
என் நெகட்டிவிப் ரோலைப் பார்த்து ரசிகர்கள் என் கார் மீது கல் எறிந்தார்கள்...
தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்கள் வெற்றிக்கதை சொல்லும் தொடர் இது. இந்த இதழில், ரஞ்சனி.
இயக்குநர் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட ரஞ்சனி, தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நாயகியாகக் கலக்கியவர். நடிகை, வழக்கறிஞர், சமூக ஆர்வலர், தொழில்முனைவோர் எனப் பல தளங்களிலும் இயங்கிக்கொண்டிருக்கும் ரஞ்சனி, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.
சிங்கப்பூர் வாழ்க்கை... நடிப்பு வேண்டாம்!
பூர்வீகம் தமிழ்நாடு என்றாலும், நாலு தலைமுறையா சிங்கப்பூர்ல வசிச்சோம். வீட்டுல தமிழ்லதான் பேசுவோம். படிப்பு, குடும்பம், கிளாஸிகல் டான்ஸ்னு என் இளமைக்காலம் மகிழ்ச்சியா இருந்துச்சு. தனியார் கல்லூரியில கணக்காளரா வேலை பார்த்த அப்பா, சிங்கப்பூர்ல சினிமா விநியோகஸ்தராவும் இருந்தார். `தூறல் நின்னுப் போச்சு’ படம் ரிலீஸான நேரம். இயக்குநர் பாக்யராஜ் சாரை கூப்பிட்டு, சிங்கப்பூரில் எங்கப்பா ஒரு நிகழ்ச்சி நடத்தினார்.
அப்போ, ஒருநாள் எங்க வீட்டுக்கு வந்த பாக்யராஜ் சார், `பொண்ணை சினிமாவுல நடிக்கவைப்பீங்களா?’ன்னு கேட்டார். `சின்னப் பொண்ணுதான். நடிக்கவைக்கிற எண்ணமெல்லாம் இல்லை’ன்னு அவர்கிட்ட அம்மா சொன்னாங்க. என் டான்ஸ் நிகழ்ச்சிக்கான உடைகளைத் தைக்க, ஒருமுறை சென்னை வந்திருந்தோம். அப்பாவின் நண்பர் என்பதால் பாக்யராஜ் சாரை சந்திச்சோம். `சின்ன வீடு’ படம் எடுக்கிற தகவலைச் சொல்லி, என்னை சிம்பிளா போட்டோஷூட் பண்ணினார். நாங்க சிங்கப்பூர் போன பிறகு, `ஹீரோயின் கேரக்டருக்கு செட் ஆகலை. உங்க பொண்ணை ரெண்டு வருஷம் கழிச்சு நானே சினிமாவுல அறிமுகப்படுத்துறேன்’னு என் பெற்றோர்கிட்ட சொன்னார்.
`சிங்கப்பூர் பாப்பா... மகிழ்ச்சியா நடி. படம் ரிலீஸாகி பார்க்கிறப்போ நீ பட்ட கஷ்டமெல்லாம் மறந்துடும்’னு சொன்னார் சிவாஜி சார்.
பாரதிராஜாவின் அழைப்பு... ஸ்ரீப்ரியாவின் அட்வைஸ்!
நடிகை ஸ்ரீப்ரியா அக்காவின் அப்பா, சினிமா டான்ஸ் மாஸ்டர். மூணு மாதப் பயணமா சிங்கப்பூர் வந்திருந்தபோது, அவர்கிட்ட டான்ஸ் கத்துக்கிட்டேன். அந்தக் காலகட்டத்துல ஒருநாள் எங்க வீட்டுக்கு ட்ரங் கால் வந்துச்சு. அப்பாகிட்ட, `உங்க பொண்ணோட போட்டோவைப் பார்த்தேன். என் அடுத்த படத்துல உங்க பொண்ணு நடிக்கணும்’னு அவர் கேட்டார். அப்பா முடிவெதுவும் சொல்லலை. அடுத்த நாள் மறுபடியும் போன் பண்ணியவர், `ஷூட்டிங் ஆரம்பிக்கப்போறோம். உடனே பொண்ணைக் கூட்டிட்டு சென்னை வாங்க’ன்னு வலியுறுத்தியிருக்கார். வீட்டுல எல்லோருக்கும் குழப்பம்.

அப்போ தன் அப்பாவைப் பார்க்க ஸ்ரீப்ரியா அக்கா சிங்கப்பூர் வந்தாங்க. அவரைச் சந்திச்சு ஆலோசனை கேட்டோம். `நிறைய தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏறி இறங்கி கஷ்டப்பட்டுதான் நான் உட்பட பலரும் வாய்ப்பு தேடினோம். ஆனா, உங்களுக்கு சினிமா வாய்ப்பு தேடி வருது. பாரதிராஜா சார் அறிமுகப் படுத்திய நடிகர்கள் யாருமே தோல்வி யடைஞ்சதில்லை. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கோங்க’ன்னு அக்கா சொன்னாங்க. அம்மாவுக்கும் எனக்கும் நடிக்கிறதுல விருப்பமில்லை. `எனக்காக இந்தப் படத்துல மட்டும் நடி. ரெண்டே வாரத்துல ஷூட்டிங் முடிஞ்சுடும்’னு அப்பா வலியுறுத்தவே, சென்னை வந்தேன்.
மாறிய முதல் படம்... சிவாஜி சொன்னது!
`பச்சைக்கொடி’ங்கிற படத்துல ஹீரோயினா நடிக்கிறதுக்குத்தான் பாரதிராஜா சார் என்னைக் கூப்பிட்டிருந் தார். அந்தப் படத்தின் பூஜையில் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் சார், சிவாஜி சார் உட்பட நிறைய பிரபலங்கள் கலந்துகிட்டாங்க. பிறகு, `பூஜைக்கேத்த பூவிது’ங்கிற பாடல்ல என்னை நடிக்க வெச்சு படமாக்கினாங்க. அந்த நேரத்துல திடீர்னு சிவாஜி சாரின் கால்ஷீட் கிடைக்க, உடனே `முதல் மரியாதை’ படத்தை இயக்க ஆரம்பிச்சுட்டார் பாரதிராஜா சார். அதனால, `பச்சைக்கொடி’ படத்தின் ஷூட்டிங் தற்காலிகமா நிறுத்தப்பட்டுச்சு. திடீர்னு, `முதல் மரியாதை’ படத்துல என்னை நடிக்கக் கேட்டார், பாரதிராஜா சார். `எந்தப் படமா இருந்தாலும் சரி. சீக்கிரம் எடுத்து முடிச்சு என்னை விட்டுடுங்க’னு சொன்னேன்!
மைசூரு சிவசமுத்திரத்துல ஷூட்டிங். டல் மேக்கப், ரவிக்கை இல்லாம நடிக்கிறது, ஷூட்டிங் சூழல்கள் பிடிக்காததுன்னு வருத்தப்பட்டு அழுது அடம்பிடிச்சேன். வடிவுக்கரசி அக்காதான் அன்பாகப் பேசி, எனக்கு ஊக்கம் கொடுத்தாங்க.
`சிங்கப்பூர் பாப்பா’ன்னு என்னைக் கூப்பிடும் சிவாஜி சார், நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சது, `பராசக்தி’ படத்துல அறிமுகமாகி, புகழ்பெறக் கஷ்டப் பட்டதையெல்லாம் எனக்கு விளக்கிச் சொன்னார். `மகிழ்ச்சியா நடி. படம் ரிலீஸாகி பார்க்கிறப்போ நீ பட்ட கஷ்டமெல்லாம் மறந்துடும்’னு சொன்னவர், `நீ பெரிய நடிகையா வருவே’ன்னு வாழ்த்தினார்.
ஒருநாள் பிரஸ் மீட்ல என்னை அறிமுகப்படுத்திய பாரதிராஜா சார், என் பெயர் ரஞ்சனின்னு சொன் னார். அப்போதான் என் பெயரை மாத்திட் டாங்கன்னு தெரிஞ்சு அதிர்ச்சியானேன்.
பெரிய ஆச்சர்யம்... கைவிடப்பட்ட `பச்சைக்கொடி’!
சிங்கப்பூர் போயிட்டு மீண்டும் சென்னை வந்தப்போ, தியேட்டர்ல படம் பார்த்தேன். என் நடிப்பு, எனக்கே பெரிய ஆச்சர்யமா இருந்துச்சு.
நடிப்பினால், பத்தாம் வகுப்புத் தேர்வை எழுத முடியலை. அப்போ, `கடலோரக் கவிதைகள்’ படத்தை இயக்க முடிவெடுத்த பாரதிராஜா சார், ரேகா நடிச்ச ரோல்ல என்னைத்தான் முதலில் தேர்வு செய்தார். பிறகு, கங்கம்மா ரோல்ல நடிக்க வெச்சார். நானும் ஈடுபாட்டுடன் நடிச்சேன். அந்தப் படத்தின் தெலுங்கு வெர்ஷன்ல ராதிகா அக்கா நடிச்ச ரோல்லதான், தமிழில் நான் நடிச்சேன். என் கேரக்டருக்கு டப்பிங் கொடுத்த ராதிகா அக்கா, `உன் நடிப்பு சூப்பர்’னு பாராட்டினாங்க. அந்தப் படமும் வெற்றியடைய, பிறகு நிறைய சினிமா வாய்ப்புகள் வந்துச்சு. அடுத்து மோகன் சாருக்கு ஜோடியா நடிச்ச `பாரு பாரு பட்டணம் பாரு’ படம்தான், ஹீரோயினா எனக்கு முதல் படம். இதுக்கிடையே `பச்சைக்கொடி’ படம் கைவிடப்பட்டது. அதேநேரம், `நீதானா அந்தக் குயில்’ படத்துல, `பூஜைக்கேத்த பூவிது’ பாட்டு இடம்பெற்றது.
நடிகைகளுக்கு வாழ்நாள் முழுக்க நடிக்கிற சூழல் அதிகம் அமையாது. படிப்புதான் வாழ்க்கை முழுக்க கைகொடுக்கும்னு, சினிமாவிலிருந்து விலகி லண்டன் போனேன்.
முன்னணி நடிகை... ரஜினி, கமல் பட வாய்ப்புகள்!
`மண்ணுக்குள் வைரம்’ படக்கதையைக் கேட்டு, `இந்த ரோல் வலுவா இருக்கு. என்னால நடிக்க முடியுமான்னு தெரியலை’ன்னு சந்தேகமா சொன்னேன். படத்தின் இயக்குநர் மனோஜ்குமார், `எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு `கடலோரக் கவிதைகள்’ படத்தை பிரத்யேகமா பாரதிராஜா சார் திரையிட்டுக் காட்டினார். அப்போ உன் நடிப்பைப் பார்த்து சிவாஜி சார் கண்கலங்கிப் பாராட்டினார். எம்.ஜி.ஆர் சாரும் பாராட்டினார். உன் நடிப்புத் திறனை நீ நம்பணும்’னு சொன்னார். அதன் பிறகுதான் அந்தப் படத்துல நம்பிக்கையோடு நடிச்சேன். என் படங்கள் அடுத்தடுத்து வெற்றியடைய, முன்னணி நடிகையானேன். `ஆயிரம் பூக்கள் மலரட்டும்’, `உரிமை கீதம்’, `மண்ணுக்குள் வைரம்’, `ஆயுசு நூறு’, `தாய்மேல் ஆணை’ன்னு நிறைய வெற்றிப் படங்கள் அமைஞ்சது.
`புன்னகை மன்னன்’, `சூரசம்ஹாரம்’ உட்பட சில படங்கள்ல கமல் சார்கூட நடிக்கிற வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன். `நீ என்கூட நடிக்கமாட்டியா?’னு அவர் என்கிட்ட கேட்டு கிண்டல் பண்ணுவார். ரஜினி சாருடன் ஜோடியா நடிக்கும் வாய்ப்பு வந்தும் மிஸ் பண்ணிட்டேன்.
சினிமாவிலிருந்து விலகல்... பெரிய வருத்தம்!
நடிகைகளுக்கு வாழ்நாள் முழுக்க நடிக்கிற சூழல் அதிகம் அமையாது. படிப்புதான் வாழ்க்கை முழுக்க கைகொடுக்கும்னு, சினிமாவிலிருந்து விலகி லண்டன் போனேன். அங்க தம்பிக்கு உதவி செய்தபடியே எனக்குப் பிடிச்ச வேலைகளைச் செய்தேன். மறுபடியும் படிக்கத் தொடங்கி, மூணு வருஷத்துல ஸ்கூல் படிப்பை முடிச்சேன். ஐ.ஏ.டி.ஏ - ஒரு வருட கோர்ஸ் மற்றும் கிரெடிட் மேனேஜ்மென்ட் கோர்ஸையும் படிச்சேன். பி.பி.சி மீடியா உட்பட சில நிறுவனங்கள்ல வேலை செய்ததுடன், அம்மாவின் ஆசைக்காக சட்டப்படிப்பும் (எல்.எல்.பி) படிச்சேன்.

`சார் ஐ லவ் யூ’தான் என் கடைசித் தமிழ்ப் படம். `நான் அறிமுகப்படுத்த வேண்டிய நாயகிகளை, என் குருநாதர் பாரதிராஜா சார் அறிமுகப்படுத்தினார். சிங்கப்பூர்ல இருந்த ரஞ்சனியைக் கண்டுபிடிச்சு என் படத்துல அறிமுகப்படுத்தணும்னு நினைச்சேன். அந்தப் பொண்ணையும் அவரே அறிமுகப்படுத்திட்டார்’னு பல நிகழ்ச்சிகள்ல பாக்யராஜ் சார் சொல்லியிருக்கார்.
காதல் திருமணம்... மல்டி டாஸ்கிங்!
நண்பர்களாகப் பழக ஆரம்பிச்சு, என் கணவர் பிர்ரீ கொம்பராவும் நானும் காதலர்களானோம். நான் ஹீரோயினா நடிச்ச விஷயங்கள் பத்தி அவர்கிட்ட எதையும் சொல்லிக்கலை. `உன்னைப் பார்த்தா, நடிகை ரஞ்சனி மாதிரியே இருக்கே’ன்னு அவர் கேட்கிறப்போல்லாம், `அது நானில்லை’னு சொல்வேன்! குடும்பம் மற்றும் நண்பர்கள் வட்டாரத்துல என் நிஜப்பெயரான `சசிகலா சாஷா'ன்னு என்னைக் கூப்பிடுவாங்க. அதனால, நான் சொன்னதை கணவர் நம்பிட்டார். மனசு கேட்காம, ஒருநாள் அவர்கூட சாட் பண்றப்போ `நடிகை ரஞ்சனி நான்தான்’னு உண்மையைச் சொன்னேன். அதிர்ச்சியானவர், கோபப்பட்டாலும் அடுத்த நாளே சமாதானமாகிட்டார். கல்யாணமான தும், நாங்க கொச்சியில குடியேறிட்டோம்.
இதுக்கிடையே லண்டன்ல இருந்தப்போ, பெண்களுக்கு நிகழும் குடும்ப வன்முறைக்கு எதிரா குரல் கொடுத்து, போராடினேன். அதுகுறித்து கேள்விப்பட்ட அப்போதைய எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர், `நிர்பயா-கொச்சி’ புராஜெக்ட்ல என்னை கமிட்டி உறுப்பினர் ஆக்கினார். பிறகு, `ஸ்த்ரீ’ உள்பட பல்வேறு சமூகப் பணிகள்ல வேலை செய்திருக்கேன். மலையாள செய்தி விவாத நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி பங்கேற்பேன். கணவரின் ரியல் எஸ்டேட் பிசினஸில் நானும் இணைந்து வேலை செய்றேன். `ரிங் மாஸ்டர்’ படத்துல ரீ-என்ட்ரி கொடுத்து, சில மலையாளப் படங்கள்ல நடிச்சேன். கால்ஷீட் பிரச்னையால், `சகுனி’ பட வாய்ப்பை (ராதிகா நடித்த ரோல்) மிஸ் பண்ணிட்டேன். நல்ல கதைகள் அமைந்தால், தொடர்ந்து நடிப்பேன்!
- நாயகிகள் பேசுவார்கள்!

அதிர்ச்சியும் சிரிப்பும்!
`முதல் மரியாதை’, `கடலோரக் கவிதைகள்’னு என் தொடக்கப் படங்கள்ல ஹோம்லியா நடிச்சேன். அதனாலயே ஹோம்லியான ரோல்கள்தான் எனக்கு அதிகம் அமைஞ்சது. வெரைட்டியா நடிக்கணும்னு ஆசைப்பட்டு, `குடும்பம் ஒரு கோயில்’ படத்துல கொஞ்சம் நெகட்டிவான ரோல்ல நடிச்சேன். அந்தப் படத்தை திருச்சியிலுள்ள ஒரு தியேட்டரில் பார்க்கப் போனேன். என் கேரக்டர் ரசிகர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறதை உணர முடிஞ்சது. அதனால, படம் முடியற தருணத்துல, என்னைச் சீக்கிரம் கிளம்பிடச் சொன்னார், தியேட்டர் உரிமையாளர். நான் கிளம்பறதுக்குள், படம் முடிஞ்சு வெளிய வந்த ரசிகர்கள் என்னை அடையாளம் கண்டுபிடிச்சு என் கார் மேல கல் எரிஞ்சாங்க. நல்லவேளையா யாருக்கும் அடிபடலை. இந்த நிகழ்ச்சியை நினைக்கிறப்போல்லாம், அதிர்ச்சியாவும் சிரிப்பாவும் இருக்கும்!

சூப்பர் பொழுதுபோக்கு!
என் கணவருக்கு வைல்டு லைஃப் போட்டோகிராபி யில அதிக ஆர்வம். இருவரும் சேர்ந்துதான் வனவிலங்கு சரணாலயங்களுக்குப் போவோம். கடந்த நாலு வருஷத்துல, இந்தியாவிலுள்ள எல்லா காடுகளுக்கும் போயிட்டோம். பல நாடுகளுக்கும் போயிருக்கிறோம். சரணாலயத்துல விலங்குகளைக் கணவர் போட்டோ எடுப்பார். நான் வீடியோ எடுப்பேன். எங்க ஓய்வுப்பொழுதை, இப்படி பயனுள்ள வகையில செலவழிக்கிறோம். திருமணமாகிப் பல ஆண்டுகள் ஆனாலும், எங்க காதலை மகிழ்ச்சியுடன் வளர்க்கிறோம்.