்களது உள் மனது சொன்னது. 'கவலைப்படாதே... இவருக்கு அது ஒரு பரீட்சை. அந்தச் சிக்கலில் இருந்து விடுபட்டு, புடம் போட்ட தங்கமாக இன்னும் கூடுதலாகப் பிரகாசிப்பார்’ என்றும் எங்களுக்கு ஓர் உணர்த்துதல் இருந்தது. அதேதான் இப்போது நடந்திருக்கிறது!

எங்களது விருப்பத்தை நித்தியானந்தாவிடம் சொன்னபோது, 'இறைவனின் கட்டளை அதுவாக இருந்தால், நான் என்ன செய்ய முடியும் சுவாமி?’ என்றவர், 'என்னுடைய பிரார்த்தனையில் உத்தரவு கேட்டுவிட்டு வந்து, நீங்கள் அளிக்கும் பொறுப்பை மனதார ஏற்றுக்கொள்கிறேன் சுவாமி’ என்றார். பிரார்த்தனையில், 'முழு மனதோடு ஏற்றுக்கொண்டு, பணி செய். நாங்கள்தான் சந்நிதானத்திடம் உன் பெயரை டிக் செய்தோம்’ (!!!!!!) என்று சிவபெருமான் அவருக்கும் உணர்த்தி இருக்கிறார். உடனே, எங்களிடம் ஓடோடி வந்த நித்தியா, 'நித்தியானந்தர் தியான பீடம், சந்நிதானத்தின் கட்டளைக்காகக் காத்திருக்கிறது’ என்று சொன்னார். அதன் பிறகு எல்லாம் இனிதே நடந்தேறின!''

ஜாலியா இருக்கணும்!

''செம ஜாலி மூடில் ஆசிரமத்தின் இளம் பெண்களோடு டான்ஸ் ஆடியதும் இனிதே நடந்ததா?''  

(கேள்விக்கு உஷ்ணமாவார் என்று எதிர்பார்த்தால், இன்னும் உற்சாகமாகிவிட்டார் அருணகிரி) ''நாங்கள் ஒன்றும் நடுத் தெரு வில் குத்தாட்டம் போடவில்லையே? பக்திப் பரவசத்தில் ஆடியவர்களை உற்சாகப்படுத்தினோம். அந்த நடராஜப் பெருமானுக்கே 'ஆடல் வல்லான்’ என்று ஒரு பெயர் இருக்கே? அவர் ஒரு காஸ்மிக் டான்ஸர். நித்தியானந்தர் ஆசிரமத்தைப் பொறுத்த வரை சம்பிரதாய மரபுகள் எதுவும் இல்லாமல், அனைவரும் ஜாலியாக, சந்தோஷமாக இருக்கிறார்கள். சந்தோஷமாக இருக்கத்தானே மனிதன் ஓடிக்கொண்டே இருக்கிறான்? நாங்களும் நித்தியானந்தாவும் தங்கப் பல்லக்கில் அமர்ந்து அங்குள்ள சிவாலயத்தை வலம் வந்தோம். அப்போது, கொட்டிய மழையையும் பொருட்படுத்தாது இளம் பெண்கள் ஆனந்த நடனம் ஆடினார்கள். அடடா... அதைக் காணக் கண் கோடி வேண்டும். யாரோ எதுவோ சொல்லிவிட்டுப் போகட்டும். இது ஒன்றும் தவறல்ல. நம்முடைய நிரந்தரத் தாய் தந்தையரான இறைவனும் இறைவியுமே டான்ஸர்கள்தானே?''

''அப்படி என்றால், இனி மதுரை ஆதீனத்திலும் ஆட்டம் பாட்டம் டான்ஸ் எல்லாம் இருக்குமா?''

''அதில் தவறென்ன? அனைவரையும் ஆடவைத்துச் சந்தோஷப்படுத்த நித்தியானந்தா விரும்பினால், அதற்கு நாங்கள் குறுக்கே நிற்க மாட்டோம். இளம் தலைமுறையினர் பக்தியின் சிறப்பை அறியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே அப்டேட் செய்யப்பட்ட டைனமிக் சாஃப்ட்வேர்தான் நித்தியானந்தா. அவரது வருகையால் மதுரை ஆதீன மடமும் காலத்துக்கு ஏற்பத் தன்னை அப்டேட் செய்துகொள்ளும்.

இது வரை மதுரை ஆதீனத்தில் ஒரு சூப்பர் ஸ்டார்தான். இனிமேல் இரண்டு சூப்பர் ஸ்டார்களாக கலக்கப்போகிறோம்!'' என்று அதிஉற்சாகமானார்.

''அப்போ இனி ரஞ்சிதாவும் மதுரை ஆதீனத்துக்கு வருவாரா?''

''நித்தியானந்தரின் உண்மையான சீடர் ரஞ்சிதா. அவர் மேல் எந்தத் தப்பும் கிடையாது. யாரோ செய்த சூழ்ச்சிக்கு பாவம் அந்தப் பொண்ணு பலியாகிடுச்சு. எல்லாச் சீடர்களையும்போல ரஞ்சிதாவும் மதுரை ஆதீனத்துக்கு வருவார். அதை ஆதீனமும் வரவேற்கிறது!'' என்று உற்சாகத்தின் அடுத்த கட்டத்தை எட்டினார்.

நித்தியானந்தாவிடம் பேசினோம். உஷாராக அவருக்கு அருகிலேயே வந்து அமர்ந்துகொண்டார் ஆதீனம்.

''சைவ வேளாளர் அல்லாத உங்களுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி, மதுரை ஆதீனத்தின் மரபுகளை உடைத்துவிட்டதாகப் புகார் சொல்கிறார்களே?''

ஜாலியா இருக்கணும்!

''ஐயா, நானும் தொண்டை மண்டலத்து சைவ வெள்ளாளர்தானுங்கய்யா. சிலர் முதலியார்னும் சொல்லிக்குவாங்க. மதுரை ஆதீனகர்த்தராக வரக்கூடிய சாதிக்குள்தான் நானும் வருகிறேன். 'பிடதியிலேயே தினமும் 20 மணி நேரம் உழைக்க வேண்டி இருக்கே; மதுரை ஆதீனப் பொறுப்பையும் கவனிக்க முடியுமா?’ என்று முதலில் தயங்கினேன். சந்நிதானம்தான் எனக்குத் தைரியம் கொடுத்துச் சம்மதிக்கவைத்தார்கள். மதுரையாக இருந்தால் என்ன... பிடதியாக இருந்தால் என்ன? இன்டர்நெட் யுகத்தில், நினைத்தால் இந்த உலகம்தான் கைக்குள் வந்துவிடுகிறதே. பிடதியில் இருந்தபடியே மதுரைப் பணியைக் கவனிக் கலாம். மதுரையில் இருந்தபடியே பிடதிப் பணிகளைக் கவனிக்கலாம். இப்போதைக்கு ஆதீனப் பணிகளைக் கவனிப்பதற்காக, பிடதியில் இருந்து 50 சந்நியாசிகளை மதுரைக்கு அனுப்பி இருக்கிறோம்!''

''உங்கள் உடனடி இலக்கு என்ன?''

ஜாலியா இருக்கணும்!

''குருமஹா சந்நிதானத்துக்கு சைவப் பணிகளைக் கவனிப்பதற்காக சிறு காணிக் கையாக ஒரு கோடி ரூபாயும் தங்க சிம்மாசனமும் கொடுத்திருக்கிறோம். இன்னும் மூன்றே ஆண்டுகளில் மதுரை ஆதீனத்தை அகில உலக ஆன்மிக இயக்கமாக மாற்று வதுதான் எங்களின் இலக்கு. அது மட்டும் இல்லைங்கய்யா... ஆதீனத்துக்குச் சொந்த மாக ஒரு மருத்துவக் கல்லூரியும் கட்டப் போகிறோம்!''

''அரசியலில் குதிக்க நீங்கள் திட்டம் வைத்திருப்பதாகச் சொல்கிறார்களே...'' கேள்வியை முடிப்பதற்குள், ''இதற்கு நான் தான் பதில் சொல்வேன்'' என்று இடையில் புகுந்தார் அருணகிரி.

''அப்படி ஓர் இறை அமைப்பு நித்தியாவுக்கு இருக்கு. சிவபெருமானின் தீர்ப்பு அதுவாக இருந்தால், அவர் அரசியலுக்கு வந்து மிளிர்வார். அதற்கு நாங்கள் உற்ற துணையாக இருப்போம்னு போடுங்க'' என்று சொன்னதும், வாய்விட்டு வெடித்துச் சிரிக்கிறார் நித்தியானந்தர்.

ஆசீர்வாதம்... ஆசீர்வாதம்!

யார் கேட்பது?

ஜாலியா இருக்கணும்!

ஸ்ரீலஸ்ரீ அருணகிரி ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகப் பரமாச்சார்ய சுவாமிகள் தன்னுடைய மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகப் பரமாச்சார்ய ஸ்வாமிகளைச் சட்டபூர்வமாக நியமித்தது ஒரு நாள் நகைச்சுவையாக மாறிப்போனதை நம் சமூகத்தின் அவலம் என்றுதான் சொல்ல வேண்டும். சர்வ வல்லமை மிக்க முதல்வரையோ, பிரதமரையோகூட உங்களால் கேள்வி கேட்க முடியும். ஆனால், ஆதீனகர்த்தாக்களையோ, மடாதிபதிகளையோ ஒன்றுமே செய்ய முடியாது. இதற்கு எப்படிச் சிரிப்பது?

தமிழகத்தில் உள்ள ஆதீனங்களுக்கும் மடங்களுக்கும் நீண்ட வரலாறு உண்டு. தமிழுக்கு அவை தொண்டாற்றிய காலமும் உண்டு. இன்றைக்குச் செம்மொழி அந்தஸ்து தமிழுக்குக் கிடைக்க அடிப்படையான சங்க இலக்கிய ஓலைச்சுவடிகளை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பாதுகாத்துவைத்து இருந்தவை ஆதீனங்களும் மடங்களும்தான். அவற்றிடம் இருந்துதான் ஓலைச்சுவடிகளை வாங்கி அச்சுக்குக் கொண்டு வந்தார் உ.வே.சா. பக்தி இலக்கியத்துக்கும் சைவ சித்தாந்தத்துக்கும் ஆதீனங்களின் பங்களிப்பு மகத்தானது. ஆனால், இவை எல்லாமே கடந்த காலம். இன்றைக்குப் பல மடங்கள், பழமையின் முடைநாற்றம் அடிக்கும் கோமாளிகளின் கூடாரங்கள். ஒரு பெரும் அபாயம் என்னவென்றால், இவர்களிடம் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துகள் வேறு இருக்கின்றன. முக்கியமாகக் கோயில்கள்!

மதுரை ஆதீனத்தையே எடுத்துக்கொண்டால், உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக அதற்கு 1,250 ஏக்கர் நிலம் இருக்கிறது; வணிக வளாகங்கள் இருக்கின்றன; கோயில்கள் இருக்கின்றன. ஒரு காலத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலே மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது (மீனாட்சி அம்மன் கோயிலுக்கு விலை மதிப்பு போட்டால் எவ்வளவு இருக்கும்?). இப்போது மீனாட்சி அம்மன் கோயிலை மீட்கும் திட்டத்தில் இருக்கிறாராம் நித்தியானந்தர். நடந்தாலும் நடக்கும்; யார் கேட்க?

- சமஸ்