என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

நண்டு ஊருது... நரி ஊருது!

கே.கே.மகேஷ்படங்கள் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

##~##

டேல்லா பென்ரிஸ் மான்ட்ரிக் அகோஸ்டா... ஐந்து வயது தேவதைக் குழந்தை.  தந்தையால் தாய் கொல்லப்பட,  தந்தை சிறையில் தள்ளப்பட, மெக்சிகோவில் இருந்து தமிழகம் வந்தவள், இப்போது மதுரை போலீஸாரின் பாதுகாப்பில் இருக்கிறாள். அம்மா இல்லை... அப்பா சிறையில் என்பதை எல்லாம் உணர முடியாத வயதில், முத்துப்பட்டி விடியல் காப்பகக் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு இருக்கிறாள் அடேல்லா.

 ''பத்திரிகையில இருந்து வந்திருக்காங்க... இப்படியேவா போறது!'' என்றபடி திருநகர் எஸ்.ஐ. உமா மகேஸ்வரி, அடேல்லாவுக்குத் தலை வாரிப் பூ வைத்து அனுப்புகிறார். மதுரை எஸ்.பி. ஆஸ்ரா கர்க், ''உங்களுக்கு ஸ்பானிஷ் தெரியுமா?'' என்று கேட்காமல், ''அந்தப் பாப்பாவுக்குத் தமிழ் தெரியாதே?'' என்கிறார் புன்னகையுடன். ''குழந்தைங்க மொழி, உலகம் முழுக்க ஒண்ணுதானே சார்?'' என்று, அடேல்லா முன் அமர்ந்தேன். ''ஹாய் லிட்டில் கேர்ள்...''

நண்டு ஊருது... நரி ஊருது!

அரை மனதுடன், ''ஓலா!'' என்று சொல்லிவிட்டு, என்ன நினைத்தாளோ பாடத் தொடங்கினாள்.

''பியூட்டிஃபுல்... ஸ்பானிஷ்ல ரொம்ப நல்லாப் பாடுறியே!''

''இட்ஸ் நாட் ஸ்பானிஷ். இட்ஸ் இங்கிலீஸ்!'' என்று எனக்கு கலர் பல்பு கொடுத்துவிட்டு, கலகலவெனக் கை கொட்டிச் சிரித்தாள்.

''ஐ டோன்ட் நோ ஸ்பானிஷ். ஒன்லி லிட்டில் பிட் இங்கிலீஸ்!' என்றேன் அப்பாவி யாக. கொஞ்சம் மனசு இரங்கி என் கண் களைப் பார்த்தவள், கொஞ்சம் இறங்கி வந்தாள். எங்கள் உரையாடலின் மொழிபெயர்ப்பு அப்படியே கீழே...

''உனக்கு நிறையக் கதை தெரியுமாமே... ஒரு குட்டிக் கதை சொல்லேன்?''

''ஒரு மரத்துல ஒரு காக்கா இருந்துச்சாம். அதோட முட்டையில இருந்து ரெண்டு குஞ்சு வந்துச்சாம். அதுங்க ரெண்டும் 'கீ...கீ...’னு கத்துச்சாம். 'அப்படிக் கத்தாதீங்க... நல்லாவே இல்லை. கா...கா...னு கத்தணும்’னு அம்மா சொல்லுச்சாம். அதனாலதான் காக்கா எல்லாம் 'கா... கா...’னு கத்துதாம்!''

''உனக்கு என்னல்லாம் பிடிக்கும்?''

''ஆப்பிள், ஆரஞ்சு, சாக்லேட், ஐஸ்க்ரீம், அப்பாவுக்குப் பிடிச்ச 'கின்லே’ சோடா, கர்ட் ரைஸ், சப்போட்டா ஜூஸ் பிடிக்கும் அப்புறம் புரோட்டா குருமா, பிக்கிள்ஸ் பிடிக்காது. பிகாஸ் தே ஆர் வெரி ஸ்பைசி (கண்களை இறுக்கி மூடி, 'உஸ்ஸ்’ என்று அவள் சொல்லும்போது, நமக்கே காரம் தலைக்கு ஏறுகிறது!)

''என்ன கேம்ஸ் பிடிக்கும்?''

(மெதுவாக நம் பக்கம் வந்தவள், திடீரெனக் கிச்சுகிச்சு மூட்டிவிட்டு) 'நண்டு ஊருது... நரி ஊருது... ரொம்பப் பிடிக்கும். அப்புறம் அது என்ன விளையாட்டு... ம்ம்ம்... (அருகில் நிற்கும் சிறுமி மாசானியிடம் கேட்டுவிட்டு) கண்ணாமூச்சி பிடிக்கும்!''

நண்டு ஊருது... நரி ஊருது!

''நீ ரொம்ப சேட்டை பண்ணுவியோ?''

''அப்படி எல்லாம் இல்லை. மத்தவங்க காதுக்குள்ள 'குர்ர்...’ சொல்லுவேன். அவங்க இடுப்புல கூச்சம் காட்டுவேன். மெத்தை மேல தாம்தூம்னு குதிப்பேன். இப்படி டான்ஸ் ஆடுவேன்!'' என்றபடி ஆடிக் காட்டு கிறாள்.

''நீ என்ன கிளாஸ் படிக்கிறேனு சொல்லவே இல்லையே?''

''மெக்சிகோவுல கிண்டர் கார்டன் தேர்டு இயர். இங்கேன்னா, ஃபர்ஸ்ட் கிளாஸ்!''

''உனக்குத் தமிழ் தெரியுமா?''

''ஓ தெரியுமே! அ... ஆ... இ... எ... ஐ... ஊ... ஃ... கரெக்ட்? அப்புறம்... அம்மா, அப்பா, ஆமா, இல்லை... (அங்குமிங்கும் ஓடியபடியே ராகமாகப் பாடுகிறாள்).

''நீ சூப்பரா படம் வரைவியாமே?''

''ஆமா. (கூந்தலில் இருக்கும் மல்லிகையைத் தொட்டுச் சரிபார்த்துக்கொள்கிறாள்.) அப்பா படம் வரைஞ்சி அவருக்கு கிஃப்ட் பண்ணியிருக்கேன். எனக்கு அப்பாவோட மீசை ரொம்பப் பிடிக்கும். என்னையும் படம் வரைஞ்சிருக்கேன் பார்க்கிறீங்களா? (பொன்னிறக் கூந்தலுடன் வரையப்பட்ட சிறுமி படத்தைக் காட்டுகிறாள். அதில் அடேல்லா என்று எழுதியிருக்கிறது.)

''ரொம்ப அழகா இருக்கு. எனக்குத் தர்றியா?''

நண்டு ஊருது... நரி ஊருது!

''ஸாரி... என் ஃப்ரெண்டுக்கு தர்றதா பிராமிஸ் பண்ணிட்டேனே...'' என்றவள் திடீரெனச் சோகமாகிவிட்டாள்.

''அவளுக்கு அப்பா நினைப்பு வந்திருச்சு...'' என்று நம்மிடம் கிசுகிசுத்த விடியல் பொறுப்பாளர், அடேல்லாவை மடியில் வைத்துக்கொண்டு கதை சொல்ல ஆரம்பித்தார். பிரிந்துவிட்ட குஞ்சுப் பறவையைத் தேடி தாய்ப் பறவை, தன் கூட்டத்தோடு வருகிறது என்பதாக நீண்டது அந்தக் கதை. சில நிமிடங்களில் இயல்புக்குத் திரும்பினாள் அடேல்லா.

அப்போது வாசலில் வந்து நின்ற காரில் இருந்து இறங்கி வந்தார் அடேல்லாவின் பாட்டி. அவரைப் பார்த்ததுமே கன்றுக்குட்டியாகத் துள்ளி ஓடி அவரைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள் அடேல்லா.

எல்லாருக்கும் 'பை பை’ சொன்னவள், ''அங்கிள் ஜூன் 20 எனக்கு பர்த் டே. எல்லாரும் அவசியம் மெக்சிகோ வரணும்'' என்றபடி ஃப்ளையிங் கிஸ் கொடுத்துவிட்டு சிறகு முளைத்த தேவதையாகப் பறந்து சென்றுவிட்டாள் அடேல்லா!

அடேல்லாவின் கதை!

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த மார்ட்டின் மான்ரிக், கியுலா டெனிஸ் அகோஸ்டா இருவரும் சேர்ந்து வாழ்ந்தவர்கள். இவர்களின் மகள்தான் அடேல்லா. தாய் - தந்தை பிரிந்த பிறகு அடேல்லா யாரோடு வசிப்பது என்பது தொடர்பாக ஓர் ஒப்பந்தம் இருந்தது. அதன் படி, குறிப்பிட்ட காலம் வரை தாய், தந்தை இருவரிடமும் மாறி மாறி குழந்தை இருக்க வேண்டும். இதற்கிடையே இருவரும் வேலை நிமித்தமாக இந்தியா வந்தார்கள். மார்ட்டின் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் கணித ஆராய்ச்சி செய்துவந்தார். அவரோடுதான் அடேல்லா இருந்தார். கேரளத்தின் திருச்சூரில் நடனம் பயின்றுவந்த அகோஸ்டா ஒப்பந்தத்தை மீறி அடேல்லாவைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு மார்ட்டினிடம் கேட்டார். ஏற்கெனவே அகோஸ்டாவுக்குப் பிறருடன் இருந்த தொடர்பு காரணமாகக் கோபத்தில் இருந்த மார்ட்டின், கடந்த 8-ம் தேதி அவரைக் கொலை செய்து, மதுரை திருநகர் அருகே உள்ள தோப்பூர் கண்மாயில் எரித்துவிட்டார். இப்போது அவர் சிறையில் உள்ள நிலையில், தாய், தந்தை இல்லாமல் தனித்துவிடப்பட்ட அடேல்லா மதுரை விடியல் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டாள். அவளைத் தங்களிடம் ஒப்படைக்கக் கோரி தாய் வழிப் பாட்டியும் தந்தை வழிப் பாட்டியும் வழக்கு தொடர்ந்தனர். இறுதியில் தந்தை வழிப் பாட்டியிடம் ஒப்படைக்க ஆணை பிறப்பிக்கப் பட்டது. இனி, அடேல்லா மெக்சிகோவில் இருப்பாள்.