எட்எட்டு!
பார்த்த படம் துவாரகநாத், ஒளிப்பதிவாளர்.

''அக்ஷய்குமார், ஐஸ்வர்யா ராய் நடித்த ரொமான்டிக் காமெடி 'ஆக்ஷன் ரீ-ப்ளே’ பார்த்தேன். காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு இடையே எப்போதும் சண்டை. அதைப் பார்க்கும் அவர்கள் மகனுக்கு திருமணம் மீதே வெறுப்பு. ஒரு விஞ்ஞானியின் பழக்கம் கிடைக்க, அவர் உதவியோடு டைம் மெஷினில் ஏறி தனது பெற்றோரின் இளமைக் காலத்துக்குச் செல்கிறான். அப்போது, காதலில் திளைத்து மகிழ்ந்திருக்கும் அவர்கள் இடையே அந்நியோன்னியத்தை இன்னும் அதிகமாக்குகிறான். நிகழ்காலத்துக்குத் திரும்பியவனுக்கு சொந்த வாழ்க்கையில் காத்திருக்கிறது பெரிய அதிர்ச்சி. சுவாரஸ்யமான படம்!''
படித்த புத்தகம் தய்.கந்தசாமி, கவிஞர்.

''பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதியுள்ள 'காந்தியும் தமிழ் சனாதனிகளும்’. இந்திய விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் காந்தி ஒருபுறம்... வெள்ளையர் களை எதிர்க்க வேண்டியிருந்தது. இன்னொருபுறம்... தீண்டாமை ஒழிப்பு, இந்து-முஸ்லிம் ஒற்றுமை போன்ற கருத்துக்களை வலியுறுத்தும்போது வல்லபாய் படேல் போன்ற சனாதனிகளின் எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டி இருந்தது. தமிழ்ச் சூழலில் காந்திக்கு எதிராக இருந்த சனாதனி கள் குறித்துப் பதிவு செய்கிறது இந்தப் புத்தகம். குற்றாலத்துக்கு வந்த காந்தி, தலித்துகள் அருவியில் குளிக்கத் தடை என்பதால், குளிக்காம லேயே சென்றுவிடுகிறார் என்பதுபோலப் பல செய்திகள்!''
வாங்கிய பொருள் வேல்முருகன், பின்னணிப் பாடகர்.

''500 ரூபாய் பணத்தோடு மெட்ராஸுக்கு வந்தேங்க. நேத்து 5 லட்ச ரூபாய்க்கு சான்ட்ரோ கார் வாங்கினேங்க. எட்டு வருஷத்தில் இந்த இடத்துக்கு வர்றதுக்கு நண்பர்கள் உதவிதாங்க காரணம். அதான், கார் கைக்கு வந்ததும், 'என்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் எனக்கு உதவி செய்துகொண்டு இருக்கும் அத்தனை நல்ல உள்ளங்களையும் நான் வணங்கிச் செல்வேன்’னு காருக்குப் பின்னாடி எழுதிவெச்சேன். காருக்குள்ள கடவுள் போட்டோ எதுவும் கிடையாது. அப்பா, அம்மா படம் மட்டும்தான். மனசு பூராம் நெறைஞ்சு நிக்குதுங்க!''
சந்தித்த நபர் பழ.கருப்பையா, எழுத்தாளர்.

''என் எழுத்தால் எனக்கு நட்பானவர் கோயம்புத்தூர் கிருட்டிணக்குமார். தமிழ் மீது அளப்பறிய காதல்கொண்ட அவர், வருடம்தோறும் தமிழ் அறிஞர்களுக்குப் பணமுடிப்புடன் விருது ஒன்றைக் கொடுக்கச் செய்வார். ஆனால், அது அவரால்தான் நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. மணம் புரிந்துகொள்ளாமலேயே உச்சிப்பொழுதைஅடைந்து விட்டவர். 'இனி, எதற்குத் திருமணம்?’ என்பார். 'மனிதனைச் சாவு அழிக்கிறது. ஆனால், அவன் தன் விதைகளின் வழியாக மகனாகவும், மகளாகவும் கிளைத்து சாவைத் தோற்கடிக்கிறான்’ என்றெல்லாம் எடுத்துச் சொல்லி, அவரைத் திருமணத்துக்கு இசைய வைத்தேன்!''
பாதித்த செய்தி ரோஹிணி, நடிகை.

''15 ஆண்டு கால சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை பெற்றிருக்கிறார் பர்மாவின் ஆங் சான் சூ கி. ஆனால், இந்த விடுதலையால் மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்க முடியாது. அதற்கான சாத்தியக்கூறுகளும்இல்லை. ஏனென்றால், அவர் விடுதலை ஆனவுடனேயே தேர்தல் குளறுபடிகள் குறித்துக் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதனால் அவர் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற கவலை நிலவுகிறது. இவ்வளவுக்குப் பிறகும், 'என் மக்கள் விடுதலை அடையாதவரை நான் விடுதலை அடைந்ததாக எண்ணிக்கொள்ள மாட்டேன்’ என்று ஆங் சான் சூ கி-யின் போராட்டக் குணம் மாறாமல் இருப்பது ஆச்சர்யம்!''
கேட்ட இசை மாலதி, பின்னணிப் பாடகி.

''பாம்பே ஜெயஸ்ரீயின் அற்புதமான குரல் வழியும் Mozart meet India என்ற பழைய ஆல்பத்தை சமீப நாட்களாக மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். வார்த்தைகளே இல்லாமல் ஸ்வரம், ஆலாபனைகளைக்கொண்டு பிரமாதமாகப் பாடி இருக்கிறார். வெஸ்டர்ன், இந்துஸ்தானி எனப் பல்வேறு இசை வடிவங்களைக்கொண்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட ராகங்களை ஒருங்கிணைத்து ஒரு ஃபியூஷன்போல அமைந்திருக்கும் ஆல்பம் மனதை உருக்குகிறது!''
சென்ற இடம் பலோமா, நிகழ்ச்சித் தொகுப்பாளர்.

''ஸ்பெயின், ஃபிரான்ஸ் நாடுகளுக்குப் போயிருந்தேன். ஃபிரான்ஸ் உணவும் கல்ச்சரும் அவ்வளவு சூப்பர்ப். அறிமுகமே இல்லாதவங்ககூட ரொம்ப ஃப்ரெண்ட்லியா பழகுறாங்க. அங்கே நிறைய சர்ச்களுக்கும் போனேன். பாரீஸில் இருக்கும் Notre Dame சர்ச் பார்க்கவே ரொம்ப வித்தியாசமா இருந்தது. 'கொதெக் ஆர்க்கிடெக்சர்’ முறையில் கட்டியிருக்காங்க. அதில், ஐந்து மணிகளைப் பொறுத்தியிருக்காங்க. ஒவ்வொண்ணும் 13 டன் எடை இருக்கும். ரொம்ப விசேஷமான நாட்களில் அந்த மணிகள் ஒலிக்கும். ஜில்லுனு காதோரம் குளிர் வருடும்போது, சர்ச் மணி கணீர்னு ஒலிப்பது வாவ்... லவ்லி!''
கலந்துகொண்ட நிகழ்ச்சி குட்டி ரேவதி, கவிஞர்.

''தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளையை நிறுவும் விழாவுக்குச் சென்றிருந்தேன். பல்கலைக் கழகத் துணைவேந்தர் ராசேந்திரன், முன்பு 'கணையாழி’ ஆசிரியராக இருந்தவர் என்பதாலோ என்னவோ, நிறைய சிற்றிதழ் ஆசிரியர்களை விழாவுக்கு அழைத்திருந்தார். 'பனிக்கூடம்’ பெண்ணிய இலக்கிய இதழ் சார்பாக நான் கலந்துகொண்டேன். சிற்றிதழ் செயல்பாடுகளின் நேர், எதிர் பக்கங்களை அதில் பங்கேற்றவர்களே பேசியது ஆரோக்கியமானது!''