என் விகடன் - திருச்சி
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
Published:Updated:

டெங்கு உஷார்!

பா.பிரவீன்குமார், ஆண்டனிராஜ்படங்கள் : எல்.ராஜேந்திரன்

##~##

டெங்கு... கோடை விடுமுறையை உற்சாகமாகக் கொண்டாட வேண்டியவர்களை முடக்கிப் போட்டிருக்கும் விஷக் காய்ச்சல். நெல்லை மாவட்டம், கடையநல்லூர் அருகே ஒரு மாதத்துக்கு முன் பரவ ஆரம்பித்த இந்தக் காய்ச்சலுக்கு இதுவரை 33 உயிர்கள் பலியாகி இருக்கின்றன.

காய்ச்சலைவிட அதன் பரவல் குறித்த வதந்திகள் தென் மாவட்ட மக்களைப் பெரும் பீதிக்கு உள்ளாக்கி இருக்கின்றன. டெங்கு காய்ச்சலின் இயல்பு, வரும் முன் காக்கும் முன்னேற்பாடுகள் குறித்து மருத்து வர்களிடம் பேசினோம்.

''பன்றிக் காய்ச்சல்போல இது இருமல், தும்மல் மூலம் நேரடியாகப் பரவாது என்பதால், பதற்றம் வேண்டாம்'' என்கிறார் பொதுநல மருத்துவர் எம்.நாகஜோதி.

டெங்கு உஷார்!

''வைரஸ் காய்ச்சலில் முக்கியமானது டெங்கு. இதன் மோசமான அபாயம் என்னவென்றால், இதற்குத் தடுப்பு ஊசியோ, தடுப்பு மருந்தோ கிடையாது. 'ஏடிஸ் எஜிப்டி’ எனும் வகைக் கொசுக்கள் மூலம் இது பரவுகிறது. இந்தக் கொசுக்கள் பகல் நேரத்தில்தான் கடிக்கும். தேங்கி இருக்கும் நல்ல தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் இயல்பைக்கொண்டவை இவை. உடல் வலி, முதுகு வலி, காய்ச்சல், சமயத்தில் குளிருடன் காய்ச்சல், சிலருக்கு உடலில் சிவப்புப் புள்ளிகள்... இவை எல்லாம் அறிகுறிகள். டெங்கு காய்ச்சல் தாக்கியதும் ரத்தத்தில் ரத்தத்தட்டுகளின் (பிளேட்லெட்ஸ்) எண்ணிக்கை குறையும். தொடக்கத்திலேயே காய்ச்சலைக் கவனிக் காமல்விட்டால், நுரையீரல், வயிறு, சிறு நீர்ப் பாதை எனப் பல இடங்களில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தானதாக மாறிவிடும்'' என்று எச்சரிக்கிறார் நாகஜோதி.

டெங்கு உஷார்!

பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் மனோகரன் காய்ச்சல் பாதிப்பில் இருந்து மீள வழிகாட்டுகிறார்.

டெங்கு உஷார்!

''கொசு கடித்த மூன்று நாட்களில் இருந்து ஐந்து நாட்களுக்குள் அறிகுறிகள் தென்படும். ஐந்து நாட்களில் இருந்து பத்து நாட்கள் வரை காய்ச்சல் நீடிக்கும். இது அவரவர் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியைப் பொறுத்தது. டெங்கு பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு உடல் வலி, அசதி, சோர்வு அதிகமாக இருக்கும். இதனால், பெரும்பாலானோர் மருந்துக் கடைகளில் வலி மாத்திரைகளைக் கேட்டு வாங்கி உட்கொள்கிறார்கள். இந்தச் சுய மருத்துவம்தான் உயிருக்கே உலை வைத்துவிடுகிறது. தொடக்கத்திலேயே மருத்துவரை அணுகிவிட்டால், டெங்கு காய்ச்சலுக்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. அதிகபட்சம் இரு வாரங்களில் டெங்குவுக்கு குட் பை சொல்லிவிடலாம்'' என்கிறார் அக்கறையுடன்!