இன்பாக்ஸ்
##~## |

பரபர பப்ளிசிட்டியில் அடிபட்டாலும் இளம் நாயகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்புகள் நயன்தாராவுக்கு வருவதில்லையாம். அஜித்துடன் நடிக்கும் படத்தில் டாப்ஸிக்கும் முக்கியமான ரோல், 'ராஜா ராணி’யில் நஸ்ரியாதான் ஆர்யாவுக்கு ஜோடி என எல்லா படத்திலும் நயனுக்கு ஏதோ ஒரு செக் இருக்கிறதாம். இதனால்தான் ஹீரோயினை மையப்படுத்திய படங்களாகத் தேர்ந்தெடுக்கும் முடிவின்படி 'கஹானி’ ரீமேக்கில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். 'வைஜெயந்தி ஐ.பி.எஸ்’ ரீமேக்ல நடிங்க நயன்!

ஜப்பானில் வசிக்கும் 116 வயதான ஜிரோமோன் கிமூராதான் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த உலகின் ஒரே ஒரு ஆண். வாழ்நாளில் நான்கு மன்னர்கள் மற்றும் 60 பிரதமர்களின் ஆட்சியைக் கண்டுள்ள கிமூரா, 1897 ஏப்ரல் 19-ல் பிறந்தவர். உலகில் 19-ம் நூற்றாண்டில் பிறந்த 22 பேர் உயிருடன் இருக்கின்றனர். இதில் கிமூரா மட்டுமே ஆண். மற்ற 21 பேரும் பெண்கள். இன்றும், ஆரோக்கியத்துடன் இருக்கும் கிமூரா, நண்பர்களுடன் அவ்வப்போது மது அருந்தினாலும் புகைப்பதை மட்டும் அறவே வெறுக்கிறார். குறைந்த அளவே உணவு உட்கொள்ளும் இவர், அதிக நேரம் உறங்குவாராம். உலகத்துக்கே தாத்தா!


கடந்த வார சீனப் பரபரப்பு... கழிவுநீர்க் குழாயில் மாட்டிக்கொண்ட சிசுவை மீட்டெடுத்த முயற்சிதான். சீனாவின் ஜின்ஹுவா நகரில் 22 வயது இளம்பெண் ஒருத்தி திருமணத்துக்கு முன்னரே கர்ப்பமாகியிருக்கிறாள். பெற்றோருக்குத் தெரியாமல் தனி வீடு எடுத்துத் தங்கி அந்தக் குழந்தையைப் பிரசவித்திருக்கிறார். பிறந்த குழந்தை தவறுதலாகக் கழிவுநீர்க் குழாயினுள் விழுந்துவிட, தீயணைப்புப் படையினர் வந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் போராடி குழந்தையை எல் வடிவக் குழாயில்இருந்து மீட்டனர். சேனல்களில் இந்த மீட்புப் படலம் நேரடியாக ஒளிபரப்பாக, நாட்டில் 'முறையற்ற திருமணம்’ குறித்த கொதிவிவாதங்கள் வெடித்திருக்கின்றன. இதற்குஇடையில் குழந்தையின் தாய் யார் என்று தெளிவான தகவல் வெளிவராத நிலையில், குழந்தை அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையின் முன்பு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பவுடர், துண்டு, புது ஆடைகள் சகிதம் அந்தக் குழந்தையைத் தத்தெடுக்க விருப்பம் தெரிவித்துக் குழுமிவிட்டார்கள். அகில உலகத்துலயும் அம்மா சென்ட்டிமென்ட்டுக்குத் தனி வேல்யூதான்!

உலகப் பணக்காரர்கள் அனைவரும் பில்கேட்ஸைச் சந்திக்கத் தவித்துக்கொண்டிருக்க, அவரோ 'தான் சந்திக்க விரும்பும் பிரபலம்’ என்று சொல்லியிருப்பது அமீர் கானை. '' 'சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சி முதல் யுனிசெஃப் நல்லெண்ணத் தூதுவராக அமீர் கானின் செயல்பாடுகள் வரை அனைத்தையும் கவனித்துவருகிறேன். அவரைச் சந்திக்க வேண்டும் என்பது எனது இப்போதைய ஆசை. அவரைச் சந்திக்கும்போது எனக்காக அவர் டான்ஸ் ஆடுவார் என நம்புகிறேன்'' எனக் கூறுகிறார் பில்கேட்ஸ். இந்தியேண்டா!


'ஜுராசிக் பார்க்’ படத்தில் வந்தது போல பூமியில் மீண்டும் டைனோசர்களை உயிர்ப்பிக்க முடியுமோ என்னவோ?! ஆனால், இன்னும் ஐந்து ஆண்டுகளில் உடல் முழுதும் சடை முடி நிறைந்த மமூத் என்னும் ராட்சத யானையை உயிர்ப்பிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். தென்கொரியாவும் ரஷ்யாவும் அழிந்துபோன மமூத் யானையை மீண்டும் உருவாக்கும் கூட்டு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருந்தது. அதற்கேற்ப ஆர்டிக் சமுத்திரத்தின் புதிய சைபீரியத் தீவுப் பகுதியில் பனியில் நன்கு பதப்படுத் தப்பட்ட நிலையில், ராட்சத மமூத் யானை யின் பிரேதம் ஒன்றைக் கண்டுபிடித்திருக் கிறார்கள். 10,000 வருடங்கள் பழமை யான அந்த மமூத்தின் உடலில் ஐஸ் குளிர் காரணமாக ரத்த அணுக்கள் சேதமடையாமல் இருக்கின்றனவாம். பற்கள், எலும்புகள், தசை நார்கள் என ஒரு மமூத்தை உருவாக்கத் தேவையான அத்தனை கருப் பொருட்களும் அந்த ஒரே மமூத்தில் கிடைக்கவே உற்சாகமடைந்திருக்கிறது விஞ்ஞானிகள் குழு. இராமநாராயணன் கிட்ட சொன்னா, அடுத்த வாரம் மமூத் ரெடி!


அமெரிக்க அதிபர் ஓபாமாவின் குட் புக்கில் சேர்ந்திருக்கிறார் ஒரு திருநெல்வேலிக்காரர். திருநெல்வேலி தந்தைக்கு சண்டிகரில் பிறந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன் படிப்பு, வேலை என இப்போது அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார். அமெரிக்காவின் மிக உயர்ந்த நீதிமன்றமான சர்க்கிள் கோர்ட்டின் நீதிபதியாகச் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் ஸ்ரீகாந்த். அவருடைய பதவியேற்பு விழாவில் பேசிய ஒபாமா, 'என் ஃபேவரைட் நண்பர்கள் பட்டியலில் இப்போ ஸ்ரீகாந்தும் ஒருவர். கல்லூரி நாட்களில் ஒரு இந்தியரும், பாகிஸ்தானியரும்தான் என் அறைத் தோழர்களாக இருந்தனர். அவர்கள்தான் எனக்கு பருப்பு, கைமா செய்யக் கற்றுக்கொடுத்தனர்’ என்றெல்லாம் பழைய நினைவுகளை ரீவைண்டியிருக்கிறார். அப்போ வீட்ல வீக் எண்ட் ஒபாமாதான் சமைப்பாரா?


உலகின் தலைசிறந்த 30 நாடுகளில் குடிமக்கள் சந்தோஷமாக வாழும் நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல் இடம் பிடித்திருக்கிறது ஆஸ்திரேலியா. உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக் கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் வருமானம், வீட்டு வசதி, வேலைவாய்ப்பு, கல்வி, சுற்றுச்சூழல், சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 84% ஆஸ்திரேலியர்கள் சந்தோஷமாக வாழ்வதாகக் கூறி உள்ளனர். அந்த சர்வேயில் கடைசியாகக்கூட இடம்பிடிக்கவில்லை இந்தியா. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா?

'விஸ்வரூபம்’ இரண்டாம் பாகத்தில் ஆக்ஷன் அத்தியாயத்தை மொத்தக் குத்தகை எடுத்திருப்பது ஆண்ட்ரியாவும் பூஜா குமாரும். தண்ணீருக்கு அடியிலான ஆக்ஷன் அடிதடிகளில் அழகிகள் இருவரும் அசரடித்திருக்கிறார்களாம். பூஜா குமா ருக்கு ஏற்கெனவே ஸ்கூபா டைவிங் தெரியும் என்பதால், ஆண்ட்ரியாவும் கமலும் அவருக்கு ஈடுகொடுப்பதற்கு என ரிகர்சல் எடுத்துவிட்டு ஜலமிறங்கி இருக்கிறார்களாம். பிகினி ஸ்டன்ட்டா... தலைவன் யாரென்று தெரிகிறதா?

இந்த வருட கேன்ஸ் திரைப்பட விழாவின் பரபரப்பு... அபிடெல்லடிஃப் கீச்சிச் இயக்கிய 'ப்ளூ இஸ் த வார்மஸ்ட் கலர்’ என்ற பிரஞ்சுப் படம். 15 வயது டீன்ஏஜ் பெண்ணுக்கும் ஒரு முதிய பெண்ணுக்குமான காதலே படத்தின் கதை. விருதுகளைத் தீர்மானிக்கும் ஜூரி குழு வில் இடம்பிடித்திருந்த ஸ்டீவன் ஸ்பீல் பெர்க்குக்குப் படம் ரொம்பவே பிடித்துப்போக, படத்தை ஏகமாகப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். பெண்களுக்கு இடையிலான காதல் உணர்வுகளையும் பாலியல் காட்சிகளையும் மிகவும் வெளிப்படையாகக் காண்பித்ததற்காகப் பெரும் விமர்சனத்தையும் கவனத்தையும் குவித்திருக்கிறது இந்தப் படம். நாங்கள்லாம் அப்பவே 'ஃபயர்’ காட்டிட்டோம்ல!


ஐ.பி.எல். மேட்ச் ஃபிக்ஸிங் வெடிகுண்டு மற்ற எவரையும்விட லட்சுமிராயைத்தான் அதிகமாகக் கலங்கடித்திருக்கிறது. 'டோனி என் பெஸ்ட் ஃப்ரெண்ட்’, 'ஸ்ரீசாந்த் என் பப்பி ஃப்ரெண்ட்’ என்றெல்லாம் மீடியா மக்களுக்குப் பேட்டி தட்டிக்கொண்டிருந்தவர், இப்போது ஒரே வரியில் அத்தனைக்கும் சுபம் போட்டு விட்டார். அந்த ஒரு வரி... 'நான் ஒரு தொழிலதிபரைக் காதலித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் அவருக் கும் எனக்கும் திருமணம்!’ அப்படிப் போடு அருவாளை!