என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

• பிபாஷாவிடம் இருந்து பிரிந்துவிட்ட ஜான் ஆப்ரஹாம் அடுத்த காதலில் சிக்கிவிட்டார். மும்பையைச் சேர்ந்த முதலீட்டு ஆலோசகரான ப்ரியா ரூஞ்சலுக்கும் ஜானுக்கும் சம்திங் சம்திங். 'சம்திங் அல்ல... எவ்ரிதிங்! இந்த வருஷ இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம்!’ என்று அறிவித்திருக்கிறது காதல் ஜோடி. நடத்துங்க!  

• கடன் வாங்கியேனும் ஆடம்பரத் திருமணம் புரியும் 'இந்தியத் திருமண மரபு’க்கு ஓங்கி ஓர் அடி கொடுத்து இருக்கிறார்கள் குஜராத்தின் விஜய் கரோடி-சீமா கரேசியா தம்பதி. பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர்கள், தங்களுடைய சமூகத்தினர் நடத்திய 35 ஜோடிகளுக்கான திருமணத்தில், தங்கள் திருமணத்தையும் முடித்து 'கல்யாணத்துக்காகச் செலவு செய்றதை மிச்சப்படுத்துங்க!’ என மெசேஜ் சொல்லி இருக்கிறார்கள். இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? சீமா கரேசியா பள்ளி ஆசிரியை. விஜய் கரோடி ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி. ஒன் குட் மெசேஜ் ரிசீவ்டு!

• அடுத்த வருடம் முழுக்க கோடம்பாக்கத்தில் 'இசைப் புயல்’! 'கடல்’, 'கோச்சடையான்’, 'யோஹன் - அத்தியாயம் 1’, கமல், ஷங்கர், தனுஷின் அடுத்தடுத்த படங்கள் என 2013 வருட டைரி முழுக்க கோலிவுட் கால்ஷீட்டால் நிரப்பி வைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஓஹோ ஹோசன்னா!

இன்பாக்ஸ்

• அக்கட பூமியில் ஹிட் அடித்திருக்கிறது ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'தம்மு’. பகை வேட்கைக் கிராமத்துச் சொந்தங்கள்... அவர்களைத் திருத்த வரும் ஹீரோ... க்ளைமாக்ஸில் அவரே தலைகளை வெட்டிச் சாய்க்கும் கதை. எங்கேயோ கேட்ட கதையாக இருக்கிறதா? 'தேவர் மகனின்’ 2012 வெர்ஷன்தான் 'தம்மு’. ரேவதி-கௌதமியாக... த்ரிஷா-கார்த்திகா. அதே நாசர், அதே பொள்ளாச்சி. படத்தைத் தமிழில் 'சிங்க மகன்’ என்று வெளியிட்டு இருக்கிறார்கள். பல வருஷமா, பார்த்த படங்களையே பார்த்துட்டு இருக்கோம் மக்களே!

இன்பாக்ஸ்

• மகேஷ் பாபுவின் அண்ணனாக வெங்கடேஷ் நடிக்க... கோலிவுட், டோலிவுட் என இரண்டு மொழிகளிலும் வெளிவர இருக்கிறது ஒரு படம். இதில் நடிக்க த்ரிஷாவைக் கேட்டிருக்கிறார்கள். 'வெங்கடேஷ§க்கு ஜோடியா ஓ.கே. பட், மகேஷ் பாபுவுக்கு அண்ணியா? நோ நோ!’ என டென்ஷனாகி வாய்ப்பை மறுத்துவிட்டார் த்ரிஷ். ஆனால், 'நான் நடிக்கிறேன்!’ என்று அந்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இருக்கிறார் அஞ்சலி. ஆந்திராவில் அண்ணி ராஜ்ஜியம்!

இன்பாக்ஸ்

• இரான்-ஸ்வீடன் கூட்டுக் கலவையான மரியம் ஸக்கரியாதான் இப்போது பாலிவுட்டின் 'மோஸ்ட் வான்டட்’ அயிட்டம் கேர்ள். 'ஏஜென்ட் வினோத்’ படத்தின் 'முஜ்ரா’ பாட்டில் அம்மணி அள்ளிய அப்ளாஸ்... இந்தி 'சிறுத்தை’ ரீ-மேக், தெலுங்கு 'தம்மு’ படங்களில் மரியத்துக்கு சிவப்புக் கம்பளம் விரித்திருக்கிறது. அழகி தமிழ் பேசும் நல்லுலகத்துக்கு வருகை தரலாமாம். மரியத்தின் ஒரே சினிமா தோழி முமைத்கான் என்பது கூடுதல் தகவல். தோழிடீ!

இன்பாக்ஸ்

• அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பபித்ரா ராபா, ஒரு முற்போக்கு நாடகக் கலைஞர். உயரம் குறைவான மனிதர்களுக்குப் பயிற்சி அளித்து புரட்சி - அதிரடி நாடகங்களை அரங்கேற்றுவார். அதன் மூலம் வரும் வருமானத்தில், உதல்குரி மாவட்டத்தில் உயரம் குறைவான மனிதர்களுக்கு எனப் பிரத்யேகமான கிராமத்தை உருவாக்கி இருக்கிறார். இப்போது இந்தக் கிராமத்தில் நூற்றுக்கணக்கான உயரம் குறைந்த மனிதர்கள் வசிக்கிறார்கள். கின்னஸுக்கு எழுதிப் போடுங்கப்பா!

இன்பாக்ஸ்

• பாபா ராம்தேவைப் பின்னுக்குத் தள்ளி, பப்ளிசிட்டியை அள்ளிவிட்டார் நிர்மல் பாபா. தன்னை நாடி வரும் நோயாளிகளுக்கு நிர்மல் பாபா தரும் சர்வரோக நிவாரணி... பானி பூரி மட்டுமே! 'என் கை படுவதால் அது மருந்தாகிவிடுகிறது!’ என்பது பாபாவின் விளக்கம். இதனால், பாபாவின் ஆசிரம வாசலில் பானி பூரி கடை போட எக்கச்சக்க அடிதடி. இந்தியாவில்தான் இப்படிலாம் நடக்கும்!

இன்பாக்ஸ்

• இந்தியாவில் சேட்டிலைட் சேனல்களின் வளர்ச்சி, அதன் தாக்கம் ஆகியவற்றை அலசும் டிஸ்கவரி சேனலின் 'இன்சைட் இந்தியன் டெலிவிஷன்’ நிகழ்ச்சியில் கமல்ஹாசன், ஷாரூக் கான், ஏக்தா கபூர், ரோனித் ராய், ஸ்மிருதி இரானி, சாக்ஷி தன்வர் என இந்தியப் பிரபலங்கள் பலர் கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறார்கள். நிகழ்ச்சி மே 4-ம் தேதி இரவு 8 மணிக்கு தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது. அச்சோ அது மெகா சீரியல் ஸ்லாட்டாச்சே!  

• ஆட்சி மாற்ற, காட்சி மாற்றத்தில் துளிர்க்க ஆரம்பித்திருக்கிறது 'ஜெயா பிக்சர்ஸ்’! அதிரடி ஆரம்பமாக கமல் நடிக்கும் 'விஸ்வரூபம்’ படத்தின் தியேட்டர் மற்றும் டி.வி. உரிமையைப் பெற்றிருக்கிறார்களாம். இன்னும் நாலு வருஷம் இவங்கதான் விஸ்வரூபம் காட்டுவாங்க!

• ஏறத்தாழ 67 வருடங்களுக்குப் பின் மீண்டும் ஹிட்லரை வாசிக்கவிருக்கிறார்கள் ஜெர்மானிய மாணவர்கள். ஹிட்லரின் அரசியல் சித்தாந்தங்களைக்கொண்ட அவருடைய சுயசரிதையான 'என் யுத்தம்’ (மெயின் காம்ஃப்) புத்தகத்துக்கு விதித்திருந்த தடையை நீக்கி இருக்கிறது ஜெர்மனி. ஹிட்லர் ரிட்டர்ன்ஸ்!

• காங்கிரஸ் சார்பாக மாநிலங்களவையில் கால் வைத்திருக்கும் சச்சினுக்கு அவருடைய 100 சத சாதனையைக் கௌரவிக்கும் வகையில் 100-வது இருக்கையை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்திருக்கிறது. தற்போது 100-வது இருக்கையில் அமர்ந்திருக்கும் ஹிந்துஸ்தான் லீவர் நிறுவன முன்னாள் தலைவர் அசோக் கங்குலி, 'சச்சினுக்காக இருக்கை மாற ரெடி’ என உடனடியாக அறிவித்தும்விட்டார். அங்கேயும் கங்குலிகூடத்தான் பார்ட்னர்ஷிப்பா?

இன்பாக்ஸ்

• ஃபெடரேஷன் கோப்பைத் தடகளப் போட்டியில் முதல் இடம் பிடித்ததன் மூலம் லண்டன் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளத் தகுதி பெற்றிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த ரஞ்சித். ட்ரிபிள் ஜம்ப்பில் ரஞ்சித்தின் ஃபெடரேஷன் கோப்பைத் தாண்டல், ஒலிம்பிக் போட்டிக்கான தகுதித் தாண்டல் அளவு என்பதால், நேரடியாக லண்டன் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பு. தங்கம் தட்டு தலைவா!