இன்பாக்ஸ்

• ஐ-பேட், ஐ-போன் மூலம் தொழில்நுட்பப் புரட்சி நிகழ்த்திய ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை ஹாலிவுட் சினிமா ஆகிறது. ஆஸ்கர் விருது வென்றவரான 'தி சோஷியல் நெட்வொர்க்’ படத்தின் திரைக்கதை ஆசிரியர் ஆரோன் சோர்க்கின்தான் படத்தின் இயக்குநர். ஸ்டீவ் ஜாப்ஸாக நடிக்கும் நபரைத் தேர்ந்தெடுக்க, அமெரிக்கா முழுக்கவேட்டை நடத்திவருகிறது சோனி நிறுவனம். தி ஆப்பிள் ஃபிலிம்!

##~## |
• ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளையின் பதவிக் காலம் மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து கடுமை யான கருத்துகளை வெளியிட்டு வரும் நவநீதம் பிள்ளை, பாரபட்சமாக நடந்து கொள்வதாக இலங்கை அரசினால் கடுமை யாக விமர்சிக்கப்பட்டு வருபவர். தென் ஆப்பிரிக்கத் தமிழரான நவநீதம் பிள்ளை யின் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைகிறது என்ற ராஜபக்ஷேவின் நிம்மதியைக் கலைத்திருக்கிறது இந்த அறிவிப்பு. வினை வினைத்தவன்...
• காங்கிரஸுக்கு வேறு வழி இல்லை... தொடர் தோல்விப் பிரசாரத் திட்டங்களுக்குப் பிறகும், ராகுல் காந்தியையே சத்தீஷ்கர் சட்டசபைத் தேர்தலுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். உச்சகட்ட வெறுப்பிலோ என்னவோ, 'தலைமையிடம் பிரசாரத்துக்கு எனக் கேட்டுப் பெறும் பணத்தைக் கட்சியின் மூத்த உறுப்பினர் கள் முழுமையாகச் செலவழிக்க வேண்டும். அதைப் பதுக்கி, ஒதுக்கி ஆதாயம் தேடக் கூடாது!’ என்று பொது மேடையிலேயே காட்டம் காட்டியிருக்கிறார். யாரையோ கட்டம் கட்டுறாரே!
• அமிதாப் பச்சன், சஞ்சய் தத், தெலுங்கின் ப்ராமிஸிங் ஸ்டார் ராணா... இத்தனை நட்சத்திரங்கள் நடித்தும், ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான 'டிபார்ட்மென்ட்’ இந்திப் படம் கடுப்பான விமர்சனங்களை வாரிக் குவித்திருக்கிறது. 'இதற்கு முன் வெளியான ராம்கோபால் வர்மாவின் படங்கள்தான் மோசம் என்று நினைத்திருந்தால், அந்த எண்ணத்தை அடித்து நொறுக் குகிறது டிபார்ட்மென்ட். இத்தனை நடிகர்களை வைத்துக் கொண்டு இந்த வருடத்தின் மிக மோசமான படத்தை அளித்திருக்கிறார் ராம்’ என்று மதிப்பான மீடியாக்களின் விமர்சனமே செம கலாய். என்னாச்சு ராம்?
• கடந்த ஒலிம்பிக்கில் ஓடி பல தங்கம் தட்டிய ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் அப்போது நாட்டின் ஹீரோ! ஆனால், இன்று ஸ்லோவாகியா வெள்ளை அழகியான லூபிகாவுடன் காதல் கொண்டதால், 'இன துரோக மோகம்’ என்றெல்லாம் விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறார். அதுவும் ஜமைக்கா பெண்கள் ட்விட்டரில் உசேனுக்கு எதிரான கமென்ட்டுகளால் தாளிக்க, 'நாங்கள் பிரிந்துவிட்டோம்!’ என்று அறிவித்து விலகிவிட்டது அந்த ஜோடி. பிரிவு நிஜமா, நாடகமா என்பது லண்டன் ஒலிம்பிக் முடிந்த பிறகே தெரியும். போல்டா இருக்கணும் போல்ட்!
• 'மீண்டும் முதலமைச்சர் பதவி’ பிடிவாதத்தில் இருக்கும் எடியூரப்பா, தனி அலுவலகம் திறந்திருக்கிறார். ''நான் பா.ஜ.க. அலுவலகத்துக்குச் செல்ல மாட்டேன். என்னைச் சந்திக்க வருபவர்கள் இங்கே வந்து சந்திக்கலாம்!'' என்று அறிவித்து இருக்கிறார். பல தலைவர்களின் படங்கள் இடம்பிடித்திருக்கும் எடியூரப்பாவின் அலுவலகத்தில் எல்.கே.அத்வானியின் படம் மட்டும் மிஸ்ஸிங். இருந்தால் தானே அது நியூஸ்!

• பரிசாகக் கிடைத்த சச்சின் டெண்டுல்கர் கையெழுத்திட்ட பேட் த்ரிஷாவை உற்சாகத்தின் உச்சத்தில் நிறுத்தியிருக்கிறது. த்ரிஷா இன்ஷூர் செய்திருக்கும் நிறுவனத்தின் விளம்பரத் தூதர் சச்சின். தனது மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களுக்கு சச்சின் கையெழுத்திட்ட பேட்டைப் பரிசாக அளிக்கும் அந்த நிறுவனத்தின் திட்டத்தின் கீழ் த்ரிஷா கையில் அந்த பேட். 'நான் சச்சினின் தீவிர ரசிகை. இது எனக்குக் கிடைத்த பொக்கிஷம்!’ என்று மகிழ்ச்சியில் திளைக்கிறார் த்ரிஷ். நல்லா ஆடுங்க!

• மெகா ஹிட் வெற்றியை முதன்முதலாக அனுபவித்துக்கொண்டு இருக்கிறார் ஸ்ருதிஹாசன். தெலுங்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக இவர் நடித்த 'டபாங்’ ரீ-மேக்கான 'கப்பார்சிங்’ படம் தாறுமாறு ஹிட். இப்போ தெலுங்கின் 'மோஸ்ட் வான்டட் ஹீரோயின்’ ஸ்ருதிதான். தமிழச்சியைத் தட்டிப் பறிச்சுட்டாங்களே!

• எதிர்பார்த்தது போலவே பரபர சர்ச்சைகள் மூலம் ஐ.பி.எல்லுக்கு விறுவிறுப்புக்கூட்ட முயற்சிக்கிறார்கள். மும்பை வான்கடே மைதானப் பாதுகாவலர்களுடன் மோதிய விவகாரத்தில் ஷாரூக் கானுக்கு ஐந்து வருடத் தடை, மேட்ச் ஃபிக்ஸிங் புகார், ஆஸ்திரேலிய வீரர் லூக் மீதான அமெரிக்கப் பெண் சோஹைல் ஹமீத்தின் மானபங்கப் புகார் என மைதானத்துக்கு வெளியே கிறுகிறுக்கிறது ஐ.பி.எல். ஷாரூக்கின் இந்த முரட்டு நடத்தைக்குக் காரணம், அவரது மனைவியுடனான பிரிவு என்று கிசுகிசுக்கிறது மும்பை மீடியா. இந்த முறை ஐ.பி.எல். போட்டிகளில் கொல்கத்தா சிறப்பாக விளையாடியும் ஒரு போட்டியில்கூட மனைவி கௌரியுடன் ஷாரூக்கைப் பார்க்க முடியவில்லை என்று ஆதாரம் காட்டுகிறார்கள். இது சிக்ஸரைவிடக் கிறுகிறுக்கவைக்குதே!
• ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் 2012-ம் ஆண்டின் உலகின் 'சக்தி வாய்ந்த டாப் 100 பிரபலங்கள்’ பட்டியலில் முதல் இடம் பிடித்திருப்பது - ஜெனிஃபர் லோபஸ். கடந்த ஆண்டு 50-வது ரேங்கில் இருந்தவருக்கு இது மெகா மகா ஜம்ப். 'மீடியா டார்லிங்’, ட்விட்டரின் 71 லட்சம் ஃபாலோயர்கள், 280 கோடிக்கு எகிறிய ஆண்டு வருமானம் எல்லாம் சேர்ந்து ஜெலோவை அலேக்காகத் தூக்கியிருக்கிறது. ஓப்ரா வின்ஃப்ரே, பாப் பாடகர்கள் ஜஸ்டின் பைபர், ரிஹானா, லேடி காகா, பிரிட்னி ஸ்பியர்ஸ் ஆகியோருக்கு அடுத்தடுத்த இடங்கள். இதுல நித்தி-ஆதிலாம் வர மாட்டாங்களா?