என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

'தானே' துயர் துடைத்தோம்!

களத்தில் விகடன்விகடன் தானே துயர் துடைப்பு அணி

##~##

''புயலைவிட வேகமா வேலை பார்க் கிறீங்க!'' - தியாகவல்லி கிராம மக்கள் மலைத்துப் போய்ச் சொன்னது இது!

 கல்லும் மண்ணும் அள்ளிப் போட்டுக் கட்டி... கையில் கிடைத்த கூரைகளால் வேய்ந்து... வாழ்ந்த வீடுகளை 'தானே’ புயல் சூறையாடிச் சுருட்டி எறிந்த கண்ணீர் காயும் முன்னே... அதே இடத்தில் தங்களுக்காகப் புத்தம்புது வீடுகள் எழுந்து நிற்பதை நம்ப முடியாமல், நன்றியால் நெகிழ்கிறார்கள் அந்த மக்கள். 28 நாட்களில் 22 வீடுகள் கட்டி எழுப்பப்பட்டு இருப்பது நம் 'தானே’ துயர் துடைப்பு அணியின், புயல் வேகப் பணி!

தியாகவல்லி - பெயரைப் போலவே 'தானே’ புயலுக்குத் தங்கள் ஊரையே தியாகம் செய்துவிட்ட மக்கள் வாழும் பாவமான கிராமம். புயல் கரை கடந்த இடம் என்பதால், இங்கு பாதிப்புகள் அதிகம். எனவேதான், அந்தக் கிராமத்தை அதிக அக்கறையோடு பார்த்தோம்.

'தானே' துயர் துடைத்தோம்!

வறுமையோடும்... வாய்ப்பு வசதிகள் இல்லாமல் வாழ்க்கைக்கு வழி தெரியாமல் இருப்பவர் தொகை இங்கு அதிகம். ஆகையால், 'தானே’ தாண்டவத் தின்போது வீட்டை இழந்து வீதிக்கு வந்தவர்களுக்கு, அவர்கள் இழந்த வீடுகளை எழுப்பிக் கொடுப்பது என்று முடிவு எடுத்தோம். 'வீட்டைக் கட்டிக் கொடுப்பது’ என்ற முடிவை விட, 'உடனடியாக... எவ்வளவு விரைவில் முடியுமோ... அவ்வளவு துரித மாகக் கட்டி அவர்களைக் குடியேற்றிவிட வேண்டும்’ என்பதே முக்கியமானதாக எங்களுக்குத் தோன்றியது.

'தானே' துயர் துடைத்தோம்!

அதற்குக் காரணம், அங்கே நாம் பார்த்த காட்சிகள்! ஒரே நாள் புயலில் வீடு போய் விட்டது. பக்கத்து வீட்டில் ஓரிரு நாட்கள் ஒதுங்கி இருந்தார்கள். சொந்தங்கள் வீட்டுக்கு இரண்டு மூன்று நாட்கள் போய் வந்தார்கள். அடுத்தவர் தயவில், இடத்தில் வாழும் அவஸ்தையைவிட... மேற்கூரையும் சுற்றி மறைப்பும் இல்லாத இடத்தில் இருந்து தொலைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தவர்களாக இடிந்து விழுந்த இடத் திலேயே சேலைகளை இழுத்துக் கட்டி மறைத்துத் தூங்கினார்கள் சிலர். மாட்டுக் கொட்டகையில் ஆற்று மணலைக்கொண்டு வந்து போட்டு சாண நாற்றத்தைச் சகித் துக்கொண்டுகிடந்தனர். ராமச்சந்திரன் என்பவருக்குத் திடீர் நெஞ்சு வலி. கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே இருந்துகொண்டார். ஆனால், ப்ளஸ் டூ படிக்கும் அவர் மகன் தேர்வு எழுதியாக வேண்டும். பனை மரத்து நிழலில் படித்துக்கொண்டு இருந்தான். செல்வராஜ் என்பவருக்குக் காலில் ஆணி. வேலைக்குப் போக முடியாது. எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது. சாக்கை விரித்துப் படுத்தபடியே இருந்தார். இன்னொரு குடும்பத்தில் இரண்டு பிள்ளைகளும் இருட்டும் வரைக்கும் பள்ளிக்கூடத்திலேயே இருந்துவிட்டு அப்புறமாக வீட்டுத் திண்ணைக்கு வந்து படுத்துக்கொண்டன. இப்படி ஒவ்வொரு வீட்டு நிலைமையும் சோகமாக மாறிப்போனதால் உடனடியாக வேலைகள் தொடங்கப்பட்டன.

மார்ச் மத்தியில் பூமி பூஜையுடன் தொடங்கிய வேலைகள்... ஏப்ரல்-20 புது மனை புகுவிழாவில் நிறைந்தன. வேட்டி - சேலைகள், மங்கலப் பொருட்களுடன் வீட்டின் புதுச் சாவியை 22 குடும்பத்தினருக்கும் வழங்கினார் விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன்.

'தானே' துயர் துடைத்தோம்!

''எனக்குப் புள்ளையும் இல்லை. சொத்தும் இல்லை. கவனிச்சுக்கிறதுக்கு யாரும் இல்லை. உடம்பு சரியில்லை. படுத்தேதான் கிடக்க முடியும். ஏதாவது ஒரு கூலி வேலைக்குப் போயி கிடைச்சதைக் கொண்டு வந்து என் பொண்டாட்டி பொங்கவெச்சாத்தான் சாப்பாடு. இல்லைன்னா, அன்னிக்குப் பட்டினிதான். இப்படிப்பட்ட நிலைமையில வீடும் இடிஞ்சுபோயி, தெருவுல படுக்கவெச்சிருச்சு. எந்த யோசனையுமே இல்லாம ஒருநாள் படுத்துக்கிடந்தப்ப... பேன்ட் போட்ட ஒரு தம்பி வந்து, 'உங்க வீடு இடிஞ்சுபோச்சாமே... கேள்விப்பட்டோம். நாங்க வீடு கட்டித் தர்றோம்’னு சொல்லுச்சு. அந்தத் தம்பி சொன்னது எதுவுமே எனக்குப் புரியலை. சும்மா  அவரைப் பார்த்துத் தலையாட்டுனேன். ரெண்டு நாள் கழிச்சு அதே தம்பி... யார் யாரையோ கூட்டிட்டு வந்து காட்டுச்சு. அப்பவும் எனக்கு எதுவும் புரியலை. ஒரு வாரம் கழிச்சு... என் வீட்டு முன்னால லாரியில வந்து மண்ணு கொட்டுனாங்க. செங்கல் வெச்சாங்க. அதுக்குப் பிறகுதான் 'நீங்க யாருங்க?’ன்னே கேட்டேன். 'ஆனந்த விகடன் பத்திரிகை’னு சொன்னாங்க. நான் படிச்சவன் கிடையாது. பத்திரிகைன்னா என்னன்னும் தெரியாது. ஆனா, யாருமே இல்லாத அநாதைனு நினைச்சுட்டு இருந்த எனக்கும் என்னை மாதிரி அப்பாவிகளுக்கும் வீடு கட்டித் தர்றாங்கன்னா, நிச்சயம் நல்ல மனசுக்காரங்களாத்தான் இருக்கும்!'' - உணர்ச்சிப் பெருக்குடன் சொல்கிறார் செல்வராஜ்.

'தானே' துயர் துடைத்தோம்!

ஒவ்வொரு கிராமத்து மக்களுக்கும் பெரிய பிரச்னையாக இருப்பது கழிப்பறை வசதியின்மைதான். அதனை உணர்ந்து இந்த வீடுகள் அனைத்துக்கும் கழிப்பறையும் சேர்த்தே கட்டப்பட்டு உள்ளன. சுமார் 1.30 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒவ்வொரு வீடும் கட்டப்பட்டு உள்ளது. சேவை உள்ளத்துடன் கேட்கிறோம் என்பதை உணர்ந்த ராம்கோ சிமென்ட் நிறுவனம், சலுகை விலையில் சிமென்ட் மற்றும் ஷீட்டுகளை வழங்கியது. கூரை வீடுகள் இருந்த இடத்தில் இன்று புயலையே எதிர்கொள்ளும் அளவுக்கு வலிமையான வீடுகள் எழுந்துள்ளன.

தியாகவல்லி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் மணியரசு நம்மிடம் பேசும்«பாது சொன்னார், ''எங்க ஊர் மக்கள் எத்தனை வருஷம் ஆனாலும் மறக்க முடியாத உதவியை விகடன் வாசகர்கள் செஞ்சிருக்கீங்க. வெறும் பணத்தை மட்டும் வெச்சு இந்த உதவிகளைச் செய்ய முடியாது. அன்பும் அக்கறையுமா அழகாக் கட்டிக் கொடுத்திருக்கீங்க. உங்களுக்கும் உங்கள் வாசகர்களுக்கும் திருச்சோபுரம் நாதர் அருள் கிடைக்கட்டும்!''

அந்த அருள், விகடனின் வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் உரித்தானது!