என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

விண்வெளித் தமிழச்சி!

இரா.வினோத்படம் : என்.ஜி.மணிகண்டன்

##~##

ளர்மதி... விண்வெளித் தமிழச்சி!

 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சீறிப் பாய்ந்த 'ரிசாட் 1’  (Radar Imaging Satellite) செயற்கைக்கோளின் திட்ட இயக்குநர். நம்ம அரியலூர் அக்கா. ''வாழ்த்துகள்'' சொன்னேன் வளர்மதிக்கு!

''நான் பிறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாமே அரியலூர்தான். அப்போ அரியலூர் இன்னும் சின்னதா கிட்டத்தட்டக் கிராமம் மாதிரிதான் இருக்கும். நிர்மலா மேல்நிலைப் பள்ளியில் தமிழ் மீடியத்தில் படிச்சேன். கோவை அரசுக் கல்லூரியில் பி.இ. எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் சேர்ந்தப்போ, அந்தப் படிப்பும் நகரத்தின் பிரமாண்டமும் இன்னும் மனசில் இருக்கு. அப்புறம், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ. கம்யூனிகேஷன் சிஸ்டம்... வாழ்க்கையை அதன் சவால்களுடன் எதிர்கொள்ளும் தைரியம் வந்திருச்சு. எம்.இ. படிப்பில் நான் எடுத்த நல்ல ரேங்க் என்னை அடுத்த கட்டத்துக்கு அழைச்சுக்கிட்டுப் போனது. இஸ்ரோவின் கதவுகள் எனக்காகத் திறந்துச்சு!''- அமைதியாக, அழகாகப் பேசுகிறார் வளர்மதி.

''எண்பதுகளில் நான் வெளியே வந்தப்ப, நிறைய வாய்ப்புகள் இருந்துச்சு. அன்னைக்கு இஸ்ரோ வளர்ந்துவரும் அமைப்புதான். ஆனா, இஸ்ரோ வேலையைத்தான் தேர்ந்தெடுத்தேன்.  சயின்டிஸ்ட் சி பிரிவில் சேர்ந்து, இன்று 'ரிசாட் 1’ செயற்கைக்கோளின் திட்ட இயக்குநராக உயர்ந்ததற்கு இடையில், 27 வருஷக் கடின உழைப்பு இருக்கு.

விண்வெளித் தமிழச்சி!

என் கணவர் வாசுதேவன், வங்கி ஊழியர். எங்களுக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். ரெண்டு பேரும் கல்லூரி மாணவர்கள். அவங்களோட ஆதரவு இல்லாமல், என்னால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது'' என்று புன்னகைக்கும் வளர்மதி, இஸ்ரோவின் செயற்கைக்கோள் ஏவும் திட்டம் ஒன்றுக்குத் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டு இருக்கும் இரண்டாவது பெண்.

'' 'ரிசாட் 1’ டீமில் 65 பேர் வேலை செய்தார்கள். தேவைப்படும்போது 200, 300 பேர்கூட வேலை செய்வார்கள். அத்தனை பேருக்கும் வழிகாட்ட வேண்டிய பொறுப்பு என்னுடையது. ஆரம்பத்தில் எனக்குக் கொஞ்சம் பயம் இருந்தது. அத்தனை பேரும் நமக்குக் கட்டுப்படுவார்களா என்ற தயக்கம்.

விண்வெளித் தமிழச்சி!

ஆனால், அத்தனை பேரும் இரவு, பகல் மறந்து ஈடுபாட்டோட வேலை செஞ்சாங்க. இது வரை ஏவப்பட்ட செயற்கைக்கோள்களிலேயே 'ரிசாட் 1’தான் அதிக எடை (1,858 கிலோ) கொண்டது. முந்தையது எல்லாம் 500, 600, 1,500 கிலோ எடைதான். செயற்கைக் கோளின் எடை எவ்வளவு அதிகமாகுதோ, அவ்வளவு சவால்களும் அதிகமாகும். அதில் என் டீம் ஜெயித்து இருக்கு. அனைத்து வெற்றிகளும் எங்கள் குழுவின் உழைப்புக்கே சமர்ப்பணம்'' என்கிறார் பெருமை பொங்க!

'' 'ரிசாட் 1’ செயற்கைக்கோளின் முக்கிய அம்சம், விமானங்கள்கூட ஊடுருவ முடியாத அடர்ந்த வனங்கள், நிலம், நீர்ப் பரப்புகளைப் படம் எடுக்கும் வல்லமை. மிக அதிக சேமிப்புத் திறன்கொண்ட இந்தச் செயற்கைக்கோள், பெரும் இயற்கைச் சேதங்கள், வனங்களில் காணாமல் போகும் விமானங்களைத் தேடும் பணிகளுக்கும் பெருமளவில் பயன்படும். நாட்டோட பாதுகாப்புப் பணிகளுக்கு ரொம்ப உதவியா இருக்கும். இது வரை இப்படியான தொழில் நுட்ப உதவிகளுக்கு கனடா போன்ற நாடு களை நம்பி இருந்த இந்தியா, இனி இலங்கை, நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு உதவும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கு. இத்தனை பெரிய பொறுப்பை எனக்கு அளித்த இஸ்ரோவுக்குத்தான் என் நன்றி!''