மற்ற எபிசோடுகள்
Published:Updated:

80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 22: நான் கொடுத்து வைத்தவள்! - நடிகை அமலா

நடிகை அமலா
பிரீமியம் ஸ்டோரி
News
நடிகை அமலா ( Aval Vikatan )

எங்கள் குடும்பம் சினிமா குடும்பம்...

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்களின் வெற்றிக் கதை சொல்லும் தொடர் இது. இந்த இதழில், அமலா.

நடனம் கற்க சென்னை வந்த அமலா, பின்னர் நடிகையானார். 1980-களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் கனவுக் கன்னியாக வலம்வந்தார். புகழின் உச்சத்தில் இருந்தபோது, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவைத் திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகினார். இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்துவருவதோடு, சமூக சேவை மற்றும் கல்லூரி நிர்வாகப் பணிகளிலும் பிஸி. என்றும் இளமையுடன் இருக்கும் அமலா, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.

கால்நடை மருத்துவர்... டான்ஸர்!

இந்தியக் கடற்படை அதிகாரியாக வேலை செய்துவந்த அப்பா, பேராசிரியராகவும் பணியாற்றினார். கரக்பூர்ல பிறந்த நான், அப்பாவின் பணிச்சூழலால் பல மாநிலங் கள்லயும் வளர்ந்தேன். அதனால புது மொழிகளை ஆர்வமா கத்துப்பேன். ஒருசில படங்கள் பார்த்தது தவிர, அப்போ சினிமா பார்க்க வாய்ப்பு கிடைக்காது. சினிமாவுக்கு எந்த வகையிலும் சம்பந்தமே இல்லாத குடும்பம். சின்ன வயசுல வீட்டில் நிறைய வளர்ப்புப் பிராணிகளை வளர்த்தேன். அவை மீதுள்ள பிரியத்துல, எதிர்காலத்தில் கால்நடை மருத்துவராகணும்னு ஆசைப்பட்டேன்.

NAGARJUNA, Amala
NAGARJUNA, Amala
Aval Vikatan

என் ஆறு வயசுல விசாகப்பட்டினத்தில் குடியேறினோம். ஒருமுறை பெங்களூர்ல நடந்த பத்மா சுப்ரமணியம் மேடத்தின் நடன நிகழ்ச்சிக்கு அம்மா கூட்டிட்டுப்போனாங்க. அதுவரை டான்ஸ் பத்தி எதுவும் தெரியாத நான், பத்மா மேடத்தின் நடனத்தைப் பார்த்து வியந்தேன். பிறகு சாப்பிடும்போது, ஹோம்வொர்க் செய்யும்போது, ஸ்கூல் போகும்போதுன்னு எப்போதும் டான்ஸ் ஆடிட்டே இருந்தேன். டான்ஸ் ஸ்கூல்ல சேர்ந்து, ஈடுபாட்டுடன் டான்ஸ் கத்துகிட்டேன். என் நடனத்திறமையை மெருகேத்திக்க, சென்னை கலாக்ஷேத்ராவில் பயிற்சி எடுக்கப் பலரும் அறிவுறுத்தினாங்க. ஒருநாள் அம்மாவும் நானும் சென்னை வந்து கலாக்ஷேத்ராவில் விசாரிச்சோம். பிறகு, கடற்கரையில உட்கார்ந்து விவாதிச்சோம். `உன்னால தனியா இருக்க முடியுமா?’ன்னு எங்கம்மா கேட்க, `நான் சமாளிச்சுப்பேன்’னு சொன்னேன்.

ஹாஸ்டல் வாழ்க்கை...

டி.ராஜேந்தருடன் சந்திப்பு!

என் எட்டு வயசுல சென்னையில ஹாஸ்டல் வாழ்க்கையைத் தொடங்கினேன். நல்லா படிப்பேன். படிப்பு, டான்ஸ் இரண்டுமே ஒரே இடத்தில். அமைதியான சூழலில் எனக்குப் பிடிச்ச மாதிரியான வாழ்க்கை. எங்க லேடீஸ் ஹாஸ்டலில் நிறைய கலாட்டாக்கள் நடக்கும். நிறைய தோழிகள் கிடைச்சாங்க. ஆர்வத்துடன் தமிழ் கத்துகிட்டேன். விடுமுறை நாள்கள்ல, தெரு நாய்களின் நலனுக்காக அதிக நேரம் செலவிடுவேன். பிராணிகள் மீதான நேசத்தில், சைவத்துக்கு மாறினேன்.

கலாக்ஷேத்ராவுல காலேஜ் படிச்சுக்கிட்டே, அந்த இன்ஸ்டிட்யூட் சார்பில் பல மாநிலங்கள்ல நடக்கும் நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆடினேன். ஓரளவுக்கு வருமானம் கிடைச்சாலும், அது எனக்குப் போதலை. அப்போ என் அம்மா அயர்லாந்துல இருந்தாங்க. அப்பா இன்னொரு கல்யாணம் செய்துகிட்டார். படிப்பு உள்ளிட்ட என் எல்லாத் தேவைகளையும் நானேதான் பார்த்துக்கிட்டேன். அம்மாவின் தேவைகளையும் கவனிச்சுக்கிற பொறுப்பும் எனக்கிருந்தது.

இயக்குநர் டி.ராஜேந்தர் சார் என் நடனத் தைப் பார்த்திருக்கார். கூடுதல் வருமானத் தேவையை எதிர்பார்த்துக்கிட்டிருந்தபோது தான், ஒருநாள் என்னைச் சந்திச்சார் டி.ஆர் சார். அவர் படத்தில் என்னை நடிக்கக் கேட்டார். அதுவரை ஒரு தமிழ்ப் படம்கூட நான் பார்த்த தில்லை. ஐயங்கார் பாஷையிலதான் தமிழ் பேசுவேன். `எனக்கு நடிக்கத் தெரியாது’ன்னு அவர்கிட்ட நான் சொல்ல, `அதுதான் எனக்கு வேணும். உன்னை நடிக்கவைக்கிறது என் பொறுப்பு’ன்னு சொன்னார்.

ஸ்ரீவித்யாவின் ஊக்கம்...

தோல்வி தந்த படிப்பினை!

முதலில் நடிக்க மறுத்தாலும், அப்போதைய என் சூழலுக்கு நடிப்பைச் சிறந்த வாய்ப்பா நினைச்சேன். `இஷ்டம் இருந்தா நடி. நான் உனக்கு உதவியா வர்றேன்’னு அம்மா சொன்னாங்க. அதன் பிறகுதான், `மைதிலி என்னைக் காதலி’ படத்துல நடிக்க சம்மதிச்சேன். நடிப்பு, தமிழ் உச்சரிப்பு உட்பட நிறைய விஷயங்களை டி.ஆர் சார் சொல்லிக்கொடுத்தார். அந்தப் படத்துல நடிச்ச ஸ்ரீவித்யா அக்கா, தனிப்பட்ட முறையில என்மேல் அன்புகாட்டி ஊக்கம் கொடுத்தாங்க. அந்தப் படம் ரிலீஸாகும் முன்பே நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனா, எதையும் ஏத்துக்காம டி.ஆர் சார் சொன்னபடி படம் ரிலீஸாகும்வரை காத்திருந்தேன்.

அமலா
அமலா
Aval Vikatan

`மைதிலி என்னைக் காதலி’ படத்தை தியேட் டரில் பார்த்தப்போ, என் நடிப்பு எனக்கே ஆச்சர்யமா இருந்துச்சு. என்னால தொடர்ந்து நடிக்க முடியும்கிற நம்பிக்கையும் கிடைச்சுது. முதல் படமே பெரிய ஹிட்டாக, பிரபலமானேன். யாரையும் போட்டியா எடுத்துக்காம, எந்தத் திட்டமிடலும் இலக்கும் இல்லாம பல மொழிகளிலும் நடிச்சேன். அப்போல்லாம் புதுமுக நடிகைகளிடம், `கால்ஷீட் இருக்கா’ன்னு கேட்டுட்டு, மேலோட்டமாகத்தான் கதை சொல்வாங்க. அப்போ சினிமாவுல எனக்கு ஆதரவாகவும் வழிகாட்டவும் யாருமில்லை. அதனால, ஒரே மாதிரியான கேரக்டர், காஸ்ட்யூம்னு பெரிசா வெரைட்டி இல்லாமலேயே பல படங்கள்ல நடிச்சேன். அதன் விளைவா, தொடர்ந்து ஆறு படங்கள் தோல்வியடைஞ்சது. என் தரப்பிலான தவறுகளை உணர்ந்தேன். என் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டுவரும் வகையில், கமல் சாருக்கு ஜோடியா நடிச்ச `புஷ்பக விமானம்’கிற கன்னடப் படம் அமைஞ்சது.

சுயபரிசோதனை... அம்மாவுக்கு வீடு!

`மேக்கப் வேண்டாம். நீ எப்படி இயல்பா இருப்பியோ, அதுபோலவே நடி’ன்னு சொன்ன இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் சார், சிறப்பா நடிக்க வெச்சார். அந்தப் படத்தின் மூலம் என் நடிப்புக்குப் பல மொழி சினிமா வட்டாரங்களிலும் வரவேற்பு கிடைச்சுது. அதுபோலவே `அக்னி நட்சத்திரம்’ படத்துலயும் கலகலப்பான ரோல்ல இயக்குநர் மணிரத்னம் சார் என்னை நடிக்க வெச்சார். அடுத்தடுத்து நிறைய வெற்றிப்படங்கள்ல நடிச்சாலும், ஹீரோயின் என்ற உணர்வே எனக்கு வரலை. சொந்தக் கால்ல நிற்கவும் சம்பாதிக்கவும் கைவசம் இருக்கிற நடிப்புத் தொழிலை, சரியா பயன்படுத்திக்கணும்னுதான் ஒவ்வொருநாளும் நினைப்பேன். விடிஞ்சதும் ஷூட்டிங் கிளம்பினா, ராத்திரி தூங்குவதற்குத்தான் வீட்டுக்கு வருவேன். இப்படியே காலம் ஓடுச்சு. ஒருகட்டத்துல மேற்கொண்டு ஆக்டிவா என்னால நடிக்க முடியலை. அமெரிக்காவுக்கு மூணு மாசம் ஓய்வெடுக்கப் போனேன். அப்போ சுயபரிசோதனை செய்துகிட்டேன்.

கமல் சார்கூட நடிக்கிறப்போ நிறைய விஷயங்களைக் கத்துக்க வாய்ப்பு கிடைக்கும். ரஜினி சார்கூட நடிக்கிறப்போ கலர்ஃபுல்லா கலகலப்பா இருக்கும்.

எண்ணிக்கைக்காக, ஹிட்டுக்காக, புகழுக் காக, பணத்துக்காக இனி நடிக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணினேன். பிறகு, முக்கியத்துவமுள்ள ரோல்களை மட்டுமே தேர்வு செய்தேன். நிறைய வாய்ப்புகளைத் தவிர்த்து, முழு ஈடுபாட்டுடன் ஒருநாளைக்கு ரெண்டு ஷிஃப்ட் மட்டும் நடிச்சேன். அப்போல்லாம் நடிச்சு முடிச்சுக்கொடுத்தபிறகும்கூட சில படங்களுக்கான சம்பளம் கொடுக்க கால தாமதம் செய்வாங்க. `நாயகன்’ படத்தின் இந்தி ரீமேக் `தயவன்’ படத்துல நான் நடிச்சப்போ, படத்தின் தயாரிப்பாளர் ஃபெரோஸ் கான் முதல் ஷெட்யூல் முடிஞ்சதுமே எனக்கு சம்பளப் பணம் மொத்தத்தையும் கொடுத்துட் டார். அது பெரிய உதவியா இருந்துச்சு. அந்தப் பணம் உட்பட நடிச்சு சேமிச்ச பணத்துல, 23 வயசுல சென்னை அடையாறுல எங்கம்மாவுக்கு ஒரு வீடு வாங்கினேன். அளவில்லாத மகிழ்ச்சி கிடைச்ச தருணம் அது. நடிப்பினால், டான்ஸைத் தொடர முடியலை. அதனால, கொஞ்சம் வெயிட் போட ஆரம்பிச்சேன். பிறகு, யோகா செய்றதை வழக்கமாக்கி, எடையைக் கட்டுக்குள் வெச்சிருக்கேன்.

குருநாதரின் பாராட்டு... காதல் திருமணம்!

இதற்கிடையே ரஜினி, கமல் உட்பட பல மொழி சூப்பர் ஸ்டார்களுடனும் பல படங்கள்ல ஜோடியா நடிச்சேன். கமல் சார் எனக்கு ஆசிரியர் மாதிரி. அவர்கூட நடிக்கிறப்போ நிறைய விஷயங்களைக் கத்துக்க வாய்ப்பு கிடைக்கும். ரஜினி சார்கூட நடிக்கிறப்போ கலர்ஃபுல்லா கலகலப்பா இருக்கும். `மெல்லத் திறந்தது கதவு’, `வேதம் புதிது’, `வேலைக்காரன்’, `கொடி பறக்குது’, `சத்யா’, `மாப்பிள்ளை’, `வெற்றி விழா’, `புதுப்பாடகன்’, `மெளனம் சம்மதம்’னு நிறைய வெற்றிப்படங்கள் அமைஞ்சது. ஆறு வருஷத்துல ஐந்து மொழிகளில், ஐம்பது படங்கள்ல ஹீரோயினா நடிச்சேன். என் வளர்ச்சியைப்பார்த்து டி.ஆர் சார் பல நேரங்கள்ல மனதாரப் பாராட்டியது, மிகச் சிறந்த மகிழ்ச்சித் தருணங்கள்.

இந்த நிலையில நாகார்ஜுனாவும் நானும் நாலு தெலுங்கு படங்கள்ல ஜோடியா நடிச்சோம். எங்க நட்பு, காதலாக மலர்ந்துச்சு. சினிமாவில் நடிக்க வந்ததுபோல, திருமண வாழ்க்கையும் என் முடிவுதான். நாகார்ஜுனாவைத் திருமணம் செய்துகிட்டு, பாரம்பர்ய சினிமா குடும்பத்தில் மருமகளானேன். பர்சனல் வாழ்க்கை மற்றும் குடும்பத்தைக் கவனிச்சுக்க சினிமாவிலிருந்து கொஞ்சம் ஓய்வெடுத் தேன். அதன் பிறகு தாயானது, வளர்ப்புப் பிராணிகளுக்கான சேவை உட்பட பல காரணங்களால், சினிமாவில் பல வருஷங்கள் நடிக்க முடியலை. ஆக்கபூர்வமான என் சமூகப் பணிகள் பிடிச்சுப்போக, சினிமாவுல நடிக்க மனசே வரலை. ஆனா, கணவரின் நடிப்புக்கு என்னாலான ஊக்கம் கொடுத்தேன்.

சினிமா குடும்பம்... மகிழ்ச்சி!

பையன் அகில், அமெரிக்காவில் காலேஜ் படிச்சுக்கிட்டிருந்தான். அப்போதான், `லைஃப் இஸ் ஃபியூட்டிஃபுல்’ தெலுங்குப் படத்தில் 25 வருஷத்துக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுத் தேன். அப்போதான் ஹீரோயின் நடிப்பைவிட, அம்மா கேரக்டர் சிறந்ததுன்னு எனக்குப் புரிஞ்சது. பிறகு, மலையாளப் படமான `சாய்ரா பானு’ உட்பட 10 படங்கள்ல நடிச்சுட்டேன். வெப் சீரிஸ்ல அதிகம் நடிக்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போ தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்கிறேன். மாமனாரைத் தொடர்ந்து, கணவர், நான், நாக சைதன்யா, சமந்தா, அகில்னு எங்க குடும்பத்துல பலரும் நடிகர்கள்தாம். கணவர், நான், அகில் ஆகியோர் ஒரு வீட்டிலும், நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் தனி வீட்டிலும் வசிக்கிறோம். மெச்சூரிட்டியான அன்பு மற்றும் புரிதலுடன் இருக்கிறதால, எங்களால குடும்ப உறவையும் சினிமா தொழிலையும் சரியான பாதையில் கொண்டுபோக முடியுது.

சினிமா எனக்கு வாழ்க்கை கொடுத்துச்சு. அந்த அடையாளத்துலதான் இன்னிக்கும் இயங்குறேன். கனவு கண்டதைவிடவும், என் சினிமா பயணமும் குடும்ப வாழ்க்கையும் சிறப்பானதா அமைஞ்சிருக்கு. நான் கொடுத்து வைத்தவள் என்கிற உணர்வில் மகிழ்ச்சியடைகிறேன்.

- நாயகிகள் பேசுவார்கள்!

- படங்கள் உதவி: ரகுநாத்

வளர்ப்புப் பிராணிகளின் சேவகி!

சின்ன வயசுல நாய், பூனை, பறவைகள் அடிபட்டிருந்தா, வீட்டுக்குக் கொண்டுவந்து வைத்தியம் பார்ப்பேன். பிறகு மாடு, குதிரைன்னு பெரிய வளர்ப்புப் பிராணிகளுக்கும் வைத்தியம் பார்ப்பேன். இந்தச் செயல்பாடுகள், என் திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்துச்சு. ஆசைக்காக செய்துகிட்டிருந்த இந்தப் பணிகளை, முறையா செய்றதுக்கு கணவர்தான் வழிகாட்டினார். அதன்பிறகு ஹைதராபாத்தில் ப்ளூ கிராஸ் அமைப்பை ஆரம்பித்தேன். என் குழுவினருடன் பல்வேறு ஊர்களுக்குச் சென்று, ஆதரவற்ற பிராணிகளுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள், தடுப்பூசிகள் போடுவது, கருத்தடை அறுவை சிகிச்சைகளைச் மேற்கொள்வோம். மாதம் 12,000 கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்துகிட்டிருக்கிறோம்.

அமலா
அமலா
Aval Vikatan

இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் தொடர்ந்து ஆர்வத்துடன் செயல்படுகிறோம். இதுவரை பல லட்சம் பிராணிகளுக்கு உதவியிருக்கோம். இந்தப் பணியை செய்ய ஆர்வமுள்ளவர்களுக்குப் பயிற்சியும் கொடுக்கிறோம். பிராணிகள் மீதுள்ள நேசத்தால், விலங்குகளிடமிருந்து தயாராகிற எந்தப் பொருள்களையும் பயன்படுத்தாமல் `வீகன் டயட்’டை கடைப்பிடிக்கிறேன். ரசாயனம், ரசாயன உரம் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் எதையும் பயன்படுத்த மாட்டேன்.

மாமனார் எங்களுடன்தான் இருக்கிறார்!

மிகச்சிறந்த தெலுங்கு நடிகரான என் மாமனார் (நாகேஸ்வர ராவ்), குடும்பத்துல எல்லோருக்கும் உரிய முக்கியத்துவம் கொடுப்பார். வாரத்துல ஒருநாள் அவருடைய வீட்டுக்கு எங்கள் எல்லோரையும் அழைச்சு, அவரே சாப்பாடு பரிமாறுவார். அவருடைய சினிமா வெற்றிப் பயணம் முதல் குடும்பத்தின் பாரம்பர்யமான விஷயங்கள் வரை சொல்வார். ஒவ்வொரு வாரமும் அந்த ஒரு நாளுக்காக ஆவலுடன் காத்திருப்போம்.

அமலா
அமலா
Aval Vikatan

சினிமாத் துறையில சாதிக்க நினைக்கிறவங்களுக்கு உதவணும்னு, `அன்னபூர்ணா காலேஜ் ஆஃப் ஃபிலிம் அண்டு மீடியா’ன்னு ஒரு கல்லூரியைத் தொடங்கினார். மாமனார் வயோதிகத்துல இருந்தப்போ, அவரால நேரடியா கல்லூரி நிர்வாகத்தை கவனிச்சுக்க முடியலை. அந்த நிர்வாகப் பொறுப்பை, என்மேல் நம்பிக்கை வெச்சு என்கிட்ட ஒப்படைச்சார். கல்லூரியின் இயக்குநரா பல வருஷமா வேலை செய்றேன். இந்தக் கல்லூரியால், `மாமனார் எங்களுடன்தான் இருக்கிறார்; எங்களை வழிநடத்துறார்' என்கிற நம்பிக்கையுடன் செயல்படுகிறோம்.